
திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில்
பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருக்கும் திவ்யதேசம்
ஆழ்வார் சொன்னதைக் கேட்டு, தனது பாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு கிளம்பிய பெருமாள்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 51 ஆவது திவ்ய தேசம், சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கோமளவல்லித் தாயார். பொதுவாக பெருமாள் கோவில்களில் சயனக் கோலத்தில் இருக்கும் பெருமாள், இடமிருந்து வலமாக படுத்திருப்பார். மற்ற கோவில்களில் இருப்பதை போலவே ஆரம்பத்தில் இக்கோவிலிலும், பெருமாள் இடமிருந்து வலமாக தான் சயனித்திருந்தார். பின்னர் அவர் தனது இடது கையை தலைக்கு வைத்துக்கொண்டு, வலமிருந்து இடமாக வித்தியாசமான சயனக் கோலத்தில் காட்சி அளிக்க தொடங்கினார். இதன் பின்னணியில், ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
பன்னிரண்டு ஆழ்வார்களில், நான்காவது ஆழ்வாரான திருமழிசையாழ்வார், திருவெக்கா பெருமாள் கோவிலில் தனது சீடன் கணிக்கண்ணனுடன் சேவை செய்து வந்தார். இவர்களின் ஆசிரமத்தை, ஒரு மூதாட்டி நாள்தோறும் தூய்மை செய்து வந்தார் . தனக்குச் சேவகம் செய்த மூதாட்டிக்கு அவள் வேண்டுகோள்படி, இளமை திரும்பப் பெருமாளிடம் திருமழிசையாழ்வார் வேண்டினார். அவ்வாறே பெருமாளும் அருள, மூதாட்டி இளமையைத் தி்ரும்பப் பெற்றார்.
இச்செய்தியை அறிந்த காஞ்சி மன்னன், தானும் முதுமை நீங்கி இளமை திரும்ப்ப் பெற விரும்பினான். மன்னன் கணிக்கண்ணனிடம், 'தனக்கும் இளமை திரும்புமாறு உங்கள் குருநாதரிடம் சொல்லவேண்டும்' என்று கேட்டார். கணிக்கண்ணனோ, 'குருவின் கருணையை சேவையின் மூலம் பெறலாமே ஒழிய, உத்தரவின் வழியாகப் பெறமுடியாது' என்று சொல்லி மறுத்தார். மன்னன் கோபம் கொண்டு கணிக்கண்ணனை நாடு கடத்துமாறு உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் மனம் வருந்திய கணிக்கண்ணன் தன் குருவிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தார். தன் சேவையைத் தொடர முடியாத நிலையைச் சொல்லி, அந்த ஊரிலிருந்து வெளியேறுவதாகக் கூறினார். இதைக் கேட்ட திருமழிசையாழ்வார், 'வா இருவரும் சென்று பெருமாளிடம் முறையிடுவோம்' என்று சொல்லிக் கோவிலுக்குச் சென்றனர். அங்கு தன் மனக் குறை வெளிப்படுத்தி, ஆழ்வார் ஒரு பாசுரம் பாடினார்
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா -துணிவுடைய
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுந்தன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள், என்று பெருமாளுக்கு கட்டளை போட்டுவிட்டு புறப்பட்டார் திருமழிசையாழ்வார். உடனே ஆழ்வார் சொன்னவண்ணம், பெருமாளும் தனது பாம்பு படுக்கையை சுற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார் அவரோடு, பெருமாள் மார்பிலே வாசம் செய்யும் திருமகளும் காஞ்சிமாநகரை விட்டு நீங்கினாள். காஞ்சிபுரம் தன் களையை இழந்தது.
காஞ்சிபுரத்தை விட்டு கிளம்பிச் சென்ற ஆழ்வார், கணிகண்ணன், பெருமாள், திருமகள் ஆகியோர் ஒரு நாள் இரவு தங்கியிருந்த இடம் 'ஓர் இரவு இருக்கை' என அழைக்கப்பட்டது. பின்னாளில் அது மருவி 'ஓரிக்கை' என இந்நாளில் அழைக்கப்படுகிறது.
மறுநாள் பூஜை செய்ய வந்த அர்ச்சகர்கள், கருவறையில் பெருமாள் இல்லாதது கண்டு வருந்தினர். மன்னனிடம் இதைப் பற்றி முறையிட்டனர். காரணத்தையறிந்த மன்னன், தவறையுணர்ந்து ஆழ்வாரைத் தஞ்சம் அடைந்து, சீடனுக்கான நாடு கடத்தும் ஆணையையும் திரும்பப் பெற்றான். ஆழ்வாரும் அவனை மன்னித்து,
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள், என்று பெருமாளை பாடினார்.
திருமழிசையாழ்வார் தன் மேல் வைத்திருந்த பக்திக்கும், அவர் பாடும் பாசுரங்களின் மேல் வைத்திருந்த பிரியத்திற்கும் கட்டுப்பட்டு, உடனே பெருமாள் தன் பாம்புப் பாயை சுருட்டிக் கொண்டு ஆழ்வாருடன் திருவெக்கா வந்து, மீண்டும் படுத்துக்கொண்டார். இப்படி ஆழ்வார் சொன்னபடி பெருமாள் நடந்து கொண்டதால் தான், அவருக்கு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
பெருமாள் அவசரமாக திருவெக்கா வந்து மீண்டும் படுத்ததினால்தான், அவர் வலமிருந்து இடமாக படுத்துக் கொண்டார். இப்படி அவர் இக்கோவிலில், திருமழிசை ஆழ்வார் தன்னை புகழ்ந்து பாடுவதை கேட்பதற்காக, வலமிருந்து இடமாக சயனித்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். பெருமாளின் திருவடிகளை தொழுதபடி சரஸ்வதி தேவி அமர்ந்திருப்பதும் இக்கோவிலின் தனித்துவமான சிறப்பம்சமாகும்.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்
அமர்ந்த நிலையில் காட்சி தரும் நவக்கிரகங்களின் வித்தியாசமான தோற்றம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் கோவில்பட்டியில் அமைந்துள்ளது கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் செண்பகவல்லி அம்மன். இத்தலத்தில், இறைவனும் இறைவியும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் நின்ற நிலையில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள். நவக்கிரகங்களின் இந்த வித்தியாசமான தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோவில்
தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெறும் விசேடமான திருமாங்கல்யச் சரடு உற்சவம்
சென்னை, நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நவநீதகிருஷ்ணன் கோயில். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நங்கையாகிய லட்சுமி தோன்றிய இந்த இடம், நங்கை நல்லூராகி இன்று நங்கநல்லூராய் திரிந்து உள்ளது. இந்தத் தலம், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். தூண் வடிவில் உள்ள கருவறையில், மூலவர் லட்சுமி நரசிம்மர், ஐந்தடி உயரத் திருமேனியுடன், தன் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தால் மடியில் உள்ள லட்சுமியை அணைத்தபடியும் காட்சி தருகிறார். வடக்குபுற சந்நிதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடியபடி அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் தூண் வடிவில் உள்ள கருவறையில் தாயாருடன் காட்சி தருகிறார். திருக்கரங்களில் சங்கு, சக்கரத்துடன், ஒரு கை அபய ஹஸ்தம் காட்ட, மற்றொரு கை ஸ்ரீ லக்ஷ்மி தேவியை அணைத்துக் கொண்டிருக்க, எழிலே உருவாக, கருணை பொங்கும் முகத்துடன், கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும், தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெறும், திருமாங்கல்யச் சரடு உற்சவம் எனும் திருக்கல்யாணம் விசேடமானது. அன்றைய தினம் கல்யாண கோலத்தில் தாயாரும், எம்பெருமானும் காட்சி தருகின்றனர். பத்தாயிரத்திற்கும் மேலான திருமாங்கல்யச் சரடுகள் தாயாருக்கு சாற்றப்பட்டு, பின்னர் அவை சுமங்கலிகளுக்கும், கன்னிப் பெண்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றை அணிவதன் மூலம் திருமண பந்தம் நீண்டு வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பதும், மணமாகாத பெண்களுக்கு உடனடியாக வரன் கூடும் என்பதும் ஐதீகம். இந்த நிகழ்வு வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒரு சிறப்பான நிகழ்வாகும்.
அமெரிக்க ஆஞ்சநேயர்
இங்குள்ள ராமர் சந்நிதி முன் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு ‘அமெரிக்க ஆஞ்சநேயர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. வெளிநாட்டுக்குச் செல்வதில் தடை, பிரச்சனைகள் உள்ளவர்கள் இவரை வேண்டிக் கொண்டு வழிபட்டால் அந்தத் தடையை நீக்கித் தருகிறார் என்பது இவருக்கு இருக்கும் சிறப்பு.

அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில்
இடது பாதம் மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அபூர்வத் தோற்றம்
அம்பாசமுத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்தக் கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் மூன்று சிறிய சன்னதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய சிவலிங்கத் திருமேனியும், அதற்கு முன்பாக ஒரு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மூன்று ஈசர்கள் எழுந்தருளியிருப்பதால், கருவறை மூலவருக்கு மூன்றீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு, வலது முட்டியின் மீது இடது பாதம் முழுமையாக மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்துள்ளார். அவரது இடது கை நாகத்தை தொட்ட நிலையில் இருக்கின்றது. தட்சிணாமூர்த்தியின் இந்த அபூர்வ தோற்றமானது, நாம் வேறு எந்த கோவிலிலும் காண முடியாத ஒன்றாகும்.

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில்
பெருமாள் தாயார் திருக்கோலத்திலும், தாயார் பெருமாள் திருக்கோலத்திலும் காட்சி தரும் 'மாற்றுத் திருக்கோலம்' சேவை
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திவ்யதேசம் திருஇந்தளூர். பெருமாள் திரு நாமம் பரிமளரங்கநாதர்.தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி, சந்திரசாபவிமோசனவல்லி. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுகள் பஞ்சரங்க தலங்கள் சென்று அழைக்கப்படுகின்றன. ரங்கம் என்றால் ஆறு பிரியும் இடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதருக்கு தை அமாவாசையன்று பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.
'மாற்று திருக்கோலம்' என்பது, பெருமாள் மற்றும் நாச்சியார் ஆகியோரின் திருக்கோலம் ஆகும். இது, பெருமாள் நாச்சியார் திருக்கோலம் அல்லது தாயார் பெருமாள் திருக்கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.

வெள்ளக்கோவில் வீரகுமாரசுவாமி கோவில்
பக்தர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேற வெடி போடும் முருகன் தலம்
ஆண்கள் மட்டுமே மூலவரை தரிசிக்கும் கோவில்
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் என்ற ஊரில் வீரகுமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப் பெருமான் வீரத் தோற்றத்தில் கன்னி குமரனாகக் காட்சி தருகிறார். 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் முருகப்பெருமான் புற்று வடிவில் எழுந்தருளி இருக்கிறார். இவர் காலில் பாதக் குறடு கவசம் அணிந்தும், இடுப்பில் தாங்குச்சையும், உடைவாளும், குத்துவாளும், வலது கையில் சூலாயுதமும் கொண்டு, கன்னி தெய்வமாகக் காட்சியளிக்கிறார். இவர் புற்றுமண்ணாலான திருமேனி உடையவர் என்பதால், சந்தன அபிஷேகம் மட்டுமே செய்கிறார்கள்.
இவர் கன்னி தெய்வமாகக் காட்சி தருவதால், பெண்கள் யாரும் கோவிலுக்குள் செல்வது கிடையாது. பெண்கள் உள்ளே செல்லக்கூடாது என்று எந்தவிதக் கட்டுப்பாடும் இங்கு இல்லை. ஆனாலும், பெண் பக்தர்கள் உள்ளே சென்று மூலவரை தரிசிப்பது இல்லை எனத் தாங்களாகவே முடிவெடுத்து, கடைப்பிடித்தும் வருகிறார்கள். மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்த கன்னியரை வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது.
பொட்லி போடுதல் என்ற சிறப்புப் பரிகாரம், காலங்காலமாகவே இக்கோவிலில் நடைபெற்று வருகிறது. பொட்லி என்பது ஒரு வகை வெடி ஆகும். இக்கோயிலில் வெடிக்கப்படும் பொட்லி வெடியின் சத்தம் வீரகுமாரசுவாமிக்கு விருப்பமான ஒன்று. தங்களின் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் வீரகுமாரசுவாமியை தரிசித்துவிட்டு, கோயிலின் எதிரே உள்ள பொட்லி போடும் மண்டபத்துக்குச் சென்று, தங்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, பொட்லி போடுவார்கள். இந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு வீரகுமாரசுவாமி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். பொதுவாக திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பொட்லி வெடி போடுவது வழக்கம்.
இக்கோவில் பக்தர்கள் கனவில் முருகன் குதிரை வாகனத்தில் காட்சி தந்ததால், இக்கோவிலில் குதிரை முருகனின் வாகனமாக கருதப்படுகிறது. இரண்டு ஐம்பொன் குதிரை சிலைகள் இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இக்கோவிலுக்கு சுதையால் ஆன குதிரைகளைக் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்
ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும், அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் உள்ள ஒரே தலம்
மூலவருக்கு, வேறு எந்த தலத்திலும் இல்லாத திருநாமம் அமையப் பெற்ற தலம்
மதுரையிலிருந்து 14 கி.மீ.தூரத்தில், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி, உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால் இக்கோவிலில், ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும் அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சி ஆகும். அதேபோல், நம் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத வகையில், மூலவருக்கு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் என்ற திருநாமம் அமைந்திருப்பதும், ஒரு தனி சிறப்பாகும். இப்படிப்பட்ட திருநாமம் அமைந்ததற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு திருஉத்திரகோசமங்கை எனும் ஊரில் வாழ்ந்த ஒருவர் தன் மனைவியுடனும்,தன் மகன்கள் மற்றும் மகளுடன் சேர்ந்து, அழகர்கோவிலுக்கு சென்று தன் பேரக்குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி வருவதற்காக மாட்டுவண்டி கட்டிக் கொண்டு இவ்வழியாக வந்தார்.
இக்கோவில் அமைந்துள்ள இவ்விடத்தில் தமது மாட்டுவண்டியை நிறுத்தி அங்கு இருந்த ஆலமரத்தின் கிளையொன்றில் தொட்டிலை கட்டி குழந்தையை துயில் கொள்ள வைத்துவிட்டு, பெண்கள் உணவு சமைக்க, ஆண்கள் அனைவரும் அருகாமையில் ஓடும் நதியில் நீராடி திரும்பி வந்து பார்த்தபோது, தொட்டிலில் துயில் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை.
அவர்கள், கடவுளே ஏன் இந்த சோதனையென இருகரம் கூப்பி ஆகாயத்தை நோக்கியபோது, அவர்களின் கண்களுக்கு ஆகாயத்தில் அக்குழந்தை அந்தரத்தில் மிதப்பதைக் கண்டு பதைபதைத்தனர். அதேவேளையில் அந்த ஆலமரத்தின் உச்சியில் இருந்து ஓர் அசரீரியின் குரல் கேட்டது. 'நீங்கள் கட்டிய தொட்டிலுக்கு அடியில் உங்களின் அழுதகண்ணீரை ஆற்றும் வல்லமை படைத்த சிவன் சிலையொன்று பூமியினுள் புதையுண்டு கிடக்கிறது.அவரின் திருஉருவச்சிலையை வெளிக் கொணர்ந்து வழிபடுவதாக வாக்கு தந்தால், அந்தரத்தில் காணும் அந்த குழந்தை அடுத்த கணமே தொட்டிலில் துயில் கொள்ளும் என்றுரைத்தது.செய்தியைக் கேட்டதும் அவர்கள் அத்தனை பேருமே அப்படியே செய்கிறோம் என தரையில் விழுந்து வணங்கி சத்தியம் செய்ததாகவும் அடுத்தகணமே தொட்டிலில் குழந்தையை பொக்கை வாய் சிரிப்புடன் கண்டார்கள். இறைவனின் கட்டளைப்படி அவர்களும் பூமியினுள் புதையுண்டு கிடந்த ரிஷபாரூடர் சிலையை வெளியில் எடுத்து வைத்து, கோவில் கட்டி வழிபாடு செய்தார்கள். குழந்தையை காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால், இறைவனுக்கு 'அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பிரதோஷ காலங்களில் மூலவரையே ரிஷபாரூடராக வழிபடலாம் என்பது இக்கோவிலின் மற்றும் ஒரு தனிச்சிறப்பாகும்.
இடப வாகனமாக இருக்கும் மகாவிஷ்ணு
ஒரு சமயம், தேவர்கள் அசுரர்கள் தொல்லையினால், கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவபெருமானிடம் கொண்ட அன்பின் காரணமாக மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவபெருமானை ஏற்றிச் சென்றார். இதன் பின் சிவபெருமானுக்கு 'ரிஷபாரூடர்' என்ற திருநாமம் உண்டாயிற்று. மகாவிஷ்ணு இங்கு இடபவாகனமாக இருப்பதால் சிவனையும், சக்தியையும், பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.

நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்
சிவபெருமான் சார்பில், இறந்தவர் உடலுக்கு மரியாதை செய்யும் வினோத நடைமுறை
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாட்சி அம்மன்.
இக்கோவிலில் இறந்தவர் சடலத்திற்கு, சிவபெருமான் சார்பில் மரியாதை செலுத்தும் வினோத நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பொதுவாக கோவிலின் சன்னதி தெருவிலோ அல்லது மடவிளாகத்திலோ யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். இந்த நடைமுறையின் பின்னணியில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாரின் வரலாறு பிணைந்துள்ளது.
சிவபெருமானால் பெயர் சூட்டப்பட்ட ஒரே நாயன்மார்
அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் 'கடல்நாகை' எனும் இந்த நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் தான் கடலில் பிடிக்கும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் சிவபெருமானுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவபெருமானுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார். மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த தங்க மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த சிவபெருமான், 'அதிபக்தா' என்று அழைத்து, அவருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார். அப்போது அதிபத்த நாயனார், சிவபெருமானிடம் தனக்கு மட்டுமல்ல தன் வம்சா வழியினருக்கும் முக்தி அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனால் சூட்டப்பட்ட அதிபக்தா என்ற பெயர்தான் பின்னர் மருவி அதிபத்தர் என்றானது.
அதிபத்த நாயனாரின் வேண்டுதலுக்கு ஏற்ப, அவருக்கு மரியாதை தரும் விதமாக இன்றும் அவரது வம்சா வழியினர் யாராவது இறந்துவிட்டால், அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.
ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோவிலில் நடைபெறுகிறது. அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.

வன்னிவேடு அகத்தீசுவரர் கோவில்
கட்டிடப் பணி தடங்கல் இன்றி நடக்க, சனிபகவானுக்கு பாகற்காய் மாலை
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னிவேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் புவனேசுவரி.
இக்கோவிலில், ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர் மற்றும் சனீஸ்வரர் அடுத்தடுத்த சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். வீடு மற்றும் கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர், அது தடங்கலின்றி நடக்க, சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு, 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து, எள் தீபமேற்றி வழிபடுவது விசேஷம்.தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், கசப்பான அனுபவங்களை சனி பகவானிடமே அர்ப்பணித்து விடுவதாகவும், இனி, அவ்வாறு நடக்கக்கூடாது என்றும் இந்த வேண்டுதலைச் செய்கின்றனர்.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்
திருமணத்தடை நீங்க வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகார பூஜை
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவனின் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இக்கோவிலில் அம்மன் சன்னதி இரண்டு உள்ளது. ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர். ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது.
சப்த கன்னியர் வாழை மர வடிவில் எழுந்தருளி இருக்கும் தலம்
பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டித் தவம் செய்தனர். அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள். சப்தகன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்கே எழுந்தருளினாள். அவள் சப்த கன்னிகளிடம், 'நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்டகாலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள்' என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கினர்.
வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகார பூஜை
இந்த ஆலயத்துக்கென்றே விசேஷ வழிபாடான கல்(யாண) வாழைகளுக்கு முன்னே அமர்ந்து செய்து கொள்ளும் பரிகார பூஜை மற்றும் தோஷ நிவர்த்தி பூஜை அதிசயமானது. திருமண தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டிப் பரிகார பூஜைகள் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்று கிழமை தினங்களில் பரிகாரம் செய்ய செல்வது சிறந்தது. இங்கு காலையும் மாலையும் வாழை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதனால் நாகதோஷ நிவர்த்தி, திருமணத்தடை விலகுதல், பூரண ஆயுள் போன்ற மங்கலங்கள் நிறைவேறுமாம்.பிற மதத்தினரும் இந்த கல்வாழை பரிகார பூஜையில் கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும்.

சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்
சூரிய பிரபை போன்ற தலை முடியுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் சாக்கோட்டை . இறைவனின் திருநாமம் அமிர்தகலசநாதர். இறைவியின் திருநாமம் அமிர்தவல்லி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது. ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. கும்பகோணம் தலபுராணத்துடன் தொடர்புடைய இத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவர் தனது வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும், இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும் ஏந்தி இருக்கிறார். இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். இவரது தலைமுடி சூரிய பிரபை போன்ற அமைப்பில் இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.

பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்
பெருமாளுக்கு புதுமையான திருநாமம் உடைய தலம்
பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் மகிழ்ச்சி இருமடங்காகும் தலம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், குரு ஸ்தலமான ஆலங்குடியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்.
கருவறையில், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்து பெருமாளின் திருநாமம் வேறு எந்த தலத்திலும் இல்லாத புதுமையான ஒன்று. இத்தலத்து பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்கள் உள்ளம் மகிழ்வதால், இவருக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இத்தல பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் அவர்களின் மகிழ்ச்சி இருமடங்காகும் என்பது ஐதீகம்.
பெருமாளின் இந்த திருநாமத்துக்கு பின்னணியில் ராமாயண நிகழ்ச்சி ஒன்று உள்ளது. ராவணன் சீதையை கடத்தி சென்றபோது, தன் கணவனுக்கு தான் சென்ற வழி தெரிய வேண்டும் என்று சீதாதேவி, தான் அணிந்திருந்த அணிகலங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பூமியில் போட்டுக் கொண்டே போனாளாம். அப்படி அவள் அணிந்திருந்த பாடகம் எனப்படும் காலில் அணியக் கூடிய கொலுசை ஓரிடத்தில் கழற்றிப் போட்டாள். சீதையைத் தேடி புறப்பட்ட ராமனும் லட்சுமணனும் சீதா தேவி கழற்றி எறிந்த அணிகலங்களை ஆங்காங்கே தரையில் கண்டன்ர். ஒரு கிராமத்தில் சீதாதேவியின் பாடகம் எனப்படும் அணிகலன் தரையில் கிடப்பதைப் பார்த்த ராமபிரான், தம்பி லட்சுமணா… இந்த அணிகலனைப் பார். இது யாருடையது? என்று கேட்டபோது, லட்சுமணன் முகம் மலர்ந்து, இது என் அண்ணியாருடையது. அவர் தன் திருப்பாதங்களில் இந்த பாடகங்களை அணிந்திருப்பார். இந்தக் காட்சியை நான் தரிசித்திருக்கிறேன் என்று உளம் மகிழ்ந்து சொன்னானாம். அதுவரை தரையில் விழுந்து கிடந்த மற்ற ஆபரணங்களை ராமபிரான் காட்டிக் கேட்டபோது, இது அண்ணியாருடையதா என்று எனக்குத் தெரியாது என்றே சொல்லி வந்த லட்சுமணன், காலில் அணியும் பாடகத்தைக் கண்டு, இது நிச்சயம் அண்ணியார் அணியும் அணிகலன்தான் என்று உறுதிபடச் சொன்னது, ராமனுக்குப் பெருத்த மகிழ்வைத் தந்ததாம். அண்ணியாரை, ஒரு தெய்வமாக எந்த அளவுக்கு லட்சுமணன் தொழுது வந்திருக்கிறான் என்கிற பக்தி உணர்வு அப்போது வெளிப்பட்டது. பாடகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார் ராமபிரான். இதனால் இந்த ஊருக்கு பாடகப்பதி என்றும் (பின்னாளில் பாடகச்சேரி), இங்கு அருள் பாலிக்கும் பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்கிற திருநாமமும் வந்தது.

வைரவன் கோயில் காலபைரவர் கோவில்
காசிக்கு நிகரான காலபைரவர் தலம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கி.மீ. தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள காலபைரவர் கோவில், காசி காலபைரவருக்கு இணையான தலமாகப் போற்றப்படுகின்றது. இத்தலத்தில் காலபைரவர் எழுந்தருளி இருப்பதின் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
முருகப்பெருமானிடம் உபதேசம் பெற கயிலையில் இருந்து வந்த சிவபெருமானுடன் அனைத்து தேவர்களும் வந்தனர். இவர்களில் பைரவர் மட்டும் சிவபெருமானின் ஆணைப்படி வைரவன் கோவில் எனும் இடத்தில்,காவியியின் வடகரையில் தென்முகமாக அமர்ந்து கொண்டார். அவர் நோக்கிய இடத்தில் ஒரு மயானமும் உள்ளது. இது காசிக்கு நிகரான பெருமை கொண்ட தலம். காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை அம்சங்களையும் இவரும் கொண்டிருக்கிறார். இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாகி, அதுவே ஈச்சங்குடியானது. தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது. கணபதி பூஜித்த இடம் கணபதி அக்ரஹாரம் ஆனது. தேவி உமையாள் புரத்திலும், நந்தி மதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.
இத்தனை பெருமைகள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை.
காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும், பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். பகை நீங்கும், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது. நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படும்.
சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே இவரை வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பு விலகி நல்லவையே நடக்கும்.

தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்
திருமணத் தடை நீ்க்கும் அஷ்டகந்தம் சாற்றிய ரட்சை
பலவிதமான நோய்களைத் தீர்க்கும் அபிஷேக விபூதி
சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், சுங்குவார் சத்திரத்திலிருந்து இடதுபக்கம் திரும்பிச்சென்றால் 10 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது தென்னேரி கிராமம். இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது. இவ்வூரிலுள்ள ஏரி, திரையனேரி என்று முற்காலத்தில் அழைக்கப்பெற்றது. ஏரியின் பெயரே மருவி இன்று தென்னேரி ஆனது.
கருவறையில் பெரிய வட்டவடிவ ஆவடையாருடன சுவாமி ஆபத்சகாயேஸ்வரர் காட்சி தருகிறார். தன்னை நாடி வருகின்ற தனது பக்தர்களின் துயர்களை துடைத்து ஆனந்த வாழ்வளிக்கிறார் ஆபத்சகாயேஸ்வரர். சுவாமி ஆபத்சகாயேஸ்வரர் மீது அஷ்டகந்தம் சாற்றிய ரட்சை வைத்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். ரட்சையை அணிந்து கொள்வதால் திருமணயோகமும்,பல நோய்களும் தீருவதாக ஐதீகம். எட்டுவகையான வாசனைப் பொருட்களின் கலவையே அஷ்டகந்தம் எனப்படுகிறது.கோரோசனை, வெண்சந்தனம்(அ)சந்தனம்(அ) அத்தர், பச்சைக்கற்பூரம், ஜவ்வாது , கறுப்பு அகில், புனுகு, கஸ்தூரி, குங்குமப்பூ ஆகியவை, அஷ்ட கந்தத்திலுள்ள வாசனைப் பொருட்களாகும்.
சுவாமிக்கு பிரதோஷத்தன்று வடைமாலை சாற்றப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்க, அதை உண்பவர்களுக்கு நோய்கள் தீருவதாகக் கூறுகின்றனர். அபிஷேக விபூதி பெற்று அதை நீரில் இட்டு உட்கொண்டு வந்தால் பலவிதமான நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
மூன்று பெண் உருவங்களுக்கு, வெறும் நான்கு கால்களை மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்ட வினோதமான சிற்பம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
நம் கோவில்கள், நம் முன்னோர்கள் கட்டிடக்கலையிலும், சிற்பக்கலையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் ஒரு தூணில், ஆறு அங்குல நீளம், ஆறு அங்குல அகலம் உள்ள ஒரு சதுர பரப்பளவில், மூன்று பெண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் நடுவில் இருக்கும் பெண் நம்மை நேராக பார்த்த நிலையிலும், மற்ற இரு பெண்களில் ஒருத்தி தனது உடலை வலது பக்கம் சாய்த்த நிலையிலும், மற்றொருத்தி இடது பக்கம் சாய்த்த நிலையிலும் காட்சியளிக்கின்றனர்.
இந்த சிற்பத்தில் வினோதம் என்னவென்றால், மூன்று பெண்களுக்கு ஆறு கால்கள் இன்றி, வெறும் நான்கு கால்களை கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள். நடுவில் இருக்கும் பெண்ணின் இரு கால்கள் ஆனது மற்ற இரு பெண்களுக்கும், பொதுவான கால் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் கற்பனைத் திறனும், அதை நுணுக்கமான சிறிய சிற்பமாக செதுக்கி இருக்கும் விதமும், நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கோத்பவ வலம்புரி விநாயகரின் தோற்றமானது அபூர்வமான ஒன்றாகும். இவர் சிவலிங்க உருவம் கொண்டு, அதில் நான்கடி உயர திருமேனியுடன், புடைப்புச் சிற்பமாக வலம் சுழித்த துதிக்கையுடன் காட்சி தருகிறார். அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இப்படி சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன கோவிலில் கனு உற்சவம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில் கனு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது, விவசாயிகள் தங்களது வயலில் புதியதாக விளைந்த காய்கறிகள், பழங்கள், கரும்பு, நெல் ஆகியவற்றை காமாட்சியம்மனுக்கு படைப்பதற்காக கொண்டு வருவார்கள். அவற்றைக் கொண்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்படும்.
கனு உற்சவத்தையொட்டி, மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். உற்சவர் காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதியுடன் கேடயத்தில் உலா வந்து கோவில் வளாகத்துக்குள் உள்ள கனு மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு தேவியர் மூவருக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கனு உற்சவம் என்பது பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலமுடன் வாழவும், உணவுத் தட்டுப்பாடு வராமல் மகிழ்ச்சி நிலவவும் வேண்டி காமாட்சி அம்மனுக்கு நடத்தப்படுகிறது. காய்கறிகள் மீது பிரியமானவள் காமாட்சி என்பதால் அம்மனுக்கு 'சாகம்பரி' என்ற பெயரும் உண்டு. எனவே கனு உற்சவத்தின்போது காய்கறிகள், பழங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்மன் சந்நிதிகளில் ஏராளமான மரக்கிளை, காய், கனிகளால் பரப்பி வைத்து அம்பிகையை அலங்காரம் செய்வர். இதற்கு ‘சாகம்பரி அலங்காரம்' என்று பெயர்.
சாகம்பரியைப் பற்றி ஆதிசங்கரர் தன்னுடைய முதல் நூலான கனகதாரா ஸ்தோத்திரத்தில் 'கீர்தேவதேதி'என்னும் பாடலில் "சாகம்பரீதி' எனக் குறிப்பிடுகின்றார்.
காஞ்சிப் பெரியவர் விரும்பிய சாகம்பரி அலங்காரத்திற்கு, ஏற்பாடு செய்த காமாட்சி அம்மன்
ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார். அங்கிருந்த சாஸ்திரியிடம், 'பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும். அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்' என்றார். இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!, என்று நினைத்த சாஸ்திரி, 'அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!' என்றார் பணிவுடன். காஞ்சிப் பெரியவர் அவரிடம்,'அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா'என்று சொல்லி விட்டார்.
அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது. பணியாளர்கள் விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே பெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. பொங்கலன்று கோவிலுக்கு வந்த பெரியவர் எங்கும் காய்கறி, பழத் தோரணம் இருப்பது கண்டு மகிழ்ந்தார்
அம்பிகையை சாகம்பரியாக தரிசித்த பெரியவர், பக்தர்களிடம், 'பொங்கலன்று சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம் உண்டாகும். இன்று தர்ப்பணம் செய்வது அவசியம். அம்பாளை சாகம்பரியாக தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். நாளை கோபூஜை செய்யுங்கள். நாளை மறுநாள் உடன்பிறந்தவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்'என்று சொல்லி ஆசியளித்தார்.

திருசோபுரம் சோபுரநாதர் கோவில்
தட்சிணாமூர்த்தியின் திருமேனியைத் தட்டினால் மரத்தை தட்டின ஒலி எழும் அதிசயம்
மஞ்சள் வஸ்திரத்திற்கு பதிலாக வித்தியாசமாக வெள்ளை வஸ்திரம் அணியும் தட்சிணாமூர்த்தி
கடலூர் – சிதம்பரம் சாலையில், 18 வது கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ.தூரத்தில் உள்ள தேவார தலம் திருச்சோபுரம். இறைவன் திருநாமம் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சோபுர நாயகி, தியாகவல்லியம்மை.கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி முதல் குலோத்துங்கனின் பட்டத்து மனைவியான தியாகவல்லியால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால், இத்தலம் தியாகவல்லி என்று பெயர் பெற்றது.
இத்தலத்து தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். மேலும் அவர், இத்தலத்தில் இசையின் வடிவமாக அருளுகிறார். கருங்கல்லாலான இவரது திருமேனியை தட்டிப் பார்த்தால், மரத்தை தட்டினால் எந்த ஓசை எழுமோ, அந்த ஓசை கேட்கிறது. இத்தகைய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதால், இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.
இசையில் வல்லமை பெற விரும்புபவர்கள், இசையின் வடிவமாக விளங்கும் இவருக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்
பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆச்சரியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
முன்னொரு காலத்தில், திருவண்ணாமலை கோவிலை முகலாய மன்னன் ஒருவன் கைப்பற்றினான். அப்போது ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், இந்த காளை மாடு, எங்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு கோபமுற்ற முகலாய மன்னன், அந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். .எங்கே உங்கள் ஈசன் வந்து இதை ஒன்று சேர்த்து உயிர் கொடுப்பாரா என்று ஏளனமாக வினவினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக, அவர்களிடம் வடக்கு திசையில் ஒருவன் ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான். வாலிபனை பார்த்த சில பக்தர்கள் இவன் காளை மாட்டுக்கு உயிர் கொடுப்பானா என்று சந்தேகப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் வாலிபன் மீது நம்பிக்கை கொண்ட சிவபக்தர்கள், அண்ணாமலையார் கோவிலில் நடந்ததை அவனிடம் விவரித்தார்கள்.
உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.
இதைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் அடைந்த முகலாய மன்னன், இந்த வாலிபனுக்கு இன்னும் சில போட்டிகள் வைக்க விரும்புகிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன என்றான். அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுப்படி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிச துண்டங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.
இதையும் முகலாய மன்னனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாலிபனுக்கு அடுத்த போட்டியாக ராஜ கோபுரத்தின் அருகே உள்ள பெரிய நந்தியை உயிர் பெற்று எழ வைக்கச் சொன்னான். அப்படி உயிர் பெற்றெழுந்த நந்தியை கால்களை மாற்றி அமர வைக்க வேண்டும் என்றும் சவால் விட்டான். இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
முகலாய மன்னனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறி திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. அன்று முதல் பெரிய நந்தி தனது வலது காலை மடித்தும் இடது காலை முன்வைத்தும் அமர்ந்துள்ளது.

தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
சிவபெருமான் பக்தனுக்காக வயலில் விவசாய வேலை பார்த்த தலம்
கடலூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் நீலாம்பிகை, ஒப்பிலா நாயகி.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவபெருமான் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். அவர்கள் தினமும் தாங்கள் உணவு அருந்துவதற்கு முன் யாராவது ஒருவருக்காவது உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக எவரும் அத் தம்பதியரின் வீட்டுக்கு செல்லாதபடி செய்துவிட்டார். அதனால், விவசாயி தன் வயலில் வேலை செய்யும் பணியாளர்கள் யாருக்காவது உணவு அளிக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் வயலுக்குச் சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. அப்போது, சிவபெருமான் முதியவர் வடிவம் தாங்கி அங்கே வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், 'நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் வயலில் எனக்கு ஏதாவது வேலை கொடுத்தாள், அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்' என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் வயலை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார்.
தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு வயலுக்குத் திரும்பினர். அப்போது, வயலில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நிலத்தை உழுத உடனேயே இத்தனை பயிர் விளைந்ததை கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி, சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் 'ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, இத்தலத்தில் சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.
சிவபெருமான், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். வயலில் வேலை செய்ததால் சிவபெருமான், 'விவசாயி' என்றும் பெயர் பெற்றார்.அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
நடராஜரின் தாண்டவத்திற்கு இசைக்கும் திருமால், பிரம்மா
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் நடராஜரின் திருவடிக்கு கீழே, திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். திருமாலும் பிரம்மாவும் இசைத்துக் கொண்டிருப்பதால், இவர்கள் இருவரையும் 'இசையமைப்பாளர்' என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொண்டால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.