திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில்
பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருக்கும் திவ்யதேசம்
ஆழ்வார் சொன்னதைக் கேட்டு, தனது பாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு கிளம்பிய பெருமாள்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 51 ஆவது திவ்ய தேசம், சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கோமளவல்லித் தாயார். பொதுவாக பெருமாள் கோவில்களில் சயனக் கோலத்தில் இருக்கும் பெருமாள், இடமிருந்து வலமாக படுத்திருப்பார். மற்ற கோவில்களில் இருப்பதை போலவே ஆரம்பத்தில் இக்கோவிலிலும், பெருமாள் இடமிருந்து வலமாக தான் சயனித்திருந்தார். பின்னர் அவர் தனது இடது கையை தலைக்கு வைத்துக்கொண்டு, வலமிருந்து இடமாக வித்தியாசமான சயனக் கோலத்தில் காட்சி அளிக்க தொடங்கினார். இதன் பின்னணியில், ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
பன்னிரண்டு ஆழ்வார்களில், நான்காவது ஆழ்வாரான திருமழிசையாழ்வார், திருவெக்கா பெருமாள் கோவிலில் தனது சீடன் கணிக்கண்ணனுடன் சேவை செய்து வந்தார். இவர்களின் ஆசிரமத்தை, ஒரு மூதாட்டி நாள்தோறும் தூய்மை செய்து வந்தார் . தனக்குச் சேவகம் செய்த மூதாட்டிக்கு அவள் வேண்டுகோள்படி, இளமை திரும்பப் பெருமாளிடம் திருமழிசையாழ்வார் வேண்டினார். அவ்வாறே பெருமாளும் அருள, மூதாட்டி இளமையைத் தி்ரும்பப் பெற்றார்.
இச்செய்தியை அறிந்த காஞ்சி மன்னன், தானும் முதுமை நீங்கி இளமை திரும்ப்ப் பெற விரும்பினான். மன்னன் கணிக்கண்ணனிடம், 'தனக்கும் இளமை திரும்புமாறு உங்கள் குருநாதரிடம் சொல்லவேண்டும்' என்று கேட்டார். கணிக்கண்ணனோ, 'குருவின் கருணையை சேவையின் மூலம் பெறலாமே ஒழிய, உத்தரவின் வழியாகப் பெறமுடியாது' என்று சொல்லி மறுத்தார். மன்னன் கோபம் கொண்டு கணிக்கண்ணனை நாடு கடத்துமாறு உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் மனம் வருந்திய கணிக்கண்ணன் தன் குருவிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தார். தன் சேவையைத் தொடர முடியாத நிலையைச் சொல்லி, அந்த ஊரிலிருந்து வெளியேறுவதாகக் கூறினார். இதைக் கேட்ட திருமழிசையாழ்வார், 'வா இருவரும் சென்று பெருமாளிடம் முறையிடுவோம்' என்று சொல்லிக் கோவிலுக்குச் சென்றனர். அங்கு தன் மனக் குறை வெளிப்படுத்தி, ஆழ்வார் ஒரு பாசுரம் பாடினார்
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா -துணிவுடைய
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுந்தன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள், என்று பெருமாளுக்கு கட்டளை போட்டுவிட்டு புறப்பட்டார் திருமழிசையாழ்வார். உடனே ஆழ்வார் சொன்னவண்ணம், பெருமாளும் தனது பாம்பு படுக்கையை சுற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார் அவரோடு, பெருமாள் மார்பிலே வாசம் செய்யும் திருமகளும் காஞ்சிமாநகரை விட்டு நீங்கினாள். காஞ்சிபுரம் தன் களையை இழந்தது.
காஞ்சிபுரத்தை விட்டு கிளம்பிச் சென்ற ஆழ்வார், கணிகண்ணன், பெருமாள், திருமகள் ஆகியோர் ஒரு நாள் இரவு தங்கியிருந்த இடம் 'ஓர் இரவு இருக்கை' என அழைக்கப்பட்டது. பின்னாளில் அது மருவி 'ஓரிக்கை' என இந்நாளில் அழைக்கப்படுகிறது.
மறுநாள் பூஜை செய்ய வந்த அர்ச்சகர்கள், கருவறையில் பெருமாள் இல்லாதது கண்டு வருந்தினர். மன்னனிடம் இதைப் பற்றி முறையிட்டனர். காரணத்தையறிந்த மன்னன், தவறையுணர்ந்து ஆழ்வாரைத் தஞ்சம் அடைந்து, சீடனுக்கான நாடு கடத்தும் ஆணையையும் திரும்பப் பெற்றான். ஆழ்வாரும் அவனை மன்னித்து,
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள், என்று பெருமாளை பாடினார்.
திருமழிசையாழ்வார் தன் மேல் வைத்திருந்த பக்திக்கும், அவர் பாடும் பாசுரங்களின் மேல் வைத்திருந்த பிரியத்திற்கும் கட்டுப்பட்டு, உடனே பெருமாள் தன் பாம்புப் பாயை சுருட்டிக் கொண்டு ஆழ்வாருடன் திருவெக்கா வந்து, மீண்டும் படுத்துக்கொண்டார். இப்படி ஆழ்வார் சொன்னபடி பெருமாள் நடந்து கொண்டதால் தான், அவருக்கு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
பெருமாள் அவசரமாக திருவெக்கா வந்து மீண்டும் படுத்ததினால்தான், அவர் வலமிருந்து இடமாக படுத்துக் கொண்டார். இப்படி அவர் இக்கோவிலில், திருமழிசை ஆழ்வார் தன்னை புகழ்ந்து பாடுவதை கேட்பதற்காக, வலமிருந்து இடமாக சயனித்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். பெருமாளின் திருவடிகளை தொழுதபடி சரஸ்வதி தேவி அமர்ந்திருப்பதும் இக்கோவிலின் தனித்துவமான சிறப்பம்சமாகும்.