கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி உத்திரத் திருவிழா
அறுபத்து மூவர் திருவிழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அறுபத்து மூவர் திருவிழாவாகும்.
சேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இவர்கள். சிவபெருமானினமீது தீராத பக்தியும், சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு புரிவதே தங்கள் உயிர் மூச்சாக வாழ்ந்தவர்கள். இவர்களின் பெருமைகளை உலகம் உணர, சிவபெருமான் பல திருவிளையாடல்களை இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தினார். பல சோதனைகள் வந்தாலும் இவர்கள் சிவபக்தியில் இருந்தும், சிவத்தொண்டிலிருந்தும் வழுவாது இருந்து பேரும், புகழும், சிவன் அருளும் பெற்றார்கள்.
சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன், சிவப்பணி ஆற்றிய சிவனடியார்களை வழிபட்டாலும் கிடைக்கும்' என்று திருத்தொண்டர் தொகை இயற்றிய சுந்தரமூர்த்து சுவாமிகளும், பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அத்தகைய அடியார்களைக் கொண்டாடி வணங்கும் திருவிழாவாகவே மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலில் நடைபெறும் 'அறுபத்துமூவர் விழா' விளங்குகிறது.
மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவின் தனிச் சிறப்பு
மயிலாப்பூர் அறுபத்துமூவர் விழா நடைபெறும் நாளில், சிவனடியாரின் மகத்துவம் உணர்த்தும் மற்றுமொரு வைபவமும் நடைபெறுகிறது. அதுதான் திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தெழச் செய்த நிகழ்ச்சியாகும்.
சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார்.
திருஞானசம்பந்தர் சிவபெருமானை வணங்கி,
மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக்
கட்டிட்டங்கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான்
ஒட்டிட்டபண்பினுருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்...’
என்ற பதிக்கத்தைப் பாடி இறந்துபோன பூம்பாவையை உயிர்த்தெழச் செய்கிறார்.
தன்னுடைய பக்தராக இருந்தாலும், சிவநேசரின் மகளைத் தாமே உயிர்ப்பிக்காமல், தம்மையே பாடிப் போற்றும் திருஞானசம்பந்தரின் அருளால் உயிர்த்தெழச் செய்து, சிவபெருமானும் தம் அடியார்களின் பெருமையை திருஞானசம்பந்தர் மூலம் இந்தத் தலத்தில் உலகத்தவர்க்கு உணர்த்தியருளினார் என்பதால்தான் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா தனிச் சிறப்பு கொண்டதாகப் போற்றப்படுகிறது.
அறுபத்தி மூவர் திருவிழா
பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8ஆம் நாள், அறுபத்தி மூவர் திருவிழா நடைபெறுகிறது. வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், பிள்ளையார், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் இவர்களோடும் அறுபத்து மூன்று நாயன்மார்களோடும் காட்சியளித்து வீதிஉலா வருவார். மயிலாப்பூர் காவல் தெய்வமான கோலவிழி அம்மன், முண்டகக்கன்னியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் ஆகியோரும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல ஊர்களிலிருந்து இவ்விழாவிற்கு வருகை தருவார்கள்.
இவ்வீதிஉலாவின் போது பெண்கள் பலர் மாடவீதிகளில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைப்பார்கள். நாள்பட்ட வியாதிகளும், தீராத நோய்களும் இதனால் குணமாகும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
மயிலாப்பூர் கற்பகாம்பாள்
https://www.alayathuligal.com/blog/m8l7sr9dl79d9zh4zr7m6lpapkg6ln
அறுபத்தி மூவர் திருவிழா (2021) காணொளிக் காட்சியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்