மும்பை சித்தி விநாயகர் கோவில்
நெற்றியில் கண் உள்ள விசித்திர விநாயகர்
மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோவில். இக்கோவில் 1801-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் என்றால் கேட்டதை, வேண்டியதை அப்படியே அருளும் விநாயகர் என்பது பொருள். மும்பை சுற்றுலாவின் தவிர்க்க முடியாத ஒரு இடம் சித்தி விநாயகர் கோவில்.
இந்த கோவிலில் உள்ள சித்தி விநாயகர் ஒற்றை கருங்கல்லால் ஆனவர். அவர் 2 அடி 6 அங்குல உயரமும், 2 அடி அகலமும் கொண்டவர். மற்ற விநாயகர் கோவிலில் உள்ளது போன்று இல்லாமல், இந்த சித்தி விநாயகர், தனது தும்பிக்கையை இடது பக்கம் வைத்திருப்பதற்கு பதிலாக, வலது பக்கம் வைத்திருப்பது மிகவும் சிறப்பு. இந்த விநாயகரின் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் தாங்கி இருக்கின்றார். கீழே உள்ள இடது கையில் ஒரு கிண்ணம் நிறைய மோதகம் உள்ளது. வலது கீழ் கையில் ஜெப மாலை வைத்துள்ளார். விநாயகர் பூணூலை ஒத்த, ஒரு பாம்பு உருவம் பூணல் போன்று பொறிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட விநாயகரின் நெற்றியில் கண் உள்ளது மிகவும் விசித்திரமாக பார்க்கப்படுகின்றது. சித்தி விநாயகரின் காலடியில் பளிங்கால் ஆன இரண்டு தேவியர் உள்ளனர். விநாயகரின் இருபுறமும் சித்தி மற்றும் ரித்தி(புத்தி) என்ற இரு பெண் தெய்வங்கள் உள்ளன. இவர்கள் விநாயகரின் பின் பகுதியிலிருந்து முளைத்து இருப்பது போன்றும், வளைந்து முன்பகுதியில் காட்சியளிக்கும் வண்ணம் விக்கிரகம் அமைந்துள்ளது. இரு பெண் தெய்வங்களுடன் காட்சி அளிப்பதால் இந்த விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகின்றார். இவரை மராட்டியில் நவசாக கணப்தி, நவச பவனார கணபதி என அழைக்கின்றனர்.
இக்கோவில் மிக நவீன பாணியில் கட்டப்பட்டுள்ளது. தூரத்தில் இருந்தாலும் கோவிலின் கோபுரம் தெரியும் வகையில், மிக உயரமாக, 5 அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் பிரசாதம், பிரத்தியேக லிஃப்ட் மூலம் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அர்ச்சகர்களால் கணபதிக்கு படைக்கப்படுகின்றது.
சித்தி விநாயகர் கோவிலின் மிக முக்கியமான நாள் செவ்வாய்க் கிழமை. செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் கூட்டம் அலை மோதும். செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறந்து விடுவார்கள். அடுத்த நாள் புதன்கிழமை அதிகாலை 12.30 மணி வரை நடை திறந்திருக்கும். ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே செவ்வாய் கிழமைகளில் சங்கடஹர சதுர்த்தி வரும். இதை அங்காரக சதுர்த்தி என்பர். அந்த நாளில் விநாயகரை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.
பிரார்த்தனை
குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்தவராக இந்த சித்தி விநாயகர் திகழ்கின்றார். வேண்டியது நிறைவேறினால், கோயிலுக்கு வந்து விளக்கேற்றி, எருக்கம்பூ, இலை மாலையை அணிவித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் பணக்காரராக மாறிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்தியாவின் மிக பணக்கார கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்
ஸ்ரீரங்கம் கோவில் உருவாகக் காரணமான உச்சிப்பிள்ளையார்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் தலங்களில் முதன்மையானது, திருச்சி மாநகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகும். பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் 275 அடி உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது. இந்த மலையானது தென்தமிழகத்தின் கைலாயம் என்று போற்றப்படுகின்றது. மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன.
இந்த மலைக் கோவிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.உச்சிப் பிள்ளையார் கோவிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.
தல வரலாறு
இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தி திரும்பிய ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் இராவணனின் சகோதரன் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக ராமர், விபீசணனுக்கு ரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் ராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.
விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், ரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார். சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், ரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் குட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.
விபீசணன் குட்டியதால் ஏற்பட்ட வீக்கத்தை இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் காணலாம்.
ரங்கநாதரின் சிலை வைக்கப்பட்டிருந்த இடம் நீண்ட காலமாக தீவு பகுதியான அடர்ந்த காடுகளுக்குள் மூடப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகள் கடந்து ஒரு சோழ மன்னன் கிளியைத் தேடிக் கொண்டு வரும் போது தற்செயலாக அந்த சிலை இருந்ததைக் கண்டுபிடித்தார். பின்னர் பிரம்மாண்டமான ஸ்ரீரங்கம் கோவிலை கட்டினார்
விநாயகர் சதுர்த்தி விழா - 75 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம்
விநாயக சதுர்த்தியன்று மலைக்கோட்டை கீழ் சன்னதியில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலைக்கோட்டை மேல் எழுந்தருளி இருக்கும் உச்சிப் பிள்ளையார் ஆகிய இரு சன்னதிகளுக்கும் தலா 75 கிலோ கொழுக்கட்டை என 150 கிலோ மெகா கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம். இதற்காக கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஒருநாள் முன்பே கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பச்சரிசி, மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் அவற்றை இருபங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணிநேரம் ஆவியில் வேக வைப்பார்கள். இந்தக் கொழுக்கட்டை சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து கொண்டுவரப்படும். பின்னர் இரண்டு விநாயகருக்கும் நைவேத்தியமாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோவில்
விநாயகர் சதுர்த்தியன்று செய்யப்படும் தேன் அபிஷேகத்தை உறிஞ்சும் அதிசய விநாயகர்
கும்பகோணத்தில் இருந்து 11 கி.மீ . தொலலைவிலுள்ள தேவாரத்தலம் திருப்புறம்பியம். இறைவன் திருநாமம் சாட்சிநாதேசுவரர். இறைவியின் திருநாமம் கரும்பன்ன சொல்லம்மை.
தல வரலாறு
ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தனமயால், இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயர் பெற்றது.
இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால் உருவாக்கப்பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற் கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை, வருண பகவான் உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் முழுக்க முழுக்க தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மாலை 6:30 மணிக்கு தொடங்கப்படும் அபிஷேகம் விடிய விடிய நடைபெறும். .அபிஷேகம் செய்யப்பெறும் தேன்யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். இந்தத் தேன் அபிஷேகம் நடைபெறும் வேலையில் விநாயகர் செம்பவளத் திருமேனியராய் காட்சித் தருகிறார் வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை
விநாயகர் சதுர்த்தி அன்று பிரளயம் காத்த விநாயகரை வணங்கினால் சர்வ சங்கடங்களும் நிவர்த்தியாகும்.
தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில்
ராகு- கேது உடன் இருக்க அருள் பாலிக்கும் ஸ்ரீசக்தி விநாயகர்
திருநெல்வேலி தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேது உடன் இருக்க ஸ்ரீசக்தி விநாயகர் அருள் பாலிக்கிறார் . ஸ்ரீவிநாயகருக்கு வலப்பக்கம் உள்ள ஐந்து தலை நாகத்தைப் பெருமாளாகவும், ஒற்றைத் தலை நாகத்தை சிவலிங்கமாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.
ஒருகாலத்தில், இந்த ஊரில் கோவிலே இல்லாமல் இருந்ததாம். இதனால் அங்கே அடிக்கடி துர்மரணங்கள் நிகழ்ந்ததாக எண்ணிய ஊர்மக்கள் அதையடுத்து கூடிப் பேசி, இந்த விநாயகர் கோவிலைக் கட்டினார்கள்.விநாயகப் பெருமானின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும்போது, மக்கள் கூடவே ராகு-கேது (நாக) விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் .
பிரார்த்தனை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மாங்கல்ய தோஷம், புத்திர பாக்கிய தோஷம் ஆகியவற்றால் அவதிப்படுவோர், இங்கு நாக பிரதிஷ்டையுடன் அருள் தரிசனம் தரும் ஸ்ரீவிநாயகரை வழிபட, தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வருடந்தோறும் ராகு-கேது பெயர்ச்சி அன்று ஸ்ரீகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், ஆயுளை விருத்திப்படுத்த ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை இங்கே விமரிசையாக நடைபெறும்.
திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்
விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து மாங்கனியை பெற்ற தேவாரத்தலம்
வேலூர் - ராணிப்பேட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவல்லம். இறைவன் திருநாமம் வில்வநாதேசுவரர். இறைவியின் திருநாமம் வல்லாம்பிகை. முழு முதல் கடவுளான விநாயகப் பெருமான், நாரதர் மாங்கனியை சிவபெருமானிடம் தந்த பொழுது அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன் என்று கூறி உலகிற்கு அறிவித்து சிவபெருமானையும், அம்பாளையும் வலம் வந்து வணங்கி கனியைப் பெற்றுக் கொண்டது இத் திருத்தலத்தில்தான். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இத் திருத்தலம் திருவலம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி திருவல்லம் என்றானது.
இக்கோவிலில் விநாயகர், கருவறையில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். அதனால் இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். அதற்கேற்றாற் போல துதிக்கையில் மாங்கனியை வைத்துக் கொண்டு வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தனது வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்திருப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். முருகப் பெருமானுடன் நடந்த போட்டியில் விநாயகப் பெருமான் ஞானப் பழத்துடன் இத்திருத்தலத்தில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனால், இவரை வணங்கும் பேறு பெறுவோர், பிறப்பற்ற நிலையை அடைவர் என்று சொல்கிறார்கள்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில்
ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில். விநாயகர் மூலவராக எழுந்தருளி இருக்கும் கோவில்களில், இக்கோவில் ஆசியாவிலேயே மிகப் பெரியது ஆகும். 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் சுமார் 80 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் உடையது.
முற்காலத்தில், நெல்லை டவுனில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயிலில் வழிபாடு நடக்கும்போது அங்குள்ள பிரமாண்ட மணி ஒலிக்கும். அதைக் கேட்டு இந்தக் கோவிலில் மணியோசை எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனால் மூர்த்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் 'மணிமூர்த்தீஸ்வரம்' என்று வழங்கலாயிற்று.
இக்கோவில் மூலவருக்கு உச்சிஷ்ட கணபதி என்பது திருநாமம். விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது திருவடிவம் உச்சிஷ்ட கணபதி. அவரது மனைவியான நீலவாணியைத் தன் இடது தொடையில் அமரவைத்தபடிக் காட்சி கொடுக்கிறார். மூலவர் உச்சிஷ்ட கணபதியைச் சுற்றிய பிரகாரத்தில் 16 வகை விநாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில், காலையில் சூரியபகவான் தன் ஒளிக்கிரணங்களால் விநாயகரைத் தழுவி வழிபாடு செய்யும் அற்புதத் திருக்கோல தரிசனம் நடைபெறும். அந்த நேரத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிரார்த்தனை
இத்தலம் கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் ஆகியவற்றிற்கான நிவர்த்தித் தலமாகும். விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால், இங்கு வந்து வேண்டிக் கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணத்தடைகள் நீங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தேவியோடு விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும்.
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில்
நீரிழிவு நோயை குணப்படுத்தும் நீலகண்ட பிள்ளையார்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் நீலகண்ட பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த பிள்ளையாருக்கு தீராத வினை தீர்க்கும் நீலகண்ட பிள்ளையார் என்று சிறப்பு பெயரும் உண்டு.
விநாயகர் மூலவராக தனிக்கோவில் கொண்டு எழுந்தருளிய, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் வரிசையில் பேராவூரணியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோவிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது. பேராவூரணியில் உள்ள ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தல வரலாறு
கிபி 1825 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் . இதற்காக சிகிச்சைக்காக திருப்பெருந்துறை செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரசு பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில் தனது பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையாருக்கு இரண்டு பேர் பூஜை செய்வதையும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார்.
உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்குள்ள நோயைப் பற்றி பூஜை செய்பவர்களிடம் கூறினார். உடனே அவர்கள் இன்று இரவு நீங்கள் இங்கு தங்கி விட்டு மறுநாள் காலையில் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் நீராடி விட்டு நீலகண்ட பிள்ளையாரை வணங்கி திருநீறு பூசுங்கள். உங்கள் நோய் உடனே குணமாகும் என்று அவர்கள் கூறியபடி அமைச்சரும் இரவில் தனது பரிவாரங்களுடன் கோவிலில் தங்கினார். மறுநாள் காலையில் கோவில்குளத்தில் குளித்துவிட்டு நீலகண்ட பிள்ளையாரை நினைத்து திருநீறு பூசினார். உடனே நீரிழிவு நோய் முற்றிலுமாக குணமானதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
பிரார்த்தனை
இக்கோவில் நீரிழிவு நோய்க்கான பரிகாரத்தலமாக விளங்குகின்றது. புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டு தங்கள் தொழிலை தொடங்கினால் அவர்கள் தொடங்கிய தொழில் பல மடங்கு வளர்ச்சி அடைந்து அதிக லாபம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .
தகடி அழகியநாதேசுவரர் கோவில்
வேத கோஷத்தை ஒய்யாரமாக அமர்ந்து கேட்கும் ஆனந்த விநாயகர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள தகடி என்னும் ஊரில் அமைந்துள்ளது அழகியநாதேசுவரர் கோவில். இறைவன் திருநாமம் அழகியநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை.
இக்கோவிலில் விநாயகர் வேத கோஷத்தை கேட்கும் ஆனந்த நிலையில் நமக்கு தரிசனம் தருகிறார். விநாயகர் நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடித்து வலது காலை ஊன்றி, ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் கண் மூடி தலையை சாய்த்து வேத மந்திரங்களை ஊன்றி கவனிக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார். விநாயகரின் இந்த ஒய்யார தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நேமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர் கோவில்
ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ விநாயகர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 12 கி.மீ., தூரத்தில் நேமம் உள்ளது. இறைவன் திருநாமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர். இறைவியின் திருநாமம் சவுந்தர நாயகி. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது.
கருவறை அருகில் ஆவுடையின் மேல் விநாயகர் இருக்கிறார். இப்படி ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
பொதுவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கும் பைரவர் இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோவில் தூண்களில் வித்தியாசமான வடிவமைப்பில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன. விநாயகரைப் போல் தலையும், கழுத்திலிருந்து இடுப்பு பகுதி வரை பெண் வடிவமும், ஒரு பாதம் எருது வடிவிலும், மற்றொரு பாதம் சிம்ம வடிவிலும் கொண்ட ஒரு சிற்பம் கண்ணைக் கவர்வதாக உள்ளது. இக்கோவில் சிற்பங்கள், யாவரும் வியக்கும்படியான நுட்பமான சிற்ப வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.
பிரார்த்தனை
சிவன் மன்மதனை வெற்றி கொண்ட தலம் என்பதால், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வரும் இடையூறுகளைக் கடக்கவும், கல்வியில் முதலிடம் பெறவும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெல்லவும் இங்கு சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ விநாயகர்
அருப்புக்கோட்டை படித்துறை விநாயகர் கோவில்
ஜடாமுடியுடன், தவக்கோலத்தில் தோற்றமளிக்கும் அபூர்வ விநாயகர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் படித்துறை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் விநாயகர் ஜடாமுடியோடு வித்தியாசமாக காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பாண்டிய மன்னன் ஒருவனுக்கு, சாபத்தினால் உடலில் தீராத நோய் ஒன்று ஏற்பட்டது. அந்த சாப நிவர்த்திக்காகவும், தனது நோய் நீங்கிடவும் , அந்த பாண்டிய மன்னன் அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோவில் அருகிலேயே ஒரு திருக்குளத்தினை வெட்டினான். அந்த திருக்குளம் வெட்டிய இடத்தில், புதையுண்டுக் கிடந்த அழகிய விநாயகர் சிலை ஒன்றுக் கிடைத்தது. எல்லா விநாயகர் சிலை போன்று அல்லாமல் , அந்த விநாயகர் சிலை தலையில் கிரீடம் இல்லாமல், ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் காணப்பட்டதாம்.எனவே இந்த விநாயகர் சிலை காலத்தால் , பாண்டிய ஆட்சிக்கும் முற்பட்டது எனவும் , தவக்கோலத்தில் இருப்பதால், சித்தர்களாலும், முனிவர்களாலும் இவர் பூஜிக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள்.
பாண்டிய மன்னன் இந்த சிலையை , திருக்குளத்தின் ஈசான்ய மூலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்,.காலங்கள் பல மாறிய பின்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலை முன்பு இருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, அதே ஈசான்ய மூலையில் புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
மாங்கல்ய பாக்யம் வேண்டுவோர் வழிபட சிறந்த கோயிலாகும். விநாயகர் சதுர்த்தி, மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
திருவாரூர் ஐநூற்று விநாயகர் கோவில்
மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்த விநாயகர் கோவில்
திருவாரூர் அருகே விஜயபுரம் காந்தி சாலையில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ஐநூற்றுப்பிள்ளையார் கோயில் உள்ளது. மூலவர் ஐநூற்று விநாயகர்.
கணபதி வழிபாட்டுக்கெனவே பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தைத் திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் தமிழில் இயற்றியிருக்கிறார். சக்திகள் ஐம்பத்தொரு வகை என்றும், அதனால் கணபதியும் ஐம்பத்தொரு வகை என்றும் வரலாறு கூறுகிறது. ஐம்பத்தொரு சக்திகளையும் தன்னிடத்தே கொண்ட பிள்ளையார் கோவில் கொண்டதால் திருவாரூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு ஐம்பத்தொரு பிள்ளையார் கோவில் எனப் பெயர் வந்தது. அது மருவி ஐநூற்றொரு பிள்ளையார் என்றும், இப்போது ஐநூற்றுப்பிள்ளையார் என்றானது. ஐநூற்று விநாயகரை வணங்கினால், ஐந்நூறு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக கணபதி கோயில்களில் மூலவருக்கு மட்டுமே கருவறையில் தினசரி பூஜை நடக்கும். ஆனால் இக்கோவிலில் மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்துள்ளது. தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளதோடு, இருவருக்குமே தினமும் ஆராதனைகள் நடைபெறுகிறது. நின்ற கோலத்தில் உள்ள உற்சவர். திருவிழா நாட்களில் நான்கு வீதிகளில் வீதியுலா வருகிறார். மூலவர், உற்சவர் தவிர, பிராகாரத்திற்குள் 18 பிள்ளையார்கள் தனித் தனி மாடங்களில் உள்ளனர்.
ஐநூற்று விநாயகரை வணங்கினால் ஐஸ்வர்யம் பெருகும். அறிவு, ஆற்றல், பெருமை, கல்வியோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில்
உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ள, தமிழகத்திலேயே உயரமான விநாயகர்
தஞ்சாவூர்-வல்லம் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஹரித்ரா விநாயகர் கோவில். காரைக்குடியில் ஒரு பிள்ளையார்பட்டி இருப்பதால் இக்கோவில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஹரித்ரா என்றால் மங்களம் என்று பொருள்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், மாமன்னன் ராஜராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள சிற்பக்கூடத்தில் இருந்து நந்தி மற்றும் விநாயகர் விக்கிரகங்களை யானை பூட்டிய தேரில் வைத்து எடுத்து வந்தான். அப்படி வரும் வழியில், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து, தேர் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. தேரின் அச்சு முறிந்ததால் விநாயகர் சிலையின் இடது பக்க தந்தம் உடைந்து விட்டது. இதனால் பின்னம் அடைந்த சிலை, தஞ்சை பெரிய கோவிலுக்கு வேண்டாம் என்று ராஜராஜ சோழன் முடிவு செய்து விட்டான். இருப்பினும் விநாயகர் சிலையை, அதே பகுதியில் பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயத்தை எழுப்பினான். அதுவே பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் ஆகும். பெரிய பிள்ளையாரை தரிசிக்க, மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவுவாசல் அமைக்கப்பட்டிருப்பது. பொதுவாக விநாயகருக்கு, எலிதான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு நந்தியே விநாயகரின் முன்புறம் வாகனமாக இருப்பது கவனிக்கத்தக்கது.
இங்குள்ள விநாயகர் சிலை, தமிழகத்திலேயே உயரமான சிலை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரின் உயரம் 11 அடி. தரை மட்டத்துக்கு கீழே அமைந்துள்ள அடிபீடம் 5 அடி கொண்டது. இந்த சிலையில் ஒரு தந்தம் உடைந்து காணப்படுகிறது. பிள்ளையாரின் முதுகு பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகரின், நாபி அருகில் பாம்பு ஒன்று படமெடுத்தபடி உள்ளது. அது விநாயகரின் உடலை சுற்றிய நிலையில் காணப்படுகிறது.
கேது நிவர்த்தி தலம்
ஹரித்ரா விநாயகரின் உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ளது. எனவே இந்த தலம் கேது நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது. திருமண தடை நீக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், தீராத நோயை தீர்க்கவும் உகந்த ஆலயம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்
சாளக்கிராம கற்களாலான நிறம் மாறும் அதிசய விநாயகர்
தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கிராமத்தில் அமைந்துள்ளது கைலாசநாதர் சுவாமி கோவில். இக்கோவிலை முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன், கி.பி. 944-ல் நிர்மாணித்தார். கும்பகோணத்திற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை, உப்பிலியப்பன் கோவில் வழியாக சென்று அடையலாம்.
இங்குள்ள விநாயகர் சிற்பம் தெய்வீக சிறப்புடையது. இவரை கொங்கணச் சித்தர் 'தபசு மரகத விநாயகர்' எனப் போற்றுகின்றார். இந்த விநாயகர், கையில் தபசு மாலை ஏந்தி, நாகாபரணத்தை வயிற்றில் தாங்கி வழவழப்பான சாளக்கிராம கற்களால் ஆனவர். விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது. இவரின் துதிக்கை, உடல் மீதே படாத வண்ணம் இருக்கும் அமைப்பானது சகல வளங்களையும், ஞானத்தையும் நமக்கு தரவல்லது,
இந்த விநாயகரின் மீது, சூரிய ஒளி காலையில் விழுகையில் பச்சை வர்ணமாகவும், மதியம் நீல வர்ணமாகவும், மீண்டும் மாலை வேளையில் பச்சை வர்ணமாகவும் இவர் நிறம் மாறி காட்சி தருகிறார். இந்த வினாயகர் வெளிச்சத்தில் ஒரு நிறமும், இருட்டில் ஒரு நிறமுமாக இருப்பார். வெளிச்சம் பட அந்த வினாயகரின் நிறம் வெள்ளையாக இருக்கும். சற்று மழைமேகம் திரண்டால் வினாயகரின் மேனி கருப்பாகி விடும். அந்தக்கல் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
இந்த கணபதியை அனைத்து சித்தர் புருஷர்களும் தொழுது இன்புற்றனர் என்கிறார் அகத்தியர்.
யாமறிந்த சித்தரெல்லாம் கேரளாந்தக
சதுர்வேத மங்களங்குடி நின்ற
தனித் துதிக்கையானை - சாளக்
கிராம மேனியனை சிசுவடிவான
அருணனோடு ஆடிப்பாடி தொழ
கண்டோமே
என அவர் போற்றி இருக்கிறார்.
நாக தோஷம் கொண்ட மனிதர்களுடைய தோஷம் நீக்க, பூமியில் பற்பல தலங்கள் உண்டு. ஆனால், தேவர்களுக்கு நாகதோஷம் நீங்க வேண்டுமாயின் அவர்கள் வழிபட வேண்டிய தலம், இந்த சாளக்கிராம விநாயகர் தலமாகும்.
காரைக்குடி நூற்றியெட்டு பிள்ளையார் கோவில்
ஒரே கோவிலில், பல கோலங்களில் காட்சிதரும் நூற்றியெட்டு பிள்ளையார்கள்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரத்தில் அமைந்துள்ளது நூற்றியெட்டு பிள்ளையார் கோயில். இக்கோவிலில் 108 பிள்ளையார் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 54 பிள்ளையார் விக்ரகங்கள் மேல் வரிசையிலும், மீதி 54 விக்கிரகங்கள் கீழ் வரிசையிலும் அமைந்துள்ளன. மேல் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை இடது பக்கம் சுழித்தும், கீழ் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை வலது பக்கம் சுழித்தும் இருக்கின்றன.
தாமரை மலர் மேல் நிற்கும் பிள்ளையார், வல்லப கணபதி, மகா கணபதி, சித்தி புத்தி விநாயகர், மூஷிக கணபதி, சிம்ம வாகனத்தின் மேல் வீற்றிருக்கும் ஹேரம்ப கணபதி, சங்கு சக்கரம் ஏந்திய விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகியவை இங்கு எழுந்தருளி இருக்கும் விநாயகரின் சில கோலங்கள் ஆகும். நூற்றியெட்டு பிள்ளையார்களை ஒரு சேர தரிசிக்க முடியும் என்பதால், பல வெளியூர் மக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றார்கள்
பிள்ளையார், அவரை வழிபடுவோரின், வாழ்வில் வரக்கூடிய அனைத்து இன்னல்களையும், தீர்க்கவல்லவர் என்று நம்பப்படுவதால், இங்கு உள்ளூர் மக்களும் அதிக அளவில் வருகின்றனர். அதனால், மக்கள் புது முயற்சிகள் எதுவும் எடுப்பதற்கு முன், இங்கு வந்து பிள்ளையாரை பிரார்த்தித்து விட்டு, அதற்குப் பின்பே ஆரம்பிக்கின்றனர். புது முயற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் பிள்ளையாரை வழிபட்டால், அம்முயற்சிகள் தடங்கல்கள் ஏதுமின்றி, நல்ல பலனைக் கொடுக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
இங்கு பிள்ளையாரை குளிர்விப்பதற்கு, பக்தர்கள், அவருக்கு மிக விருப்பமான லட்டு மற்றும் மோதகம் ஆகியவைகளை காணிக்கையாகப் படைக்கின்றனர்.
திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில்
சிங்க வாகனத்தில் அமர்ந்து அருள்புரியும் பஞ்சமுக விநாயகர்
சென்னை மாநகரத்தின் திருவொற்றியூர் பகுதியில், தட்சிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி மூலவராக,வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் பஞ்சமுக விநாயகர், ஆறடி உயரத்தில் தனிச் சன்னதியில் சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறார்.
ஐந்து முக விநாயகருக்கு ஹேரம்ப விநாயகர் என்று பெயர். ஹேரம்ப விநாயகர் என்பது விநாயகரின் 32 வடிவங்களில் 11 வது திருவுருவம் ஆகும். ஹேரம்ப என்றால் சிங்கம் என்றும் எளியவர்க்கு அருள் புரிபவர் என்றும் பொருள் கொள்ளலாம். நம் பிரார்த்தனைகள் விரைவாக நிறைவேறிட சிங்கத்தின் மீது அமர்ந்த விநாயகரை வழிபட வேண்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
இத்தலத்து ஹேரம்ப விநாயகரது ஐந்து முகங்களும் ஒரே திசையை நோக்கி வரிசையாக அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இவர் பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தி, எட்டு திசைகளையும் பரிபாலிக்கிறார். இவர் கரங்களில் உள்ள பாசம், தந்தம், அட்சமாலை, மாவெட்டி, உலக்கை, கோடாரி, மோதகம், கனி ஆகிய எட்டும் எட்டு திசைகளை பரிபாலிப்பதாக ஐதீகம்.
இவருக்கு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்
கையில் பாம்பை ஏந்தியவாறு காட்சி தரும் சர்ப்ப விநாயகர்
தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவன் சங்கரலிங்கசுவாமி. இறைவி கோமதி அம்மன்.
இக்கோவிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவர் 6 அடி உயர திருமேனியுடன் சர்ப்பத்தின் மேல் அமர்ந்து காட்சியளிக்கிறார். தனது இடது கையால் சர்ப்பத்தின் தலையை பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோவிலின் ஐதீகம். இந்த சர்ப்ப விநாயகரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ராகு, கேது போன்ற சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க, இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர். இவரை வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி மழலைச் செல்வம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்
காய்ச்சல் நீங்க மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியமாக படைக்கப்படும் ஜுரஹர விநாயகர்
கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவாரத்தலம் நாகேஸ்வரர் கோவில். இக்கோவில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஜுரஹர விநாயகர் எழுந்தருளியிருக்கிறார்.
உஷ்ண சம்பந்தமான நோய்கள் நீங்குவதற்கு, இங்கே வந்து ஜுரஹர விநாயகருக்கு அபிஷேகம் செய்து, மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். வெப்ப நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து பரிகாரம் செய்யும் போது மட்டுமே மிளகு ரசம் சாதம், துவையல் நைவேத்தியம். மற்ற நாள்களில் சாதாரண நைவேத்தியமே படைக்கப்படுகிறது. இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு. அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து ஜுரஹர விநாயகருக்கு அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது.
கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவில்
மயிலை வாகனமாகக் கொண்ட கணபதி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறிலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கணபதி அக்ரஹாரம். ஒரு சமயம் இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சம் நீங்க, கௌதம மகரிஷியால் பூஜிக்கப்பட்டு பஞ்சம் நீங்கிய காரணத்தால் இவ்விடத்தை 'அண்ணகோஷஸ்தலம்' என்று புராணங்கள் குறிப்பிட்டு இருக்கின்றன. இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்துக் காத்தருள்கிறார் மகா கணபதி. இந்த கிராமத்தில் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாகவும் விளங்குகிறார்.
பொதுவாக, முருகனின் வாகனமாகத்தான் மயில் கருதப்படுகிறது. ஆனால், இக்கோயிலில் உள்ள கணபதிக்கும் மயில்தான் வாகனமாய்த் திகழ்கிறது. எனவே, இந்தக் கணபதியை மயூரிவாகனன் என்றும் அழைக்கிறார்கள்.
ஒரு சமயம், அகத்திய முனிவர் தவத்திற்கு இடையூறாக இருந்த காவேரியின் 'சல சல' என்று நீர்கட்டத்தின் ஆரவார சப்தம், அவரை கோபம் அடைய செய்தது. அவருடைய தவவலிமையால் காவேரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட, சோழ தேசமானது வளம் குன்றி, பஞ்சம் ஏற்பட்டு தேவ பூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட விநாயகப்பெருமானும் காக்கை உருவம் ஏற்று கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட காவேரியும் பெருக்கு எடுத்து சென்று எல்லா இடங்களிலும் பாய்ந்து மீண்டும் சோழ வளநாடு வளம் பெற்றது. அகத்திய மாமுனி தட்டி விட்ட காக்கையை பின்தொடர, அக்காக்கையே இவ்விடத் தில் விநாயகப்பெருமானாய் அவருக்கும், காவேரி தாய்க்கும் காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.
வினோதமான விநாயக சதுர்த்தி பூஜை
இவ்வூரில் விநாயக சதுர்த்தியை கொண்டாடுவது சற்று வினோதமான வழக்கமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று இந்த ஊர் மக்கள், களிமண்ணில் பிள்ளையார் செய்து வீட்டில் வைத்து பூஜிப்பது கிடையாது. தங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டை போன்ற நிவேதனப் பொருள்களை எடுத்துக் கொண்டு அனைவருமே மகா கணபதி ஆலயத்திற்கு வருகின்றனர். கோவிலில் தான் விநாயகர் சதுர்த்தி பூஜை, நிவேதனம் எல்லாம் செய்கின்றார்கள்.
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்
கபால மாலையும், ஒட்டியாணமும் அணிந்த கபால கணபதி
கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், திருவிடைமருதூர் அருகே உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. இக்கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகும்.
இக்கோவிலின் கன்னி மூலையில், தனி சன்னிதியில் கபால கணபதி எழுந்தருளியுள்ளார் . இவர் கழுத்தில் மண்டையோடுகள் மாலையாக அணி செய்கின்றன. இந்த கபால கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல் நீண்டுள்ளது. மனிதனுக்குத் தெரிவது போல், இவர் உடலில் நரம்புகள் தெரிகின்றன. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார்.
ஒரு மகா பிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில் அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே தெரிந்தது. இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விநாயகரை தியானித்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், இத்தலம் புனிதமானது. இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி இல்லாத புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும் பாக்கியம் கிட்டும். ஈசனுடன், அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம். அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள், நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும். அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி, என் இடுப்பில் ஒட்டியாணமாக அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும் போது, அவரது இடுப்பில் உள்ள கபால ஒட்டியாணத்தை தரிசிக்கலாம்.
இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி
https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2-gcz2h
2. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்
https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2
3. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்
https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85
கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில்
அபிஷேகத்தின்போது பச்சை நிறமாக மாறும் விநாயகர்
அரியலூர் மாவட்டத்தில், யுனெஸ்கோ அமைப்பு உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கில், ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் கோவில். இவரின் திருமேனி மரகதக் கல்லால் ஆனது. இந்த விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, இவரின் திருமேனி பச்சை நிறமாக மாறுவது தனிச் சிறப்பாகும்.
ராஜேந்திர சோழனுக்கு கோவில் செலவுக் கணக்கை சுட்டிக் காட்டிய விநாயகர்
கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்த போது ராஜேந்திர சோழன், தன் அரண்மனைக்கு முன் பச்சை நிறக் கல்லினால் ஆன விநாயகர் சிலையை நிர்மாணித்து வழிபட்டு வந்தான். இந்த விநாயகரை பக்தர்கள் கனக விநாயகர் என்று போற்றுவர். இந்த விநாயகர் இருக்கும் இடத்திலிருந்து வடகிழக்குப் பகுதியில் ராஜேந்திர சோழன் 180 அடி உயரம் கொண்ட பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டும் பணியை அமைச்சர் ஒருவர் கவனித்து வந்தார். திருப்பணிகளுக்குத் தேவையான பொன், பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார். அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன் வைத்து வணங்கிய பின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
ஒரு நாள் ராஜேந்திர சோழன், 'பதினாறு ஆண்டுகளாக கட்டிக்கொண்டிருக்கும் இந்த ஆலயத்த்திற்கு இதுவரை எவ்வளவு பொருள் செலவாகியிருக்கும் என்று நாளைக் காலையில் கூறுங்கள்' என்று அமைச்சரிடம் கணக்கு சொல்லும்படி கேட்டான். திடீர் என்று மன்னன் கோயில் கட்டும் பணிக்கு ஆன செலவைக் கேட்டதில் ஒன்றும் புரியாமல் தவித்தார் அமைச்சர். அவரிடம் சரியான கணக்கு இல்லாததால் அரண்மனை வாசலில் முன் காட்சி தந்த விநாயகரிடம் 'எந்தக் கணக்கை சொல்வது? என்ன சொல்வது?' என்றும் இதற்குத் தகுந்த பதில் கூறுமாறும் விநாயகரிடம் வேண்டினார்.
அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய விநாயகர், 'கவலை வேண்டாம். எத்து நூல் எட்டு லட்சம் பொன்' என்று சொல்லிவிட்டு மறைந்தார். மறு நாள் காலை அரசவைக்கு வந்து அமைச்சர் ஓலைச்சுவடி கட்டினைப் பிரித்து எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று ஓலைச் சுவடியில் எழுதியதை கணக்காகச் சொன்னார். 'ஓ! எத்து நூல் எட்டு லட்சம் பொன் ஆனதா? கோயில் கட்டுவதற்கு, சரியான அளவு பார்ப்பதற்கு மட்டும் வாங்கிய நூல், அதாவது எத்து நூல் மட்டுமே எட்டு லட்சம் பொன் என்றால், கோயில் மிகவும் சிறந்த முறையில்தான் உருவாகிறது' என்று மகிழ்ந்தான் சோழன். 'அமைச்சரே, எத்து நூல் மட்டும் எட்டு லட்சம் பொன் என்று எப்படி கணக்கிட்டீர்கள்' என்று தன் சந்தேகத்துக்கு பதில் கேட்டான்.
அமைச்சர் உண்மையை சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 'மன்னா! உண்மையில் கோயில் கட்டும் பணியின் கணக்கை என்னால் சரியாகப் பராமரிக்க முடியவில்லை. கோயில் கட்டும் பணிக்கு காசாளரிடம் பொருள் வாங்கியதும் அந்தப் பொற்காசுகளை அரண்மனை வாசல் முன் அருள்புரியும் விநாயகர் முன் சமர்பித்து வணங்கிய பின் எடுத்துச் சென்று பணிகளை கவனிப்பேன். தாங்கள் கணக்கைக் கேட்டதும் அரண்மனை வாயிலில் அருள்புரியும் நமது கனக விநாயகரை வேண்டினேன். அவர்தான் நேற்று இரவு என் கனவில், எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று கணக்கு சொன்னார்' என்றார். அமைச்சர் உண்மையை சொன்னதும் மன்னருக்கு மகிழ்ச்சி. விநாயகப் பெருமான் சொன்னதால் கணக்கு சரியாகத்தான் இருக்கும் என்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்தான். அன்றிலிருந்து இந்தக் கனக விநாயகர், கணக்கு விநாயகர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இந்த அற்புத விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறு இடத்திற்கு மாற்றிவிடக்கூடாது என்று நினைத்த மன்னன், 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இந்த விநாயகரின் சன்னிதி முன் மிகச்சிறிய நுழைவு வாசலைக் கட்டினான். கோயிலை இடித்து அகற்றினால்தான் இந்த சிலையை அகற்ற முடியும். அந்நியர் படையெடுப்பு நடந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருளே காரணமாகும்.
எத்து நூல்
அது என்ன எத்து நூல்? எத்து நூல் என்பது மரத்திலும், சுவரிலும் வளைவு வராமல் இருக்க, நேராக கட்டுமானப்பணி திகழ்வதற்காகப் பயன்படுத்தும் நூலை எத்து நூல் என்பார்கள் எத்து நூல் எண்பது லட்சம் பொன் என்றால் கல், மரம், மணல், சுண்ணாம்பு எவ்வளவு வாங்கப்பட்டிருக்கும் என்று அரசரையே யோசிக்க வைக்கும் கணக்கை சொன்னதால் இந்த பிள்ளையார் கணக்குப் பிள்ளையார் ஆனார்.
புதன் தோஷ நிவர்த்தி தலம்
நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. ஞான காரக கேதுவின் அதிதேவதையான விநாயகர் இங்கு மரகத மூரத்தியாக விளங்குவதால், புதனால் ஏற்படும் தோஷங்களை நீக்குபவராக விளங்குகிறார்.
புதிதாக ஆலயம் கட்டும் முயற்சியில் ஈடுபடுவோர், ஏற்கனவே உள்ள ஆலயத்தை புதுப்பிக்க நினைப்போர், சொந்தமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் புதிதாக வணிகம் தொடங்குவோர், ஏற்கனவே செய்துவரும் வணிகத்தில் சரிவை சந்திப்பவர்கள், கல்வியில் மேன்மை பெற விரும்புபவர்கள், இந்த விநாயகரை வழிபட்டு பலன் பெறலாம்.