திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் கோவில்
பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியபடி இருக்கும் அபூர்வ அமைப்பு
சிவனுக்கு நேரே மகாவிஷ்ணு இருக்கும் அபூர்வ காட்சி
நந்தி, மூஞ்சூறு, மயில் ஆகிய மூன்று வாகனங்கள் அருகருகே இருக்கும் அரிய காட்சி
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ.தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் கோவில். இது ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்க்கையம்மன் சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
பொதுவாக சிவன் கோவில்களில், விநாயகர், முருகன், துர்க்கை, பெருமாள் ஆகியோர் பிரகார தெய்வங்களாகவே இருப்பர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியே அருளுகின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
துர்க்கையம்மன் காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் நின்றகோலத்தில் இருக்கிறாள். இவளுக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். துர்க்கைக்கு வலது புறம் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் சுப்பிரமணியர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவருக்கு அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.சத்யகிரீஸ்வரர் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே மகாவிஷ்ணு, பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் மதங்க மகரிஷியும் இருக்கிறார். பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும். எனவே இக்கோயிலை 'மால்விடை கோயில்' (மால் - திருமால், விடை - நந்தி) என்கின்றனர். பெருமாள் தன் மைத்துனராகிய சிவபெருமானுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருக்கிறார். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின்போது, இவரே பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கச் செல்கிறார்.
சிவன் கோவில்களில் நந்தி, விநாயகர் சன்னதியில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவபெருமான், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.