மருதூர் நவநீத கிருஷ்ணர் கோவில்
குழந்தை வரம் அளித்திடும் நவநீத கிருஷ்ணர்
நெல்லையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் உள்ளது மருதூர். இங்கு புகழ் பெற்ற நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது. மருத மரங்கள் இப்பகுதியில் அதிகம் இருப்பதால் இந்த ஊர் மருதூர் ஆனது. மருதூர் அணைக்கட்டின் அருகே தாமிரபரணி கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. கருவறையில் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார்.
கண்ணன் வெண்ணை திருடி உண்டதால் கோபம் டைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப்போட்டாள். அந்த உரலை கண்ணன் இழுத்தப்படி சென்றான். அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் நளசுன், மணிக்ரீவன் சாபவிமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர கேட்டுக் கொண்டார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மருதூரில் நவநீத கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரம் அளித்திடுவார் என்பது ஐதீகம்.
பெருநா சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன் வேலை தலைகீழாக பிடித்திருக்கும் தலம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருநா என்ற ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், ஆறடி உயரத்திலான முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. இப்படி, மற்ற முருகன் கோவில்களில் இருந்து வேறுபட்டு, முருகன் வேலை தலைகீழாக பிடித்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
முருகன் வேலை தலைகீழாக பிடித்து இருப்பதற்கான காரணம்
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கப் போருக்குச் செல்லும் போது முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை சிவபெருமான், அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார். முருகப்பெருமான் தாரகாசுரனுடன் போரிடும் போது முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான். அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுஞ்ச மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது. தாரகாசுரனை அழித்த இரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த இரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலைத், தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார்.முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர்.சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர்.
பிரார்த்தனை
இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.
பள்ளூர் அரசாலை அம்மன் என்னும் வாராகி அம்மன் கோவில்
வரம் தரும் பள்ளூர் வாராகி அம்மன்
பிராமி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, வாராகி எனும் சப்த மாதா்களில், வாராகி அம்மன் ஐந்தாமானவள். வாராகி அம்மன், பார்வதி தேவியின் அவதாரம் ஆவாள். மனித உடலும், வராக (பன்றி) முகமும் கொண்டவள். சப்த மாதர்களில் வாராகியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சோழர்களின் வெற்றி தெய்வம் வராஹி.தஞ்சை பெரிய கோவிலில் தனி ஆலயமுள்ளது .
காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன் கோவில் உள்ளது. மிகவும் புராதனமான வாராகி அம்மன் கோவில் இது. இங்கு தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் வாராகி அம்மன் அருள்கிறாள். பெரும்பாலான அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அபூர்வமாக சில அம்மன் கோவில்கள் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். வழக்கத்திற்கு மாறாக அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவில்கள், பரிகார கோவில்கள் ஆகும். இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் அளப்பரிய பலன்களை அள்ளித் தரக்கூடியவை.
வளர் பிறை மற்றும் தேய் பிறை பஞ்சமி திதி வழிபாடு
பள்ளூர் வாராகி அம்மன் சிறந்த வரப் பிரசாதி. வளர் பிறை மற்றும் தேய் பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மனுக்கு, வாழை இலைபோட்டு அதில் பச்சரிசி சிறிது பரப்பி ,தேங்காய் உடைத்து அதன் இரு மூடியிலும் தூய பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர நம் கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். வாராஹிக்கு பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் ஆகியவற்றைப் படைத்து வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம். மாதுளை முத்துக்களை தேனில் சிறிது ஊறவைத்து, அதனை வாராகி அம்மனுக்கு வைவேத்தியம் செய்து பஞ்சமி நாட்களின் பின்னிரவில் (இரவு 11 மணிக்கு மணிக்கு மேல்) அல்லது வாராகி நவராத்திரி நாட்களின் பத்தாவது நாளான நிறைவு நாள் வரையிலும் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வாராகி அம்மனுக்கு செம்பருத்தி, சிவப்பு அரளி, மரிக்கொழுந்து மாலை சூட்டி வழிபாடு செய்து வரலாம். இந்த வழிபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம்.
பில்லி, செய்வினை, மன நோய், மாந்திரீக பாதிப்பினால் உண்டான உடல்நோய்கள், தீராத எதிரி தொல்லை, முற்பிறவி கர்ம வினைகளால் உண்டான வறுமை , வழக்குகள், காரிய தடைகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வாராகி அம்மனின் அம்சமான திருக்கடையூர் அபிராமி அம்மன்
திருக்கடையூர் அபிராமி அம்மன் வாராகி அம்சமே. இதனை அபிராமிபட்டர், அபிராமி அந்தாதியில் குறித்து உள்ளார்.
''நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’
என அபிராமிபட்டர் திருக்கடையூர் அபிராமியை வாராகி திருக்கோலத்தில் தரிசித்ததை தமது அபிராமி அந்தாதியில் பதிந்து உள்ளார்.
அமிர்தபுரி நவக்கிரக விநாயகர் கோவில்
விநாயகர் திருமேனியில் நவக்கிரகங்கள்
சென்னை திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டுச்சாலையில் ( திருமலைவையாவூர்,வேடந்தாங்கல் செல்லும் வழி) 4 கி.மீ. தொலைவில், அமிர்தபுரி என்ற ஊரில் நவக்கிரக விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் சுமார் 8 அடி உயரமுள்ள பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். . இந்த விநாயகப் பெருமானின் உடலமைப்பில் நவகிரகங்களும் இடம் பெற்றுள்ளது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். விநாயகப் பெருமானின் நெற்றிப் பகுதியில் சூரிய பகவான், தலைப்பகுதியில் குரு பகவான், வயிற்றுப்பகுதியில் சந்திர பகவான், வலதுமேல் கரத்தில் சனி பகவான், கீழ் கரத்தில் புத பகவான், இடது மேல் கரத்தில் ராகு பகவான், கீழ் கரத்தில் சுக்கிர பகவான், வலது காலில் செவ்வாய் பகவான், இடது காலில் கேது பகவான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
நவக்கிரகங்களைப் பூஜித்த பலன் விநாயகரை வேண்டினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும், நவக்கிரகத் தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நவகிரக விநாயகருக்குப் பின்புறம் ஸ்ரீயோக நரசிம்மர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான சந்நிதிகள் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை எனலாம்.
ராமேசுவரம் அபய(வாலறுந்த) ஆஞ்சநேயர் கோவில்
பக்தர்களின் பயத்தைப் போக்கும் வாலறுந்த ஆஞ்சநேயர்
ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அபய ஆஞ்சநேயர் கோயில். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் இது. பக்தர்களின் பயத்தைப் போக்கி காத்தருள்பவர் என்பதால் அபய ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றார். இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வால் அறுந்த ஆஞ்சநேயர் என்று இரண்டு மூர்த்திகள் உள்ளனர். சிவலிங்கத்தை உடைக்க முயன்று வால் அறுந்ததால் இங்குள்ள ஆஞ்சநேயர் வால் அறுந்த கோலத்திலேயே காட்சியளிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் கடல் மணலில் உருவான ஒரு சுயம்பு ஆஞ்சநேயர் என்பது கூடுதல் சிறப்பு. அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே கோடி ராமாரக்ஷச மந்திர எழுத்துகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது.
ராவணனை வென்று சீதையை மீட்டு வந்த ராமபிரானுக்கு தோஷம் பிடித்தது, இந்த தோஷம் நீங்க ராமர் அக்னி தீர்த்தம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய லிங்கம் எடுத்து வர, ஆஞ்சநேயர் கைலாயம் சென்றார். கைலாயம் சென்ற ஆஞ்சநேயர் திரும்பி வர தாமதமானதால் சீதாப்பிராட்டி மணலினால் ஆன லிங்கம் பிடித்து பூஜை செய்து வழிபட்டனர். அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர் அதனை கண்டு கோபமுற்றார். கோபமடைந்த ஆஞ்சநேயர் தனது வாலால் லிங்கத்தை சுற்றி அதனை பெயர்த்து எடுக்க முற்பட்டார், அதனால் அவரது வால் அருந்ததுதான் மிச்சம். லிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை. தான் செய்த தவறை உணர்ந்த ஆஞ்சநேயர் சிவ அபச்சாரம் செய்த குற்றம் நீங்க இவ்விடத்தில் தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டார். இதனால் இந்த ஆலயத்தின் ஆஞ்சநேயர் வாலறுந்த நிலையில் மூலவராக காட்சி அளிக்கிறார். இதற்காக வாலறுந்த ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆஞ்சநேயர் உருவாக்கிய 'அனுமன் தீரத்தம்' கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் கடல் மண்ணில் உருவான சுயம்பு மூர்த்தியாக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.
பிரார்த்தனை
இக்கோயிலில் இருக்கும் தல விருட்சமான அத்தி மரத்தில் இளநீரை கட்டி ஆஞ்சநேயரை வேண்டிக்கொள்கின்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது. உக்கிரமடைந்து சிவலிங்கத்தை உடைக்க முயன்ற ஆஞ்சநேயர் என்பதால் இவரை குளிர்விக்கும் விதமாக இவ்வாறு இளநீர் கட்டி வைத்து வேண்டிக்கொள்கின்றனர். குழந்தை பாக்கியம், பயம் மற்றும் மனக்குழப்பம் நீங்க, ஆபத்துகளிலிருந்து காத்து கொள்ள போன்ற பல காரணங்களுக்காக பக்தர்கள் இங்கு வழிபட்டு பலனடைகின்றனர்.
பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
சுவாமி மலையை அடுத்து முருகன் குருவாக இருந்து உபதேசம் செய்த தலம்
மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். அப்பர் பாடிய தேவார வைப்புத்தலம் இது. முருகன் சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம் செய்தது போல், இத்தலத்தில் பிரம்ம தேவனுக்கும், மயிலுக்கும் உபதேசம் செய்து அருளினார்.
பொதுவாக சிவன் கோவில்களில் சிவன் சன்னதிக்கு பின்புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு தனி சன்னதி இருக்கும் ஆனால் இந்தவத்தில் முருகன் குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வட மேற்கு திசையில் தனி சன்னதியில் குபேரலிங்கேஸ்வரரும் ,ஆனந்தவல்லி அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுகிறார்கள். இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், ஆறு முகங்களுடனும், 12 கைகளுடனும் வள்ளி தெய்வயானை சமேதராக எழுந்தருளி இருக்கிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்குள்ள மூலஸ்தானத்தில், முருகனின் வாகனமான மயிலின் தலைப்பகுதி இடது பக்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். இத்தல முருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறவிக்கடன் தீரும் என்பது ஐதீகம்.
வைகாசி விசாகத்தின் சிறப்புகள்
முருகக் கடவுள் அவதரித்த வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதரித்த நாளாகும். விசாகம் என்றால் ஆறு நட்சத்திரங்கள். ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கிணைந்திருப்பதால், ஆறு முகங்களுடன் முருகன் தோன்றியதாக ஐதீகம். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகக் கடவுள். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான்.
பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருமழப்பாடி என்ற ஊரில் சிவன் திருநடனம் ஆடியது வைகாசி விசாகத்தினத்திலே.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரம் அவதரித்ததும் வைகாசி விசாகத்தன்று தான்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.
இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.
தர்மத்திற்கு அதிபதியான எமதர்மராஜன் அவதரித்தது ஓர் வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமாரியம்மனுக்கு ஆராட்டு விழா இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
கருடசேவையின் போது இராபர்ட் கிளைவின் ஆணவத்தை அடக்கிய வரதராஜப் பெருமாள்
வைணவத்தில் கோவில் என்றால் அது திருவரங்கம், மலை என்றால் திருமலை. பெருமாள் கோவில் என்றால் திருக்கச்சி என்பது சிறப்பு. ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு உண்டு, திருமலையிலே ரதோற்சவம், திருவரங்கத்தில் குதிரை வாகன ஒய்யாளி, திருமாலிருஞ்சோலையிலே குதிரை வாகனம் சிறப்பு, திருக்கச்சியில் வரதருக்கு கருட சேவை சிறப்பு.
காஞ்சிபுரம் நகரில் வருடத்திற்கு மூன்று முறை கருட சேவை கொண்டாடப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி மாதம் பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய விழாக்களின்போது கொண்டாடப்படுகிறது.
தனது யாகத்தில் தோன்றிய ஸ்ரீமந்நாராயண மூர்த்திக்கு பிரம்மனே உற்சவம் நடத்தியதாகவும், அதன் வழியாக வருடாவருடம் வைகாசி பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேதாந்த தேசிகரை பெருமாள் வைகுந்தத்திற்கு அழைத்தபோது, இங்கு காஞ்சியில் மிகவும் கோலாகலமாக கருட சேவை நடைபெறுவது போல வைகுந்தத்தில் நடைபெறாதே என்று காஞ்சியிலேயே இருக்கின்றேன் என்று பதிலிறுத்தாராம்.
15ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவி காளமேகம் அவர்கள் இந்த அத்தி வரதனின் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவையின் போது ஓளி மிக்க கருடன் மீது பொன் வண்ணத் திருமேனியுடன் அத்திவரதன் திருவீதி வலம் வரும் அழகைக் கண்டு இகழ்வது போல் புகழும் நிந்தாஸ்துதி வகையில் பாடியுள்ளார்.
இராபர்ட் கிளைவ் (1725 -1774) என்னும் ஆங்கில அதிகாரி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக காரணமாக இருந்தவர். காஞ்சிபுரத்தில் ஒரு கருடசேவையின் போது வரதராஜப் பெருமாள், இராபர்ட் கிளைவின் ஆணவத்தை நீக்கி தன் பக்தனாக்கிய நிகழ்வு மிகவும் சுவையானது. ஒரு வருடம், வரதராஜப் பெருமாள் கருடனில் ஆரோகணித்து பக்தருக்கு அருளிக்கொண்டு பவனி வரும் போது குதிரையில் வந்த இராபர்ட் கிளைவ், பவனியை நிறுத்துமாறு ஆணையிட்டான். அதற்கு பட்டர்கள் வெயில் அதிகமாக உள்ளதால் பெருமாளுக்கு ஆகாது. அவர் உடனடியாக திருக்கோவிலுக்கு திரும்ப வேண்டும் என்று பதிலிறுத்தனர். இதைக் கேட்ட இராபர்ட் கிளைவ், எள்ளி நகையாடினான். இது ஒரு சிலை, இதற்கு என்ன வெயில் என்று பரிகாசம் செய்தான். கோபம் கொண்ட ஒரு பட்டர் அவனிடமிருந்து ஒரு துணியைப் பெற்று பெருமாளின் திருமேனியை ஒற்றி அவனிடம் திருப்பித் தந்தார். சொத சொத என்று பெருமாளின் வியர்வையால் நனைந்த அந்த துணியைத் தொட்ட இராபர்ட் கிளைவ், மின்னல் தாக்கியது போல் அதிர்ந்தான். அவன் மனம் மாறியது. பெருமாளின் பக்தனானான். பெருமாளுக்கு ஒரு விலையுயர்ந்த மகர கண்டிகையை சமர்ப்பணம் செய்து வணங்கினான். இன்றும் இந்த மகரகண்டி பெருமாளுக்கு சிறப்பு நாட்களில் அணிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு வைகாசி விசாக கருடசேவை 22.5.2024 புதன்கிழமையன்று நடைபெறுகின்றது.
திருவாலி அழகிய சிங்கர் கோவில்
பத்ரிகாசிரமத்துக்கு இணையான திவ்ய தேசம்
108 திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலி அழகிய சிங்கர் கோவில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோவில் ஆகியன இரட்டைத் தலங்களாக, (ஒரே திவ்ய தேசமாக) 34-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகின்றன. இவ்விரு கோவில்களும் ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகின்றன.
மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
நரசிம்ம அவதாரம் எடுத்த திருமாலுக்கு இரணியனை வதம் செய்த பிறகும் கோபம் தணியவில்லை. மகாலட்சுமி, அவரின் தொடையில் சென்று அமர்ந்ததும் நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்தமானார். மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த கோலத்தில் நரசிம்ம பெருமாள், அழகிய சிங்கர் என்ற திருநாமத்துடன் காட்சி அளிக்கிறார். பெரும்பாலான நரசிம்மர் கோவில்களில் பெருமாளின் இடது புறத்தில் தான் லட்சுமி அமர்ந்திருக்கும் தோற்றம் இருக்கும். ஆனால் மிக அரிதாக இந்த தலத்தில், மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த காரணத்தால், இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. லட்சுமியுடன் நரசிம்மர் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும்.
பத்ரிநாத்தில் பெருமாளே குருவாகவும், தானே சீடனாகவும் இருந்து (நாராயணனாகவும், நரநாராயணனாகவும்) திருமந்திரத்தை உபதேசித்தார். பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. மகாலட்சுமி பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது, திருமங்கை மன்னை பெருமாளை வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கை மன்னனுக்கு காதில் அஷ்டாட்சர மந்திரத்தை ஓதி, உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில், திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெரும் விழா நடக்கின்றது.
கோடகநல்லூர் கைலாசநாதசுவாமி கோவில்
செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை நீங்க நந்திக்கு விரலி மஞ்சள் மாலை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கோடகநல்லூரில் அமைந்துள்ளது கயிலாயநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சிவகாமி. தாமிரபரணி கரையில் அமைந்துள்ள நவ கயிலாய தலங்களில் மூன்றாவது கயிலாயத் தலமாக கோடகநல்லூர் கயிலாயநாதர் கோவில் விளங்குகிறது. . ஆதிசங்கரர் இவ்வூரை தட்சிண சிருங்கேரி என்று புகழ்ந்துரைக்கிறார். கார்க்கோடகன் என்னும் பாம்பு இத்தல இறைவனை வழிபட்டு முக்தி அடைந்தது. அதனால் கார்கோடக க்ஷேத்ரம் என்றும் கோடகனூர் என்றும் இந்தத் தலம் அழைக்கப்படுகிறது.
நந்தியம்பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறும் தலம்
இக்கோவிலில் கொடிமரம், கோபுரம் ஆகியவை கிடையாது. இந்த ஆலயத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும். ஜாதகத்தில் செவ்வாய் தசை நடைபெறும்போது இக்கோயிலுக்கு வந்து வழிபடுவது நற்பலன்கள் நடைபெற உதவுகிறது. இந்த கயிலாயநாதர் கோவிலில் அங்காரகன் சிவனை வழிபட்டதால் இது செவ்வாய் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள நந்திக்கு செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், 58 விரலி மஞ்சளை தாலிக்கயிற்றில் கட்டி மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள்.
தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
சிற்பிகளின் கனவு என்று கருதப்படும் கோவில்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் ஒரு அரிய விருந்தாகும் ஐராவதேசுவரர் கோவில். கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோவிலே ஐராவதேசுவரர் கோவிலாகும். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்குகின்றது.
நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்
தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியது தான், இக்கோவில். இருப்பினும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், வெண்கல வார்ப்பு இவையனைத்தும் இந்த கோவில் சோழ வம்சத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழம், முழங்கை பிறகு எட்டு வகையிலான எட்டு தாளம், நவ தாளம், தச தாளம் என எல்லாவகை அளவுகளிலும் சிற்பங்களைக் கொண்ட அதிசய கோவில் இது. சோழர்களின் போர் முறை, சிற்பம், ஆடல், கட்டுமானம், பக்தி, கட்டடம், வானவியல், ஐதீகம், புராணங்கள், சிவதத்துவம் என அனைத்தையும் சிற்பங்களாக தன்னுள் வைத்திருக்கும் பிரமாண்ட ஆலயம் இது. அடிக்கு 1000 சிற்பங்கள் என்ற புகழ் மொழியையும் கொண்ட கோவில் இது.
இக்கோவிலை, கோவில் என்று சொல்வதை விட சிற்பக் கலைக்கூடம் என்று சொல்லுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களைக் கொண்ட அபூர்வ கோவில் இது. சிற்பிகள் தங்கள் திறமை முழுவதையும் காண்பித்து இந்த கோவில் தலத்தின் உள்ளும், புறமும் நிறைய சிற்பங்கள் படைத்துள்ளனர். தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோவில் கொண்டுள்ளது.
இசைப் படிகள்
நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. சப்த ஸ்வரங்களை எழுப்பும் இந்த படிகள் மட்டுமின்றி, அங்கு இருக்கும் தூண்களும் தட்டும் போது, சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. இத்தூண்கள் வெவ்வேறு கனங்களில் இருக்கின்றன.
யானைகளும், குதிரைகளும் இழுத்துச் செல்லும் தேர் போன்ற மண்டபம்
ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும், குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில், யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மற்ற கோவில்களில் காணப்படாத ஒரு சில சிற்பங்கள் இங்கு வடிவமைக்க பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோவில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
வெளிச் சுவர் சிற்பங்கள்
கோவிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவன், குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் ஆகும்.
வல்லுனர்களால், 'சிற்பிகளின் கனவு' என்று கருதப்படும் இந்த கோவில், சிற்பக் கலைஞர்களுக்கும், சிற்பக் கலை ரசிகர்களுக்கும் ஒரு அரிய விருந்தாகும்.
திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோவில்
ருத்ராட்ச மாலையணிந்து காட்சி தரும் சிவபக்த ஆஞ்சநேயர்
மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குரக்குக்கா.இறைவன் திருநாமம் குந்தளேசுவரர். இறைவியின் திருநாமம் குந்தளநாயகி.
ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. அவருடைய திருநாமம் சிவபக்த ஆஞ்சநேயர். இந்தத் திருநாமம் உடைய ஆஞ்சநேயர் வேறு எங்கும் கிடையாது. மூலவர் குந்தளேசுவரர் சன்னதி எதிரில் கூப்பிய கரங்களுடன் ருத்ராட்ச மாலையணிந்து அடக்கமே உருவாக ஆஞ்சனேயர் காட்சி யளிக்கிறார். திருமால் ராம அவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர், சிவஅம்சம் ஆகிறார் அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை. 'சிவஆஞ்சநேயர்' என்றும் 'சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள்.
பிரார்த்தனை
இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்
அர்த்தநாரீசுவரர் மூலவராக இருக்கும் தேவாரத் தலம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில் மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். திருச்செங்கோடு என்பதற்கு 'அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை' என்றும், 'செங்குத்தான மலை' என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது. இம்மலை, ஒருபுறம் இருந்து பார்த்தால் ஆண் போன்ற தோற்றமும், வேறு ஒரு புறம் இருந்து பார்த்தால் பெண் போன்ற தோற்றமும் அளிப்பது சிறப்பாகும். 2000 ஆண்டுகள் பழமையான இம்மலை கோவிலுக்கு செல்ல 1200 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உண்டு. கொங்கு நாட்டின் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
கருவறையில் மூலவராகிய அர்த்தநாரீசுவரர், ஆண்பாதி பெண்பாதி வடிவம் கொண்டு மாதொருபாகனாகக் காட்சியளிக்கிறார். இப்படி சிவனும் (வலதுபுறம்), சக்தியும் (இடதுபுறம்) சேர்ந்த ஒரே உருவாய், மாதொரு பாகனாய் அர்த்தநாரீசுவரர் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். இப்படி இறைவன் மூலவராக, அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த விக்ரகம் ஒருவகை பாஷாணத்தால் உருவானது. வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன். இந்த அர்த்தநாரீசுவரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான், ‘தொன்மைக்கோலம்’ என்று அழைக்கிறார்.
வைகாசி விசாக திருக்கல்யாணம் - அர்த்தநாரீசுவரருக்கு அணிவிக்கப்படும் தாலி
அர்த்தநாரீசுவரர். மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர். சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும். பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து. பூரண சந்திரன் குடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன். சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும். இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும், மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீசுவரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.
பிரார்த்தனை
அர்த்தநாரீசுவரர் திருவுருவப் படத்தை வைத்து வேண்டிக்கொண்டால்,. கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து, மனதார பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கல காரியங்கள் தடையின்றி நடந்தேறும்.
அர்த்தநாரீஸ்வர மந்திரம் :
ஓம் ஹும் ஜும் சஹ
அர்த்தநாரீஸ்வர ரூபே
ஹ்ரீம் ஸ்வாஹா
திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில் வீட்டில் விளக்கேற்றி அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து வழிபட்டால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. நாகதோஷம், ராகு-தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
அரியலூர் கோதண்டராமசாமி கோவில்
தேர் போன்ற வடிவில் கருவறை அமைந்திருக்கும் கோவில்
அரியலூர் நகரில் அமைந்துள்ளது மிகப்பழமையான கோதண்டராமசாமி கோவில். இந்த நகரத்தின் பெயர், அரி (விஷ்ணு)+இல் (உறைவிடம்)+ஊர் (பகுதி) . அதாவது, விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்று பொருள். இந்தப் பெயரே, பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.
இந்தக் கோவிலில் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஒரே பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்கள் எழுந்தருளி இருக்கும் கருவறையானது தேர் போன்ற வடிவில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
பெருமாளின் தசாவதார கோலங்கள்
இந்தக் கோவில் தசாவதார மண்டபத்தில் காட்சி அளிக்கும் பெருமாளின் தசாவதாரம் கோலங்கள் நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். ஒவ்வொரு தசாவதார கோலமும் ஆறரை அடி உயரத்தில், தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த தசாவதாரம் மண்டபத்தில், நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர்,
இரண்யவத நரசிம்மர், பிரகலாத நரசிம்மர் என்று நான்கு வித தோற்றங்களில் காட்சியளிக்கிறார்.
பிரார்த்தனை
இந்த கோவிலில் உள்ள கோதண்ட ராமரை தரிசித்தால் நம் வாழ்வில் நிம்மதி ஏற்படும். திருமணம் கை கூடாதவர்கள் வழிபட்டால் விரைவில் வரன் கைகூடி வரும்.
திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவில்
இருதய நோய், வயிற்று நோய், வாத நோய் முதலிய நோய்களை நீக்கும் பைரவர்
மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் சாலையில் 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாச்சேத்தி. இறைவன் திருநாமம் திருநோக்கிய அழகியநாதர். இறைவியின் திருநாமம் மருநோக்கும் பூங்குழலி. 1300 ஆண்டுகள் பழமையான தலம் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர், ஒரு நாய் வாகனத்துடன் தான் காட்சிய அளிப்பார். ஆனால் இக்கோவிலில், பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். இப்படி இரட்டை நாய் வாகனங்களுடன் பைரவர் எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இவருக்கு கஷ்ட நிவாரண பைரவர் என்று பெயர். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால், இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது.
இசைக் கல் நடராஜர்
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நடராஜர், இசைக் கல் நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவரது திருமேனியை தட்டினால், இசை ஒலி எழும்பும் என்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
குடியாத்தம் கெங்கைஅம்மன் கோவில்
குடியாத்தம் கெங்கைஅம்மன் கோவில் வைகாசி சிரசு திருவிழா
வேலூர் மாவட்டம், குடியாத்தம் என்னும் ஊரில் கௌவுண்டன்ய மகா நதியின் கரையில் அமைந்துள்ளது கெங்கைஅம்மன் கோவில். இக்கோவிலில் வைகாசி முதல் தேதி நடைபெறும் சிரசு திருவிழா, வேலூர் மாவட்டத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மிகவும் பிரசித்தம். பல லட்சம் மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.
சிரசு திருவிழாவின் பின்னணி வரலாறு
முன்னொரு காலத்தில் ஜமதக்கினி என்கிற முனிவர் தனது மனைவி ரேணுகாதேவி (கெங்கையம்மன்) மற்றும் மகன்களுடன் வாழ்ந்து வந்தார். தனது மனைவி கற்பு நெறியில் தவறிவிட்டாள் என்ற சந்தேகத்தின் பேரில் ஜமதக்கினி முனிவர் தனது மகன் பரசுராமனிடம் உனது தாயின் தலையை வெட்டி கொண்டு வா என ஆணையிட்டார். அப்போது ரேணுகாதேவி வெட்டியான் ஒருவரது வீட்டில் பதுங்கி கொண்டார். இதனை அறிந்த பரசுராமன் அங்குவந்து தனது தாயின் தலையை வெட்ட முயன்றார். அதனை தடுத்த வெட்டியானின் மனைவி சண்டாளச்சியின் தலையை வெட்டினார். பின்னர் தனது தாயின் தலையை வெட்டினார். பின்பு தனது தந்தையிடம் சென்ற பரசுராமன், உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் என கூறினார். அப்போது ஜமதக்கினி முனிவர் தனது மகனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். அதனை தருகிறேன் என கூறினார். அப்போது பரசுராமன் தனது தாயை உயிர்பித்து தருமாறு வேண்டினார். அப்போது ஜமதக்கினி முனிவர் ஒரு பாத்திரத்தில் புளித நீரை கொடுத்து இந்த தண்ணீரை கொண்டு வெட்டப்பட்டு கிடக்கும் உடலுடன் தலையை சேர்த்து வைத்து உயிர்ப்பித்து கொள் என்றார். இதனையடுத்து மகிழ்ச்சியில் திளைத்த பரசுராமன். வேகமாக சென்று உயிர்ப்பிக்கும்போது அவசரத்தில் சண்டாளச்சியின் உடலில் ரெணுகாதேவியின் தலையையும். ரேணுகாதேவியின் உடலில் சண்டாளச்சியின் தலையையும் வைத்து புளிதநீரை தெளித்தார். இதன்பின்னர் ரேணுகாதேவியும், சண்டாளச்சியும் உயிர் பெற்றனர். தனது மகனால் வெட்டப்பட்டு மீண்டும் உயிரபெற்ற கெங்கையம்மன், பிற்காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக இருந்து காத்து வருவதோடு, அவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்து அருள்புரிந்து வருகிறார்.
லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்
இந்த புராணத்தை கொண்டுதான் குடியாத்தம் கெங்கையம்மன் கோவியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி சிரசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது கெங்கையம்மன் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சியின் உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவினையொட்டி அம்மனுக்கு காப்பு கட்டிய நாள் முதல் பக்தர்கள் கோவிலில் கூழ் ஊற்றியும், மா விளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறினால் அம்மனுக்கு தங்களால் இயன்ற அளவு தேங்காய் உடைப்பதாக வேண்டி கொள்வர். அதேபோல் அம்மன் சிரசு ஊர்வலம் தொடங்கியது முதல் சிரசு செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் மூட்டை மூட்டையாக தேங்காய்களை உடைத்து வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அதேபோல் கோவில் மண்டபத்தில் அம்மன் வீற்றிருக்கும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபடுவர். லட்சக்கணக்கான தேங்காய்களை பக்தர்கள் உடைத்து வழிபடுவதில் இருந்தே கேட்ட வரம் அருள்பவள் கெங்கையம்மன் என்பது நிரூபணமாகிறது.
இத்திருவிழா இன்று (14.05.2024) நடைபெறுகின்றது.
தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் கோவில்
முருகனின் பாதச்சுவடுகள் பதிந்த மலை
வேலூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள புதுவசூர் என்ற கிராமத்தில் மலை மீது அமைந்துள்ளது தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் கோவில். இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த மலைக்கோயிலுக்கு நடந்து செல்ல 220 படிக்கட்டுகளும், வாகனங்கள் செல்ல சாலை வசதியும் இருக்கின்றது. கருவறையில் முருகன், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி அளிக்கிறார். இந்தக் கோவிலில் முருகப்பெருமானும் வள்ளியம்மையும் சம உயரத்தில் காட்சி அளிப்பது வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத காட்சியாகும். தெய்வானை முருகனை விட சற்று குறைவான உயரத்தில் காட்சி அளிக்கிறார்.
வள்ளிமலையில் நம்பிராஜன் மகளாக வளர்ந்து வந்த வள்ளியைத் திருமணம் செய்து கொள்வதற்காக, முருகன் வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை நோக்கிச் சென்றபோது, இந்த மலையில் சிறிது நேரம் இளைப்பாறி பாதம் பதித்துச் சென்றார். இதற்கு ஆதாரமாக முருகப்பெருமானின் பாதச்சுவடுகள் இன்றும் இந்த ஆலயத்திற்கு படியேறிச் செல்லும் பாதையில், பத்துப் படிகள் ஏறியதுமே வலதுபுறம் காட்சி தருகின்றன.
இந்த மலைப்பகுதிக்கு ஒளவையார் வந்தபோது அவரிடம் விளையாட விரும்பிய முருகன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வார்த்தை விளையாட்டு நிகழ்த்தியது இந்த மலையில்தான்.
பிரார்த்தனை
இந்த மலையில் முருகப்பெருமான் தன் திருவடிகளைப் பதித்து இளைப்பாறியதால், இந்த கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் மனத் துன்பங்கள் விலகி, முருகனின் அருளால் இளைப்பாறுதல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்
ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பெருமாள் திருநாமம் பூவராகப் பெருமாள். தாயார் திருநாமம் அம்புஜவல்லி. பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் தோன்றிய எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களில் ஒன்று இத்தலம்.
பல நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இது. இக்கோவிலில் சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட புருஷசூக்த மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம் உள்ளது. சிற்ப அழகு மிளிரும் நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. 72 பரதநாட்டிய நிலைகளுக்கான சிற்பங்கள் நுழைவு வாயில் மற்றும் கோவில் வளாகத்தின் பிற இடங்களில் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் காணப்படும் பெண்களின் நீளமாகப் பின்னலிட்ட ஜடையும், ராக்கொடி, ஜடை பில்லை, குஞ்சலம் போன்ற அலங்கார அணிகலன்களின் அழகும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கும். நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில்
அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் செந்தூர நிறத்திற்கு மாறும் அபூர்வ ஆஞ்சநேயர்
தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில். இக்கோவில், தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் (குரு பரிகார தலம்) அருகில் உள்ளது. இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ராம பக்த காரிய ஆஞ்சநேயர், மிகவும் பிரசித்தி பெற்றவர். இத் தலத்தில், வெகு அபூர்வமாக வடக்கு நோக்கிய திருமுகம் கொண்டு இவர் காட்சி தருகின்றார். இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் படிப்படியாய் செந்தூர நிறத்திற்கு மாறுவதை காணலாம். அப்போது அவர் முகத்தில் ஓடும் நரம்புகளையும் நாம் தெள்ளத்தெளிவாக தரிசிக்க முடியும்.
வேண்டும் வரம் உடனடியாக அருளும் ஆஞ்சநேயர்
மட்டை உரிக்காத தேங்காயை துணி கொண்டு, இந்த ஆஞ்சநேயரின் சன்னதியில் கட்டி விட்டு வந்தால் வேண்டுபவரின் காரியங்கள், இனிதே நிறைவேறும். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக இந்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு நீண்ட நாட்களாக,நிறைவேறாமல் தடைபட்டு வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது. கோவிலில் நுழையும்போதே, ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்தி விடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.
சென்னை முகப்பேர் மார்க்கண்டேசுவரர் கோவில்
மகாலட்சுமி வழிபட்ட தலம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் வழியில் உள்ள முகப்பேர் பகுதியில் அமைந்துள்ளது மார்க்கண்டேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதவல்லி, சந்தான கௌரி. மகாலட்சுமி உள்பட சப்த மகரிஷிகள் வழிபட்ட தலம் இது.
அம்பாள் வரதஹஸ்த நாயகியாக, நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இவ்வன்னையை ஐந்து திங்கள் கிழமை, ஐந்து தீபங்கள் வீதம் ஏற்றி வழிபடத் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. 11 அல்லது 21 எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலை கோத்து அணிவித்து வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி, மகப்பேறு வாய்க்கிறது. கணவரின் ஜென்ம நட்சத்திரத்தன்று, காலையில் உணவருந்தாமல் தம்பதியாக வந்து வழிபடத் தொடங்கி, பின்னர் ஐந்து வெள்ளிக்கிழமை இவ்விதம் வழிபட்டால் சத் புத்திர பாக்கியம் ஏற்படுகிறது. குழந்தை வரம் அருளுவதால், இத்தலத்து இறைவனுக்கு மகப்பேறீசுவரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இவ்வாலயத்தில் வில்வ மரத்தடியில் ஏழடி உயரத்தில், நின்ற திருக்கோலத்தில் மகாலட்சுமித் தாயார் எழுந்தருளியுள்ளது கூடுதல் சிறப்பு. பௌர்ணமி தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இவ்வாலயத்தில் வில்வ மரத்தடியில் ஏழடி உயரத்தில், நின்ற திருக்கோலத்தில் மகாலட்சுமித் தாயார் எழுந்தருளியுள்ளது கூடுதல் சிறப்பு. பௌர்ணமி தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
பிரார்த்தனை
திருக்கடையூருக்கு இணையானது இத்தலம். எனவே, இங்கு ஆயுஷ் ஹோமம் செய்து ஆயுள் நீட்டிப்புப் பெறலாம் என்பது ஐதிகம். மேலும், சஷ்டியப்தப் பூர்த்தி, உக்ர ரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகமும் செய்து கொள்ளலாம்.
காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக இங்கு சித்திர குப்தர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். சுமார் இரண்டரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலம் கொண்டுள்ள சித்திர குப்தரை, கேதுவுக்கு ப்ரீதியாக கொள்ளு தீபம் ஏற்றி வழிபடலாம். சித்திர குப்தரை வழிபடுவதற்கு பௌர்ணமி உகந்த நாள். அன்று வணங்கினால், புண்ணியங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.