வில்வவனேசுவரர் கோவில்
மகாசிவராத்திரி வழிபாடு பிறந்த தேவாரத்தலம்
கும்பகோணம் திருவையாறு சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவைகாவூர். இறைவன் திருநாமம் வில்வவனேசுவரர. இறைவி வளைக்கைநாயகி. .மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலங்களில் திருவைகாவூர் ஒன்றாகும். சிவராத்திரி வழிபாடு பிறந்தது இத்தலத்தில்தான் என்பது ஐதீகம். வேதங்கள் வில்வ மரமாக இருந்து வழிபட்டதால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு 'வில்வவனேசுவரர்' என்றும் பெயர் வந்தது. பெருமாள், பிரம்மா இருவரும், இறைவன் சன்னதியில் துவார பாலகர்களாக உள்ளனர். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.
தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவர் மீது அம்பெய்த முற்பட்டான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து, வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.
அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக, இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி இருப்பதாக ஐதீகம்.
சிவராத்திரி விழா, சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர்.
கல்யாண வரம், குழந்தை வரம், தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.