நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்
சிவபெருமான் சார்பில், இறந்தவர் உடலுக்கு மரியாதை செய்யும் வினோத நடைமுறை
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாட்சி அம்மன்.
இக்கோவிலில் இறந்தவர் சடலத்திற்கு, சிவபெருமான் சார்பில் மரியாதை செலுத்தும் வினோத நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பொதுவாக கோவிலின் சன்னதி தெருவிலோ அல்லது மடவிளாகத்திலோ யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். இந்த நடைமுறையின் பின்னணியில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாரின் வரலாறு பிணைந்துள்ளது.
சிவபெருமானால் பெயர் சூட்டப்பட்ட ஒரே நாயன்மார்
அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் 'கடல்நாகை' எனும் இந்த நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் தான் கடலில் பிடிக்கும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் சிவபெருமானுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவபெருமானுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார். மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த தங்க மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த சிவபெருமான், 'அதிபக்தா' என்று அழைத்து, அவருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார். அப்போது அதிபத்த நாயனார், சிவபெருமானிடம் தனக்கு மட்டுமல்ல தன் வம்சா வழியினருக்கும் முக்தி அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனால் சூட்டப்பட்ட அதிபக்தா என்ற பெயர்தான் பின்னர் மருவி அதிபத்தர் என்றானது.
அதிபத்த நாயனாரின் வேண்டுதலுக்கு ஏற்ப, அவருக்கு மரியாதை தரும் விதமாக இன்றும் அவரது வம்சா வழியினர் யாராவது இறந்துவிட்டால், அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.
ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோவிலில் நடைபெறுகிறது. அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.
அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா