திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில்
பக்தர்களின் பசியைப் போக்கிய பரமன்
சிவபெருமான், காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலம்
தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவனுக்கு சோற்றுத்துறை நாதர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் அன்னபூரணி, ஒப்பிலா அம்மை.
‘சோறு' என்றால் 'முக்தி' என்ற பொருளும் உண்டு. பசிப்பிணி போக்கியதால் இத்தலத்து மூலவர் 'ஓதனவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். 'ஓதனம்' என்றால் 'அன்னம்' என்று பொருள். இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப் பற்றிய பிறவிப் பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. அம்பிகையை மனதார வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும். திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில், இத்தலம் மூன்றாவது தலமாகும்.
ஒரு முறை திருச்சோற்றுத்துறை பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், பஞ்சத்தை தீர்த்து உணவு வழங்குமாறு முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் 'அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். அருளாளன், இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும், நெய்யும், குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் வழங்கிய சிவபெருமானுக்கு தொலையாச்செல்வர் என்ற பெயரும் உண்டு. இத்தலம் காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும்.
இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும், அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது. சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்ன தானம் நடைபெறுகிறது.
இரும்பை மாகாளேசுவரர் கோவில்
நவக்கிரகங்கள் தங்கள் மனைவியுடன் காட்சி அளிக்கும் தனிச்சிறப்பு
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு மண்டபத்தில் அமைந்துள்ள பீடத்தின் மேல், நடுவில் இருக்கும் சூரியனைச் சுற்றி தனியாக எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் ஒரு சில தலங்களில் தான் தங்கள் மனைவியுடனும் அல்லது வாகனத்துடனும் காட்சி அளிப்பார்கள். ஆனால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியுடன் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
நாகங்களை திருமேனியில் தரித்திருக்கும் அபூர்வ சர்ப்ப கால பைரவர்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
இந்தத் தலத்தில் சேத்திர பைரவர், சர்ப்ப கால பைரவர் என்று இரண்டு பைரவர்கள் அருள் பாலிக்கிறார்கள். சேத்திர பைரவர் வாகனத்துடனும் தற்பகால பைரவர் வாகனம் இல்லாமலும் எழுந்தருளி இருக்கிறார்கள். சர்ப்ப கால பைரவர் தனது கையில் ஒரு நாகத்தையும், வலது கால் மற்றும் இடது கால் இரண்டிலும் நாகங்கள் சுற்றத் தொடங்கி, திருமேனி முழுவதும் படர்ந்து இருக்கின்றன. இப்படி திருமேனி முழுவதும் சர்ப்பங்கள் பின்னி படர்ந்திருக்கும் காலபைரவரை வேறு தலத்தில் நாம் தரிசிப்பது அரிது.
இந்த சர்ப்ப கால பைரவரை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை விலகும். பாம்பு சம்பந்தப்பட்ட கெட்ட கனவுகள் நின்று விடும். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமி என்று போற்றப்படுகிறது. பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய, துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.
திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்
திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துச் சிவிகை, முத்துக் குடை அளித்த தலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து, 25 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி, சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார், சம்பந்தரைத் தூக்கிக்கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.
திருதூங்காணைமாடம் சிவத்தலத்தை தரிசித்து திருவட்டத்துறை நோக்கிச் செல்லும்போது, தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருவட்டத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார்.
அன்றிரவு, திருவட்டத்துறையிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும், அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதேபோன்று, சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விவரங்களைக் கூறி, முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டார்.
மறுநாள் காலை, திருவட்டத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு, இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக்கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக் குடை நிழலில் திருவட்டத்துறை ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது தேவாரப் பதிகம் பாடி வணங்கினார்.
இரும்பை மாகாளேசுவரர் கோவில்
மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது
முற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார் அவர் கிழக்கே வந்தபோது இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் 'மகாகாளநாதர்' என்ற பெயர் பெற்றார்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் சிவலிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து மூன்று முகங்களுடன் இருக்கிறது இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர் இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூரத்திகளை குறிப்பிடுகின்றன. சிவபெருமானின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.
திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்
சனி, செவ்வாய் தோஷங்களுக்கான பரிகார தலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து, 25 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
ஒருமுறை, சனி பகவானும் செவ்வாய் பகவானும், சூரிய சந்திரர்களால் சபிக்கப்பெற்று, அதன் காரணமாக எலும்புருக்கி நோய்க்கு செவ்வாய் பகவானும், பெருநோய்க்கு சனி பகவானும் ஆளாகினர். செவ்வாய், சனி இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கூறும்படி கேட்டனர். பிரம்மாவின் அறிவுரைப்படி, இருவரும் பூலோகம் வந்து பல சிவத்தலங்களில் சிவபெருமானை வழிபட்டனர். இறுதியாக இத்தலம் வந்து கடும் தவம் புரிந்து இறைவனை வழிபட்டு தங்கள் தோஷமும், சாபமும் நீங்கப் பெற்றனர்.
சனி பகவானும் செவ்வாய் பகவானும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்துக்கு உரிய மரமாகும். ஆகவே, மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.
திருமாகாளம் மாகாளேசுவரர் கோவில்.
மறுபிறவியை தவிர்க்கும் அம்மனின் நெய்க்குளம் தரிசனம்
திருமணத்தடை நீங்க அரளி மாலை வழிபாடு
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள தேவார தலம் திருமாகாளம் மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி). காளி அம்பன், அம்பாசூரன் என்னும் அசுரர்களை வதைத்த தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டதால், அவருக்கு மாகாளநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் தான் சோமாசிமாற நாயனார் சோம யாகம் செய்தார்.
மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவதலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.
இத்தலத்து அம்பாள் பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி), பக்தர்களின் மன துயரத்தையும், மனதில் உள்ள அச்சத்தையும் தீர்க்கும் நாயகியாக போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் அம்பாள் அச்சம் தீர்த்த நாயகிக்கு நெய் குளம் தரிசனமும் அன்ன பாவாடை சேவையும் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.
அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதனால் இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில்
சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு உபதேசித்த கோலத்தில் காட்சி தரும் யோக தட்சிணாமூர்த்தி
திருவையாறு – கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி.
இத்தலத்து இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு 'அக்னீசுவரம்' என்று பெயர் வந்தது. மூலவர் அக்னீசுவரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு தாழ்வான பகுதியில் இருக்கிறது. பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. அக்கினீசுவரர் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது.
மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு சிவாகமங்களை உபதேசித்த போது இருந்த அதே கோலத்தில், இங்கே யோக தட்சிணாமூர்த்தியாக எழுந்து அருளி இருப்பது தனிச்சிறப்பாகும். இதனால் இந்த யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி, ருத்ராட்சம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து, தன் கையில் சிவாகம நூல் ஏந்தி யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு. இவரை அப்பர் தன்னுடைய தேவாரத்தில், ஞான நாயகன் என்று போற்றுகின்றார். இவரை வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஐந்து நெய்தீபம் ஏற்றி முல்லைப் பூவால் வழிபட்டால், திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருந்தால், எல்லா தடைகளும் நீங்கி வெற்றி பெறலாம்.
இத்தலத்திலுள்ள இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். சிலா வடிவிலுள்ள இவரின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே, கருவறை கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். இந்த அமைப்பும், இரண்டு குரு பகவான்கள் எழுந்தருளி இருப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில்
மூலவருக்கு பின்புறம் சோமாஸ்கந்தமூர்த்தி அமைந்திருக்கும் அரிய காட்சி
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் 23 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில். இத்தலத்திற்கு திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் பூங்குழல்நாயகி, சுகந்த குந்தளாம்பிகை.
அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள் இத்தல இறைவனை பூசித்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. பிரம்மா, இத்தல இறைவனை வழிபட்டு தான், அன்ன வடிவம் பெற்ற சாபத்தை நீங்க பெற்றார். அதனால் இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த திருத்தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில், சிவபெருமான் கருவறையில் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பார். சில தலங்களில் சிவபெருமானும், பார்வதியும் மூலவருக்கு பின்புறம் திருமணக் கோலத்தில் எழுந்தருளி இருப்பார்கள். இத்தலத்தில், கர்ப்ப கிரகத்தில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால், சோமாஸ்கந்தமூர்த்தி (சிவன் + முருகன் + பார்வதி) அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இத்தகைய காட்சியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
மயிலாப்பூர் கற்பகாம்பாள்
‘கற்பகம்’ என்றால் ‘வேண்டும் வரம் தருபவள்’ என்று பொருள். தேவலோகத்தில் கற்பக விருட்சம் எப்படித் தன்னிடம் கேட்பதையெல்லாம் தருகின்றதோ, அது போல தன் பக்தர்களின் கோரிக்கையை கற்பகத் தருவாக இருந்து நிறைவேற்றித் தருவதால் கற்பகாம்பாள் என்று பெயர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது.
ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினார்.. சிவபெருமான் அதை உபதேசித்து கொண்டிருக்கும்போது பார்வதிதேவி கவனம் சிதறி,அங்கே தோகை விரித்து நடனமாடிக் கொண்டிருந்த ஒரு மயில் மீது கவனத்தை செலுத்தினார். இதனால் கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை பூலோகத்தில் மயிலாக பிறக்க சாபம் கொடுத்தார். பார்வதிதேவி சாபவிமோசனம் வேண்டியபோது தொண்டை நாட்டில் மயில் வடிவில் பூஜை செய்தால் தன்னை மீண்டும் அடையலாம் என்று கூறினார். அம்பிகை இத்தலத்தில் புன்னை மரத்தின் அடியில், மயில் உருவில் சிவனை வேண்டி தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு காட்சியளித்து சாபவிமோசனம் கொடுத்தார்
பொதுவாக சிவாலயங்களில், சிவனை தரிசித்த பிறகே அம்பிகையை தரிசிக்கும் படியான அமைப்பு இருக்கும். ஆனால் இக்கோவிலில், கற்பகாம்பாளை தரிசித்து விட்டே கபாலீசுவரரை தரிசிக்கும்படியான அமைப்பானது தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது
திருவாடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில்
அம்பாள் பசுவின் வடிவில் சிவபெருமானை வழிபட்ட தலம்
பிரிந்திருக்கும் தம்பதியரை மீண்டும் இணைக்கும் அணைத்திருந்த நாயகர்
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் 20 கி.மீ., தொலையில் அமைந்துள்ள தேவார தலம் திருவாடுதுறை. இறைவன் திருநாமம் கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஒப்பிலாமுலையம்மை.
ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளைப் பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்பு தரும்படி சிவனிடம் வேண்டினாள்.
இத்தலத்தில் தம்மை வழிபட்டுவர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டித் தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார்.'கோ' வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், 'கோமுக்தீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில், சிவபெருமான் பார்வதியை அணைத்திருக்கும் கோலத்தில் காட்சி தரும் 'அணைத்தெழுந்த நாயகர்' உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.
இங்கு அம்பாள் ஒப்பிலாமுலையம்மை நின்ற திருக்கோலத்தில் ஒப்பில்லாத அருளும் கருணையும் கொண்டு அழகே உருவாக காட்சி தருகிறார். இங்கு நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அருட்காட்சி தருகிறார் ஒப்பிலாமுலையம்மை. விசேஷ நாட்களில் சந்தன காப்பு அலங்காரத்தில் ஒப்பிலா முலையம்மையின் அழகை காண கண் கோடி வேண்டும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருக்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்கு அம்பாள் சந்நிதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
சுவாமி கருவறையின் மேல் இரட்டை விமானம் இருக்கும் அபூர்வ வடிவமைப்பு
கருவறையில் சிவபெருமானுடன் பார்வதி அருவமாக இருக்கும் ஒரே தலம்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் ஒப்பிலாநாயகி.
பொதுவாக சிவாலயங்களில் சுவாமி, அம்பிகை சன்னதியின் கருவறையின் மேல் விமானம் இருக்கும். ஆனால் இத்தலத்திலோ சுவாமி விமானத்தின் மேல் இரட்டை விமானம் இருக்கும் வடிவமைப்பு வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது. மேலும் சிவபெருமானின் லிங்கத் திருமேனியானது கருவறையின் வலது பக்கம் சற்று ஒதுங்கி இருக்கும். இதற்கு காரணம், இறைவன் தனது இடது பக்கத்தில் அருவமாக இருக்கும் பார்வதி தேவிக்கு இடம் கொடுத்திருக்கிறார். சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி விமானம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், இந்த கருவறையின் மேல் இரட்டை விமானம் இருக்கின்றது. தமிழகத்தில், இப்படி இரட்டை விமானம் கருவறையின் மேல் இருக்கும் அமைப்பு, வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருச்சுழி திருமேனிநாதர் கோவில்
பச்சிலை மூலிகையால் உருவாக்கப்பட்ட அபூர்வ நடராஜர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை என்ற ஊரிலிருந்து, 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சுழி. பாண்டிய நாட்டில் உள்ள 14 தேவார தலங்களில் இத்தலமும் ஒன்று. இறைவன் திருநாமம் திருமேனிநாதர். இறைவியின் திருநாமம் துணைமாலையம்மை. இத்தலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது, ஒரு அம்பினால் சுழித்து அந்த வெள்ளத்தை பாதாளத்திற்குள் செலுத்தியதால், இந்த ஊர் 'திருச்சுழியல்' என்று அழைக்கப்பட்டது. ரமண மகிரிஷி பிறந்த இடம் இது.
இந்தத் தலத்தில் உள்ள நடராஜரின் திருமேனி கொள்ளை அழகுடன் திகழ்கின்றது. மிக மிக தத்ரூபமாக வடிக்கப்பட்ட இந்த நடராஜரின் விக்கிரகம் பச்சிலை மூலிகையால் உருவாக்கப்பட்டது என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இப்படிப்பட்ட பச்சிலை மூலிகையால் உருவான நடராஜரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
திருமணத்தடை நீக்கும் வராகி அம்மன்
கோவில் உரலில், விரலி மஞ்சள் இடித்து, வராகி அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேகம்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர். இறைவியின் திருநாமம் ஒப்பிலாநாயகி. திருநெடுங்களம் என்றால் 'சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பொருள்.
இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில் சப்த கன்னியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சப்த கன்னியரில் ஐந்தாவதாக விளங்கும் வராகி அம்மன் சிறந்த வரப்பிரசாதி. மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள் வராகி அம்மன்.
இத்தலத்து வராகி அம்மன் தடைகளை நீக்கி திருமணம் வரம் கைகூட அருள்பவள். சப்த கன்னியரின் அருகிலேயே, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சோழர் காலத்து உரல் ஒன்று உள்ளது.
வராகி அம்மனுக்கு வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலத்தின்போது சிற்ப உரலில், விரலி மஞ்சளை இடித்து அபிஷேகம் செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். இந்த வழிபாட்டு முறை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். திருமண வரம் வேண்டும் ஆண், பெண் என இருபாலரும், பெரும் அளவில், இத்தலத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.
பிரார்த்தனை
வளர்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடுவது மிகுந்த நற்பலன்களை தரும். பகை, வறுமை, பிணி, தடைகள் அகலும். பில்லி, சூன்யம், மாந்திரீகம் விலகி ஓடும். எதிரிகள் ,பகைவர்கள், தீயோர் விலகிடுவர்.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்
தேரினை ஆமை இழுத்துச் செல்லும் வடிவமைப்பு - வியக்க வைக்கும் கலைப்படைப்பு
சுழலும் தேங்காய்
தனித்தனியாக சுற்றும் வளையங்களால் இணைக்கப்பட்ட கிளிகள்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில், மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இக்கோவிலில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டுவேலன், ஆதிகேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.
இக்கோவிலில் உள்ள எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களில், பல்வேறு விதமான அழகிய மற்றும் நுணுக்கமான வேலைப்பாடு உள்ள சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தலத்தில் எழுந்தருளில் உள்ள முருகப்பெருமானின் திருநாமம் செங்கோட்டு வேலவர். அவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு, அந்தத் தேரினை ஆமை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கோவில்களிலும், நாம் காண முடியாத வியக்க வைக்கும் கலை படைப்பாகும்.
இந்த செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்திலும் மற்ற மண்டபங்களிலும் அமைந்துள்ள எல்லா தூண்களிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், அக்காலத்திய சிற்பக்கலையின் உன்னதத்தை நமக்கு விளக்குகின்றன. ஒவ்வொவொரு சிற்பத்தின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்று நம்மை எண்ண வைக்கிறது. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் திகழ்கின்றன. குதிரைகளின் உடலும் வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருமேனிகளும் விலங்குகளும் பறவைகளுமாக நுட்பத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கோவிலின் மண்டப மேற்கூரையில் எட்டுக்கிளிகள் வட்டத்திற்கு வெளியே அமைந்தது போலவும், நடுவிலே ஒரு தேங்காய் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காயை நாம் கைகளால் சுழற்ற முடியும். இதில் உள்ள கிளிகளின் மூக்கில் வளையம், காலில் வளையம், வால்களில் வளையம் என்று அமைத்து, இவை அனைத்துமே தனித்தனியாக சுற்றுவது போல அமைக்கப்பட்டுள்ளது, நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த சிற்பத்தில், மேலிருந்து தொங்கும் சங்கிலிகள்,தொங்கும் தாமரைப்பூ,அதன் இதழ்களில் அமர்ந்து,மகரந்தத்தை ருசிக்கும் எட்டு கிளிகள், கிளிகளுக்கு காவலாக வெளியில் நான்கு பாம்புகள் ஆகிய எல்லாமே ஒரே கல்லால் வடிக்கப்பட்டது என்று அறியும் போது நம்மை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் செல்லும்.
இந்த கோவிலின் சிற்பங்களை பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது. சிற்பக் கலையின் உன்னதத்தை உணர்த்தும் எண்ணற்ற நம் கோவில்களில், இக்கோவில் தனக்கென்று தனி இடத்தை பெற்று திதழ்கின்றது
திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்
சுவாமி, அம்பாள் எதிர் எதிரே அமைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு
மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.
மூலவர் கொழுந்துநாதர் மேற்கு திசை நோக்கி, பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை தேனாம்பிகை கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றாள். இவ்வாறு சுவாமியும் அம்பாளும் எதிர் எதிர் திசையில் காட்சியளிப்பது ஒரு சில தலங்களில் மட்டுமே உள்ளதால், இந்த வடிவமைப்பு இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
பாலாபிஷேகத்தின் போது சிவலிங்கத் திருமேனியில், அர்த்தநாரீஸ்வரர் உருவம் தெரியும் அரிய காட்சி
மாசி பௌர்ணமி அன்று இத்தலத்து இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது சிவலிங்கத் திருமேனியில் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தெரிவது இத்தலத்தில் மட்டுமே நாம் காணக்கூடிய அரிய காட்சி ஆகும்.
பிரார்த்தனை
இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்
சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்புகலூர். இறைவன் திருநாமம் அக்னிபுரீஸ்வரர், கோணபிரான். இறைவியின் திருநாமம் கருந்தார் குழலி, சூளிகாம்பாள்.
பொதுவாக சிவாலயங்களில் இறைவனின் கருவறையை சுற்றி வரும்போது, கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. "சிவன் சொத்து குலநாசம்' என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கிறார். இது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.
திருமெய்ஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்
தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் இருக்கும் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கடவூர் மயானம். பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், கடவூர்மயானம் என்றும். திருமெய்ஞானம் என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் மலர்க்குழல் மின்னம்மை. திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கும் பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழே, நான்கு சீடர்களுடன் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில், கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியுடன், ஆறு சீடர்களுடன் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.. மேலும் கல்லால மரமும் இல்லை. கல்வியில் சிறந்து விளங்க இத்தல சிவனையும் இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறப்பு.
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்
ஏழு கைகள், ஏழு ஜுவாலை, நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள் உடைய அக்னி பகவானின் அபூர்வ தோற்றம்
திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்புகலூர். இறைவன் திருநாமம் அக்னிபுரீஸ்வரர், கோணபிரான். இறைவியின் திருநாமம் கருந்தார் குழலி, சூளிகாம்பாள். அப்பர் முக்தி அடைந்த தலம் இது. முருக நாயனார் அவதரித்த தலம்.
இத்தலத்தில் அகனி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பூஜித்த தலமாதலால், இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம். அக்னி தவம் செய்யும்போது ஏற்படுத்திய தீர்த்தம், கோவில் வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தமாக விளங்குகிறது.
அக்னி பகவானுக்கு பாவ விமோசனம் கொடுத்து, காட்சி தந்த தலம் இது என்பதால், அக்னிக்கு உருவச் சிலை இந்தக் கோவிலில் அமைந்திருப்பது விசேடமாகும். அக்னி பகவான் இரண்டு முகம், ஏழு கைகள், ஏழு ஜுவாலை, நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள் உடையவராக காட்சி அளிக்கிறார். அக்னி பகவானின் இந்த தோற்றம், மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. அக்னி பகவானின் இத்தகைய தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்
சகல பாவங்கள், தோஷங்கள் நீங்க அருள் புரியும் அம்பிகை
நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் கீழ்வேளூர். இறைவன் திருநாமம் கேடிலியப்பர். இறைவியின் திருநாமம் சுந்தர குஜாம்பிகை. இக்கோவிலின் தல மரம் இலந்தை. முற்காலத்தில் இந்த இடமே இலந்தை மரக் காடாக இருந்திருக்கின்றது. அதனால் இத்தலத்திற்கு தட்சிண பத்ரி ஆரண்யம் என்ற பெயர் ஏற்பட்டது.
பார்வதிதேவி, கைலாயத்தில் தினமும் ஆறுகால சிவபூஜை செய்வது வழக்கம். ஒரு சமயம் பார்வதி தேவி தனது பூஜையை முடித்துவிட்டு, இலந்தை மரக் காடாக இருந்த இத்தலத்துக்கு வந்தபோது பாம்பும் கீரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், விளையாடிக் கொண்டிருந்த அதிசயக் காட்சியை கண்டாள். மேலும் அங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருந்த கேடிலியப்பரை தரிசித்தாள். தனது அடுத்த கால சிவபூஜைக்கு நேரமாகி விட்டதால், அந்த இலந்தை( பத்ரி) மரக்காட்டில் இருந்த கேடிலியப்பருக்கு பூஜை செய்து முடித்தாள். இதனால் இத்தலத்து அம்பிகைக்கு, பதரி வனமுலை நாயகி என்ற பெயரும் உண்டு. . கருவறையில் அம்பிகை தன் மேலிரு கரங்களில் அட்சமாலை, தாமரை மலர் தாங்கியும், இடது கையைத் தொடையில் வைத்து வலது கையைத் தூக்கி, அபயம் அளிக்கும் கோலத்தில் அழகு மிளிர காட்சி அளிக்கிறாள்.
இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் ஆகியவை தேவாரப் பாடலில் போற்றப்பட்ட சிறப்பு
வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது மின் உலாவிய சடையினர் என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில் "வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோவிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.
பிரார்த்தனை
வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் கருணை உடையவள் சுந்தர குஜாம்பிகை. பக்தர்கள், சகல பாவங்கள், தோஷங்கள் நீங்க இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள்
சித்ரா பவுர்ணமியில் பிரமோத்சவம் நடைபெறுகிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், நவராத்திரி, தீபாவளி, வருடப்பிறப்பு, பொங்கல், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ நாட்களில் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.