தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்

சிற்பிகளின் கனவு என்று கருதப்படும் கோவில்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் ஒரு அரிய விருந்தாகும் ஐராவதேசுவரர் கோவில். கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோவிலே ஐராவதேசுவரர் கோவிலாகும். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்குகின்றது.

நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்

தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியது தான், இக்கோவில். இருப்பினும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், வெண்கல வார்ப்பு இவையனைத்தும் இந்த கோவில் சோழ வம்சத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழம், முழங்கை பிறகு எட்டு வகையிலான எட்டு தாளம், நவ தாளம், தச தாளம் என எல்லாவகை அளவுகளிலும் சிற்பங்களைக் கொண்ட அதிசய கோவில் இது. சோழர்களின் போர் முறை, சிற்பம், ஆடல், கட்டுமானம், பக்தி, கட்டடம், வானவியல், ஐதீகம், புராணங்கள், சிவதத்துவம் என அனைத்தையும் சிற்பங்களாக தன்னுள் வைத்திருக்கும் பிரமாண்ட ஆலயம் இது. அடிக்கு 1000 சிற்பங்கள் என்ற புகழ் மொழியையும் கொண்ட கோவில் இது.

இக்கோவிலை, கோவில் என்று சொல்வதை விட சிற்பக் கலைக்கூடம் என்று சொல்லுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களைக் கொண்ட அபூர்வ கோவில் இது. சிற்பிகள் தங்கள் திறமை முழுவதையும் காண்பித்து இந்த கோவில் தலத்தின் உள்ளும், புறமும் நிறைய சிற்பங்கள் படைத்துள்ளனர். தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோவில் கொண்டுள்ளது.

இசைப் படிகள்

நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. சப்த ஸ்வரங்களை எழுப்பும் இந்த படிகள் மட்டுமின்றி, அங்கு இருக்கும் தூண்களும் தட்டும் போது, சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. இத்தூண்கள் வெவ்வேறு கனங்களில் இருக்கின்றன.

யானைகளும், குதிரைகளும் இழுத்துச் செல்லும் தேர் போன்ற மண்டபம்

ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும், குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில், யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.

மற்ற கோவில்களில் காணப்படாத ஒரு சில சிற்பங்கள் இங்கு வடிவமைக்க பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோவில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

வெளிச் சுவர் சிற்பங்கள்

கோவிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவன், குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் ஆகும்.

வல்லுனர்களால், 'சிற்பிகளின் கனவு' என்று கருதப்படும் இந்த கோவில், சிற்பக் கலைஞர்களுக்கும், சிற்பக் கலை ரசிகர்களுக்கும் ஒரு அரிய விருந்தாகும்.

ஐராவதேசுவரர் கோவில்

இசைப் படிகள்

ரிஷபமும், யானையும்

 
Previous
Previous

கோடகநல்லூர் கைலாசநாதசுவாமி கோவில்

Next
Next

திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோவில்