
திருவாரூர் தியாகராஜர் கோவில் - திருவாரூர் அரநெறி
தஞ்சாவூர் பெரிய கோவில் விமானத்துக்கு மாதிரியாக திகழ்ந்த சன்னதி விமானம்
நமிநந்தி அடிகள் நாயனாருக்காக, சிவபெருமான் தண்ணீரில் விளக்கெரிய செய்த அற்புதம்
தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில், மூன்று தலங்களில் மட்டும் தான் இரண்டு சன்னதிகள் தனித்தனியே தேவார பாடல்கள் பெற்றுள்ளன. அவை திருவாரூர், திருப்புகலூர், திருமீயச்சூர் ஆகியவை ஆகும். திருவாரூர் தியாகராஜர் கோவிலில் புற்றிடம் கொண்ட நாதர் சன்னதியும், அசலேசுவரர் சன்னதியும் தனித்தனியே தேவாரப் பாடல்களில் போற்றப்பட்டுள்ளன. ஒரு மன்னருடைய வேண்டுகோளின்படி இறைவன் சலியாது எழுந்தருளி இருப்பதால், அசலேசுவரர் எனப் பெயர் பெற்றார்.
இந்த அசலேசுவரர் சன்னதி தியாகராஜர் கோவில் வளாகத்தின் அக்னி மூலை (தென்கிழக்கு) பகுதியில் அமைந்துள்ளது. அசலேசுவரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது. இந்த சன்னதியின் விமானம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் கட்டிட வடிவமைப்பை மாதிரியாக கொண்டுதான், பிரகதீஸ்வரர் கோவில் விமானம் அமைக்கப்பட்டது. அசலேசுவரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழாது.
நமிநந்தியடிகள் நாயனார் என்பவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சிவபெருமானின் தீவிர பக்தர். அனுதினமும் திருவாரூர் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவார்.
ஒரு நாள் அவர் இக்கோவிலுக்குச் சென்றபோது, அதில் எண்ணெய்/நெய் இல்லாததால் விளக்குகள் அணையப் போவதைக் கண்டார். தொலைவில் வசிப்பதால், விளக்கு எரிய வைக்க எண்ணெய்க்காக பக்கத்து வீடுகளை அணுகினார். அக்கம்பக்கத்தினர், வித்தியாசமான சமய நம்பிக்கை கொண்டவர்கள். உங்களுடைய சிவபெருமான் பெரிய கடவுளாக இருந்தால் இந்த விளக்குகளை தண்ணீர் கொண்டு எரிய வைக்க முடியும் என்று கேலி செய்தார்கள். ஏமாற்றமடைந்த நமிநந்தியடிகள் மீண்டும் கோவிலுக்குச் சென்று, இறைவன் முன் கதறி அழுதார். சிவபெருமான், நமிநந்தியடிகள் முன் தோன்றி, கோவில் குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து விளக்கேற்றச் சொன்னார். அடிகளார் அவ்வாறு தண்ணீரை நெய்க்குப் பதிலாகப் பயன்படுத்தியபோது, முன்னெப்போதையும் விட கோவில் விளக்குகள் பிரகாசித்தன. இச்சம்பவத்தையும், அடிகளாரின் பக்தியையும் கேள்விப்பட்ட சோழ மன்னன், அடிகளாரை ஆலய நிர்வாகத் தலைவராக்கியதுடன், இக்கோவிலுக்கு ஆதரவாக பல மானியங்களையும் வழங்கினார்.
நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய செய்தியை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில்
திருநாள்ளாறு தலத்திற்கு இணையான தலம்
சனியால் அகல பாதாளத்தில் விழுந்தவர்கள் நன்மை பெற வழிபட வேண்டிய தலம்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 21 கி.மீ தொலைவில் (குணசீலத்திற்கு முன்னால் 2 கி.மீ ), அமைந்துள்ளது வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாதாள ஈஸ்வரி. சப்த ரிஷிகள் வழிபட்ட தலம்.
ஒரு சமயம் சனி பகவான் சிவபெருமானை ஏழரை நாழிகை நேரம் பிடிக்க முற்பட்ட போது, சனியிடம் இருந்து தப்பிக்க சிவபெருமான் பாதாளத்தில் ஒளிந்து கொண்டார். அதனால் தான், இத்தலத்து இறைவனுக்கு பாதாள ஈஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அதற்கு ஏற்றார்போல் இத்தலத்து மூலவரை தரிசிக்க, நாம் தரைமட்டத்தில் இருந்து பல படிகள் கீழே இறங்கி செல்ல வேண்டும். சிவபெருமானை பிடிக்க வந்த சனி பகவான் மூலவருக்கு எதிரில் இடதுபுறம் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி முதலிய சனி தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய பரிகாரத் தலம் இது. அதனால் இத்தலம் திருநள்ளாறுக்கு இணையான தலம் என்று போற்றப்படுகிறது.சனிபகவனால் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பை சந்தித்தவர்கள், இந்த தலத்தில் வழிபட்டால் அந்த இழப்பிலிருந்து மீண்டு வரலாம். இந்த தலத்தை தரிசனம் செய்த பிறகு படி ஏறி மேலே செல்லும் போது முழுவதும் சனி தோஷம் நிவர்த்தி ஆகி நமது வாழ்க்கை அடுத்த கட்டம் நோக்கி முன்னேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில்
நந்திகேஸ்வரரும், அவரது மனைவி நந்திகேஸ்வரியும் மனித உருவில் இருக்கும் அபூர்வ காட்சி
காஞ்சிபுரம் மாநகரில் நெல்லு கார தெரு பகுதியில் அமைந்துள்ளது கச்சபேஸ்வரர் கோவில் . திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கியதால், இத்தலத்து ஈசனுக்கு கச்சபேஸ்வரர் எனப் பெயர். கச்சபம் என்றால் ஆமையைக் குறிக்கும்.
இத்தலத்தில் நந்திகேஸ்வரரும் அவரது மனைவி நந்திகேஸ்வரியும், மனித உருவில் கோவிலின் பாதுகாவலர்களாக எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். சிவபெருமான் இந்த உலகத்தில் திருநடனம் ஆடிய போது, அதனைக் காண்பதற்கு, நந்தி பகவான் விரும்பினார். மேலும் அந்த திருநடனத்தை தனது துணைவி நந்திகேஸ்வரியுடன் மனித உருவில் காண விரும்பியதால் தான் அவர்கள் இருவரும் இங்கு மனித ரூபத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள் என்று தலபுராணம் கூறுகிறது.

திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோவில்
உடும்பின் வால் போன்று காட்சி அளிக்கும் அபூர்வ சிவலிங்கம்
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில், 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமாகறல். இறைவன் திருநாமம் திருமாகறலீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுவனநாயகி.
காட்டில் வாழும் உடும்பு என்னும் பிராணியானது எதைப்பற்றிக் கொண்டாலும், அதை இறுக பற்றிக் கொள்ளும் தன்மை உடையது. இத்தலத்தில் உடும்பின் வால் போல் சிவலிங்கத் திருமேனி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி உடும்பின் வால் போன்று சிவலிங்கம் இருப்பதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று பிரம்மா அகந்தை கொண்டபோது சிவபெருமான் அவரை சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். பின்பு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப் பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள்தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம். தினந்தோறும் வீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் மன்னனுக்கு சென்று கொடுத்து வந்தனர்.
ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன் வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணிய அந்த சிறுவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம் நான் சிறுவன் பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால், நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன் அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பிவிட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன் பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன் என்றான்.அதற்கு மன்னன் தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன் என்றான்.
காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது மன்னனும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்து கொண்டு திரும்பினான். அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில் விடிமாகறல் என்று வழங்கப்படுகிறது. அரண்மனைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் பொன்னிற உடும்பு ஒன்று தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி, சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும் அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன்படியே செய்தான். அதனால்தான் இக்கோயிலில் சிவலிங்கம் உடும்பின் வால் அளவு உள்ளது.
பல வியாதிகளை குணப்படுத்தும் அபிஷேக தீர்த்தம்
இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் இத்தலத்தில் பூஜை செய்யப்படுகிறது.

திருவையாறு ஐயாரப்பர் கோவில்
எமபயத்தை நீக்கும் ஆட்கொண்டார்
நாட்பட்ட வியாதிகளை தீர்க்கும் ஆட்கொண்டார் வழிபாடு
தஞ்சாவூருக்கு வடக்கே 15 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாரப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி.
தெற்கு கோபுர வாசலில் இடது புறமாக ஆட்கொண்டார் சன்னதியும், வலது புறமாக உய்யக்கொண்டார் சன்னதியும் இருக்கின்றன. திருக்கடவூர் கால சம்ஹாரமூர்த்தியைப் போல, திருவையாறு ஆட்கொண்டாரை வழிபாடு செய்தாலும் நீண்ட ஆயுள் கிட்டும். கூடவே நாட்பட்ட வியாதிகளைக்கூட இத்தல ஆட்கொண்டார் வழிபாடு தீர்த்துவிடுவதாக ஐதீகம். இந்த ஆட்கொண்டேசரே, திருவையாறு மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
ஆட்கொண்டார் எமபயத்தை போக்கி அருள் புரிபவர். முன்னொரு காலத்தில் சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் தந்தையும், தாயும் இறந்தபின் மிக்க வருத்தம் கொண்டு, தல யாத்திரை மேற்கொண்டான். அப்போது வழியில் திருப்பழனம் என்ற ஊரில் தங்கியிருந்தான். ஒருநாள் இரவு அவனது கனவில் யமன் தோன்றி 'இன்றைக்கு ஐந்தாம் நாள் உன் உயிரை நான் பறித்து விடுவேன்' என்று உணர்த்தினார். அதைக் கேட்டு அச்சிறுவன் அஞ்சி வசிஷ்ட முனிவரை அணுக, அவரது அறிவுரையின்படி திருவையாறு சென்று சிவதரிசனம், பஞ்சாக்கர ஜபம் முதலியன செய்து வரலானான். வசிஷ்ட முனிவரும் சிறுவனுக்காக ஜபம் செய்யலானார். யமன் ஐந்தாம் நாள் சிறுவன் முன் தோன்றினான். ஐயாற்று எம்பெருமான் துவாரபாலகரை ஏவி அந்தணச் சிறுவனைக் காக்குமாறு பணித்தார். அஞ்சாது எதிர்த்த யமனை துவாரபாலகர்கள் அடக்கினர். பின் சிவபெருமானும் தெற்கு வாயிலின் மேற்புறத்தே தோன்றி சுசரிதனுக்கு ஆயுள் அருளி, எமனையும் சிறுவனின் உயிரை பறிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.
இவ்விதம் சிறுவனுக்கு எம பயம் தீர்த்த இந்த மூர்த்தியே ஆட்கொண்டேசப் பெருமான் ஆவார். தனது காலின் கீழ் எமனை மிதித்தவாறு அருளும் அவரது திருவுருவம் அற்புதமானது.
இந்தச் சம்பவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அஷ்டமி அன்று ஆகும். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் ஒவ்வோராண்டும் கார்த்திகை மாத காலாஷ்டமி தினத்தன்று காலை காவிரியில் தீர்த்தவாரியும், ஆட்கொண்டார் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்கள், எண்ணற்ற அளவில் வடை மாலை சாத்துதல் போன்ற வைபவங்களும், இரவு எம் வாகனத்தில் ஆட்கொண்டார் உற்சவர் திருவீதி உலாவும் நடைபெறும்.
ஆட்கொண்டார் எமபயத்தை நீக்குபவர் என்பதால், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற சாந்தி நிகழ்ச்சிகளை இவ்வாலயத்தில் நடத்திக் கொள்வது மிகவும் சிறப்பானது.

திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில்
தீராத நோய்களை தீர்த்து வைக்கும் பாஷாண லிங்கேஸ்வரர்
பாஷாண லிங்கத்தை குளிர்விக்கும் நீர் பிரசாதமாக வழங்கப்படும் தலம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில்,ஆற்காட்டிலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில். இந்த பாஷாண லிங்கம் 650 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோவிலில் ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் உருவாக்கப்பட்ட பாஷாண லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை குளிர்விக்கும் நீரானது, தீராத நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகின்றது
விஜயநகர பேரரசின் கீழ், குறுநில மன்னர்களான திம்மிரெட்டி, பொம்மி ரெட்டி ஆகியோர் வேலூர் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். இவர்களது வழித்தோன்றல்தான் சதாசிவராய மன்னர்.இவர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லைப் பகுதியில் பல நல்ல காரியங்களைச் செய்து வந்தார்.
ஒரு சமயம் அந்தப் பகுதியில் தொற்று நோய் ஏற்பட்டு மக்கள் அனைவரும் அவதிப்பட்டனர்.இரக்க குணமும், இறைப் பற்றும் மிக்க சதாசிவராயர், இதனைக் கண்டு வேதனை அடைந்தார். நோயை விரட்டும் வழி குறித்து, அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.அரண்மனை ராஜ வைத்தியரான கன்னிகா பரமேஸ்வரரிடம்,மக்களின் நோயைப் போக்க ஏதாவது செய்யும்படி பணித்தார். மன்னனின் ஆணைப்படி ராஜவைத்தியரான கன்னிகா பரமேஸ்வரர், தன்வந்திரி முறையில் ஒரு லிங்கத்தை தயார் செய்ய முடிவு செய்தார்.
சந்திர பாஷாணம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்பட 5 வகை பாஷாணங்களை பக்குவப்படுத்தி, தெய்வாம்சமும்,மருத்துவகுணமும் இரண்டற கலந்திருக்கும் வகையில் சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்தார். இந்த லிங்கத்தின் உயரம் வெறும் 7 அங்குலம் தான்.
கி.பி.1379–ம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், திமிரி நகரின் கோட்டையில் இந்த பாஷாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12–வது சங்கராச்சாரியார் வித்யாரண்ய சுவாமிகள் ஆசீர்வாதத்துடன் இந்த பிரதிஷ்டை விழா நடந்தது. ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது.திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதால், புகையும் தன்மை கொண்டது. எனவே லிங்கத்தை குளிர்விக்கும் வகையில் அதன் மீது எப்போதும் நீர் விழுமாறு செய்யப்பட்டது. அந்த நீரே மருத்துவ குணம் கொண்டது. அதுவே இங்கு பிரசாதமாகவும் மருந்தாகவும் வழங்கப்படுகிறது. இந்த நீரானது தீராத நோய்களையும் தீர்க்கும் தன்மை கொண்டது.
மருத்துவ குணங்களை உள்ளடக்கிய இந்த லிங்கத்தின் அபிஷேக தீர்த்த பிரசாதம் இதய நோய், சிறுநீரக நோய், மன நோய், சரும நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களை

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில்
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பிரம்மாண்டமான நெற்களஞ்சியம்
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தை அடுத்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாலைத்துறை. இறைவன் திருநாமம் பாலைவனநாதர்.இறைவியின் திருநாமம் தவளவெண்ணகையாள்.
இந்தக் கோவிலின் ராஜகோபுரத்தை ஒட்டி 1640ம் ஆண்டு கட்டப்பட்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. இந்த அபூர்வ நெற்களஞ்சியம் (நெற்குதிர்) தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் போன்ற நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது அமைச்சராக திகழ்ந்த கோவிந்த தீட்சிதர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற்களாலும் காணப்படுகிறது. மேல் பகுதி ஒரே கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெற்களஞ்சியம் வட்ட வடிவம் கொண்டது. இதன் உயரம் 35 அடி, சுற்றளவு 80 அடி. பலத்த மழை பெய்தாலும் உள்ளே வெள்ள நீர் புகாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த நெற்களஞ்சியம், நம் முன்னோர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நெற்களஞ்சியத்தின் அடிப்பகுதி, மேற்பகுதி, நடுப்பகுதி என மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாயில் என மூன்று வாயில்கள், நெல்லை உள்ளே கொட்டுவதற்கும், வெளியே எடுத்து வருவதற்கும் வசதியாக களஞ்சியத்தின் சுவரில் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் அடிப்பகுதியில் உள்ள வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதி வரை நெல் நிரம்பியவுடன், அதை அடைத்துவிட்டு, 2-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதியும் நிரம்பியவுடன், 3-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். 3 வாயில்களும் நிரம்பினால் நெற்குதிர் நிரம்பி விடும். சுமார் 3 ஆயிரம் டன் வரையிலான நெல்லை இந்த குதிரில் சேமிக்கலாம்.
தானியங்கள் விஷ பூச்சிகளுக்கு, இரையாகாமல் பாதுகாப்பதற்கு ஏற்ற தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்த நெற்களஞ்சியம் வரலாற்று சின்னமாகவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் பார்க்கிறார்கள்.

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்
சிவராத்திரி அன்று மட்டும் தாழம்பூ பூஜைக்குப் பயன்படுத்தப்படும் தேவார தலம்
திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி.
கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் மேல், கோடாரியால் வெட்டப்பட்ட தழும்புகள் காணப்படுகிறது. மேலும் சிவலிங்கம் வெட்டுப்பட்டதால் அதன் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால், இந்த சிவலிங்கம் மனித கைகளால் தொடப்படாமல், பூஜை செய்யப்படுகிறது.
மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி, முடி தேடியபோது, தான் ஈசனின் அடி முடியை கண்டதாக, தாழம்பூவை பொய் சாட்சி சொல்லும்படி பிரம்மா கெஞ்சினார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. அக்னி பேரொளியான சிவபெருமானிடம் சென்ற பிரம்மா, தங்களின் அடி முடியை தான் கண்டதாக கூற, தாழம்பூவும் ஆமாம் என்று பொய் சாட்சி கூறியது.பிரம்மனுக்காக பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவபெருமான். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே, சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவபெருமான் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோவிலில், சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவபெருமானின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர்.

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்
மகாசிவராத்திரி வழிபாடு பிறந்த தேவாரத்தலம்
கும்பகோணம் திருவையாறு சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவைகாவூர். இறைவன் திருநாமம் வில்வவனேசுவரர். இறைவி வளைக்கைநாயகி.
திருக்காளத்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் போல மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம், திருவைகாவூர் ஆகும். சிவராத்திரி வழிபாடு பிறந்தது இத்தலத்தில்தான் என்பது ஐதீகம். வேதங்கள் வில்வ மரமாக இருந்து வழிபட்டதால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு 'வில்வவனேசுவரர்' என்றும் பெயர் வந்தது. பெருமாள், பிரம்மா இருவரும், இறைவன் சன்னதியில் துவார பாலகர்களாக உள்ளனர். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.
தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவர் மீது அம்பெய்த முற்பட்டான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து, வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.
அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக, இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி இருப்பதாக ஐதீகம்.
சிவராத்திரி விழா, சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர்.
கல்யாண வரம், குழந்தை வரம், தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்
உலகில் வேறெங்கும் நடக்காத வித்தியாசமான சிவராத்திரி வழிபாட்டு முறை
அரியும் சிவனும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்த்திய ஸ்ரீகிருஷ்ணர்
கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் குறிப்பிடத்தக்கது மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம். மகா சிவராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த சிவாலய ஓட்ட வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை, சிவராத்திரி அன்று தரிசிப்பது தான், இந்த சிவாலய ஓட்டத்தின் நோக்கமாகும்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கி விட்டு ஓட ஆரம்பிப்பர். அதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை 'கோவிந்தா, கோபாலா' என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.
சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் செல்லும் கோவில்கள்
1. திருமலை சூலப்பாணிதேவர்
2. திக்குறிச்சி மஹாதேவர்
3. திற்பரப்பு வீரபத்திரேஷ்வரர்
4. திருநந்திக்கரை நந்தீஷ்வரர்
5. பொன்மனை தீம்பிலான்குடிஷ்வரர்
6. பந்நிப்பாகம் கிராதமூர்த்திஷ்வரர்
7. கல்குளம் நீலகண்டர்
8. மேலாங்கோடு காலகாலர்
9. திருவிடைக்கோடு சடையப்பர்
10. திருவிதாங்கோடு பரசுபாணிஷ்வரர்
11. திற்பன்றிகோடு பக்தவசலேஷ்வரர்
12. திருநட்டாலம் சங்கரநாராயணர்
சிவாலய ஓட்ட வரலாறு
அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் வகையிலேயே இந்த சிவாலய ஓட்டம் அமைந்துள்ளது. இந்த சிவாலய ஓட்டத்தின் பின்னணியில், மகாபாரதம் சம்பந்தப்பட்ட ஒரு கதை உள்ளது.
வியாக்கிரபாத முனிவர் சிறந்த சிவபக்தர். இடுப்புக்கு மேலே மனித வடிவமும், இடுப்புக்கு கீழே புலி வடிவமும் கொண்டவர். சிவபெருமானை வேண்டி புருஷாமிருகம் என்று அழைக்கப்படும் இந்த உருவத்தை அவர் பெற்றார். அவருக்கு மகாவிஷ்ணு என்றால் ஆகாது. தனது எல்லைக்குள் எவரேனும் திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கி விடுவார். தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது என்று நம்பியவர் பீமன். புருஷாமிருகத்துக்கும், பீமனுக்கும் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்த ஸ்ரீகிருஷ்ணர் நினைத்து அதற்கு ஒரு நாடகம் நடத்தினார்.
ஒருமுறை தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பினார். வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி? எனத் தயங்கினார் பீமன். ஆனால் கிருஷ்ணரோ, பயப்படாதே. உன்னிடம் பன்னிரெண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்ததும், புருஷாமிருகம் பூஜையில் இறங்கிவிடும். அப்போது தப்பித்து விடலாம்! என்றார்.
திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவதவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது அங்கு வந்த பீமன், கோவிந்தா, கோபாலா! என்று கூவினான். இந்த சத்தத்தில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், கோவிந்தா, கோபாலா என்று மீண்டும் குரல் எழுப்பினார். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி. ஓடி ஓடி பதினோரு இடங்களைக் கடந்து பன்னிரெண்டாவது இடமான திருநட்டாலம் என்ற இடத்தில் ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. பீமனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன் உன் எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு! என்றார். அப்போது, அங்கே வந்த தர்மரிடம் நியாயம் கேட்டார்கள். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், பாரபட்சம் பாராமல், ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே! என்றார். அப்போது அங்கே தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், அரியும் சிவனும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் உதவியது.
பீமன் ஓடியதன் விளைவாகவே, சிவராத்திரி அன்று பக்தர்கள் அனைவரும் 12 சிவாலயங்களுக்கும் ஓடியே வழிபடுகிறார்கள்.
இந்த 12 சிவாலயங்கள், 12 ராசிகளுக்கான கோவிலாக அமைந்துள்ளது. அது போன்று 12 நீர் நிலைகளும் இந்த கோவில் அருகே காணபடுகிறது. 12 சிவாலயங்களுக்கு 110 கி.மீ. தூரம் நடந்து வந்து சிவ பெருமானை தரிசித்து செல்லும் வழிபாடானது, உலகில் வேறெங்கும் நடக்காத நிகழ்வாக உள்ளது. தமிழகம் உட்பட கேரளாவை சேர்ந்த ஐந்து லட்சம் பக்தர்கள் மேல் இந்த புனித யாத்திரையில் பங்கேற்கிறார்கள்.

அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி கோவில்
நெற்றியில் சிவபெருமானின் லிங்க வடிவம் தாங்கிய அகோர வீரபத்திரர்
மனநோய்க்கான பரிகார தலம்
தாம்பரம் - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து 10 கி.மீ. தொலைவில், அனுமந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது அகோர வீரபத்திர சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் பத்ரகாளி, காளிகாம்பாள். 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களுள் ஒருவர் வீர பத்திரர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவா். வீரம் என்பதற்கு அழகு என்றும், பத்திரம் என்பதற்குக் காப்பவன் என்றும் பொருள் கொண்டு, வீரபத்திரர் என்பதற்கு அழகும், கருணையும் கொண்டு அன்போடு காப்பவர் என்று பொருள். அகோர மூர்த்தியான வீரபத்திரர் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில், பூர நட்சத்திரம் கூடிய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார். இதனால் பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.
கருவறையில் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமானின் அம்சமான அகோர வீரபத்திர சுவாமி, ஏழடி உயர திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். சுவாமி நெற்றியில் சிவபெருமானின் லிங்க வடிவமும் பொருந்தி, ஒரு கையில் கத்தியும் கேடயமும் மற்றொரு கையில் வில், அம்பு ஏந்தியும், தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றார். அகோர வீரபத்ர சுவாமியின் அருகே, தட்சன் ஆட்டுத் தலையுடன் கரம் கூப்பியபடி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றான்.
பிரார்த்தனை
அகோர வீரபத்திரர் வெற்றிலை தோட்டத்தில் அவதரித்தவர். ஆதலால் அர்ச்சனை தட்டுடன், அவருக்கு வெற்றிலை மாலையும் பக்தர்கள் வாங்கிச்செல்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்குச் சென்றால் அகோர வீரபத்திரர் அவர்கள் மனநோயிலிருந்து விடுபட அருள்பாலிப்பதாக ஐதீகம்.
பக்தர்கள் திருமணத்திற்குப் பிறகு வீரபத்ரருக்கு 108 அல்லது 1008 வெற்றிலைகளைச் சமர்ப்பித்து மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காகவும், குழந்தை வரத்திற்காகவும் இங்கு வருகை தருகின்றனர். மன அழுத்தம், நரம்பு கோளாறுகள், கவலை, மனச்சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற பக்தர்கள் வீரபத்திரரை இங்கு வழிபடுகின்றனர். மாந்திரீகம் மற்றும் சூனியம், செவ்வாய் தோஷங்களில் இருந்து நிவாரணம், வேலை வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்காகவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட பக்தர்கள் இங்கு பத்ர காளியை வழிபடுகின்றனர். பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் இரவு தங்கி, காலை செல்வது வழக்கமாகும்.
செவ்வாய்தோஷம் உள்ளவர்கள், உடல் நிலையில் கோளாறு உடையவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பௌர்ணமி வந்து எதிரில் உள்ள குளத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்து வேண்டி கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை மாலை சார்த்தி, முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்கிறார்கள்.
வெற்றிலைப் படல் சாற்றும் பிரார்த்தனை
இவருக்கு வெற்றிலைப் படல் சாற்றுவது மிக விசேஷமான பிரார்த்தனையாகக் கருதப் படுகிறது. வெற்றிலைப்படல் என்பது, சுவாமியைச் சுற்றி அதற்கென உள்ள பிரபையில் வெற்றிலைகளை கொண்டு அலங்கரிக்க படுகின்றது. அரை வெற்றிலைப் படலுக்கு 6400 வெற்றிலைகளும், முழுப்படலுக்கு 12800 வெற்றிலைகளும் பயன் படுத்தப் படுகின்றன. வெற்றிலைப் படல் பிரார்த்தனை செய்வதாக நேர்ந்து கொண்டால், அனைத்து பிரச்னைகளும் தீர்வாகின்றன. (வெற்றியைக் குறிக்கும் இலையே வெற்றிலையாகும்) வெற்றிலை மாலையை ஆடிப்பூரத்தன்று சாத்துவதும் விசேஷ பலன்களைத் தரும்.
வெண்ணெய் மற்றும் சந்தனக் காப்பு வழிபாடு இங்கு சிறந்த பிரார்த்தனையாகும். வீரபத்ரர் உக்ரமூா்த்தி என்பதால் அவருடைய இன்னருளைப் பெற வெண்ணெய்க் காப்பு சாற்றியும், சந்தனக் காப்பு சாற்றியும் பக்தா்கள் வழிபடுகின்றனா்.
அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்
நவக்கிரகங்கள் யோக நிலையில் அமர்ந்திருக்கும் அரிய காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் நகரத்திலிருந்து 19 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இங்கு இறைவன் ஐராவதேஸ்வரரும், இறைவி காமாட்சி அம்மனும் தம்பதி சமேதராக, சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவது ஒரு தனி சிறப்பாகும்.
பொதுவாக சிவாலயங்களில், நவக்கிரகங்கள் பீடத்தின் மேல் நின்ற நிலையில் காட்சி அளிப்பார்கள். இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் அமர்ந்த நிலையில் தோற்றம் அளிக்கிறார்கள்.நவக்கிரகங்கள் அனைவரும் யோக நிலையில் அமைதியாய் இருப்பதனால் தான் இங்கு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்கள். இப்படி அமர்ந்த கோலத்தில் இருக்கும் நவக்கிரகங்களை ஒரு சில இடங்களில் மட்டுமே நாம் காண முடியும்.

திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்
தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
நாடிஜோதிடம் துவங்கிய கோவில்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, அமைந்த தேவார தலம் திருக்காரவாசல். இறைவன் திருநாமம் கண்ணாயிரநாதர். இறைவியின் திருநாமம் கைலாச நாயகி. இக்கோவில் சப்தவிடங்க தலங்களுள் ஆதி விடங்கத் தலம். திருவாரூர், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'குக்குட நடனம்' என்று வழங்கப்படுகிறது. அதாவது சேவல் அசைந்து செல்வது போல் இருக்கும்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி 'ஞான தட்சிணாமூர்த்தியாக' அருள்பாலிக்கிறார். அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞானமகாகுருவின் எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடிஜோதிடம் துவங்கிய கோவில் இது என்று கருதப்படுகிறது.

அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்
சிவலிங்க பாணத்தில் யானையின் உருவம் தெரியும் அபூர்வ காட்சி
ஒரே கருவறையில் சிவலிங்கத் திருமேனியும், அம்பிகையும் அருள் பாலிக்கும் அரிய காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் நகரத்திலிருந்து 19 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.ஹஸ்தி என்றால் யானை என்று பொருள். யானை இங்கு வந்து சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு 'ஹஸ்திமுகம்' எனப் பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் அத்திமுகம் என்று மருவியது. இக்கோவிலானது சாலை மட்டத்திலிருந்து, பத்தடி பள்ளத்தில் அமைந்துள்ளது. பல நூறு ஆண்டு காலம் தண்ணீருக்குள்ளும், மண்ணுக்குள்ளும் புதைந்து கிடந்த இக்கோவில் தற்போது தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
பொதுவாக ஒரு கோவில் என்று எடுத்துக்கொண்டால் ஒரு மூலவர் இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்கலாம். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள். ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும், அவருக்கு பின்னால் காமாட்சி அம்மன் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் தை மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் சூரியனின் பூஜைக்காக, நந்தி மூலவருக்கு நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும்.
இந்திரன் விருத்திராசுரனை கொன்று அழிக்க, அவருக்கும் அவரது யானை ஐராவதத்திற்கும் ப்ரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. இத்தலத்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றனர். அதனால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவத யானை இங்கு வழிபட்டதால், ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஐராவதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது, யானையின் உருவம் மிகத் தெளிவாக தெரியும். பொதுவாக சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். அந்த வகையில் இத்தலத்து சிவலிங்கத்தின் பாணத்தில், யானை உருவம் தெரிவது ஒரு அரிய காட்சியாகும்.
இங்கு இறைவன் ஐராவதேஸ்வரரும், இறைவி காமாட்சி அம்மனும் தம்பதி சமேதராக சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவதால் களத்திர தோஷம்,திருமண தடை,கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைவு போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.
இக்கோவிலில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

திருலோக்கி சுந்தரேசுவரர் கோயில்
குரு பகவானுக்கு 'குருபலம்' வழங்கிய உமாமகேஸ்வரர்
கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.
இத்தலத்தில்தான் குரு பகவான் உமாமகேஸ்வரரை பூஜித்து மக்களுக்கு குருபலம் அருளும் வரம் பெற்றார்.
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. பொன்னுக்கு ஏமம் என்ற ஒரு பெயரும் உண்டு. இத்தலத்தில் குரு, ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் ஏமநல்லூர் என்ற பெயர் முற்காலத்தில் இந்த தலத்திற்கு இருந்தது. குரு பகவான் இத்தலத்தில் இறைவன் சுந்தரேசுவரரை உள்ளன்போடு பூஜை செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு அவருக்கு காட்சி தந்து,.'இந்த தலத்துக்கு வந்து உனது பார்வை பெறும் எல்லோரும் எல்லாவிதமான தோஷங்களும் விலகி 'குரு பலம்' பெற்று அவர்களது இனிய இல்லறம் சிறக்க ஆசிர்வதிக்கிறேன்; என்று அருளினார். இப்படி குரு பகவான் 'குருபலம்' பெற்ற நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் பிறந்த நட்சத்திரம்) ஆகும். இந்த கோலத்தை தரிசித்த குரு பகவான் தனது வழக்கமான அபய முத்திரை விடுத்து, இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிக்கிறார்.
ரிஷப வாகன உமாமகேஸ்வரரின் அற்புத எழில் கோலம்
இக்கோவில் மகா மண்டபத்தில், ரிஷப வாகன உமாமகேஸ்வரரை நாம் தரிசிக்கலாம். அதி அற்புதமான அழகு உடைய இந்த வடிவம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். ரிஷப வாகனத்தில் அம்பிகையை ஆலிங்கனம் செய்தபடி ஈசன் காட்சியளிக்கும் அழகே அலாதியானது. இடபத்தின் (காளையின்) முதுகின் மேலுள்ள அம்பாரியில் அமைந்திருக்கும் ஆசனத்தின் மீது ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்கவிட்ட நிலையிலும் சடா மகுட தாரியாக ஒளிவட்டத்துடன் சிவபெருமான் அமர்ந்துள்ளார். அவரது வலப் பின்கரத்தில் திரிசூலம் உள்ளது. வலது முன்கரத்தால் அபயம் காட்டுகின்றார். இடக்கரங்களால் அருகே அமர்ந்துள்ள தேவியை அணைத்துள்ளார். அணிகலன்களும், உத்ரபந்தமும், புரிநூலும் தரித்துள்ள சிவபெருமானின் உடல் சற்றே வளைந்த நிலையில் தேவியைத் தாங்குகின்றது
சிவபெருமானுக்கு மேலே அழகிய மகர தோரணம் காணப் பெறுகின்றது. மகர தோரணத்திற்கு மேலே ஆணும் பெண்ணும் என எட்டு கந்தர்வர்கள் வீணை, உடுக்கை, மத்தளம், குழல், சிறுபறை, கைத்தாளம் போன்ற இசைக் கருவிகளை இசைத்தவாறு, மிதந்த வண்ணம் திகழ்கின்றனர்.
உமாதேவி தன் இடக்காலைக் குத்திட்டவாறு, வலக்காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளார். இடக்கரத்தில் மலர் ஒன்றினை ஏந்தியுள்ளார். நீண்ட கீழாடையுடன், ஒரு புறம் சரிந்த கொண்டையுடன் தன்னை அணைத்தவாறு அமர்ந்துள்ள சிவபெருமானின் முதுகினைத் தன் வலக்கரத்தால் பற்றியுள்ளார். பெருமானும், அம்மையும் அமர்ந்திருக்கும் மகர தோரணத்தோடு அமைந்துள்ள அம்பாரியின் பின்புறம் ஒரு சிவலிங்கம் புடைப்பு சிற்பமாக அமைந்துள்ளது.
சிவபெருமான் உமாதேவி அமர்ந்திருக்கும் அம்பாரியானது, படுத்த நிலையில் உள்ள ஒரு காளையின் திமிலோடு இணைந்து ஒரே சிற்பமாக உள்ளது. காளை சிறிய கொம்புகள், விரிந்த காதுகள் ஆகியவற்றுடன் தோல் மடிப்புகளுடன் உள்ளது. பெரிய உருண்டை கோர்க்கப் பெற்ற கழுத்து கயிறு, சங்கிலி மாலை, மணிச்சக்கரங்கள் கோர்க்கப் பெற்ற பெரிய மாலை காளையின் கழுத்தை அணி செய்கின்றன. உமாமகேஸ்வரரின் அதி லாவண்ய ரூபத்தை தரிசிக்கவாவது, நாம் ஒரு முறை திருலோக்கி செல்ல வேண்டும்.
மன்மதன் மீண்டும் உயிர் பெற்ற தலம்
திருக்குறுக்கை தலத்தில், சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை, அவனது மனைவி ரதிதேவியின் வேண்டுதலின் பேரில் சிவன் உயிர்ப்பித்து அளித்த சிறப்புக்குரிய தலம் இதுவாகும். ரதி - மன்மதன் இருவரும் உமாமகேச்வரருக்கு எதிரில், ஐந்தடி உயரத்தில், அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர். உடனிருக்க காட்சி தருகிறார்கள். இந்த தெய்வீக காதலர்களின் சிலாரூபம் மிகுந்த நேர்த்தியும், கலைநயமும் உடையது ஆகும். இச்சிலையும் பார்ப்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும்,
இல்லறம் அமைய, இனிக்க அருளும் தலம்
வரன் அமையாத இளைஞர்கள், இளம் பெண்கள், பிரிந்து போன தம்பதிகள், திருமணமாகியும் மணவாழ்க்கையில் பிரச்னையுள்ளவர்கள், விதி வசத்தால் முதல் திருமண வாழ்க்கை சரிவர அமையாதவர்கள் எல்லோரும் இங்கு வந்து உமாமகேச்வரப் பெருமானையும், குருபகவானையும் தரிசித்து பலன் பெறுகிறார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய குரு பரிகாரத் தலம் இது.

இலங்குடி பெரிய ஆண்டவர் கோவில்
ரத்தம் போன்ற சிவப்பு நிற திரவத்தை தன் வாயில் இருந்து சுரந்து கொண்டிருக்கும் அதிசய நந்தி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது இலங்குடி என்ற கிராமம். கிராமத்தின் எல்லையில் பல நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது.இறைவன் திருநாமம் பெரிய ஆண்டவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
இக்கோவிலுக்கு வெளியே திறந்த வெளியில் ஒரு அதிசய நந்தி சிலை உள்ளது. இந்த நந்தி சிலையின் வாய்பகுதியில் இருந்து ஒரு திரவம் எப்பொழுதுமே சுரந்து கொண்டே இருக்கிறது. இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வழவழப்பாக உள்ளது. நறுமணமும் எண்ணெய் போன்றே உள்ளது. தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்கும் இந்த திரவத்தால் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பட்டு ஆடையும் நனைந்தபடியே உள்ளது. பக்தர்கள் இந்த திரவத்தை பிரசாதமாக நெற்றியில் இட்டுகொள்கின்றனர். சிலர் இதை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த திரவத்திற்கு மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அந்த நந்தி சிலையை அந்த இடத்தில் இருந்து ஒரு அடி நகர்த்தி வைத்தும் ரத்தம் வடிந்தே படியே தான் இருந்தது. இக்கோவிலில் எத்தனையோ கற்சிலைகள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
மழையின் அளவை விவசாயிகளுக்கு சுட்டிக் காட்டும் நந்தி
நந்தி வாயில் இருந்து வழியும் சிவப்பு நிற திரவத்தின் அளவு, அந்த வருடத்தின் மழை அளவை குறிப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த நந்தி சிலையின் வாயில் திரவம் அதிகமாக சுரந்தால், அந்த வருடம் விவசாயம் நன்றாக இருக்கும் என்று கிராம மக்கள் சொல்கிறார்கள்.

மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில்
நிலம், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் பரிகார தலம்
நிலத்து மண்ணை சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்யும் வித்தியாசமான பரிகார பூஜை
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில். இறைவியின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி. பஞ்சபூதங்களுள் பூமிக்கான தலமாக விளங்கும் இக்கோவில்2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. முற்காலத்தில் மண் அரக்கநல்லூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பின்னர் பெயர் மருவி மண்ணச்சநல்லூர் என்றானது.
இங்கு பூமிக்குரிய நாயகனாக இத்தலத்து இறைவன் பூமிநாதசுவாமி இருப்பதால், மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் இங்கு வந்தால் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.பூமிநாத சுவாமி 16 விதமான தோஷங்களை நீக்கி அருள்பவர் என்று அகத்திய மாமுனிவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
இங்கு மண் சம்பந்தப்பட்ட பிரச்சனை நீங்க நடத்தப்படும் பரிகார பூஜை சற்று வித்தியாசமானது. நாம் வாங்க அல்லது விற்க நினைக்கும் மனையின் வடகிழக்கு மூலை மண்ணை ஒரு நல்ல நாளில் புதன் ஹோரையில் எடுத்து மஞ்சள் நிறத் துணியில் கட்டி கோயிலுக்கு எடுத்து வரவேண்டும். கொடி மரத்து விநாயகருக்கு விளக்கேற்றி, பிறகு அம்பிகைக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்து பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு கோயிலை ஒருமுறை வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போடவேண்டும்.
கோவிலை இரண்டாவது முறை வலம் வந்து, வன்னி மரத்தடி மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் கட்டிக்கொள்ள வேண்டும். மூன்றாவது முறையும் கோவிலைச் சுற்றி வந்து வணங்க வேண்டும். அடுத்த நாள் காலை, புதன் ஹோரை நேரத்தில், நம் நிலத்தில் மண் எடுத்த இடத்தில் கோவிலில் இருந்து கொண்டு வந்த மண்ணைப் போட்டு தூப தீபம் ஏற்றி வணங்க வேண்டும். பிறகு மண் எடுத்து வந்த துணியில் ஒரு நாணயத்தை முடிந்து, பூஜை அறையில் வைக்க வேண்டும். என்ன வேண்டினோமோ அது நிறைவேறியதும், பூமிநாத சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து முடிந்து வைத்த நாணயத்தை சுவாமிக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்பது இங்கு கடைப்பிடிக்கப்படும் ஒரு வேண்டுதல்.இந்த வேண்டுதலால் பூமி சம்மந்தமான எல்லா பிரச்னைகளும் நீங்கி விடுகின்றன என்பது இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்
அமர்ந்த நிலையில் காட்சி தரும் நவக்கிரகங்களின் வித்தியாசமான தோற்றம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் கோவில்பட்டியில் அமைந்துள்ளது கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் செண்பகவல்லி அம்மன். இத்தலத்தில், இறைவனும் இறைவியும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் நின்ற நிலையில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள். நவக்கிரகங்களின் இந்த வித்தியாசமான தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில்
இடது பாதம் மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அபூர்வத் தோற்றம்
அம்பாசமுத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்தக் கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் மூன்று சிறிய சன்னதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய சிவலிங்கத் திருமேனியும், அதற்கு முன்பாக ஒரு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மூன்று ஈசர்கள் எழுந்தருளியிருப்பதால், கருவறை மூலவருக்கு மூன்றீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு, வலது முட்டியின் மீது இடது பாதம் முழுமையாக மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்துள்ளார். அவரது இடது கை நாகத்தை தொட்ட நிலையில் இருக்கின்றது. தட்சிணாமூர்த்தியின் இந்த அபூர்வ தோற்றமானது, நாம் வேறு எந்த கோவிலிலும் காண முடியாத ஒன்றாகும்.

விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்
ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும், அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் உள்ள ஒரே தலம்
மூலவருக்கு, வேறு எந்த தலத்திலும் இல்லாத திருநாமம் அமையப் பெற்ற தலம்
மதுரையிலிருந்து 14 கி.மீ.தூரத்தில், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி, உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால் இக்கோவிலில், ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும் அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சி ஆகும். அதேபோல், நம் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத வகையில், மூலவருக்கு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் என்ற திருநாமம் அமைந்திருப்பதும், ஒரு தனி சிறப்பாகும். இப்படிப்பட்ட திருநாமம் அமைந்ததற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு திருஉத்திரகோசமங்கை எனும் ஊரில் வாழ்ந்த ஒருவர் தன் மனைவியுடனும்,தன் மகன்கள் மற்றும் மகளுடன் சேர்ந்து, அழகர்கோவிலுக்கு சென்று தன் பேரக்குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி வருவதற்காக மாட்டுவண்டி கட்டிக் கொண்டு இவ்வழியாக வந்தார்.
இக்கோவில் அமைந்துள்ள இவ்விடத்தில் தமது மாட்டுவண்டியை நிறுத்தி அங்கு இருந்த ஆலமரத்தின் கிளையொன்றில் தொட்டிலை கட்டி குழந்தையை துயில் கொள்ள வைத்துவிட்டு, பெண்கள் உணவு சமைக்க, ஆண்கள் அனைவரும் அருகாமையில் ஓடும் நதியில் நீராடி திரும்பி வந்து பார்த்தபோது, தொட்டிலில் துயில் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை.
அவர்கள், கடவுளே ஏன் இந்த சோதனையென இருகரம் கூப்பி ஆகாயத்தை நோக்கியபோது, அவர்களின் கண்களுக்கு ஆகாயத்தில் அக்குழந்தை அந்தரத்தில் மிதப்பதைக் கண்டு பதைபதைத்தனர். அதேவேளையில் அந்த ஆலமரத்தின் உச்சியில் இருந்து ஓர் அசரீரியின் குரல் கேட்டது. 'நீங்கள் கட்டிய தொட்டிலுக்கு அடியில் உங்களின் அழுதகண்ணீரை ஆற்றும் வல்லமை படைத்த சிவன் சிலையொன்று பூமியினுள் புதையுண்டு கிடக்கிறது.அவரின் திருஉருவச்சிலையை வெளிக் கொணர்ந்து வழிபடுவதாக வாக்கு தந்தால், அந்தரத்தில் காணும் அந்த குழந்தை அடுத்த கணமே தொட்டிலில் துயில் கொள்ளும் என்றுரைத்தது.செய்தியைக் கேட்டதும் அவர்கள் அத்தனை பேருமே அப்படியே செய்கிறோம் என தரையில் விழுந்து வணங்கி சத்தியம் செய்ததாகவும் அடுத்தகணமே தொட்டிலில் குழந்தையை பொக்கை வாய் சிரிப்புடன் கண்டார்கள். இறைவனின் கட்டளைப்படி அவர்களும் பூமியினுள் புதையுண்டு கிடந்த ரிஷபாரூடர் சிலையை வெளியில் எடுத்து வைத்து, கோவில் கட்டி வழிபாடு செய்தார்கள். குழந்தையை காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால், இறைவனுக்கு 'அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பிரதோஷ காலங்களில் மூலவரையே ரிஷபாரூடராக வழிபடலாம் என்பது இக்கோவிலின் மற்றும் ஒரு தனிச்சிறப்பாகும்.
இடப வாகனமாக இருக்கும் மகாவிஷ்ணு
ஒரு சமயம், தேவர்கள் அசுரர்கள் தொல்லையினால், கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவபெருமானிடம் கொண்ட அன்பின் காரணமாக மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவபெருமானை ஏற்றிச் சென்றார். இதன் பின் சிவபெருமானுக்கு 'ரிஷபாரூடர்' என்ற திருநாமம் உண்டாயிற்று. மகாவிஷ்ணு இங்கு இடபவாகனமாக இருப்பதால் சிவனையும், சக்தியையும், பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.