திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில்
தீராத நோய்களை தீர்த்து வைக்கும் பாஷாண லிங்கேஸ்வரர்
பாஷாண லிங்கத்தை குளிர்விக்கும் நீர் பிரசாதமாக வழங்கப்படும் தலம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில்,ஆற்காட்டிலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில். இந்த பாஷாண லிங்கம் 650 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோவிலில் ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் உருவாக்கப்பட்ட பாஷாண லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை குளிர்விக்கும் நீரானது, தீராத நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகின்றது
விஜயநகர பேரரசின் கீழ், குறுநில மன்னர்களான திம்மிரெட்டி, பொம்மி ரெட்டி ஆகியோர் வேலூர் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். இவர்களது வழித்தோன்றல்தான் சதாசிவராய மன்னர்.இவர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லைப் பகுதியில் பல நல்ல காரியங்களைச் செய்து வந்தார்.
ஒரு சமயம் அந்தப் பகுதியில் தொற்று நோய் ஏற்பட்டு மக்கள் அனைவரும் அவதிப்பட்டனர்.இரக்க குணமும், இறைப் பற்றும் மிக்க சதாசிவராயர், இதனைக் கண்டு வேதனை அடைந்தார். நோயை விரட்டும் வழி குறித்து, அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.அரண்மனை ராஜ வைத்தியரான கன்னிகா பரமேஸ்வரரிடம்,மக்களின் நோயைப் போக்க ஏதாவது செய்யும்படி பணித்தார். மன்னனின் ஆணைப்படி ராஜவைத்தியரான கன்னிகா பரமேஸ்வரர், தன்வந்திரி முறையில் ஒரு லிங்கத்தை தயார் செய்ய முடிவு செய்தார்.
சந்திர பாஷாணம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்பட 5 வகை பாஷாணங்களை பக்குவப்படுத்தி, தெய்வாம்சமும்,மருத்துவகுணமும் இரண்டற கலந்திருக்கும் வகையில் சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்தார். இந்த லிங்கத்தின் உயரம் வெறும் 7 அங்குலம் தான்.
கி.பி.1379–ம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், திமிரி நகரின் கோட்டையில் இந்த பாஷாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12–வது சங்கராச்சாரியார் வித்யாரண்ய சுவாமிகள் ஆசீர்வாதத்துடன் இந்த பிரதிஷ்டை விழா நடந்தது. ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது.திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதால், புகையும் தன்மை கொண்டது. எனவே லிங்கத்தை குளிர்விக்கும் வகையில் அதன் மீது எப்போதும் நீர் விழுமாறு செய்யப்பட்டது. அந்த நீரே மருத்துவ குணம் கொண்டது. அதுவே இங்கு பிரசாதமாகவும் மருந்தாகவும் வழங்கப்படுகிறது. இந்த நீரானது தீராத நோய்களையும் தீர்க்கும் தன்மை கொண்டது.
மருத்துவ குணங்களை உள்ளடக்கிய இந்த லிங்கத்தின் அபிஷேக தீர்த்த பிரசாதம் இதய நோய், சிறுநீரக நோய், மன நோய், சரும நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது.