கண்ணாயிரநாதர் கோவில்

கண் நோய் தீர்க்கும் கண்ணாயிரநாதர்

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, பிரதான சாலை ஓரத்திலேயே திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில் உள்ளது. புராண காலத்தில் இந்தத் தலம் முழுவதும், 'காரகில்' என்ற மரங்கள் அடர்ந்த வனப் பகுதியாக இருந்ததால் 'திருக்காரகில்' என்ற பெயர் பெற்றிருந்தது. அதுவே காலப்போக்கில் 'திருக்காரவாசல்' என்று மருவியது. இத்தலத்து இறைவன் கண்ணாயிரநாதர். இறைவி கைலாசநாயகி. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் ஆதிவிடங்கர் எனப்படுகிறார்.

ஒரு சமயம், பிரம்மாவிற்கு தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது. அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட எண்ணி அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார். பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரகில் மரங்கள் நிறைந்திருந்த திருக்காராயில் வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காடசி தருகிறார்.

இத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறு. ஆதிசேஷன் இந்தக் கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. இது இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இன்னொரு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்னும் திருக்குளம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது.

கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத்தில் தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பெற்று சாப்பிட்டு வந்தால் விரைவில் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை., இங்குள்ள சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால், பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

 
Previous
Previous

கண்ணாயிரநாதர் கோவில்

Next
Next

சுவர்ணபுரீஸ்வரர் கோவில்