தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில்
உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ள, தமிழகத்திலேயே உயரமான விநாயகர்
தஞ்சாவூர்-வல்லம் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஹரித்ரா விநாயகர் கோவில். காரைக்குடியில் ஒரு பிள்ளையார்பட்டி இருப்பதால் இக்கோவில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஹரித்ரா என்றால் மங்களம் என்று பொருள்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், மாமன்னன் ராஜராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள சிற்பக்கூடத்தில் இருந்து நந்தி மற்றும் விநாயகர் விக்கிரகங்களை யானை பூட்டிய தேரில் வைத்து எடுத்து வந்தான். அப்படி வரும் வழியில், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து, தேர் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. தேரின் அச்சு முறிந்ததால் விநாயகர் சிலையின் இடது பக்க தந்தம் உடைந்து விட்டது. இதனால் பின்னம் அடைந்த சிலை, தஞ்சை பெரிய கோவிலுக்கு வேண்டாம் என்று ராஜராஜ சோழன் முடிவு செய்து விட்டான். இருப்பினும் விநாயகர் சிலையை, அதே பகுதியில் பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயத்தை எழுப்பினான். அதுவே பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் ஆகும். பெரிய பிள்ளையாரை தரிசிக்க, மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவுவாசல் அமைக்கப்பட்டிருப்பது. பொதுவாக விநாயகருக்கு, எலிதான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு நந்தியே விநாயகரின் முன்புறம் வாகனமாக இருப்பது கவனிக்கத்தக்கது.
இங்குள்ள விநாயகர் சிலை, தமிழகத்திலேயே உயரமான சிலை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரின் உயரம் 11 அடி. தரை மட்டத்துக்கு கீழே அமைந்துள்ள அடிபீடம் 5 அடி கொண்டது. இந்த சிலையில் ஒரு தந்தம் உடைந்து காணப்படுகிறது. பிள்ளையாரின் முதுகு பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகரின், நாபி அருகில் பாம்பு ஒன்று படமெடுத்தபடி உள்ளது. அது விநாயகரின் உடலை சுற்றிய நிலையில் காணப்படுகிறது.
கேது நிவர்த்தி தலம்
ஹரித்ரா விநாயகரின் உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ளது. எனவே இந்த தலம் கேது நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது. திருமண தடை நீக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், தீராத நோயை தீர்க்கவும் உகந்த ஆலயம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.