காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கனு உற்சவம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில் கனு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது, விவசாயிகள் தங்களது வயலில் புதியதாக விளைந்த காய்கறிகள், பழங்கள், கரும்பு, நெல் ஆகியவற்றை காமாட்சியம்மனுக்கு படைப்பதற்காக கொண்டு வருவார்கள். அவற்றைக் கொண்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்படும்.

கனு உற்சவத்தையொட்டி, மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். உற்சவர் காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதியுடன் கேடயத்தில் உலா வந்து கோவில் வளாகத்துக்குள் உள்ள கனு மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு தேவியர் மூவருக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

கனு உற்சவம் என்பது பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலமுடன் வாழவும், உணவுத் தட்டுப்பாடு வராமல் மகிழ்ச்சி நிலவவும் வேண்டி காமாட்சி அம்மனுக்கு நடத்தப்படுகிறது. காய்கறிகள் மீது பிரியமானவள் காமாட்சி என்பதால் அம்மனுக்கு 'சாகம்பரி' என்ற பெயரும் உண்டு. எனவே கனு உற்சவத்தின்போது காய்கறிகள், பழங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்மன் சந்நிதிகளில் ஏராளமான மரக்கிளை, காய், கனிகளால் பரப்பி வைத்து அம்பிகையை அலங்காரம் செய்வர். இதற்கு ‘சாகம்பரி அலங்காரம்' என்று பெயர்.

சாகம்பரியைப் பற்றி ஆதிசங்கரர் தன்னுடைய முதல் நூலான கனகதாரா ஸ்தோத்திரத்தில் 'கீர்தேவதேதி'என்னும் பாடலில் "சாகம்பரீதி' எனக் குறிப்பிடுகின்றார்.

காஞ்சிப் பெரியவர் விரும்பிய சாகம்பரி அலங்காரத்திற்கு, ஏற்பாடு செய்த காமாட்சி அம்மன்

ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார். அங்கிருந்த சாஸ்திரியிடம், 'பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும். அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்' என்றார். இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!, என்று நினைத்த சாஸ்திரி, 'அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!' என்றார் பணிவுடன். காஞ்சிப் பெரியவர் அவரிடம்,'அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா'என்று சொல்லி விட்டார்.

அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது. பணியாளர்கள் விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே பெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. பொங்கலன்று கோவிலுக்கு வந்த பெரியவர் எங்கும் காய்கறி, பழத் தோரணம் இருப்பது கண்டு மகிழ்ந்தார்

அம்பிகையை சாகம்பரியாக தரிசித்த பெரியவர், பக்தர்களிடம், 'பொங்கலன்று சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம் உண்டாகும். இன்று தர்ப்பணம் செய்வது அவசியம். அம்பாளை சாகம்பரியாக தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். நாளை கோபூஜை செய்யுங்கள். நாளை மறுநாள் உடன்பிறந்தவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று சொல்லி ஆசியளித்தார்.

உற்சவர் காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதி

உற்சவர் காமாட்சி அம்மனுக்கு குங்குமப்பூ, பிஸ்தா, பாதாம் மாலை

சாகம்பரி அலங்காரத்தில் மற்றொரு அம்மன்

Previous
Previous

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்

Next
Next

திருசோபுரம் சோபுரநாதர் கோவில்