மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்
உலகில் வேறெங்கும் நடக்காத வித்தியாசமான சிவராத்திரி வழிபாட்டு முறை
அரியும் சிவனும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்த்திய ஸ்ரீகிருஷ்ணர்
கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் குறிப்பிடத்தக்கது மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம். மகா சிவராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த சிவாலய ஓட்ட வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை, சிவராத்திரி அன்று தரிசிப்பது தான், இந்த சிவாலய ஓட்டத்தின் நோக்கமாகும்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கி விட்டு ஓட ஆரம்பிப்பர். அதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை 'கோவிந்தா, கோபாலா' என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.
சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் செல்லும் கோவில்கள்
1. திருமலை சூலப்பாணிதேவர்
2. திக்குறிச்சி மஹாதேவர்
3. திற்பரப்பு வீரபத்திரேஷ்வரர்
4. திருநந்திக்கரை நந்தீஷ்வரர்
5. பொன்மனை தீம்பிலான்குடிஷ்வரர்
6. பந்நிப்பாகம் கிராதமூர்த்திஷ்வரர்
7. கல்குளம் நீலகண்டர்
8. மேலாங்கோடு காலகாலர்
9. திருவிடைக்கோடு சடையப்பர்
10. திருவிதாங்கோடு பரசுபாணிஷ்வரர்
11. திற்பன்றிகோடு பக்தவசலேஷ்வரர்
12. திருநட்டாலம் சங்கரநாராயணர்
சிவாலய ஓட்ட வரலாறு
அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் வகையிலேயே இந்த சிவாலய ஓட்டம் அமைந்துள்ளது. இந்த சிவாலய ஓட்டத்தின் பின்னணியில், மகாபாரதம் சம்பந்தப்பட்ட ஒரு கதை உள்ளது.
வியாக்கிரபாத முனிவர் சிறந்த சிவபக்தர். இடுப்புக்கு மேலே மனித வடிவமும், இடுப்புக்கு கீழே புலி வடிவமும் கொண்டவர். சிவபெருமானை வேண்டி புருஷாமிருகம் என்று அழைக்கப்படும் இந்த உருவத்தை அவர் பெற்றார். அவருக்கு மகாவிஷ்ணு என்றால் ஆகாது. தனது எல்லைக்குள் எவரேனும் திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கி விடுவார். தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது என்று நம்பியவர் பீமன். புருஷாமிருகத்துக்கும், பீமனுக்கும் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்த ஸ்ரீகிருஷ்ணர் நினைத்து அதற்கு ஒரு நாடகம் நடத்தினார்.
ஒருமுறை தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பினார். வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி? எனத் தயங்கினார் பீமன். ஆனால் கிருஷ்ணரோ, பயப்படாதே. உன்னிடம் பன்னிரெண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்ததும், புருஷாமிருகம் பூஜையில் இறங்கிவிடும். அப்போது தப்பித்து விடலாம்! என்றார்.
திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவதவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது அங்கு வந்த பீமன், கோவிந்தா, கோபாலா! என்று கூவினான். இந்த சத்தத்தில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், கோவிந்தா, கோபாலா என்று மீண்டும் குரல் எழுப்பினார். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி. ஓடி ஓடி பதினோரு இடங்களைக் கடந்து பன்னிரெண்டாவது இடமான திருநட்டாலம் என்ற இடத்தில் ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. பீமனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன் உன் எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு! என்றார். அப்போது, அங்கே வந்த தர்மரிடம் நியாயம் கேட்டார்கள். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், பாரபட்சம் பாராமல், ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே! என்றார். அப்போது அங்கே தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், அரியும் சிவனும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் உதவியது.
பீமன் ஓடியதன் விளைவாகவே, சிவராத்திரி அன்று பக்தர்கள் அனைவரும் 12 சிவாலயங்களுக்கும் ஓடியே வழிபடுகிறார்கள்.
இந்த 12 சிவாலயங்கள், 12 ராசிகளுக்கான கோவிலாக அமைந்துள்ளது. அது போன்று 12 நீர் நிலைகளும் இந்த கோவில் அருகே காணபடுகிறது. 12 சிவாலயங்களுக்கு 110 கி.மீ. தூரம் நடந்து வந்து சிவ பெருமானை தரிசித்து செல்லும் வழிபாடானது, உலகில் வேறெங்கும் நடக்காத நிகழ்வாக உள்ளது. தமிழகம் உட்பட கேரளாவை சேர்ந்த ஐந்து லட்சம் பக்தர்கள் மேல் இந்த புனித யாத்திரையில் பங்கேற்கிறார்கள்.