கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில்
அபிஷேகத்தின்போது பச்சை நிறமாக மாறும் விநாயகர்
அரியலூர் மாவட்டத்தில், யுனெஸ்கோ அமைப்பு உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கில், ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் கோவில். இவரின் திருமேனி மரகதக் கல்லால் ஆனது. இந்த விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, இவரின் திருமேனி பச்சை நிறமாக மாறுவது தனிச் சிறப்பாகும்.
ராஜேந்திர சோழனுக்கு கோவில் செலவுக் கணக்கை சுட்டிக் காட்டிய விநாயகர்
கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்த போது ராஜேந்திர சோழன், தன் அரண்மனைக்கு முன் பச்சை நிறக் கல்லினால் ஆன விநாயகர் சிலையை நிர்மாணித்து வழிபட்டு வந்தான். இந்த விநாயகரை பக்தர்கள் கனக விநாயகர் என்று போற்றுவர். இந்த விநாயகர் இருக்கும் இடத்திலிருந்து வடகிழக்குப் பகுதியில் ராஜேந்திர சோழன் 180 அடி உயரம் கொண்ட பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டும் பணியை அமைச்சர் ஒருவர் கவனித்து வந்தார். திருப்பணிகளுக்குத் தேவையான பொன், பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார். அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன் வைத்து வணங்கிய பின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
ஒரு நாள் ராஜேந்திர சோழன், 'பதினாறு ஆண்டுகளாக கட்டிக்கொண்டிருக்கும் இந்த ஆலயத்த்திற்கு இதுவரை எவ்வளவு பொருள் செலவாகியிருக்கும் என்று நாளைக் காலையில் கூறுங்கள்' என்று அமைச்சரிடம் கணக்கு சொல்லும்படி கேட்டான். திடீர் என்று மன்னன் கோயில் கட்டும் பணிக்கு ஆன செலவைக் கேட்டதில் ஒன்றும் புரியாமல் தவித்தார் அமைச்சர். அவரிடம் சரியான கணக்கு இல்லாததால் அரண்மனை வாசலில் முன் காட்சி தந்த விநாயகரிடம் 'எந்தக் கணக்கை சொல்வது? என்ன சொல்வது?' என்றும் இதற்குத் தகுந்த பதில் கூறுமாறும் விநாயகரிடம் வேண்டினார்.
அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய விநாயகர், 'கவலை வேண்டாம். எத்து நூல் எட்டு லட்சம் பொன்' என்று சொல்லிவிட்டு மறைந்தார். மறு நாள் காலை அரசவைக்கு வந்து அமைச்சர் ஓலைச்சுவடி கட்டினைப் பிரித்து எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று ஓலைச் சுவடியில் எழுதியதை கணக்காகச் சொன்னார். 'ஓ! எத்து நூல் எட்டு லட்சம் பொன் ஆனதா? கோயில் கட்டுவதற்கு, சரியான அளவு பார்ப்பதற்கு மட்டும் வாங்கிய நூல், அதாவது எத்து நூல் மட்டுமே எட்டு லட்சம் பொன் என்றால், கோயில் மிகவும் சிறந்த முறையில்தான் உருவாகிறது' என்று மகிழ்ந்தான் சோழன். 'அமைச்சரே, எத்து நூல் மட்டும் எட்டு லட்சம் பொன் என்று எப்படி கணக்கிட்டீர்கள்' என்று தன் சந்தேகத்துக்கு பதில் கேட்டான்.
அமைச்சர் உண்மையை சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 'மன்னா! உண்மையில் கோயில் கட்டும் பணியின் கணக்கை என்னால் சரியாகப் பராமரிக்க முடியவில்லை. கோயில் கட்டும் பணிக்கு காசாளரிடம் பொருள் வாங்கியதும் அந்தப் பொற்காசுகளை அரண்மனை வாசல் முன் அருள்புரியும் விநாயகர் முன் சமர்பித்து வணங்கிய பின் எடுத்துச் சென்று பணிகளை கவனிப்பேன். தாங்கள் கணக்கைக் கேட்டதும் அரண்மனை வாயிலில் அருள்புரியும் நமது கனக விநாயகரை வேண்டினேன். அவர்தான் நேற்று இரவு என் கனவில், எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று கணக்கு சொன்னார்' என்றார். அமைச்சர் உண்மையை சொன்னதும் மன்னருக்கு மகிழ்ச்சி. விநாயகப் பெருமான் சொன்னதால் கணக்கு சரியாகத்தான் இருக்கும் என்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்தான். அன்றிலிருந்து இந்தக் கனக விநாயகர், கணக்கு விநாயகர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இந்த அற்புத விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறு இடத்திற்கு மாற்றிவிடக்கூடாது என்று நினைத்த மன்னன், 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இந்த விநாயகரின் சன்னிதி முன் மிகச்சிறிய நுழைவு வாசலைக் கட்டினான். கோயிலை இடித்து அகற்றினால்தான் இந்த சிலையை அகற்ற முடியும். அந்நியர் படையெடுப்பு நடந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருளே காரணமாகும்.
எத்து நூல்
அது என்ன எத்து நூல்? எத்து நூல் என்பது மரத்திலும், சுவரிலும் வளைவு வராமல் இருக்க, நேராக கட்டுமானப்பணி திகழ்வதற்காகப் பயன்படுத்தும் நூலை எத்து நூல் என்பார்கள் எத்து நூல் எண்பது லட்சம் பொன் என்றால் கல், மரம், மணல், சுண்ணாம்பு எவ்வளவு வாங்கப்பட்டிருக்கும் என்று அரசரையே யோசிக்க வைக்கும் கணக்கை சொன்னதால் இந்த பிள்ளையார் கணக்குப் பிள்ளையார் ஆனார்.
புதன் தோஷ நிவர்த்தி தலம்
நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. ஞான காரக கேதுவின் அதிதேவதையான விநாயகர் இங்கு மரகத மூரத்தியாக விளங்குவதால், புதனால் ஏற்படும் தோஷங்களை நீக்குபவராக விளங்குகிறார்.
புதிதாக ஆலயம் கட்டும் முயற்சியில் ஈடுபடுவோர், ஏற்கனவே உள்ள ஆலயத்தை புதுப்பிக்க நினைப்போர், சொந்தமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் புதிதாக வணிகம் தொடங்குவோர், ஏற்கனவே செய்துவரும் வணிகத்தில் சரிவை சந்திப்பவர்கள், கல்வியில் மேன்மை பெற விரும்புபவர்கள், இந்த விநாயகரை வழிபட்டு பலன் பெறலாம்.