வணக்கம்!
ஆலயத் துளிகள் என்னும் இந்த இணையதளத்தினை அளவில்லா ஆர்வத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் உருவாக்கி இருக்கின்றோம். மற்றும் இதில் உள்ள பதிவுகளை மிகுந்த கவனத்துடன் உங்களுக்கு வழங்குகிறோம். இந்த இணையதளத்தினை நிறுவிய எங்களைப் பற்றியும், இந்த வெளியீட்டிற்கு பின்னணியாக இருந்த சில விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
இதன் நிறுவனர்களில் ஒருவரான சுகுமார் சுந்தரம், ஆலயங்கள் பற்றிய தகவல்களை ஆராய்வதிலும்.ஆலயங்களை தரிசிப்பதிலும் வாழ்நாள் அனுபவம் உடையவர். அவர் 106 திவ்ய தேசங்களையும், 200க்கும் மேற்பட்ட தேவாரத் தலங்களையும் நேரில் சென்று தரிசித்திருக்கிறார்.1970களில் இணையதளம் போன்ற தகவல் வசதி இல்லாத காலகட்டத்தில், ஆலயங்களைப் பற்றியும் அவற்றோடு தொடர்புடைய கதைகளையும் தேடி ஆராய்ந்து, அதன்பின் அந்த ஆலயங்களை தரிசிக்கச் செல்வார். ஆலய தரிசனங்களால் கிடைக்கும் பரவசத்தையும், மனநிறைவையும் அடைய அவர், அதிக விரைவு போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலகட்டத்தில்கூட, அப்போதிருந்த பல சாதாரண போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி பலமுறை நீண்ட நெடிய பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார்.
மற்றொரு நிறுவனரான பல்லவி நடேஷ், இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் பண்டைய வரலாற்றைப் பற்றியும் அதன் பின்னணியில் உள்ள நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர்.அதனால் நம் ஆலயங்களைப் பற்றிய நூல்களைப் படிப்பதிலும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஓவியக் கலைஞரான அவர், நம் ஆலயங்களின் வடிவமைப்பினாலும், சிற்பங்களின் கலை அழகினாலும், ஆலயத்தின் பின்னணியில் உள்ள கதைகளினாலும் கவரப்பட்டு, ஆலய தரிசனம் மேற்கொள்வதில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்.
வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த நாங்கள் இருவரும், ஒரு தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ஆலயக் கதைகளைப் பற்றியும், எங்கள் ஆலய தரிசன அனுபவங்களைப் பற்றியும் கலந்துரையாட சந்தர்ப்பம் அமைந்தது. அதுவே இணையத்தின் மூலமாக உங்களுடன் பகிரவும் எங்களைத் தூண்டியது. கடல் போல் பரந்து விரிந்து இருக்கும் நம் ஆலயங்களைப் பற்றிய தகவல்களிலும் செய்திகளிலும் இருந்து ஒரு சில துளிகளையாவது வாசகர்களாகிய உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்த ஆலயத் துளிகள் இணையதளத்தின் நோக்கம் ஆகும. இந்த இணையதளத்தின் பதிவுகளைப் படித்து மகிழ்வீர்கள் என்று நம்புகின்றோம்.
நன்றி!