அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்
சிவலிங்க பாணத்தில் யானையின் உருவம் தெரியும் அபூர்வ காட்சி
ஒரே கருவறையில் சிவலிங்கத் திருமேனியும், அம்பிகையும் அருள் பாலிக்கும் அரிய காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் நகரத்திலிருந்து 19 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்.இக்கோவில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. ஹஸ்தி என்றால் யானை என்று பொருள். யானை இங்கு வந்து சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு 'ஹஸ்திமுகம்' எனப் பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் அத்திமுகம் என்று மருவியது. இக்கோவிலானது சாலை மட்டத்திலிருந்து, பத்தடி பள்ளத்தில் அமைந்துள்ளது. பல நூறு ஆண்டு காலம் தண்ணீருக்குள்ளும், மண்ணுக்குள்ளும் புதைந்து கிடந்த இக்கோவில், தற்போது தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
பொதுவாக ஒரு கோவில் என்று எடுத்துக்கொண்டால் ஒரு மூலவர் இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்கலாம். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள். ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும், அவருக்கு பின்னால் காமாட்சி அம்மன் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் தை மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் சூரியனின் பூஜைக்காக, நந்தி மூலவருக்கு நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும்.
இந்திரன் விருத்திராசுரனை கொன்று அழிக்க, அவருக்கும் அவரது யானை ஐராவதத்திற்கும் ப்ரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. இத்தலத்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றனர். அதனால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவத யானை இங்கு வழிபட்டதால், ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஐராவதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது, யானையின் உருவம் மிகத் தெளிவாக தெரியும். பொதுவாக சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். அந்த வகையில் இத்தலத்து சிவலிங்கத்தின் பாணத்தில், யானை உருவம் தெரிவது ஒரு அரிய காட்சியாகும்.
இங்கு இறைவன் ஐராவதேஸ்வரரும், இறைவி காமாட்சி அம்மனும் தம்பதி சமேதராக சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவதால் களத்திர தோஷம்,திருமண தடை,கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைவு போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.
இக்கோவிலில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஐராவதேஸ்வரர் - காமாட்சி அம்மன்