
கவிகங்காதீஸ்வரர் கோவில்
அபிஷேகம் செய்யப்பட்ட நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்
பெங்களூருவில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் மாவட்டத்தில், சிவகங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இத்தல இறைவனுக்கு 'கவிகங்காதீஸ்வரர்' என்று பெயர்.
5 அடி உயரமும், நல்ல பருமனும் கொண்ட இந்த லிங்கத்தை மிக அருகில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் இறைவழிபாடு செய்யவும், அபிஷேகத்திற்காகவும் நெய் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி அபிஷேகத்தின் போது அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் மந்திரங்கள் சொல்லி நெய்யைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்.
மீண்டும் அந்த நெய் கொடுத்தவருக்கே பிரசாதமாக வந்து சேரும். ஆனால் அப்படி பிரசாதமாக வரும் நெய், வெண்ணெயாக மாறி இருக்கும் என்பதுதான் அதிசயம். இப்படி பிரசாதமாக அளிக்கப்படும் வெண்ணெய் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை

யோகநந்தீஸ்வரர் கோவில்
பெண் சாபம் போக்கும் தலம்
கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம் யோகநந்தீஸ்வரர் என்பதாகும். இறைவி சவுந்திரநாயகி. பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசநல்லூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம், பாவம் நீங்கும்.
நான்கு யுக பைரவர்கள்
இந்த ஆலயத்தில் 4 பைரவர்கள் ஒரே சன்னிதியில், யுகத்திற்கு ஒரு பைரவராக அருள்கின்றனர். எனவே இவர்களை சதுர்கால பைரவர்கள் என்று அழைக்கிறார்கள். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பது இவர்களின் திருநாமங்கள்.

பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்
தக்ஷிணாமூர்த்தி தன் மனைவியுடன் இருக்கும் அபூர்வ காட்சி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளியிலுள்ள பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பெரும்பான்மையான தெய்வங்கள், தம்பதி சமேதராக காட்சி தருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். மூலவர் பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர். இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவி தாராவுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

கண்ணாயிரநாதர் கோவில்
இழந்த பொருள்களை மீட்டுத் தரும் சொர்ணாகர்ஷண கால பைரவர்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, பிரதான சாலை ஓரத்திலேயே திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில் உள்ளது.
இத்தலத்தில் மூன்று பைரவர்கள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். இது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும். காலை,மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்கள் முறையே காலை பைரவர், உச்சிகால பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகின்றனர். மூன்று பைரவர்களுக்கு நேரெதிரில் மகாலட்சுமி எழுந்தருளியிருக்கிறாள். மகாலட்சுமி பார்த்துக் கொண்டே இருப்பதால், இவர்களை வணங்கினால் செல்வம் வந்து சேரும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

காயாரோகணர் கோவில்
சிம்ம வாகனத்துடன் காட்சி தரும் பைரவர்
பொதுவாக சிவபெருமானின் அம்சமான பைரவர் நாய் வாகனத்துடன், கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி எழுந்தருளி நமக்கு காட்சி அளிப்பார்.
ஆனால் நாகப்பட்டினம் காயாரோகணர் கோவில் குளக்கரையில்(புண்டரீக தீர்த்தம்), தெற்கு திசை நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் பைரவர், சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். இப்படிப்பட்ட பைரவரின் கோலத்தை நாம் காண்பது அரிது. இங்கு சிம்ம வாகன பைரவர் உக்கிர மூர்த்தியாக விளங்கியதால், இவருக்கு எதிரில் இரட்டை பிள்ளையார் பிரதிஷ்டை செய்து இவரை சாந்தப்படுத்தி இருக்கிறார்கள். இவருக்கு அருகில் இருக்கும் புண்டரீக தீர்த்தமானது மார்கழியில் கங்கையாக மாறி விடுவதாக ஐதிகம். அதனால் சிம்ம வாகன பைரவர், காசி காலபைரவருக்கு இணையானவர் என்று கருதப்படுகிறார்.தோஷங்களை நீக்கி சந்தோஷத்தைத் தந்தருளும் மகாசக்தி கொண்டவர் பைரவர். சுக்கிர தோஷத்தை நீக்குபவராகவும் பைரவர் திகழ்கிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். சுக்கிர தோஷம் விலகும்.
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவது மிகுந்த பலத்தைத் தரும். எதிர்ப்புகள் தவிடுபொடி யாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பைரவரை, தேய்பிறை அஷ்டமி நாளில், வணங்கி னால், அஷ்டமத்து சனி உள்ளவர்களும், ஏழரைச் சனியால் பீடித்திருப்பவர்களும் கிரக தோஷம் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள்.
தெரு நாய்களுக்கு உணவளிப்பது நமக்கு பைரவரின் அருளைப் பெற்றுத் தரும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பில்லி முதலான சூனியங்கள் அனைத்தும் விலகும். வீட்டின் வாஸ்து குறைபாடுகளும் நீங்கப் பெற்று, நிம்மதியும் முன்னேற்றமும் பெறலாம்.

தலத்தின் தனிச்சிறப்பு
தலத்தின் சிறப்பான அழகு
ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு தனிச்சிறப்பும் மற்றும் அழகும் உள்ளது.ஒரு சில தலங்களின் சிறப்பான அழகை இங்கே பார்க்கலாம்.
கும்பகோணம் - கோவில் அழகு
வேதாரண்யம் - விளக்கு அழகு
பாபநாசம் - படித்துறை அழகு
திருவாரூர் - தேரழகு
திருவிடைமருதூர் - தெரு அழகு
ஸ்ரீரங்கம் - நடை அழகு
ஸ்ரீவில்லிப்புத்தூர் - கோபுரம் அழகு
மன்னார்குடி - மதிலழகு
திருக்கண்ணபுரம் - நடை அழகு
திருப்பதி - குடை அழகு"

தயாநிதீசுவரர் கோவில்
கர்ப்பிணிப் பெண் உயிரை காப்பாற்றிய சிவபெருமான்
கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. .இறைவன் திருநாமம் தயாநிதீசுவரர். இறைவி அழகுசடைமுடி அம்மை.
செட்டிப்பெண் என்ற பெயர் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்துகொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்து விடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் இத்தலத்து இறைவனை வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக் கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு 'குலைவணங்கிநாதர்' என்ற பெயரும் உள்ளது.
சிட்டுக்குருவியொன்று இத்தலத்திற்கு அருகேயுள்ள நீர்நிலையிலிருந்து அலகால் நீர் கொணர்ந்து இறைவனுக்கு அபிசேகம் செய்துள்ளது. அதனால் மகிழ்ந்த இறைவன் அக்குருவிக்கு முக்தியளித்தார். இதனால் இறைவனுக்கு சித்தலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறை என்று அழைக்கப்படுகிறது
ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.

ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவில்
ராகு-கேது பரிகார தலம்
மனித உருவில் அபூர்வமான தோற்றத்தில் காட்சியளிக்கும் ராகு கேது பகவான்
பொதுவாக சிவாலயங்களில் ராகுவும் கேதுவும் நவகிரக சன்னதியில் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். அதில் ராகு மனித முகத்துடனும், பாம்பு உடலுடனும், கேது பாம்பு முகத்துடனும் மனித உடலுடனும் காட்சியளிப்பார்கள். ஆனால் ராகு கேதுவை வித்தியாசமான நிலையிலும், அபூர்வமான தோற்றத்திலும் நாம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பின்புறம் ஜவஹர்லால் தெருவில் அமைந்துள்ள, ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். இக்கோவிலில் சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் பார்வதி தேவியுடன் காட்சியளிக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் அவர் ராகு கேதுவை தன் கைகளில் ஏந்தி இருக்கிறார்.மற்றுமொரு சிறப்பு, ராகுவும் கேதுவும் மனித முகத்துடன் காட்சி அளிக்கிறார்கள். இது போன்று காட்சியளிக்கும் ராகு கேதுவை நாம் வேறு எந்த கோவிலிலும் பார்க்க முடியாது.
இந்தக் கோவிலில் நவக்கிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில் மூலவர் ஸ்ரீமாகாளீஸ்வரரைச் சுற்றி அமைந்துள்ளனர்.
ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீமாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச தல புராணம். சொல்கிறது. அதனால் இக்கோவில் ராகு-கேது பரிகார தலமாக திகழ்கிறது..இங்கு வழிபட்டால், திருமணத் தடை நீங்குவதோடு, கால ஸர்ப்ப தோஷம், புத்ர தோஷம், பித்ரு சாப தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில், ராகு காலத்தில் இங்கு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.

பொன்வைத்தநாதர் கோவில்
முனிவர்களும் சித்தர்களும் தேனீ உருவில் இறைவனை வழிபடும் தலம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம். சித்தாய்மூர். இறைவன் திருநாமம் பொன்வைத்தநாதர். முன்னொரு காலத்தில் பிரம்மரிஷி தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கோவிலுக்கு வர நேரமாகி வட்டது. கோவில் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. அதனால் பிரம்மரிஷி முனிவர் தேனீ உருவெடுத்து சாளரத்தின் வழியே உள்ளே சென்று இறைவனை வழிபட்டு அங்கேயே தங்கத் தொடங்கினார். இவருடன் வந்த மற்ற ரிஷிகளும் இவ்வாறே தரிசனம் செய்தனர். சித்தர்களும் இத்தலத்தில் தேனீ உருவில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம். சுவாமி சந்நிதியின் தென்பக்கத்தில் உள்ள தேன்கூடு சித்தர்கள் தேனீக்களாக உருமாறி இறைவனை பூஜித்து தேன்கூட்டைக் கட்டினர் என்பது ஐதீகம். இத்தேன் கூட்டிற்கு தினமும் பூஜை நடைபெறுகிறது.

பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தலையெழுத்தை மாற்றும் தலம்
கும்பகோணம் மகாமகம் மேல் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கீழக்கொற்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் பிரம்மஞானபுரீஸ்வரர் இறைவி- புஷ்பாம்பிகை. பிரம்மாவுக்கு அருளியதால் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய தலம்..இந்தத் தலத்துக்கு வரும் அடியவர்களுக்கு ஞானம் கிடைப்பது மட்டுமின்றி, அவர்கள் வாழ்வில் சுபிட்சம் நிலவும் என்பது ஐதீகம்!
கொற்கை என்று தலத்திற்கு பெயர் வரக் காரணம்
முன்னொரு காலத்தில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் இப்பகுதியில் உள்ள அட்ட வீரட்டத் தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது இருட்டிவிடவே, இங்கிருந்த பொது மடத்தில் தங்கினார். இந்த மடத்தில் ஏற்கெனவே நிறைய பக்தர்கள் தங்கியிருந்தனர்.
கோரக்கர் பயணக் களைப்பில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவு வேளையில் திடீரென கண்விழித்த கோரக்கர், மடத்தில் தங்கியிருந்த சிவபக்தை ஒருவரின் சேலைத்தலைப்பு தன் கை மேல் விழுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனம் வருந்திய அவர், உடனே இதற்கு பிராயச்சித்தம் தேடி, அரிவாளால் தன் இரு கைகளையும் வெட்டிக் கொண்டார்.
பின் இந்த மடத்திலேயே சில காலம் தங்கி, தனது இந்த தோஷம் நீங்க இங்கிருந்த சந்திர புஷ்கரணியில் நீராடி, தனது குறுகிய கையால் தாளம் போட்டு, இத்தல ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் தினமும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவபெருமான்.
சிவனின் அருளால் சித்தரின் கை கொஞ்ம், கொஞ்சமாக வளர்ந்தது. கோரக்கர் கை வெட்டுப்பட்டதால் இத்தலம் கோரக்கை எனவும், சிறிது காலம் குறுகிய கைகளில் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொற்கை ஆனது.
பிரம்மஞானபுரீஸ்வரர் பெயர்க் காரணம்:
பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் எடுத்துக்கொண்டு போய் கடலுக்கடியில் ஒளித்து வைத்துக்கொண்டனர். வேதங்களை மீட்டு மகாவிஷ்ணு பிரம்மாவிடம் கொடுத்தார். இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல் இயல்பாக படைப்புத்தொழிலை செய்ய முடியவில்லை. எனவே அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில், சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார். இதனால் பிரம்மா மீண்டும். சிறப்பாக படைப்புத் தொழில் புரிந்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மஞானபுரீஸ்வரர் ஆனார்.
அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம்
இத்தலத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ,தங்ளது பிறந்த நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம்.
குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

பங்குனி உத்திரத் திருவிழா
பங்குனி உத்திரத்தின் முக்கிய சிறப்புகள்
தமிழ் பஞ்சாங்கத்தின் 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம். ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நம் கோவில்களில் விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். இந்த நாளுக்குரிய முக்கிய சிறப்புகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பங்குனி உத்திர விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் பங்குனி உத்திரம்தான்.
சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான்.
ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள்.
முருகப் பெருமான், சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம். அன்று அடியார்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுகிறார்கள். முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.
தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சந்திரன் 27 நட்சத்திரங்களை மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.
தனது தவத்தைக் கலைத்ததால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் சிவபெருமான். இதனால் வருந்திய ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு சிவபெருமானிடம் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய ஈசன், அவள் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப் பித்தார். இது நிகழ்ந்ததும் பங்குனி உத்திரத் திருநாளில்தான்.
பங்குனி உத்திர விரதம் மேற் கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும். இந்த விரதத்தை கடை பிடித்துதான் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவியான சரஸ்வதியையும் பெற்றார்.
பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கு திருமணம் கைகூடும். காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள். பங்குனி மாதம் திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாணத்தை தரிசித்தால் மணமாகா தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என் பது ஐதீகம்.
பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி உத்திரத் திருவிழா
அறுபத்து மூவர் திருவிழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அறுபத்து மூவர் திருவிழாவாகும்.
சேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இவர்கள். சிவபெருமானின் மீது தீராத பக்தியும், சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு புரிவதே தங்கள் உயிர் மூச்சாக வாழ்ந்தவர்கள். இவர்களின் பெருமைகளை உலகம் உணர, சிவபெருமான் பல திருவிளையாடல்களை இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தினார். பல சோதனைகள் வந்தாலும் இவர்கள் சிவபக்தியில் இருந்தும், சிவத்தொண்டிலிருந்தும் வழுவாது இருந்து பேரும், புகழும், சிவன் அருளும் பெற்றார்கள்.
சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன், சிவப்பணி ஆற்றிய சிவனடியார்களை வழிபட்டாலும் கிடைக்கும்' என்று திருத்தொண்டர்தொகை இயற்றிய சுந்தரமூர்த்து சுவாமிகளும், பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அத்தகைய அடியார்களைக் கொண்டாடி வணங்கும் திருவிழாவாகவே மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலில் நடைபெறும் 'அறுபத்துமூவர் விழா' விளங்குகிறது.
மயிலாப்பூர் அறுபத்து மூவர் விழாவின் தனிச் சிறப்பு
மயிலாப்பூர் அறுபத்துமூவர் விழா நடைபெறும் நாளில், சிவனடியாரின் மகத்துவம் உணர்த்தும் மற்றுமொரு வைபவமும் நடைபெறுகிறது. அதுதான் திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தெழச் செய்த நிகழ்ச்சியாகும்.
சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார்.
திருஞானசம்பந்தர் சிவபெருமானை வணங்கி,
`மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக்
கட்டிட்டங்கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான்
ஒட்டிட்டபண்பினுருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்..
என்ற பதிக்கத்தைப் பாடி இறந்துபோன பூம்பாவையை உயிர்த்தெழச் செய்கிறார்.
தன்னுடைய பக்தராக இருந்தாலும், சிவநேசரின் மகளைத் தாமே உயிர்ப்பிக்காமல், தம்மையே பாடிப் போற்றும் திருஞானசம்பந்தரின் அருளால் உயிர்த்தெழச் செய்து, சிவபெருமானும் தம் அடியார்களின் பெருமையை திருஞானசம்பந்தர் மூலம் இந்தத் தலத்தில் உலகத்தவர்க்கு உணர்த்தியருளினார் என்பதால்தான் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா தனிச் சிறப்பு கொண்டதாகப் போற்றப்படுகிறது.
அறுபத்தி மூவர் திருவிழா
பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8ஆம் நாள், அறுபத்தி மூவர் திருவிழா நடைபெறுகிறது. வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், பிள்ளையார், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் இவர்களோடும் அறுபத்து மூன்று நாயன்மார்களோடும் காட்சியளித்து வீதிஉலா வருவார். மயிலாப்பூர் காவல் தெய்வமான கோலவிழி அம்மன், முண்டகக்கன்னியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் ஆகியோரும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல ஊர்களிலிருந்து இவ்விழாவிற்கு வருகை தருவார்கள்
இவ்வீதிஉலாவின் போது பெண்கள் பலர் மாடவீதிகளில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைப்பார்கள். நாள்பட்ட வியாதிகளும், தீராத நோய்களும் இதனால் குணமாகும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

மகாலிங்க சுவாமி கோவில்
பக்தனின் பசியாற்ற பிரசாதத்துடன் வந்த பரமன்
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கி.மீ. தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது.
திருவிசநல்லூர் பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் மகான் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் என்பவர், சிறந்த சிவ பக்தரான இவர்,திருவிசநல்லூர் கோவிலில் தினமும் காலையில் வழிபாடு செய்து வந்தார். மாலை வேளையில் அருகில் உள்ள திருவிடைமருதூருக்குச் சென்று, மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார். அதன் பின்பே தினமும் இரவு உணவை உண்பார்.
திருவிடைமருதூருக்கு செல்லும் வழியில் வீரசோழன் என்ற ஆற்றைக் கடந்து சென்றுதான் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார். ஒரு நாள் மாலை பெரு மழை பெய்ய தொடங்கியது. வீரசோழன் ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரால், ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர், மகாலிங்க சுவாமியை தரிசிக்காததால், உணவருந்தாமலேயே படுக்கைக்குச் சென்றார். திடீரென வீட்டு வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.
'அய்யா! பெருமழை காரணமாக இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியை காண உங்களால் வரமுடியாது என்று நினைத்தேன். சுவாமியை தரிசிக்காமல், இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே தான் கோவில் பிரசாதத்துடன் வந்து விட்டேன்' என்றார் அர்ச்சகர். பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அந்த பிரசாதத்தை உண்டு பசியாறினார். மழை பெய்து கொண்டிருந்ததால் அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார்.
உறக்கத்தில் கடும் குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட மகான், கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்தி விட்டார். பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்தில் இருந்து எழுந்த மகான், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணி விட்டு, விடிந்ததும் விடியாததுமாக, அந்த அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார்.
அங்கு மகாலிங்க சுவாமி சன்னிதியில் முதல் நாள் இரவு தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதை கண்டார். அப்போது தான் அவரும் கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது. அர்ச்சகரிடம் சென்ற ஸ்ரீதர வெங்கடேசர் நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, 'சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே; என்று வருத்தப்பட்டார். அர்ச்சகர் திகைத்தவாறே, 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வந்தேன்? கடுமையான மழை காரணமாக, நான் நேற்று மாலையிலேயே கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே' என்றார். பின்னர் கோவிலைத் திறந்து கருவறை கதவை திறந்த போது, ஸ்ரீதர வெங்கடேசர், நேற்று இரவு அர்ச்சகருக்கு போர்த்தி விட்ட கம்பளி, ஈசனின் திருமேனியை தழுவிக்கொண்டிருந்தது.
அப்போதுதான் அவர்களுக்கு 'நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் ஸ்ரீதர வெங்கடேசர் வீட்டுக்கு சென்று பிரசாதம் உண்ணக் கொடுத்து, அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே'' என்பது தெரிந்தது. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.
பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த ஸ்ரீதர வெங்கடேசர் தீட்சிதர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிக்கு, ஸ்ரீதர வெங்கடேசர் மடத்திலிருந்து வழங்கப் பெறும் வஸ்திரம் சாத்தப்படுகிறது. அதுபோல அன்று உச்சிகாலப் பூஜையின் நைவேத்தியம், திருநீறு முதலிய பிரசாதங்கள் திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் மகானின் மடத்துக்கு தந்தருளும் ஐதீக நிகழ்வும் இன்றளவும் நடக்கிறது.

காளீஸ்வரர் கோவில்
நான்கு முகங்கள் கொண்ட க்ருதயுக சண்டிகேஸ்வரர்
நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பந்தநல்லூர் பேருந்து சாலையில், குத்தாலத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வில்லியநல்லூர் தலத்தில் அமைந்துள்ளது காளீஸ்வரர் கோவில். இத்தலத்தில் சண்டிகேஸ்வரர் வித்தியாசமான விதத்தில் எழுந்தருளியிருக்கிறார். வழக்கமாக கருவறைச் சுற்றில் இறைவனின் கோமுகத்திற்கு அருகே இருக்கும் சண்டிகேஸ்வரர், இங்கே பிரம்மஸ்தானத்தில், அம்பாளின் கோமுகத்தினருகே அமர்ந்து இருப்பது ஒரு வித்தியாசமான அமைப்பாகும்.
சண்டிகேஸ்வரருக்கு, க்ருதயுகத்தில் நான்கு முகம்; திரேதாயுகத்தில் மூன்று முகம்; துவாபரயுகத்தில் இரண்டு; இப்போது நடக்கும் கலியுகத்தில் ஒரு முகம் இருக்கும் என்கின்றன சிவாகம புராணங்கள். இங்கே இருப்பவர் க்ருதயுக சண்டிகேஸ்வரர். அதாவது நான்கு முகங்கள் கொண்டவராக இருக்கிறார். இந்த அமைப்பே இக்கோயிலின் பழமைக்குச் சான்றாக விளங்குகின்றது. க்ருதயுக சண்டேஸ்வரர் என்பதால் இவரை வழிபடுவது நம் நான்கு தலைமுறைப் பாவங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை.

செஞ்சடையப்பர் கோவில்
பக்தையின் சங்கடத்தை தவிர்க்க தலை சாய்த்த சிவபெருமான்
கும்பகோணம் சென்னை சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பனந்தாள். இறைவன் திருநாமம் செஞ்சடையப்பர்.
அசுரகுல மகளான தாடகை என்பவள் சிறந்த சிவ பக்தை. தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வந்தாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது, அவளுடைய மேலாடை நழுவியது. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும் இல்லாவிடில் மேலாடை சரிந்து நழுவி அவள் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுத்தார். இந்நிகழ்ச்சி மூலம் தாடகையின் பக்தியை உலகறியச் செய்தார். இதனால் இத்தலத்திற்கு தாடகைஈச்சரம் என்ற பெயரும் ஏற்பட்டது.
தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு சிவலிங்கத்தை நேரே நிமிர்த்த முயற்சி செய்தார்கள். முடியவில்லை. இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது. செய்தி அறிந்த சோழ மன்னன், தன் யானை, குதிரைப் படையுடன் வந்து, சிவலிங்கத்தின் மேல் கயிற்றைக் கட்டி யானையைக் கொண்டு இழுக்கச் செய்தான். யார் இழுத்தாலும் சிவலிங்கம் நிமிரவில்லை.
63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் செய்தியை கேள்விப்பட்டு திருப்பணந்தாள் வந்தடைந்தார். சிவலிங்கத்தில் ஒரு மணிக் கயிற்றைக் கட்டி மறு நுனியை தன் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். இறைவனும் கலயனாருடைய தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்டு தன் தலையை மேலே நிமிர்த்தினார். சாய்ந்த சிவலிங்கம் மறுபடியும் பழைய நிலையை அடைந்தது.
கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும்.
சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடுவது சிறப்பாகும். குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம் இதுவாகும்.

பொன்வைத்தநாதர் கோவில்
பக்தைக்காக பல அதிசயங்கள் நிகழ்த்திய சிவபெருமான்
திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 14 கி.மீ.தொலைவிலுள்ள தேவாரத்தலம். சித்தாய்மூர். இறைவன் திருநாமம் பொன்வைத்தநாதர். இறைவி அகிலாண்டேஸ்வரி, முற்காலத்தில், இவ்வூரில் சங்கரன் என்ற வணிகன் வசித்து வந்தான். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். இவரது மனைவி அன்பிற்பெரியாள். திருமணமாகி சில நாட்களில், சங்கரன் தன் வியாபாரம் நிமித்தமாக பக்கத்து நாட்டிற்கு சென்றுவிட்டான். கணவனுடன் வாழ்ந்த நாட்களில் அன்பிற்பெரியாள் கர்ப்பம் தரித்திருந்தாள். தனியாக வாழ்ந்த அவள், தினமும் பொன்வைத்தநாதர் கோயிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வது, இறைவனுக்கு மாலை கட்டுவது போன்ற கைங்கரியங்களை செய்து வந்தாள். இவளது செயலுக்கு மகிழ்ந்த இறைவன், இவளது செலவிற்காக தினமும் ஒரு பொன் காசை கோயில் வாசல் படியில் வைத்தார். இதனால் இத்தல இறைவன் 'பொன்வைத்த நாதர்' எனப்பட்டார்.
சில மாதங்களில் இவள் கர்ப்பமாக இருப்பது வெளிஉலகிற்கு தெரிய வந்தது. சிவன் பொற்காசு கொடுப்பது யாருக்கும் தெரியாது. கணவன் ஊரில் இல்லை. இவளது செலவிற்கு பணம் ஏது?, எப்படி கர்ப்பமடைந்தாள் என ஊர்மக்கள் இவளை சந்தேகப்பட்டனர். எனவே அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். கற்புக்கரசியான இவள் மிகுந்த மன தைரியத்துடன், சிவனே தஞ்சம் என கோயிலிலேயே தங்கினாள். பிரசவ காலம் நெருங்கியது. தனக்கென யாருமே இல்லை. தன்னை காப்பாற்றும்படி இறைவனை வேண்டினாள்.
உலக உயிர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியே இவளுக்கு பிரசவம் பார்த்தாள். குழந்தையும் பிறந்தது. வியாபாரத்திற்கு சென்ற கணவன் ஊர் திரும்பினான். ஊர் மக்கள் அவரிடம் உன் மனைவி நடத்தையில் சந்தேகம் உள்ளது என்றனர். அதைக்கேட்ட கணவன் வருந்தினான். மனைவியிடம் விபரம் கேட்டான். அவளோ நான் உண்மையானவள் என்பதற்கு இறைவனே சாட்சி என்றாள்.
அதற்கு கணவன், 'நீ உண்மையானவள் என்றால், மூடியிருக்கும் கோயில் கதவு தானே திறக்க வேண்டும். அர்த்தஜாம பூஜை தானாக நடக்க வேண்டும். நந்திக்கு பின்னால் இருக்கும் பலி பீடம் முன்னால் அமைய வேண்டும். கோயிலுக்கு பின்புறம் உள்ள தல விருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர வேண்டும் ' என நிபந்தனை விதித்தான். இதைக்கேட்ட அப்பெண் இறைவனை மனமுருகி வேண்டினாள். இவளது வேண்டுதலை இறைவன் ஏற்றார். அதன்படி ஊர் மக்கள் முன்னிலையில் கதவு தானே திறந்தது. பலிபீடம் நந்திக்கு முன்னால் அமைந்தது. தலவிருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர்ந்தது. அர்த்தஜாம பூஜையும் அர்ச்சகர் இல்லாமல் தானே நடந்தது. இறைவனின் திருவருளால் அனைத்தும் நடந்ததை அறிந்த மக்கள், அப்பெண்ணை வாழ்த்தினர்.
இன்றும் நந்தி கோயிலுக்கு வெளியே இருப்பதையும் நந்திக்கு முன் பலிபீடம் இருப்பதையும் காணலாம்.
உதவிக்கு யாருமின்றித் தனித்திருந்த வேளையில் தனக்கு அன்னை அகிலாண்டேஸ்வரி சுகப்பிரசவம் நிகழ உதவியதைப் போலவே, இந்தத் தலத்தில் வேண்டிக்கொள்ளும் பெண்கள் அனைவருக்கும் சுகப்பிரசவமே நிகழவேண்டும் என்று அன்பிற்பெரியாள் பிரார்த்தித்தாள். அவளின் பிரார்த்தனை இன்றளவும் நிறைவேறுவதாகச் சொல்கிறார்கள். ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் இங்கு வந்து வழிபாடு செய்து போகிறார்கள். அவர்களின் வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன. வேண்டிக் கொண்டவர்கள் சுகப்பிரசவம் ஆனதும் மீண்டும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

வில்வவனேசுவரர் கோவில்
மகாசிவராத்திரி வழிபாடு பிறந்த தேவாரத்தலம்
கும்பகோணம் திருவையாறு சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவைகாவூர். இறைவன் திருநாமம் வில்வவனேசுவரர. இறைவி வளைக்கைநாயகி. மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலங்களில் திருவைகாவூர் ஒன்றாகும். சிவராத்திரி வழிபாடு பிறந்தது இத்தலத்தில்தான் என்பது ஐதீகம். வேதங்கள் வில்வ மரமாக இருந்து வழிபட்டதால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு 'வில்வவனேசுவரர்' என்றும் பெயர் வந்தது. பெருமாள், பிரம்மா இருவரும், இறைவன் சன்னதியில் துவார பாலகர்களாக உள்ளனர். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.
தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவர் மீது அம்பெய்த முற்பட்டான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து, வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.
அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக, இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி இருப்பதாக ஐதீகம்.
சிவராத்திரி விழா, சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர்.
கல்யாண வரம், குழந்தை வரம், தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்
Aசயன கோலத்தில் காட்சியளிக்கும் சிவபெருமான்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள சுருட்டப்பள்ளியில் அமைந்துள்ளது பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் 56 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். திருமாலைப் போலவே சிவபெருமான் பள்ளி கொண்ட ஒரே கோவில் இதுதான் என்பது சிறப்பம்சமாகும்.
ஒரு சமயம் இந்திரன் முதலான தேவர்கள்,அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டார்கள். திருமாலின் உதவியோடு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். இருபுறமும் பிடித்து இழுத்ததால், வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் கயிலை நாதனான சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்து அனைவரையும் காக்க வேண்டினர்.
சிவபெருமான் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை திரட்டி எடுத்து வரச் செய்தார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய மொத்த விஷத்தையும் ஒன்று திரட்டி, ஒரு கரு நாவல்பழம் போல செய்து சிவபெருமானிடம் கொடுத்தார். சிவபெருமான் அந்த கொடிய விஷத்தினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் வயிற்றுக்குள் இறங்கினால் தீங்கு விளைவிக்கும் என்பதால், பார்வதிதேவி விஷம் உடலுக்குள் இறங்காமல் இருக்க, சிவபெருமானின் கண்டத்தை (கழுத்தை) பிடித்து விஷம் அங்கேயே தங்கும்படி செய்துவிட்டார். அதனால் தான் சிவபெருமானை 'நீலகண்டன்' என்று அழைக்கிறோம்.
விஷத்தை அருந்திய பின், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் புறப்பட்டார். வழியில் அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஓரிடத்தில் ஓய்வெடுத்தார். பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க சயனித்தார். அந்த இடமே சுருட்டப்பள்ளி என்னும் இத்தலம் ஆகும்.
3 நிலை கொண்ட ராஜகோபுரத்தின் எதிரே, சுமார் 5 அடி உயர பீடத்தில் 5 அடி உயர நந்தீஸ்வரர் உள்ளார். இத்தலத்தில் இருக்கும் அம்பிகையின் பெயர் மரகதாம்பிகை. முதலில் மரகதாம்பிகையை வழிபட்ட பின்னரே சிவனை வணங்க செல்ல வேண்டும்.. மூலவர் பள்ளிகொண்டீஸ்வரர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இக் கோவிலில் துவாரபாலகர்கள் கிடையாது. அதற்கு பதிலாக சங்கநிதி வசுந்தராவுடனும், பத்மநிதி வசுமதியுடனும் காட்சி தருகிறார்கள். உள்ளே சென்றால் அன்னை மரகதாம்பிகை நின்ற கோலத்தில் சிம்ம வாகினியாக காட்சி தருகிறார்.
பிரசித்தி பெற்ற பிரதோஷ கால வழிபாடு
இந்த கோவிலில் பிரதோஷ கால வழிபாடு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது தொண்நம்பிக்கை.மேலும் இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் பதவி அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். .
திருவாதிரை, மகா சிவராத்திரி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு வருடப் பிறப்பு நாட்கள், நவராத்திரி தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது.

ஆரண்யேசுரர் கோவில்
ஒரே சிவலிங்கத்தில் இரண்டு பாணங்கள்
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்யேசுரர். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் 'ஆரண்யேசுரர்' என்று அழைக்கப்படுகிறார். விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான். இத்தலத்து இறைவனை வழிபட்டு இழந்த பதவியை மீண்டும் பெற்றான்இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் 'தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.

கண்ணாயிரநாதர் கோவில்
கண் நோய் தீர்க்கும் கண்ணாயிரநாதர்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, பிரதான சாலை ஓரத்திலேயே திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில் உள்ளது. புராண காலத்தில் இந்தத் தலம் முழுவதும், 'காரகில்' என்ற மரங்கள் அடர்ந்த வனப் பகுதியாக இருந்ததால் 'திருக்காரகில்' என்ற பெயர் பெற்றிருந்தது. அதுவே காலப்போக்கில் 'திருக்காரவாசல்' என்று மருவியது. இத்தலத்து இறைவன் கண்ணாயிரநாதர். இறைவி கைலாசநாயகி. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் ஆதிவிடங்கர் எனப்படுகிறார். ஒரு சமயம், பிரம்மாவிற்கு தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது. அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட எண்ணி அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார். பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரகில் மரங்கள் நிறைந்திருந்த திருக்காராயில் வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காடசி தருகிறார். இத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறு. ஆதிசேஷன் இந்தக் கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. இது இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இன்னொரு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்னும் திருக்குளம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது.கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத்தில் தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பெற்று சாப்பிட்டு வந்தால் விரைவில் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை., இங்குள்ள சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால், பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.