திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்

தட்சிணாமூர்த்தியின் காலடியில் நந்தி இருக்கும் அரிய தோற்றம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவனின் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இக்கோவிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன . ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர். இந்த கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. எம பயத்தை போக்கக்கூடிய தலம் இது.

இத்தலத்தில் இறைவன் சன்னதியின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி கற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். அவரது வலது பாதத்தின் கீழ் வழக்கம் போல் முயலகன் காட்சி தருகின்றான். மடித்து வைத்திருக்கும் அவரது இடது காலின் கீழ் பக்கம் நந்தி காட்சி அளிக்கிறது. சிவபெருமானின் அம்சம் தட்சிணாமூர்த்தி என்பதால் நந்தி தேவர் அவருக்கு வாகனமாக எழுந்தருளி இருக்கிறார். நந்தி தேவர் வழிபட்ட தலம் இது. அதனால் தான் அவர் தட்சிணாமூர்த்தியின் காலடியில் எழுந்தருளி இருக்கிறார். இப்படி நந்தி தேவருடன் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு தலங்களில் தரிசிப்பது அரிது.

அறிவு, தெளிவு, ஞானம் ஆகியவற்றை அருள்பவர் இந்த தட்சிணாமூர்த்தி (த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம்). தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. திருமணத்தடை நீங்க வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகார பூஜை (24.01.2025)

https://www.alayathuligal.com/blog/thiruppanjeeli24012025?rq

2. எமதர்மன் குழந்தை வடிவில் இருக்கும் அபூர்வ தோற்றம் (03.06.2023)

https://www.alayathuligal.com/blog/nw5l7xxm33db33r6nb928shyhm2cnw?rq

தகவல் உதவி : டாக்டர். ராஜா கணேச சிவாச்சாரியார், ஆலய தலைமை அர்ச்சகர்

 
Previous
Previous

திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்

Next
Next

திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோவில்