ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் வரும் தலம்
கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் ஆலங்குடி. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை. இக்கோவில் 1900 ஆண்டுகள் பழமையானது.
நவக்கிரகத் தலங்களில், ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. இத்தலத்து தட்சிணாமூர்த்தி மிகவும் விசேடமானவர். இவருக்கு குரு தட்சிணாமூர்த்தி என்ற சிறப்பு பெயரும், இத்தலத்துக்கு தட்சிணாமூர்த்தித் தலம் என்ற பெயரும் உண்டு. தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.
பிரார்த்தனை
14 ஜன்மங்களில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, ஆலங்குடிக்கு ஒருவர் வரக்கூடும் என்பது நம்பிக்கை. பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வது வழக்கம். குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.
இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும் என்பது நம்பிக்கை.
நதிக்கரை முருகன் கோவில்
திருச்செந்தூர் முருகனைப் போன்ற திருக்கோலத்துடன் எழுந்தருளி இருக்கும் முருகன் கோவில்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், புதுக்குடியையும் ஶ்ரீவைகுண்டத்தையும் இணைக்கும் பாலத்துக்குக் கீழ், தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது நதிக்கரை முருகன்.
இக்கோவில் மூலவரான முருகன், திருச்செந்தூர் முருகனைப் போன்ற திருக்கோலத்துடன் இருக்கின்றார். திருச்செந்தூரில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தவநிலையிலும், சிவனைப் பூஜிக்கும் தன்மையுடனும் திகழ்வதாக ஐதிகம். அதனால் அங்கே, கருவறையில் செந்தில் ஆண்டவரின் இடப்புறத்தில் சிவலிங்கம் உண்டு. திருச்செந்தூரைப் போன்றே இங்கும் கருவறையில் முருகன் அருகில் சிவலிங்கத் திருமேனி உண்டு. இங்கு ஶ்ரீசுப்ரமணியர், ஶ்ரீசண்முகப் பெருமான் என்று இரண்டு உற்சவர்கள். இருவருமே தேவியருடன் தனிச் சந்நிதியில் அருள்கிறார்கள்.
திருச்செந்தூரில் கடற்கரையில் நிகழும் சூரசம்ஹாரம், இங்கே நதிக்கரையில் நிகழ்வது சிறப்பம்சம் ஆகும். திருச்செந்தூர் முருகன் போன்ற உருவ ஒற்றுமையுடன் நதிக்கரை மூலவர் அருள்வதால், இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து வழிபட்டால், திருச்செந்தூரில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆகவே, கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூருக்குச் செல்ல முடியாத பக்தர்கள், இந்தக் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
திருமண பாக்கியம் அருளும் விருட்ச கல்யாண வழிபாடு
இந்தக் கோவிலின் விசேஷங்களில் ஒன்று விருட்ச கல்யாணம். இந்தக் கோவிலின் தல விருட்சமாக அரசும், வேம்பும் பின்னிப் பிணைந்தபடி திகழ்கின்றன. இவற்றின் அடியில் நாக சிலைகள் உள்ளன. திருமணத் தடை உள்ளவர்கள், தோஷங்களின் காரணமாக கல்யாண நடப்பதில் தாமதம் ஏற்பட்டு அதனால் வருந்தும் அன்பர்கள், எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையாதவர்கள், இங்கு வந்து இந்த விருட்சங்களுக்குச் சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். ஶ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இந்த முருகனுக்கு வேண்டிக்கொண்டு, கல்யாணம் நிச்சயம் ஆனதும், இந்தக் கோவிலுக்கே வந்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.
நரிக்குடி எமனேஸ்வரர் கோவில்
மரண பயம் போக்கும் எமனேஸ்வரர்
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள குரு பரிகாரத் தலமான ஆலங்குடிக்கு தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது நரிக்குடி. இத்தலத்து இறைவன் திருநாமம் எமனேஸ்வரர். இறைவியின் திருநாமம் எமனேஸ்வரி. இந்த தலத்தில், எமன் தர்ம நெறிப்படி ஆண்டு, சிவபெருமானை வழிபட்டதால் 'நெறிக்குடி' என்று பெயர் பெற்றதாகவும். அதுவே மருவி நரிக்குடி என்றானது. பண்டைக் காலத்தில், இத்தலம் யமபுரி, யமபட்டினம், யமனேஸ்வரம், யமதர்மபுரம் என்ற பெயர்களுடன் விளங்கியது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு, சூரிய சந்திரர்கள் சாட்சியாக எமதர்மராஜா முன்னிலையில் சிதரகுப்தரால் அகர சந்தானி என்ற ஏட்டில் பதியப்பட்டு வருவதாக ஐதிகம். இத்தகைய சித்ரகுப்தப் பதிவேடு அர்ப்பணிப்புத் தலங்களில் ஒன்றாக நரிக்குடியும் சொல்லப்படுகிறது. மரண பயம் போக்குவதற்கான வழிபாட்டை செய்வதற்கு உரிய தலம் இது.
இத்தலத்தில், மரணபயத்தைக் களையவும். விபத்தினைத் தடுக்கவும். தற்கொலை எண்ணத்தைப் மாற்றவும் மிருத்யுஞ்சய மந்திரங்களும், யாகங்களும் செய்யப்படுகின்றன.
'த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் வர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத்' என்ற மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை உச்சரித்தபடி அமாவாசை, பௌர்ணமி தினங்களில் எம தீர்த்தக் குளத்தை வலம் வந்து, எமனேஸ்வர சுவாமி, எமனேஸ்வரி அம்பிகைக்கு அர்ச்சனை செய்கிறார்கள். தெற்கு திசை தேவதையான எமதர்மராஜனுக்கு. அவருக்குரிய நீலநிற பருத்தித் துணியில், காய்ந்த கண்டங்கத்திரி வேர். அதிமரம், வசம்பு, சுக்கு துண்டுகளை வைத்து முடிச்சு போட்டு, எள்தீபத் திரிபோல உருவாக்கி நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலப்பில் தீபம் ஏற்றி வணங்குவது நல்லது. இவ்வாறு செய்தால், கண் திருஷ்டி, மன உளைச்சல், எமபயம் ஆகியவை அண்டாது என்பது ஐதீகம்.
புற்றுநோய், இருதய நோய் ஆகியவைகளை குணப்படுத்தும் கண்டகி தீர்த்தம் எனப்படும் எம தீர்த்தம்
இக்கோவில் திருக்குளம் எம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்குளம், நேபாள நாட்டில் ஓடும் புனித கண்டகி நதியின் சூட்சுமமான நீரோட்டப் பிணைப்பைக் கொண்டதால், இதற்கு கண்டகி தீர்த்தம் என்ற வேறு பெயரும் உண்டு. இந்த கண்டகி தீர்த்தம் விசேஷ மருத்துவ குணம் உடையது. இந்த தீர்த்தத்தின் மகிமையினால், புற்றுநோய் கட்டி கரைந்து விடும். இருதய அறுவை சிகிச்சை தேவை என்று பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு, அந்த அறுவை சிகிச்சை இல்லாமல் நோய் குணமாகும். எமவாதனை அகலும். சரிவர பேச இயலாத குழந்தைகளுக்கு, முழுமையான பேச்சுத்திறன் வரும்.
வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோவில்
கருங்கல்லான அபூர்வ நடராஜர், சிவகாமி அம்மன் விக்ரகங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. ஆடுதுறை பெருமாள் கோயில் என்றும் கபிஸ்தலம் என்றும், இந்த தலம் அழைக்கப் படுகின்றது. இறைவன் திருநாமங்கள் தயாநிதீசுவரர், அழகு சடைமுடி நாதர், வாலி நாதர், சிட்டிலிங்க நாதர், குலை வணங்கீசர். இறைவியின் திருநாமங்கள் ஜடாமகுட நாயகி, அழகு சடைமுடி அம்மை.
பொதுவாக சிவாலயங்களில், பஞ்சலோகத்தால் ஆன நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகளை நாம் தரிசிக்க முடியும். ஆனால் இக்கோவிலில், சற்று வித்தியாசமாக கருங்கல்லான நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகள் உள்ளன. மேலும் இவர்கள் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
நெற்குன்றம் கரி வரதராஜப் பெருமாள் கோவில்
தீபாராதனை காட்டும் போது கண் திறந்து பார்க்கும் அதிசயப் பெருமாள்
சென்னை கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் நெற்குன்றம் வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளதுகரிவரதராஜ பெருமாள் கோவில்.
400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் கருவறையில், மூலவர் கரிவரதராஜ பெருமாள், ஐந்து அடி உயரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மற்றும் மார்பில் மஹாலக்ஷ்மியுடன் காட்சி தருகிறார். வலதுகரம் அபய ஹஸ்தம் உள்ளது. மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும், நாபியிலே சிம்ம முகம் இருப்பதும் தனிச்சிறப்பாகும்.
மூலவர் கரிவரதராஜ பெருமாளுக்கு அர்ச்சகர் தீபாராதனை காட்டுவதற்குமுன் கருவறையில் உள்ள மின்விளக்குகள் அணைக்கப்படுகிறது. தீபாராதனை ஒளியில் பெருமாளின் திருமுகத்தை தரிசிக்கும் போது தீப ஒளியில் அதுவரை மூடியிருந்த இறைவனின் கண்கள் சற்றே திறந்து இரு கண்களும் வெண்மையாக, பெருமாள் நம்மைப் பார்ப்பது போன்ற அதிசயம் நிகழ்கிறது. பெருமாளின் இந்த தோற்றம் பார்ப்பவர்களை மெய்சிலிரிக்க வைக்கும்.
பிரார்த்தனை
இப்பெருமானிடம் தரிசிக்க வரும் பக்தர்கள் எத்தகைய பாவங்களைப் செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வரத்தினை இங்கு தனி சந்நிதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயார் பெற்றுள்ளாள். எனவே மூலவர் பெருமாளும் தன்னை சேவிக்க வரும் பக்தர்களின் பாவங்களைப் போக்கி அபயஹஸ்தத்தில் நமக்கு அருள்புரிகிறார்.
புத்திர பாக்கியம் வேண்டி வருவோர், திருமணத் தடையால் கவலையடைந்தோர் இப்பெருமானிடம் வேண்டி தமது வேண்டுதல்களை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். கரி வரதராஜ பெருமாள் 27 நட்சத்திரங்களின் இறைவன். தங்கள் பிரார்த்தனைகளை மனதில் நினைத்து பக்தர்கள் 27 ரூபாயை இறைவனின் பாதத்தில் வைக்கின்றனர். இதேபோல் ஒன்பது நாள், ஒன்பது வாரம் என்று வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகள் செய்தால் வேண்டுதல் நிறைவேறி விடும். தங்கள் ஜன்ம நட்சத்திரத்தில் 27 மாதங்கள் வந்து வழிபட, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன. இங்குள்ள இறைவனின் ஜன்ம நட்சத்திரம் ஹஸ்தம். எனவே, ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து சிறப்புப் பிரார்த்தனைகள் செய்து பலன் பெறுகின்றனர்.
இக் கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சம் சந்தான கோபாலகிருஷ்ண விக்கிரகம். குழந்தை பேறு இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து சந்தானகோபாலகிருஷ்ணனை மடியில் ஏந்தி சீராட்டி மகிழ்ந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.
கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்
திருநள்ளாறு சனீஸ்வரருக்கு இணையாக போற்றப்படும் கூர்மாங்க சனீஸ்வரர்
விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது கோலியனூர் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்டதால், இத்தலத்து இறைவன் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் கூர்மாங்க சனீஸ்வரர், திருநள்ளாறு சனீஸ்வரருக்கு இணையாக போற்றப்படுகிறார். கூர்மாங்கம் என்றால் உடனே அல்லது சடுதியில் சங்கடங்களை நீக்குபவர் என்று பொருள். இவர் தெற்கு திசை நோக்கி எழுந்தருளி இருப்பதன் பின்னணியில், ஒரு ராமாயண காலத்து வரலாறு உள்ளது.
கிஷ்கிந்தையின் அரசன் வாலி மிகப்பெரிய சிவபக்தன். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் முடிவதற்குள் 1000 சிவாலயங்களில் பூஜை செய்யும் வழக்கம் உடையவன். அதைப் போலவே இங்கு அடர்ந்த வனப் பகுதியில் 100 சிவலிங்கங்களை அமைத்து மேற்கு நோக்கி தவம் செய்வது வழக்கம். இதைப்பற்றி கேள்விப்பட்ட இலங்கை மன்னன் இராவணன், தன்னைவிட சிறந்த சிவபக்தனான வாலி மீது கோபம் கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க முடிவு செய்து, தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க நினைத்தான். இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் இராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்துவிட்டான். பின் இராவணனை சிறையில் அடைத்து வைத்திருந்தான். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே, இராவணனை தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான். இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு, இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க, வாலி தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி, சனீஸ்வரரை தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார்.
பிரார்த்தனை
தெற்கு திசை எமனின் திசை. தனது சகோதரர் எமதர்மனால் ஏற்படும் ஆயுள் கண்ட பிரச்னைகள் இந்த சனீஸ்வர பகவானை வழிபடுவதால் நீங்கும். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும். தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். ஆயுள் கண்டம் ஏற்படுத்தும் இதய நோய், வலிப்பு நோய், தலைசம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு வியாதிகளில் பாதிக்கப்பட்டவர்கள். சனீஸ்வரரை வழிபட நன்மை நடக்கும். ஆயுள் பலம் வேண்டுவோர் நீல வஸ்திரம் அணிவித்து நீல மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தனது வயதின் எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வயது எண்ணிக்கையில் சனிதோறும் சுற்றிவந்து நீண்ட ஆயுள் பலம் பெறலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு எள் மற்றும் பிற சாதங்களை அன்னதானம் செய்யலாம்.
இந்த சனி பகவானுக்கு மாதா மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஹோமமும், சனீஸ்வர நவகிரக சாந்தி ஹோமமும், சனிக் கிழமை தோறும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோவில்
சிவசொரூபமாக, சிரசில் கங்கை, ருத்ராட்சம், மற்றும் நெற்றிக்கண்ணுடன் காட்சி அளிக்கும் அம்பிகையின் அபூர்வ கோலம்
நாகப்பட்டினம்- கும்பகோணம் சாலையில், திருபுகலூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் சீயாத்தமங்கை. இறைவன் திருநாமம் அயவந்தீசுவரர். இறைவியின் திருநாமம் இருமலர்கண்ணியம்மை. அம்பிகைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்றொரு திருநாமமும் உண்டு.
அம்பிகை இருமலர்கண்ணியம்மை சிவசொரூபமாக சிரசில் கங்கை, ருத்ராட்சம், மற்றும் நெற்றிக்கண்ணுடன் சிவபாகத்தைக் கொண்டவளாக காட்சி தருகிறாள். அம்பிகையின் இந்தக் கோலம் அபூர்வமானது. வேறு எந்த தலத்திலும் நாம் எளிதில் தரிசிக்க முடியாதது. அம்பிகை, அக்னி வடிவமாகத் திகழ்கிறாள். எனவே, அவளைக் குளிர்விக்கும் வகையில், பௌர்ணமி தினங்களில் அபிஷேகங்கள் செய்வித்துப் பிரார்த்தித்தால், உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், பௌர்ணமியில், இங்கேயுள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி, அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.
வழி தெரியாமல் தவித்த பயணிகளுக்கு வழிகாட்டிய அம்பிகை
இந்தத் தலத்தில் ஆலயம் மிகப் பிரமாண்டமாக உருவாக காரணம், இங்கு அருள்பாலிக்கும் அம்பிகை தான். அதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து, தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி ஒரு கூட்டத்தினர் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்தப் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த வேளையில் அங்கு சிறுமி ஒருத்தி வந்தாள். பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள். "என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தைக் கண்டு சிலிர்த்தனர் பயணிகள். 'யார் இந்த சிறுமி. நம்மை எங்கே கூட்டிச்செல்கிறாள்' என்று நினைத்தாலும், அந்த சிறுமி நமக்கு உதவத்தான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தனர். மொத்தக் கூட்டமும் அவளைப் பின் தொடர்ந்தது. சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர். அதன் பின் பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாளான இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். இயல்பாகவே கோவில் திருப்பணிகளில் ஆர்வம் கொண்ட அந்த அன்பர்கள், அம்பிகை வழி காட்டிய கோவிலுக்கும் திருப்பணிகள் செய்து முடித்து பிரமாண்டமான ஆலயமாக எழுப்பினர்.
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில்
தலைக்கு மேல் சிவலிங்கத்துடன் இருக்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி
கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ.தொலைவில், கோவில் பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது காலகாலேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காலகாலேஸ்வரர். இறைவியின் திருநாமம் கருணாகரவல்லி. திருக்கடவூரில் மார்கண்டேயர் உயிரைபறிக்க எமதர்மராஜன் முயன்றபோது, சிவபெருமானால் தன் சக்தியை இழந்த எமதர்மராஜன் (காலன்) இக்கோவிலில் காலகாலேஸ்வரரை வழிபட்ட பின்பு இழந்த சக்தியை மீண்டும் பெற்றார்.
இக்கோவில் 1,300 ஆண்டு பழமை வாய்ந்தது.சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும், இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இக்கோவிலில், மரகதத்திற்குரிய குணங்களைக் கொண்ட பச்சை நிற மரகத நந்தி உள்ளது. மூலவர் காலகாலேஸ்வரர், மணல், நுரையால் ஆனவர் என்பதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதில்லை.
ஆலங்குடியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு இணையாக, ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார், தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் சிவலிங்கம் இருப்பது தனிச்சிறப்பாகும். இந்த கோவில் குரு பரிகார தலமாகவும், கொங்கு மண்டல குரு பரிகார தலமாகவும் விளங்குகிறது.
பிரார்த்தனை
சுவாமி, அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத் தடை விலகவும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் விஷக்கடிக்கு நிவாரணம் கிடைக்கிறது. ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம்) போன்ற ஹோமங்கள் இக்கோவிலில் பிரசித்தி பெற்றதாகும்.
சோழபுரம் பைரவேஸ்வரர் கோவில்
64 விதமான பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலமாக விளங்கும் பைரவேஸ்வரர்
கும்பகோணம்- சென்னை சாலையில், 13 கி.மீ. தொலைவில் உள்ளது சோழபுரம் பைரவேஸ்வரர் கோவில். இத்தலத்து இறைவனின் திருநாமம் பைரவேஸ்வரர். இத்தலத்து இறைவன் 3 அடி உயர ஆவுடையாரின் மீது இரண்டடி உயர பாணத்துடன் காணப்படுகிறார்.
உலகில் உள்ள 64 விதமான பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலமாக விளங்குபவர் தான், இந்த சோழபுரம் பைரவேஸ்வரர். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம் இது. . இதனாலேயே இத்தலத்தின் பழங்காலப் பெயர் பைரவபுரம். சிவன், பைரவரின் மூல மூர்த்தியாக இருப்பதால், பைரவேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கோவிலுக்குள் 64 பீடங்கள் உள்ளன, மேலும் 64 பைரவர்களில் ஒவ்வொருவரும், இங்கு எப்போதும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது.
பிரார்த்தனை
பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள். இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர். இத்துன்பங்களில் இருந்து விடுபட, பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு,பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். சனிக்கு குருவாக விளங்குபவரர் பைரவர் என்பதால் அவரை சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு.
பாலத்தளி துர்க்கையம்மன் கோவில்
மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் அபூர்வ துர்க்கை
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில், 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலத்தளி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது துர்க்கையம்மன் கோவில். பாலை மரங்கள் அதிகமாகக் காணப்படுவதால் பாலத்தளி என்றழைக்கப்படுகிறது.
கருவறையில் துர்க்கை அம்மன் எருமைத்தலையின் மீது நின்ற நிலையில், நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த அம்பிகை தனது இரு கரங்களில், சங்கு சக்கரம் தாங்கி இருப்பதால் விஷ்ணு துர்க்கை என அழைக்கப்படுகிறார். அதேபோல் தெய்வீக பொழிவோடு காட்சி தருவதால் நவ துர்க்கை எனவும் அழைக்கப்படுகிறார். பொதுவாக துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பாள். ஆனால் இந்த ஆலயத்தில் துர்க்கை அம்மன், மற்ற ஆலயங்கள் போல் இல்லாமல் மேற்கு நோக்கி அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருப்படுகிறது.
இந்த ஆலயத்தில் ராகு கால பூஜை மிகவும் பிரசித்திப்பெற்றது அதேபோல் ஆடி வெள்ளி,ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளி,செவ்வாய் என துர்க்கைக்கு உகந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.
வெள்ளிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
வள்ளி, தெய்வயானையின்றி பாலமுருகனாக அருளும் தலம்
வெள்ளிபோல் மின்னும் மலை
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து மேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளி மலை. 200 அடி உயரம் உள்ள இந்த மலைக்கோவிலுக்கு செல்ல சாலை வசதியும், படிக்கட்டுகளும் உள்ளன. இந்த மலையில் ஒருவகை தாதுப்பொருள் கலந்திருப்பதால், சூரிய ஒளி பட்டு இந்த மலை வெள்ளிபோல் மின்னுகின்றது. அதனால், இந்த மலைக்கு வெள்ளிமலை என்று பெயர் வந்தது.
கோவில் கருவறையில், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானையின்றி பாலமுருகனாக அருள் புரிகிறார். அவரின் வசீகர தோற்றம் பார்ப்பவரை பரவசமடைய செய்யும். சித்திரை மாதம் பத்தாம் நாள் சூரியக் கிரணங்கள் நீளமான மண்டபத்தைக் கடந்து வந்து முருகனின் திருப்பாதங்களைத் தழுவி வணங்குவது கண்கொள்ளாக் காட்சியாகும். அன்று முருகப் பெருமானை தரிசித்தால் நவகிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை
இக்கோவில் பாலமுருகனை வழிபட்டால், குழந்தைப் பேறு கிட்டும், திருமண வரம் கிடைக்கும், நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில்
சோழர்களின் போர் தெய்வம் பிடாரி ஏகவீரி எனும் அஷ்டபுஜ காளி
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில். இக்கோவிலில், பிடாரி ஏகவீரி எனும் அஷ்டபுஜ காளி, அம்பாள் பெரியநாயகி சன்னதியின் வடக்குப் பகுதியில் எழுந்தருளி உள்ளார். இச்சன்னதியில், பிடாரி ஏகவீரி எனும் அஷ்டபுஜ காளி. உத்குடி ஆசனத்துடன், திருச் செவிகளில் விசேஷ குண்டலங்கள், கழுத்தில் சரப்பளி, கால்களில் சலங்கை, தொடைவரை மறைத்த சிற்றாடை என வீரமும் அழகும் நிறைந்த திருக்கோலத்தில் துடியாகக் காட்சி தருகிறான் பிடாரி ஏகவீரி. விஷ்பூர முத்திரையுடன், கனிவுடன்கூடிய கீழ்நோக்கிய பார்வையுடன் அருள்கிறாள் காளி. ஒருகாலத்தில் எல்லைத் தெய்வமாகத் தனிக்கோவிலில் திருவலஞ்சுழியில் அருள்பாலித்தவள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். மகிஷாசுரனை வதம் செய்த காளிதேவி, ஈசனின் ஆணைப்படி இங்கு வந்து சிவபூஜை செய்தாள் என கோவில் புராணம் புராணம் கூறுகின்றது.
சோழப்பேர்ரசர்கள் ராஜ ராஜ சோழனும், அவன் மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன் இந்த மாகாளிக்கு வாள்,போர் ஆயுதங்களை வைத்து பூசை நடத்தி உத்தரவு வாங்கிய பின்னரே போர்க்களம் நோக்கிக் கிளம்புவார்கள். அவற்றின் மூலம் போரில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற சோழப் பேரரசர்கள் கொண்டாடிய தெய்வம் இவள். 'ஏகவீரி' என்று அழைக்கப்பட்டதாக அன்றைய கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. இன்றைக்கு அஷ்டபுஜ காளி என்ற பெயர் மாற்றம் பெற்று இருக்கிறாள். இராஜராஜனின் மாமியார் குந்தணன் அமுதவல்லியார், இந்த காளிக்கு நிவந்தங்கள் வழங்கியுள்ளார்.
நாகப்பட்டினம் காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோவில்
காக்கா பிள்ளையார்
நாகப்பட்டினம் சட்டநாத சுவாமி கோவிலின் உப கோயிலாக, அதன் எதிரே நீலா மேல வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோவில்.
இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகையை அடைய எண்ணம் கொண்டு, முனிவரின் குடிலின் அருகே காக்கை உருவெடுத்து கரைந்தான். கௌதம முனிவரும் பொழுது விடிந்ததாக எண்ணி வெளியே சென்றுவிட இந்திரன் கௌதம முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை நாடினான். கௌதம முனிவர் அகலிகை, இந்திரன் ஆகியோரை சபித்து விடுகிறார். பின் இந்திரன் தேவகுரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி சாப விமோசனம் பெற காக்கை உருவிலேயே நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமி, நீலாயதாட்சி அம்மன் கோவிலின் தென்மேற்கு பகுதியில் ஒரு தீர்த்தம் அமைத்து விநாயகப் பெருமானை முதலில் வழிபட்டான்.
இந்திரனின் சாபம் தீர்க்க வழி செய்ததால், சாபம் தீர்த்த விநாயகர் என்றும், இந்திரன் காக வடிவத்தில் அமைத்த குளத்தின் அருகே உள்ளதால் காக்காகுளம் பிள்ளையார் என்றும், தற்போது அதுவே மருவி காக்கா பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
திருநள்ளாற்றில் சனி தோஷம் முழுமையாக நீங்கப் பெறாத நள மகாராஜா பின் இக்கோயில் காக்காகுளத்தில் நீராடி, விநாயகரை வழிபட்டு சனியினால் காலில் ஏற்பட்ட தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். சூரிய பகவானும் இந்த விநாயகரை வழிபட்டு குழந்தை பாக்கியத்தை பெற்றதால் மார்ச் மாத இறுதி வாரங்களில் அஸ்தமனத்தின் போது சூரிய கதிர்கள் விநாயகரின் மீது படும்படி சூரிய பூஜை நடைபெறுகிறது.
மேலும் இந்திரனும், சூரிய பகவானும் அஞ்சலி முத்திரையில் கை கூப்பி விநாயகரை தொழுத வண்ணம் அமைந்திருப்பது வேறெந்த திருக்கோயில்களில் காணமுடியாத அமைப்பாகும்.
மருதாடு புரந்தரீசர் கோவில்
இந்தரபிரசாதவல்லி என்ற வித்தியாசமான திருநாமம் உடைய அம்பிகை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மருதாடு. இறைவன் திருநாமம் புரந்தரீசர். இறைவியின் திருநாமம் இந்திரப்பிரசாதவல்லி.
தேவர்களின் அரசனான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் இத்தலத்துக்கு, வந்து தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டான். இந்திரன் வழிபட்டு அருள் பெற்றதால், அவனுடைய பெயராலேயே இத்தல மூலவர், புரந்தரீசர் என்ற பெயர் பெற்றார். இந்திரனின் மற்றொரு பெயர் புரந்தரன். இந்திரன் வழிபட்ட போது இத்தல அம்பிகை, அவனுக்கு விபூதி பிரசாதமும், தீர்த்த பிரசாதமும் வழங்கி ஆசிர்வதித்தார். இந்திரனுக்கு பிரசாதம் அளித்ததால் அம்பிகை 'இந்திரப்பிரசாதவல்லி' என்று பெயர் பெற்றார். இப்படிப்பட்ட வித்தியாசமான திருநாமத்தை உடைய அம்பிகையை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மன் சன்னிதியில் குங்கும பிரசாதமும், தை மாத வெள்ளிக்கிழமையில் தீர்த்த பிரசாதமும் தரப்படுகிறது.
பிரார்த்தனை
அம்பாளுக்கு அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், இத்தலத்தில் உள்ள சூரியன் மற்றும் புரந்தரீசருக்கு கோதுமைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் நோய்கள் நிவர்த்தியாகும்.
தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்
காவி உடையுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மைமார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது.
திருஞானசம்பந்தரின் யாழ்முரிப்பதிகம் பெற்ற சிறப்புடையது இத்தலம். யாழை இசைத்து, யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவபெருமான் 'யாழ்மூரிநாதர்' என அழைக்கப்படுகிறார். சிவபெருமான் யாழ் இசைத்த போது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த தட்சிணாமூர்த்தி தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால், காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்.
பிரார்த்தனை
இசை கற்பவர்கள் சிவபெருமான், தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.
காஞ்சிபுரம் நிலா துண்டப் பெருமாள் கோவில்
பெருமாளின் நாபிக் கமலத்தில் மகாலட்சுமி எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு கோவில்கள் தான் தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், திவ்ய தேசமாகவும் அமைந்திருக்கின்றன. ஒன்று சிதம்பரம் நடராஜர் கோவில். மற்றொன்று காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலில் அமைந்திருக்கும் திவ்யதேசம் நிலா துண்டப் பெருமாள் கோவில். ஏகாம்பரேசுவரர் கோவிலின் முதல் பிரகாரத்தில், ஒரு சிறிய சன்னதியில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். மகாலட்சுமி. மகாவிஷ்ணுவின் இடது மார்பில் காட்சி தருபவள். ஆனால், இத்தலத்தில் பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் மகாலட்சுமி பிரம்மாவின் அம்சத்துடன் இருக்கின்றாள். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள். இதனால் இங்கு பெருமாளையும் மகாலட்சுமியும் வழிபடுவதால், பக்தர்களின் விதியை எல்லா வகையிலும் சிறப்பாக மாற்ற முடியும் என்பது ஐதீகம்.
பெருமாளுக்கு நிலா துண்டப் பெருமாள் என்ற பெயர் வந்த காரணம்
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, மத்தாக பயன்பட்ட மேருமலையை தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி பாம்பு ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. சிவன், தனது தலையில் இருந்த பிறைச்சந்திரனை மகாவிஷ்ணு மீது ஒளி பரப்பும்படி பணித்தார். சந்திரனும் தன் கதிர்களைப் பரப்ப, மகாவிஷ்ணு நீலவண்ணத்தை மீண்டும் பெற்றார். முன்பை விட பொலிவாகவும் விளங்கினார். பெருமாளின் நிறம் மாற தானும் ஒரு காரணமானதால், வருத்தம் கொண்ட வாசுகி பாம்பு, அவருக்கு குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது. பிறைச்சந்திரனின் ஒளிபட்டவர் என்பதால் இக்கலத்து பெருமாளை திருமங்கையாழ்வார், சந்திரனின் பெயரையும் சேர்த்து ‘நிலாத்திங்கள் துண்டத்தாய்’ என்று பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். ‘சந்திர சூடப் பெருமாள்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு. சிவனை வணங்கி குணமாகியவர், என்பதால் இங்கு பெருமாளுக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது. இவரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.
மகாவிஷ்ணு தன்னுடைய நோய் நீங்குவதற்காக இத்தலத்திற்கு தனியே வந்ததால், தாயாருக்கு இங்கு சன்னதி கிடையாது. ஆனாலும், மகாவிஷ்ணுவின் நாபியில் இருக்கும் மகாலட்சுமியையே 'நேர் உருவில்லாத் தாயாராக' எண்ணி வழிபடுகின்றனர். உருவமில்லாமல் பெருமாளுடன் ஐக்கியமாகி இருப்பதால் இப்பெயர் வந்தது.
பிரார்த்தனை
பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தோல் வியாதிகள், வயிறு சம்பந்தமான நோய்கள், தோஷங்கள் நீங்கும், உடல் உஷ்ணம் குறையும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக் கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை.
மானாமதுரை வீர அழகர் கோவில்
மானாமதுரை சித்திரைத் திருவிழா
மதுரை கள்ளழகரை போல், வைகை ஆற்றில் இறங்கும் மானாமதுரை வீர அழகர்
மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 49 கி.மீ. தொலைவில் உள்ள மானாமதுரை என்ற ஊரில் அமைந்துள்ளது வீர அழகர் கோவில். இத்தலத்தில் பெருமாள், மதுரை அழகர் கோவிலைப் போலவே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். தாயார் திருநாமம் சௌந்தரவல்லி.
தல வரலாறு
900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை மாவலி வானாதிராயர் என்ற மன்னர் கட்டினார். மன்னர் மாவலி வாணாதிராயருக்கு மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாளிடத்தில் மிருந்த பக்தி உண்டு. இந்த பெருமாளை பார்க்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். ஒரு நாள் மன்னருக்கு அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாளை பார்க்க செல்ல முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பெருமாளை பார்க்க இயலாததால் மன்னர் மிகுந்த வேதனைப் பட்டார். உடனே பெருமாள் மன்னரின் கனவில் நோன்றி, "மன்னா, நீ இருக்கும் இடத்தில் வைகை ஆற்றின் கிழக்கு கரையில் எனக்கு ஒரு கோயில் கட்டி அதில் பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. இதனால் உனக்கு மதுரை அழகர்கோவிலில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என கூறி மறைத்தார். மன்னனும் பெருமாள் கூறியபடி கோவில் கட்ட நினைத்தான. ஆனால் எந்த இடத்தில் கோவில் கட்டுவது என குழம்பினான். பெருமாள், மன்னனின் குழப்பம் தீர, ஒரு எலுமிச்சம்பழத்தை ஆற்றில் விடு. அந்த எலுமிச்சம்பழத்தின் ஒரு பகுதி எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு கோவிலையும், மறுபாதி விழும் இடத்தில் கோவிலுககாள் குளத்தையும் வெட்டுமாறு ஆணையிட்டு மறைந்தார். எனவே தான் கோவிலிலிருந்து குளம் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.
மானாமதுரை வீர அழகர் சித்திரை திருவிழா
மதுரை அழகர் கோவிலை போலவே, இக்கோவிலில் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் எதிர்சேவையும், ஐந்தாம் நாள் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மதுரையில் மீனாட்சி என்றால் மானாமதுரையில் ஆனந்தவல்லி. அங்கு சொக்கநாதர் என்றால் இங்கு சோமநாதர். திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி சகோதரியின் திருமணத்தைக் காண வருகிறார் கள்ளழகர். அவரைப்போலவே மானாமதுரையில் வீர அழகர், சகோதரி ஆனந்தவல்லியின் திருமணத்தைக் காண எழுந்தருள்கிறார். வீர அழகருக்கு எதிர் சேவை, திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் மதுரையில் நடப்பதுபோலவே இப்பகுதி மக்களாலும் செய்யப்படுகிறது. அழகர் கோவில் கள்ளழகரை போல், மானாமதுரை வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது எந்த வண்ண பட்டுடை உடுத்தி வருகிறாரோ, அந்த உடையின் நிறத்திற்கு ஏற்றார் போல் அந்த ஆண்டு பலன் இருக்கும்.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில், இன்று (23.04.2024) செவ்வாய்க்கிழமை, மானாமதுரை வீர அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில்
ஆண்டு முழுவதும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது தினமும் விழும் அதிசயம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில், கணியூருக்கு அருகில் அமைந்துள்ளது கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில் . இறைவியின் திருநாமம் கோமதி. கொங்கு மண்டலத்தில், அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை அமைந்துள்ள 11 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் விக்ரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
கொங்கு மண்டலத்திலேயே மிகப்பெரிய கருவறை விமானம் கொண்ட கோவில் இது. மேலும் மூலவர் அர்ச்சுனேசுவரர், மிகப்பெரிய அவுடையாருடன் சுயம்பு சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளி உள்ளார். அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில் ஒவ்வொரு தினமும், சூரியன் காலையில் உதித்ததும், சூரியனின் ஒளிக்கதிர்கள் அமராவதி ஆற்றின் தண்ணீரில் பட்டு, மூலவர் அர்ச்சுனேசுவரரின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கும். இந்த சூரிய ஒளியானது, ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை ராஜகோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம், வசந்த மண்டபம், கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும். சூரியன் திசை மாறும் காலங்களான உத்திராயணம், தட்சிணாயணம் காலங்களிலும் கூட, அதாவது ஆண்டு முழுவதும், சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம், கோவிலை வடிவமைத்து இருப்பது, சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும். இந்த அதிசய நிகழ்வை காண, சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்
இத்தல இறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - புதுத்தாலி மாற்றிக் கொள்ளும் சுமங்கலிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. மதுரை சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெற்றாலும் 8,9,10 ஆம் நாட்களில் நடைபெறும் பட்டாபிஷேகம், திக்கு விஜயம், அதையடுத்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், இன்று (21.04.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும். திருமண மேடை ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, பல லட்சம் ருபாய் மதிப்புள்ள வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். இந்தத் திருக்கல்யாணத்தைக் காண திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய்பெருமாள் ஆகியோர் புறப்பட்டு வருவார்கள். வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் தூவப்படும். அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் போது புது தாலிச்சரடு மாற்றிக் கொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இப்படி ஒரு நடைமுறை, வேறு எந்த கோவில் திருவிழாவிலும் கடைபிடிக்கப்படுவதில்லை.
திருக்கல்யாணம் முடிந்தபின் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில், கோவிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். மாலையில் மாப்பிள்ளை சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். தம்பதியரின் அழகைக் காண பட்டி தொட்டி எங்கும் இருந்தும் மக்கள், மதுரைக்கு திரண்டு வருவார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை கண்ணார கண்டால் நம் வீட்டில் மணமாகாமல் இருக்கும் மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
அன்னியூர் இராமநாதீசுவரர் கோவில்
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்
விழுப்புரத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அன்னியூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது இராமநாதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
பொதுவாக சிவாலயங்களில் சனி பகவான், நவக் கிரகங்களோடு சேர்ந்தோ அல்லது தனிச் சன்னதியிலோ காக்கை வாகனத்துடன் நின்ற கோலத்தில் அருள்புரிவார். ஆனால் இத்தலத்தில் நவகிரகங்களோடு எழுந்தருளி இருக்கும் சங்கடம் தீர்க்கும் சனி பகவான் சற்று வித்தியாசமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவர் தனது வாகனமான காக்கையின் மீது வலது காலை ஊன்றி எழுந்து புறப்படும் கோலத்தில் அருளுகிறார். அதாவது தன்னை சரணடைந்து, வேண்டி அழைக்கும் பக்தர்களுக்கு உடனே புறப்பட்டு வந்து உதவத் தயாராக இருக்கிறேன்' என்பதே அந்த திருக்கோலத்தின் அடையாளம். சனிபகவானின் இந்த அற்புதமான கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிப்பது அரிது.