திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர் கோவில்
துணையிருந்த விநாயகர் (கரிகால சோழன், தன் அரசினை மீட்க உதவிய விநாயகர்)
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பனையூர். இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர், அழகியநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
இக்கோவிலில் தனிச்சன்னதியில் துணை இருந்த விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இந்த விநாயகர் இப்பெயரை பெறுவதற்கு பின்னால், சோழ நாட்டு வரலாற்று நிகழ்ச்சி ஒன்று உள்ளது.
முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது. அவனது தாய்மாமன் 'இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து, இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான்.
பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல விநாயகர் 'துணையிருந்த விநாயகர்' என்னும் பெயர் பெற்றார்.
படங்கள் உதவி : திரு. ராஜசேகரன் குருக்கள், ஆலய அர்ச்சகர்