மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில்
நிலம், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் பரிகார தலம்
நிலத்து மண்ணை சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்யும் வித்தியாசமான பரிகார பூஜை
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில். இறைவியின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி. பஞ்சபூதங்களுள் பூமிக்கான தலமாக விளங்கும் இக்கோவில்2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. முற்காலத்தில் மண் அரக்கநல்லூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பின்னர் பெயர் மருவி மண்ணச்சநல்லூர் என்றானது.
இங்கு பூமிக்குரிய நாயகனாக இத்தலத்து இறைவன் பூமிநாதசுவாமி இருப்பதால், மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் இங்கு வந்தால் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.பூமிநாத சுவாமி 16 விதமான தோஷங்களை நீக்கி அருள்பவர் என்று அகத்திய மாமுனிவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
இங்கு மண் சம்பந்தப்பட்ட பிரச்சனை நீங்க நடத்தப்படும் பரிகார பூஜை சற்று வித்தியாசமானது. நாம் வாங்க அல்லது விற்க நினைக்கும் மனையின் வடகிழக்கு மூலை மண்ணை ஒரு நல்ல நாளில் புதன் ஹோரையில் எடுத்து மஞ்சள் நிறத் துணியில் கட்டி கோயிலுக்கு எடுத்து வரவேண்டும். கொடி மரத்து விநாயகருக்கு விளக்கேற்றி, பிறகு அம்பிகைக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்து பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு கோயிலை ஒருமுறை வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போடவேண்டும்.
கோவிலை இரண்டாவது முறை வலம் வந்து, வன்னி மரத்தடி மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் கட்டிக்கொள்ள வேண்டும். மூன்றாவது முறையும் கோவிலைச் சுற்றி வந்து வணங்க வேண்டும். அடுத்த நாள் காலை, புதன் ஹோரை நேரத்தில், நம் நிலத்தில் மண் எடுத்த இடத்தில் கோவிலில் இருந்து கொண்டு வந்த மண்ணைப் போட்டு தூப தீபம் ஏற்றி வணங்க வேண்டும். பிறகு மண் எடுத்து வந்த துணியில் ஒரு நாணயத்தை முடிந்து, பூஜை அறையில் வைக்க வேண்டும். என்ன வேண்டினோமோ அது நிறைவேறியதும், பூமிநாத சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து முடிந்து வைத்த நாணயத்தை சுவாமிக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்பது இங்கு கடைப்பிடிக்கப்படும் ஒரு வேண்டுதல்.இந்த வேண்டுதலால் பூமி சம்மந்தமான எல்லா பிரச்னைகளும் நீங்கி விடுகின்றன என்பது இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.