நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோவில்

தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெறும் விசேடமான திருமாங்கல்யச் சரடு உற்சவம்

சென்னை, நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நவநீதகிருஷ்ணன் கோயில். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நங்கையாகிய லட்சுமி தோன்றிய இந்த இடம், நங்கை நல்லூராகி இன்று நங்கநல்லூராய் திரிந்து உள்ளது. இந்தத் தலம், பரசுராமரின்‌ தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். தூண் வடிவில் உள்ள கருவறையில், மூலவர் லட்சுமி நரசிம்மர், ஐந்தடி உயரத் திருமேனியுடன், தன் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தால் மடியில் உள்ள லட்சுமியை அணைத்தபடியும் காட்சி தருகிறார். வடக்குபுற சந்நிதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடியபடி அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் தூண் வடிவில் உள்ள கருவறையில் தாயாருடன் காட்சி தருகிறார். திருக்கரங்களில் சங்கு, சக்கரத்துடன், ஒரு கை அபய ஹஸ்தம் காட்ட, மற்றொரு கை ஸ்ரீ லக்ஷ்மி தேவியை அணைத்துக் கொண்டிருக்க, எழிலே உருவாக, கருணை பொங்கும் முகத்துடன், கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும், தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெறும், திருமாங்கல்யச் சரடு உற்சவம் எனும் திருக்கல்யாணம் விசேடமானது. அன்றைய தினம் கல்யாண கோலத்தில் தாயாரும், எம்பெருமானும் காட்சி தருகின்றனர். பத்தாயிரத்திற்கும் மேலான திருமாங்கல்யச் சரடுகள் தாயாருக்கு சாற்றப்பட்டு, பின்னர் அவை சுமங்கலிகளுக்கும், கன்னிப் பெண்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றை அணிவதன் மூலம் திருமண பந்தம் நீண்டு வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பதும், மணமாகாத பெண்களுக்கு உடனடியாக வரன் கூடும் என்பதும் ஐதீகம். இந்த நிகழ்வு வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒரு சிறப்பான நிகழ்வாகும்.

அமெரிக்க ஆஞ்சநேயர்

இங்குள்ள ராமர் சந்நிதி முன் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு ‘அமெரிக்க ஆஞ்சநேயர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. வெளிநாட்டுக்குச் செல்வதில் தடை, பிரச்சனைகள் உள்ளவர்கள் இவரை வேண்டிக் கொண்டு வழிபட்டால் அந்தத் தடையை நீக்கித் தருகிறார் என்பது இவருக்கு இருக்கும் சிறப்பு.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

யோக நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்தபடி இருக்கும் அபூர்வ காட்சி (30.08.2024)

https://www.alayathuligal.com/blog/nanganallur30082024?rq

Previous
Previous

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்

Next
Next

அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில்