பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்
பெருமாளுக்கு புதுமையான திருநாமம் உடைய தலம்
பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் மகிழ்ச்சி இருமடங்காகும் தலம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், குரு ஸ்தலமான ஆலங்குடியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்.
கருவறையில், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்து பெருமாளின் திருநாமம் வேறு எந்த தலத்திலும் இல்லாத புதுமையான ஒன்று. இத்தலத்து பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்கள் உள்ளம் மகிழ்வதால், இவருக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இத்தல பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் அவர்களின் மகிழ்ச்சி இருமடங்காகும் என்பது ஐதீகம்.
பெருமாளின் இந்த திருநாமத்துக்கு பின்னணியில் ராமாயண நிகழ்ச்சி ஒன்று உள்ளது. ராவணன் சீதையை கடத்தி சென்றபோது, தன் கணவனுக்கு தான் சென்ற வழி தெரிய வேண்டும் என்று சீதாதேவி, தான் அணிந்திருந்த அணிகலங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பூமியில் போட்டுக் கொண்டே போனாளாம். அப்படி அவள் அணிந்திருந்த பாடகம் எனப்படும் காலில் அணியக் கூடிய கொலுசை ஓரிடத்தில் கழற்றிப் போட்டாள். சீதையைத் தேடி புறப்பட்ட ராமனும் லட்சுமணனும் சீதா தேவி கழற்றி எறிந்த அணிகலங்களை ஆங்காங்கே தரையில் கண்டன்ர். ஒரு கிராமத்தில் சீதாதேவியின் பாடகம் எனப்படும் அணிகலன் தரையில் கிடப்பதைப் பார்த்த ராமபிரான், தம்பி லட்சுமணா… இந்த அணிகலனைப் பார். இது யாருடையது? என்று கேட்டபோது, லட்சுமணன் முகம் மலர்ந்து, இது என் அண்ணியாருடையது. அவர் தன் திருப்பாதங்களில் இந்த பாடகங்களை அணிந்திருப்பார். இந்தக் காட்சியை நான் தரிசித்திருக்கிறேன் என்று உளம் மகிழ்ந்து சொன்னானாம். அதுவரை தரையில் விழுந்து கிடந்த மற்ற ஆபரணங்களை ராமபிரான் காட்டிக் கேட்டபோது, இது அண்ணியாருடையதா என்று எனக்குத் தெரியாது என்றே சொல்லி வந்த லட்சுமணன், காலில் அணியும் பாடகத்தைக் கண்டு, இது நிச்சயம் அண்ணியார் அணியும் அணிகலன்தான் என்று உறுதிபடச் சொன்னது, ராமனுக்குப் பெருத்த மகிழ்வைத் தந்ததாம். அண்ணியாரை, ஒரு தெய்வமாக எந்த அளவுக்கு லட்சுமணன் தொழுது வந்திருக்கிறான் என்கிற பக்தி உணர்வு அப்போது வெளிப்பட்டது. பாடகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார் ராமபிரான். இதனால் இந்த ஊருக்கு பாடகப்பதி என்றும் (பின்னாளில் பாடகச்சேரி), இங்கு அருள் பாலிக்கும் பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்கிற திருநாமமும் வந்தது.