பரிதிநியமம் பரிதியப்பர் கோவில்

சூரிய பகவான் சிவபெருமானை கை கூப்பி வணங்கி நிற்கும் அரிய காட்சி

சிவன் கோவிலில் மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும் அருகருகே இருக்கும் அபூர்வ காட்சி

தஞ்சாவூரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பரிதிநியமம். இறைவன் திருநாமம் பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

சூரிய பகவான் தனது தோஷம் நீங்க வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. எனவே இத்தலம் பித்ரு தோஷ பரிகாரத்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் சூரிய பகவான் மூலவர் பரிதியப்பரை கை கூப்பி வணங்கும் நிலையில் எழுந்தருளி உள்ளார். இது ஒரு அரிய காட்சியாகும். இப்படி இறைவன் முன்பு, சூரிய பகவான் வணங்கி நிற்கும் நிலையை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

மூலவர் பரிதியப்பரின் கருவறை பின்புற கோஷ்டத்தில், மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். இப்படி மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும் அருகருகே சிவன் கோவிலில் எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வ காட்சியாகும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் பித்ருகாரகன் என்று அறியப்படுகிறார். ஜாதக ரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம் என சொல்லப்படுகிறது. காத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , சூரிய திசை நடப்பவர்கள் , சிம்ம லக்னம் , சிம்ம ராசியில் பிறந்தவர்கள் , சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் முதலியோர் தமிழ் மாத வளர்பிறை முதல் ஞாயிற்றுக்கிழமை இத்தலம் வந்து பரிதியப்பரையும், சூரியனையும் வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

நோயினால் நீண்ட நாள் அவதிப்படுபவர்கள், தீராத நோயினால் அவதியுறுபவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்தால், நலம் அடைவார்கள்.

சிவபெருமானை கை கூப்பி வணங்கி நிற்கும் சூரிய பகவான்

மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும்

 
Previous
Previous

பருத்தியூர் சந்தன மாரியம்மன் கோவில்

Next
Next

பிரம்மதேசம் கைலாசநாதர். கோவில்