விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்
ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும், அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் உள்ள ஒரே தலம்
மூலவருக்கு, வேறு எந்த தலத்திலும் இல்லாத திருநாமம் அமையப் பெற்ற தலம்
மதுரையிலிருந்து 14 கி.மீ.தூரத்தில், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி, உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால் இக்கோவிலில், ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும் அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சி ஆகும். அதேபோல், நம் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத வகையில், மூலவருக்கு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் என்ற திருநாமம் அமைந்திருப்பதும், ஒரு தனி சிறப்பாகும். இப்படிப்பட்ட திருநாமம் அமைந்ததற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு திருஉத்திரகோசமங்கை எனும் ஊரில் வாழ்ந்த ஒருவர் தன் மனைவியுடனும்,தன் மகன்கள் மற்றும் மகளுடன் சேர்ந்து, அழகர்கோவிலுக்கு சென்று தன் பேரக்குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி வருவதற்காக மாட்டுவண்டி கட்டிக் கொண்டு இவ்வழியாக வந்தார்.
இக்கோவில் அமைந்துள்ள இவ்விடத்தில் தமது மாட்டுவண்டியை நிறுத்தி அங்கு இருந்த ஆலமரத்தின் கிளையொன்றில் தொட்டிலை கட்டி குழந்தையை துயில் கொள்ள வைத்துவிட்டு, பெண்கள் உணவு சமைக்க, ஆண்கள் அனைவரும் அருகாமையில் ஓடும் நதியில் நீராடி திரும்பி வந்து பார்த்தபோது, தொட்டிலில் துயில் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை.
அவர்கள், கடவுளே ஏன் இந்த சோதனையென இருகரம் கூப்பி ஆகாயத்தை நோக்கியபோது, அவர்களின் கண்களுக்கு ஆகாயத்தில் அக்குழந்தை அந்தரத்தில் மிதப்பதைக் கண்டு பதைபதைத்தனர். அதேவேளையில் அந்த ஆலமரத்தின் உச்சியில் இருந்து ஓர் அசரீரியின் குரல் கேட்டது. 'நீங்கள் கட்டிய தொட்டிலுக்கு அடியில் உங்களின் அழுதகண்ணீரை ஆற்றும் வல்லமை படைத்த சிவன் சிலையொன்று பூமியினுள் புதையுண்டு கிடக்கிறது.அவரின் திருஉருவச்சிலையை வெளிக் கொணர்ந்து வழிபடுவதாக வாக்கு தந்தால், அந்தரத்தில் காணும் அந்த குழந்தை அடுத்த கணமே தொட்டிலில் துயில் கொள்ளும் என்றுரைத்தது.செய்தியைக் கேட்டதும் அவர்கள் அத்தனை பேருமே அப்படியே செய்கிறோம் என தரையில் விழுந்து வணங்கி சத்தியம் செய்ததாகவும் அடுத்தகணமே தொட்டிலில் குழந்தையை பொக்கை வாய் சிரிப்புடன் கண்டார்கள். இறைவனின் கட்டளைப்படி அவர்களும் பூமியினுள் புதையுண்டு கிடந்த ரிஷபாரூடர் சிலையை வெளியில் எடுத்து வைத்து, கோவில் கட்டி வழிபாடு செய்தார்கள். குழந்தையை காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால், இறைவனுக்கு 'அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பிரதோஷ காலங்களில் மூலவரையே ரிஷபாரூடராக வழிபடலாம் என்பது இக்கோவிலின் மற்றும் ஒரு தனிச்சிறப்பாகும்.
இடப வாகனமாக இருக்கும் மகாவிஷ்ணு
ஒரு சமயம், தேவர்கள் அசுரர்கள் தொல்லையினால், கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவபெருமானிடம் கொண்ட அன்பின் காரணமாக மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவபெருமானை ஏற்றிச் சென்றார். இதன் பின் சிவபெருமானுக்கு 'ரிஷபாரூடர்' என்ற திருநாமம் உண்டாயிற்று. மகாவிஷ்ணு இங்கு இடபவாகனமாக இருப்பதால் சிவனையும், சக்தியையும், பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.