திருவையாறு ஐயாரப்பர் கோவில்
எமபயத்தை நீக்கும் ஆட்கொண்டார்
நாட்பட்ட வியாதிகளை தீர்க்கும் ஆட்கொண்டார் வழிபாடு
தஞ்சாவூருக்கு வடக்கே 15 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாரப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி.
தெற்கு கோபுர வாசலில் இடது புறமாக ஆட்கொண்டார் சன்னதியும், வலது புறமாக உய்யக்கொண்டார் சன்னதியும் இருக்கின்றன. திருக்கடவூர் கால சம்ஹாரமூர்த்தியைப் போல, திருவையாறு ஆட்கொண்டாரை வழிபாடு செய்தாலும் நீண்ட ஆயுள் கிட்டும். கூடவே நாட்பட்ட வியாதிகளைக்கூட இத்தல ஆட்கொண்டார் வழிபாடு தீர்த்துவிடுவதாக ஐதீகம். இந்த ஆட்கொண்டேசரே, திருவையாறு மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
ஆட்கொண்டார் எமபயத்தை போக்கி அருள் புரிபவர். முன்னொரு காலத்தில் சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் தந்தையும், தாயும் இறந்தபின் மிக்க வருத்தம் கொண்டு, தல யாத்திரை மேற்கொண்டான். அப்போது வழியில் திருப்பழனம் என்ற ஊரில் தங்கியிருந்தான். ஒருநாள் இரவு அவனது கனவில் யமன் தோன்றி 'இன்றைக்கு ஐந்தாம் நாள் உன் உயிரை நான் பறித்து விடுவேன்' என்று உணர்த்தினார். அதைக் கேட்டு அச்சிறுவன் அஞ்சி வசிஷ்ட முனிவரை அணுக, அவரது அறிவுரையின்படி திருவையாறு சென்று சிவதரிசனம், பஞ்சாக்கர ஜபம் முதலியன செய்து வரலானான். வசிஷ்ட முனிவரும் சிறுவனுக்காக ஜபம் செய்யலானார். யமன் ஐந்தாம் நாள் சிறுவன் முன் தோன்றினான். ஐயாற்று எம்பெருமான் துவாரபாலகரை ஏவி அந்தணச் சிறுவனைக் காக்குமாறு பணித்தார். அஞ்சாது எதிர்த்த யமனை துவாரபாலகர்கள் அடக்கினர். பின் சிவபெருமானும் தெற்கு வாயிலின் மேற்புறத்தே தோன்றி சுசரிதனுக்கு ஆயுள் அருளி, எமனையும் சிறுவனின் உயிரை பறிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.
இவ்விதம் சிறுவனுக்கு எம பயம் தீர்த்த இந்த மூர்த்தியே ஆட்கொண்டேசப் பெருமான் ஆவார். தனது காலின் கீழ் எமனை மிதித்தவாறு அருளும் அவரது திருவுருவம் அற்புதமானது.
இந்தச் சம்பவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அஷ்டமி அன்று ஆகும். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் ஒவ்வோராண்டும் கார்த்திகை மாத காலாஷ்டமி தினத்தன்று காலை காவிரியில் தீர்த்தவாரியும், ஆட்கொண்டார் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்கள், எண்ணற்ற அளவில் வடை மாலை சாத்துதல் போன்ற வைபவங்களும், இரவு எம் வாகனத்தில் ஆட்கொண்டார் உற்சவர் திருவீதி உலாவும் நடைபெறும்.
ஆட்கொண்டார் எமபயத்தை நீக்குபவர் என்பதால், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற சாந்தி நிகழ்ச்சிகளை இவ்வாலயத்தில் நடத்திக் கொள்வது மிகவும் சிறப்பானது.