அந்திலி லட்சுமி நரசிம்மர் கோயில்
மகாவிஷ்ணு கருட பகவானுக்கு நரசிம்மராக காட்சி தந்த தலம்
விழுப்புரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருக்கோவிலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ள அந்திலி என்னும் ஊரில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோயில்.
மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாக, நரசிம்மர் அவதாரம் திகழ்கிறது. பெருமாள் நரசிம்மராக காட்சி தந்த எட்டு தலங்களில் இதுவும் ஒன்று.1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில், கருட வடிவில் இருக்கும் பாறையின் மேல் அமைந்துள்ளது. வருடத்தின் 365 நாட்களும், மூலவர் லட்சுமி நரசிம்மர் மீது சூரிய ஒளி படுவது தலத்தின் தனிச்சிறப்பாகும்.
மகாவிஷ்ணு தனது வாகனமான 'பெரிய திருவடி' என்று போற்றப்படும் கருட பகவானுக்கு, நரசிம்மராக மகாவிஷ்ணு காட்சி தந்த தலம் இது. மகாவிஷ்ணு நரசிம்மர் அவதாரத்தில் தூணில் இருந்து தோன்றி இரணியனை அழித்து பிரகலாதனை காப்பாற்றி தரிசனம் செய்தார். பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில், மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனைக் கூட அழைக்காமல் சென்றுவிட்டார். இதனால் பரமபதத்தில் உள்ள கருட பகவான், ஏன் தன் மேல் ஏறி மகாவிஷ்ணு செல்லவில்லை என்ற மன குழப்பத்தில் பூலோகம் வந்து, தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்த பாறையின் மீது உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் இருந்தார் , இதனால் மிகவும் பலசாலியான கருடன் பலவீனமாக மாறினார் அவரின் வெப்பம் பூலோகம் மற்றும் வைகுண்டம் வரை பரவியது எல்லாரும் நாராயணரிடம் முறையிட்டனர் ,நாராயணர் கருட பகவானுக்கு காட்சி தந்து உனக்கு என்ன வேண்டும் என்று வினவினார் , கருட பகவான் அவரிடம் குழந்தை பிரகலாதனுக்காக தூணில் இருந்து நரசிம்மராக வந்து காப்பாற்றினீர்கள் அந்த அவதாரத்தை தான் காணவேண்டும் என்றும் வேண்டினார். அவரின் விருப்பப்படி நாராயணர் லட்சுமி நரசிம்மராக காட்சி தந்தார்.
மத்வ சித்தாந்த மகான் இக்கோயிலின் சிறப்பை கேட்டு இக்கோயிலுக்கு விஜயம் செய்தார் , கருடவடிவில் உள்ள பாறையை கண்டு ஆச்சரியமுற்று, இக்கோயிலின் பின் புறத்தில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார் . இவரே மறுபிறவியில் ராகவேந்தரராக அவதரித்தார் .
பிரார்த்தனை
குடும்பத்தில் தொடர் பிரச்சனை, தீராத கடன் தொல்லை, திருமணத் தடை, தோஷம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து வர நன்மை நிகழும்.
கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோவில்
ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வ தோற்றம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது ஆதிவராகப் பெருமாள் கோவில். குபேரன் ஆதிவராகரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. குபேரன் வராகமூர்த்தியை பிரதிஷ்டை செய்தபோது யாக பாத்திரங்கள் கல்லாய் மாறின. அதனால் இவ்வூர் 'சிலாசாலிகுரிசி' எனப்பட்டது. இதுவே பின்னர் மருவி 'கல்லிடைக்குறிச்சி’ யாயிற்று.
கருவறையில் மூலவர் ஆதிவராகர், பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் இடது மடியில் பூமா தேவியை தாங்கிய நிலையில் தரிசனமளிக்கிறார். பெருமாளின் இத்தகைய அமர்ந்த கோலம், இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இவரது மடியில் அமர்ந்து இருக்கும் பூமா தேவி, பெருமாளின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறார். இத்தல பெருமாளுக்கு தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது. உற்சவர் லட்சுமிபதி எனும் திருநாமத்துடன் தாயார் பூமாதேவியுடன் காட்சி தருகிறார்.
பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும், பெருமாள் சன்னதிக்கு இருபுறமும் தாயார்,ஆண்டாள் சன்னதிகள் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தனித்தனி சன்னதியில் இரண்டு பக்கமும் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருமண வரம் அருளும் தலம்
பெருமாள் எப்போதும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் அவருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்ற பெயரும் உண்டு.திருமண வரம் வேண்டுவோர்க்கு தட்டாமல் அவ்வரத்தை அருள்வதால் இத்தலம் கல்யாணபுரி என்றும் அழைக்கப்படுகிறது. நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரவும், கடன்கள் தீர்ந்து செல்வவளம் பெருகவும் பக்தர்கள் இத்தலத்து ஆதிவராகப் பெருமாள் வழிபடுகின்றனர். பக்தர்கள் தம் பிரார்த்தனை நிறைவேறினால், பெருமாளை கருட வாகனத்தில் எழுந்தருள செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதனால் இத்தலத்தில் பெருமாளின் கருட சேவையை அடிக்கடி நாம் தரிசிக்க முடியும்.
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் இத்தல வராகர் பாடப்பெற்றிருக்கிறார்.
தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்
சாந்த சொரூபமாக நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ லட்சுமி நரசிம்மர்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து 17 கி.மீ. தொலைவிலுள்ள தாளக்கரை என்னும் ஊரில், 800 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத்தலம் தாளக்கரை என்று அழைக்கப்படுகிறது.
கருவறையில் மூலவர் நரசிம்மர் கோரை பற்களுடன், நாக்கு தொங்கிய கோலத்திலும் கையில் சங்கு சக்கரம் ஏந்தி, ஸ்ரீ சக்கரம் அமைந்த பீடத்தில் நின்ற கோலத்தில் சாந்த சொரூபமாக எழுந்தருளி உள்ளார். பொதுவாக நரசிம்ம பெருமாள் மடியில் லட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் தாளக்கரையில், நரசிம்மரும் லட்சுமியும் தனித் தனியே நின்ற வண்ணம் காணப்படுகிறார்கள். இப்படி சாந்த சொரூப கோலத்தில் லட்சுமியுடன் நின்ற வண்ணம் நரசிம்மர் காட்சி அளிப்பது இந்த தலத்தின் தனிச் சிறப்பாகும். இத்தலத்தை போல், நரசிம்மரும் லட்சுமியும் தனித்தனியே நின்ற வண்ணம் காட்சி தரும் மற்றொரு தலம், ஐதராபாத் யாதகிரி குட்டா மலையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலாகும்.
நரசிம்மர் அருளால் திருமணத்தடை, புத்திர பாக்கியம், தொழில், கடன் நிவர்த்தி, மன நிலை பாதிப்பு, பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட, பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
அட்சய திருதியை - கும்பகோணம் பன்னிரெண்டு கருடசேவை உற்சவம்
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள பன்னிரெண்டு வைணவ கோவில்களிலிருந்து, பன்னிரெண்டு கருட வாகனங்களில் உற்சவர் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஒரே இடத்தில் அருள்பாலிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஏப்.23-ம் தேதி கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தரவுள்ளனர்.
இதில், ஸ்ரீசாரங்கபாணி, ஸ்ரீசக்கரபாணி, ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீஆதிவராகபெருமாள், ஸ்ரீராஜகோபாலசுவாமி, ஸ்ரீபட்டாபி ராமர், பட்டாச்சாரியார் தெரு ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், ஸ்ரீவேணு கோபால சுவாமி, ஸ்ரீவரதராஜபெருமாள் உள்ளிட்ட 12 கோயில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுவர். அப்போது, எதிரில் ஆஞ்சநேயர் எழுந்தருளியவுடன், அந்த பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும்.
பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். மேலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
அமாவாசை தினத்தன்று வழிபட வேண்டிய திவ்ய தேசப் பெருமாள்
சென்னை - அரக்கோணம் ரயில் தடத்தில், சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம், திருவள்ளூர். பெருமாளின் திருநாமம் வீரராகவ பெருமாள். தாயாரின் திருநாமம் கனகவல்லி . அரக்கர்களை வதம் செய்ததால் வீரராகவப் பெருமாள் என்றும் இராமலிங்க அடிகளாரின் வயிற்று வலியைப் போக்கியதால்,வைத்திய வீரராகவர் என்றும் திருநாமங்கள் இவருக்கு ஏற்பட்டது.
கருவறையில் 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் வீரராகவ பெருமாள், தன் வலது கரத்தால் சாலிஹோத்ர முனிவர் சிரசில் கை வைத்து, நாபிக்கமலத்தில் இருக்கிற பிரம்மாவுக்கு வேதோபதேசம் செய்தபடி சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் . இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும்.
இத்தலத்தில் அமாவாசை தினம் சிறந்த வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு நீராடிப் பெருமாளைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும்! முக்கியமாக, தை அமாவாசை நாளில் நீராடி, பெருமாளை ஸேவித்தால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!
ஒரு தை அமாவாசை நன்னாளில், சாலிஹோத்ர முனிவர் இந்தத் தலத்துக்கு வந்தார். இங்கே உள்ள 'ஹிருதாபநாசினி' எனும் தீர்த்தத்தில் நீராடினால், நம் இதயத்தில் உள்ள துர்சிந்தனைகள் நீங்கும் என்று எண்ணினார். குளக்கரையில் அமர்ந்த சாலிஹோத்ர முனிவர், அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் நீராடுவது கண்டு வியந்து போனார். கங்கைக்கு நிகரான இந்தத் குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்று தேவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள்.
முனிவர், குளத்தில் நீராடி, கடும் தவத்தில் மூழ்கினார். அதில் மகிழ்ந்த பெருமாள், அவரின் வேண்டுகோளை ஏற்று, அங்கேயே தங்கி, கோயில் கொண்டு, இன்றளவும் அருள்பாலித்து வருகிறார் என்கிறது தல புராணம்.
தீராத நோய்களைத் தீர்க்கும் பெருமாள்
தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் அமைந்துள்ள ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூன்று அமாவாசைகளுக்கு பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோயும் (வயிற்று வலி, கைகால் நோய், காய்ச்சல்) குணமாகும் என்பது நம்பிக்கை. உடலில் உள்ள மரு, கட்டி நீங்க தீர்த்தக் குளத்தில் பால், வெல்லம் சேர்ப்பது வழக்கம். நோய்களை வீரராகவர் குணப்படுத்துகிறார் என்றால், சிகிச்சையின்போது ஏற்படும் வலிகளையும் வேதனைகளையும் இத்தல தாயார் மெல்ல வருடிக் கொடுத்து ஆறுதல் படுத்துகிறார் என்கின்றனர்.
திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில்
திருவோண நட்சத்திரத் தலம்
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கத்திலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் திருப்பாற்கடல். பெருமாளின் திருநாமம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள். தாயாரின் திருநாமம் அலர்மேல் மங்கை.
சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்துவதை போன்று, கருவறையில் சிவபெருமானின் ஆவுடையாரின்மீது பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் அபய கரத்துடன் காட்சியளிக்கிறார். பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 107-வது திவ்ய தேசமான திருப்பாற்கடலை மனித உடலுடன் சென்று தரிசிக்க முடியாது. இந்த குறையை போக்கவே பெருமாள் திருப்பாற்கடலில் அருள்பாலிக்கிறார். இந்த தலத்து பெருமாளை தரிசித்தால் 107வது திவ்ய தேசமான திருப்பாற்கடலை தரிசித்த பலன் கிட்டும். இத்தலத்தில் சிவபெருமானும் விஷ்ணுவும் ஒன்றாக அருள்பாலிப்பதால் பிரதோஷம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி, தனது கணவனின் தோஷத்தைப் போக்குவதற்காக இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திரத் தலமானது.
திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், நற்பலன்கள் கிட்டும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
தீராத நோய்களைத் தீர்க்கும் அத்திப்பழ தானம்
திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடெசபெருமாளை மனதாரப் பிரார்த்தித்து, அத்திப்பழங்களை தானமாக வழங்கினால், தீராத நோயெல்லாம் தீரும். இல்லத்தில் ஐஸ்வரியம் குடிகொள்ளும். மகாலக்ஷ்மி தாயாரின் பரிபூரண அருளைப் பெறலாம் என்பது வைணவ பெரியோர்களின் கருத்தாகும்.
கட்டவாக்கம் விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ள விஸ்வரூப லட்சுமி நரசிம்மர்
காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில், விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பெருமாள் ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம்,யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல், பதினாறு அடி உயர திருமேனியுடன், லட்சுமி தாயாரை தன் மடியில் இருத்தி வீற்றிருக்கிறார். அவரின் மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில், அம்பும் தாங்கி மற்றும் அபய வரத அஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் வடிவமைப்பானது ஆறு அவதாரங்களையும், அவர் தாங்கி இருக்கும் ஆயுதங்கள் நான்கு அவதாரங்களையும் குறிப்பிடுகின்றது. கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும், வஜ்ரதம்ஷ்ட்ரம வராக அவதாரத்தையும், வில் அம்பு (பார்கவ அஸ்திரம்) பரசுராம், ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ண அவதாரத்தையும் நினைவுபடுத்துகிறது.
இந்த நரசிம்மருக்கு நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது. மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய அஸ்தத்துடன் மிகவும் சாந்தமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.
நவக்கிரக பரிகார தலம்
இங்கு எழுந்தருளி இருக்கும் நரசிம்மருக்கு பன்னிரண்டு பற்கள் அமைந்திருக்கின்றன. இது இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் அடங்கிய பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும். திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய்,நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆக நவக்கிரகங்களும் பெருமானுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால், இது ஒரு நவக்கிரக பரிகார தலமாக விளங்குகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம்
தெய்வத் திருமணங்கள் பல நடைபெறும் திருநாள்தான் பங்குனி உத்திரம். இந்நாளில் நடைபெறும் ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றிய 12 ஆழ்வார்களில், பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்த தலம் திருவில்லிபுத்தூர். ஆண்டாள், வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீரங்க அரங்கனைக் கைத்தலம் பற்றினாள் என்பது வரலாறு. எனவே ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.பங்குனி உத்திரத்தன்று காலை ஆண்டாளும் ரங்கமன்னாரும் செப்புத்தேரில் வலம் வருவார்கள். மாலையில் பெண் அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சிறப்பு திருமஞ்சனம் முடிந்தவுடன், ஆண்டாளும் ரங்க மன்னாரும் திருமண வைபவம் நடைபெறும் ஆடிப்பூர கொட்டகைக்கு எழுந்தருளுவார்கள். கல்யாணத்திற்கான சீர்வரிசைகளை பெரியாழ்வாரின் சார்பில் கோவில் நிர்வாகத்தினர் மணமேடைக்கு கொண்டுவர, அதன்பின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கும். தொடர்ந்து கன்னிகாதானம் நடைபெற்ற நிலையில் பக்தர்களின் முன்னிலையில் திருமாங்கல்ய தாரணம் நடைபெறும்.
ஆண்டாள் மார்கழி மாதம் பாவை நோன்பிருந்து கண்ணனை நினைத்து அருளிய . 'வாரணமாயிரம்' என்று தொடங்குகிற 11 பாடல்களை, பெண்கள் தினமும் பாடி, பெருமாளையும் ஆண்டாளையும் வணங்கி வந்தால், சீக்கிரமே திருமண பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
வாரண மாயிரம் சூழ வலம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
என்ற இந்தப் பாசுரம், வைணவர்கள் வீட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஓதப்பட்டு திருக்கல்யாணம் நடைபெறும். வைணவத் திருத்தலங்களில் செய்யப்படும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் இந்தப் பாசுரம் கட்டாயம் இடம் பெறும்.
பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்
கோவில் கட்டுவதற்காக பக்தன் செலவழித்த பணத்தை நவாபிடம் திருப்பி செலுத்திய ராமன், லட்சுமணன்
தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் , கம்மம் நகரிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில். இக்கோவிலில் ராமர், சீதாபிராட்டியை தனது இடது மடியில் இருத்தி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். தனது நான்கு கரங்களில் இரண்டில் சங்கு, சக்கரமும், மற்ற இரண்டு கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி இருக்கிறார். ராமருக்கு இடது பக்கம் லட்சுமணன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
ஆண்டு தோறும் இராமநவமியன்று, இத்தலத்தில் ராமருக்கும், சீதாபிராட்டிக்கும் திருக்கல்யாண உற்சவம் மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது.
இந்தக் கோவிலானது பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கஞ்சர்ல கோபண்ணா என்பவரால் கட்டப்பட்டது. கோபண்ணா என்பவர் பத்ராச்சலத்தில் தாசில்தாராக இருந்தார். அரசின் பணியாளரான இவர், அரசாங்க பணத்தை எடுத்து இந்த கோவிலை கட்டி முடித்து விட்டார். இதை அறிந்த ராஜ்யத்தின் நவாப் தானீஷா, அவருக்கு 12 வருட சிறைத் தண்டனை விதித்து, கோல்கொண்டா சிறையில் அடைத்து விட்டான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். தனது பக்தனை காப்பாற்றுவதற்காக ராமர் தனது தம்பி லட்சுமணனுடன், ராமோஜி மற்றும் லக்ஷமோஜி என்ற உருவில் வந்து கோபண்ணா செலவழித்த ஆறு லட்சம் முஹர்களை நவாப் தானீஷாவிடம் திரும்பச் செலுத்தி, பணம் பெற்றுக்கொண்டதற்கான இரசீதினை வாங்கிக்கொண்டு அதை சிறையில் இருந்த கோபண்ணாவின் படுக்கைக்கு அடியில் வைத்து விட்டார்கள். மறுநாள் இதையறிந்த நவாப் தானீஷா, தம்மிடம் வந்து இரசீது பெற்றுச்சென்றது வேறு யாருமல்ல, இராமனும் லட்சுமணனுமே என்று உணர்ந்தார். உடனே கோபண்ணாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். கோபண்ணாவைப் பணிந்து வணங்கி மன்னிப்புக் கோரினர். தாம் பெற்ற தங்க முஹர்களை அவர் காலடியில் வைத்துக் காணிக்கையாக்கினார். ஆனால் கோபண்ணாவோ, தங்க முஹர்களை திரும்ப வாங்க மறுத்துவிட்டார். என்றாலும் இரண்டே இரண்டு தங்க நாணயங்களை மட்டும் ராமரின் திருவிளையாடலை நினைவு கூறும் பொருட்டு பெற்றுக் கொண்டார். இந்த இரண்டு தங்க நாணயங்களை இன்றும் பத்திராசலம் கோவிலில் நாம் காணலாம். கோபண்ணா, 'பக்த இராமதாஸ்' என்று எல்லோராலும் போற்றப்பட்டார். அவர் சிறையில் வாடிய போது ராமபிரானை எண்ணி, தெலுங்கில் பல பாடல்களை இராமரைப் போற்றும் வகையில் பாடியுள்ளார். உணர்ச்சி மயமான இந்தப் பாடல்கள், தாசரதி சதகம் மற்றும் கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ்பெற்றன.
இராம நவமி திருக்கல்யாண உற்சவத்திற்கு முத்துக்கள் அளித்த நவாப்
இராமனின் சக்தியினை உணர்ந்த கோல்கொண்டா அரசன் தானிஷா, பல்வோஞ்ச பரகானா கிராமத்தில் கிடைக்கும் வருமானத்தை கோவில் பராமரிப்பு செலவுகளுக்கென்று ஒதுக்கி ஆணையிட்டார். இது மட்டுமல்லாமல் கோவிலில் ஸ்ரீ ராம நவமி தினத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தன்று மூலவருக்கு அணிவிக்க சிறப்பு அலுவலர் மூலம் முத்துக்களை யானையில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்றும் கூட ஆந்திர அரசு, இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.
திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்
தினம் இரண்டு நிமிடம் மட்டுமே மூடப்படும் கிருஷ்ணர் கோவில்
கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருவார்ப்பு எனும் ஊரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில், தினமும் 23 மணி நேரம் 58 நிமிடங்கள் திறந்து இருக்கும். அதாவது இந்த கோயில் 2 நிமிடங்கள் மட்டுமே மூடப்படுகின்றது என்பது ஒரு அதிசயமாகும்.
எப்பொழுதும் பசியுடன் இருக்கும் கிருஷ்ணர்
இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணர் எப்போதும் பசித்து இருப்பதால், ஒவ்வொரு நாளும் இரண்டு நிமிடங்கள் தவிர இந்த கோவில் மூடப்படுவதில்லை. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே, இக்கோவிலில் எழுந்து அருளி இருக்கிறார் என்று மக்கள் நம்புகின்றனர். அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.
மற்றொரு சிறப்பாக இந்த கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேலையில் கையில் கோடாரி ஏந்தியபடி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும். தந்திரியிடம் கோடாரி கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என நம்பப்படுவதால், ஒரு வேளை இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கோயில் கதவு திறப்பதில் ஏதேனும் தடங்கல் வந்தால், கதவை உடைப்பதற்காக அந்த கோடாரி பயன்படுத்தலாம் என்பதற்காக அந்த கோடாரி தந்திரியிடம் கொடுக்கப்படுகிறது.
கிரகணத்தின் போதும் மூடப்படாத கோவில்
இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒருமுறை கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது ஆண்டவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீஆதிசங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து கிரகணத்தின் போதும், இக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை, வெறும் 2 நிமிடங்கள்தான்.
அதேபோல், இந்த கோவிலில் பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் இரவு 11.58 மணிக்கு பூசாரி சத்தமாக, "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?" என அழைப்பார். மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் இக்கோவில் பிரசாதம் சுவைத்தால், அதன்பிறகு நீங்கள் பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சனை இருக்காதாம்.
ஆவூர் வரதராஜப் பெருமாள் கோவில்
பெருமாளுக்கு அருகில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் அபூர்வ கருட பகவான்
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவூர் தலத்தில் அமைந்திருக்கின்றது குகை வரதராஜர் கோயில். இந்த குடைவரை கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது.
பொதுவாக பெருமாள் கோவில்களில் கருட பகவான் பெருமாளுக்கு எதிரே தனிச்சன்னதியில் நின்றபடி அஞ்சலி முத்திரையுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் கருட பகவான், மூலவர் வரதராஜப் பெருமாளின் அருகில் கருடாசன நிலையில் இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும்.
மூலவர் வரதராஜ பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவருக்கு வலது பக்கத்தில் கருட பகவான் தனது இரண்டு சிறகுகளையும் விரித்த நிலையில், வலது காலை மடித்து முழங்காலை செவ்வகப் பீடம் மீது இருத்தி, இடது காலை மடித்து பாதங்களை பீடம் மீது ஊன்றி, கருடாசன நிலையில், திருமாலை நோக்கித் திரும்பியுள்ளார்.
கருட பகவான் தலையில் மகுடம் தரித்து, இரு காதுகளிலும் மகர குண்டலங்கள் அணிந்து, வாயின் வலது ஓரம் ஒரு கோரைப்பல் தெரிய, வலதுதோளின் மீது ஒரு சிறிய நாகம் படமெடுத்திருக்க. மார்பில் முப்புரிநூல், கழுத்தில் மணி ஆரங்கள். தோள்வளை, கை வளைகள் முதலியவை அணிந்து காட்சி தருகிறார்.
யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்மர் கோவில்
லட்சுமி நரசிம்மர் நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ தோற்றம்
தெலுங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டத்தில், யாதகிரிகுட்டா என்ற ஊரில் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மர் கோவில். ஐதராபாத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பொதுவாக நரசிம்மர் அமர்ந்த கோலத்தில்தான் காட்சியளிப்பார். அவர் யோக நரசிம்மராக எழுந்தருளி இருக்கும் போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் இருப்பார். உக்கிர நரசிம்மராகவோ அல்லது லட்சுமி நரசிம்மராகவோ எழுந்தருளி இருக்கும் போது ஒரு காலை தொங்கவிட்டும், மற்றொரு காலை மடித்த நிலையிலும் இருப்பார். லட்சுமி நரசிம்மர் கோலத்தில் அவர் லட்சுமிதேவியை தன்னுடைய மடியில் இருத்தி வைத்திருப்பார்.
ஆனால் இத்தலத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். லட்சுமிதேவியானவர், நரசிம்மப் பெருமாளின் இடது பக்கத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இப்படி நின்ற நிலையில் எழுந்தருளியிருக்கும் லட்சுமி நரசிம்ம பெருமாளை நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.
பெரும்பேடு வேங்கடேசப் பெருமாள் கோவில்
ஒரே கருவறையில் இரண்டு பெருமாள்கள் அருள் பாலிக்கும் அபூர்வ தலம்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பெரும்பேடு கிராமம். இக்கிராமத்தில் உள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலில், ஒரே கருவறையில் இரண்டு மூலவர்கள் எழுந்தருளியிருப்பது வேறு எந்த பெருமாள் கோவிலிலும் காணமுடியாத அதிசயமாகும். இத்தலத்தில் பெருமாள், வேங்கடேசப் பெருமாள் மற்றும் ஆதிபஞ்சாயுதபாணி என்ற இரண்டு ரூபத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
முற்காலத்தில் இப்பகுதியில் அமணாசுரன் மற்றும் அமண அரக்கி என்ற இரு அரக்க சகோதர, சகோதரியர் மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தி வந்தார்கள். இதனால் பல துன்பங்களை அனுபவித்த இப்பகுதி மக்கள், பெருமாளை வேண்டி தங்களைக் காத்தருளுமாறு வேண்டினர். பக்தர்களைக் காக்க முடிவு செய்த பெருமாள் பஞ்சாயுதபாணியாக வடிவெடுத்து வந்து, அரக்கனையும் அரக்கியையும் வதம் செய்து இப்பகுதி மக்களைக் காத்தருளினார். அதோடு, பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி, இத்தலத்திலேயே ஆதிபஞ்சாயுதபாணியாக அருளத் தொடங்கினார்.
சங்கு எனும் பாஞ்சஜன்யம், சக்கரம் எனும் சுதர்சனம், கதை எனும் கௌமோதகி, வில் எனும் சாரங்கம் மற்றும் வாள் எனும் நந்தகம் முதலான பஞ்சாயுதங்கள், அதாவது ஐந்து ஆயுதங்கள் எப்போதும் பெருமாளுடனே இருப்பதாக ஐதீகம். திருமாலின் ஆயிரம் திருநாமங்களில், 'பஞ்சாயுதபாணி' என்பதும் ஒன்றாகும். இத்தலத்தில் பஞ்சாயுதங்கள் பெருமாளை வலம் வருவதாக ஐதீகம். இத்தலத்தில், பெருமாளின் திருக்கரத்தில் காணப்படும் சக்கரம் சற்றே வித்தியாசமாக, பிரயோக நிலையில் அமைந்துள்ளதைக் காணலாம்.
கருவறையில் வேங்கடேசப் பெருமாள் சதுர்புஜராக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, சேவை சாதிக்கிறார். பெருமாளின் மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் விளங்க, கீழிரு கரங்களில் வலது திருக்கரம் அபய நிலையிலும், இடது திருக்கரத்தினை தொடை மீது வைத்தும் காட்சி தருகிறார்.
வேங்கடேசப் பெருமாளை வணங்கினால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பதும், பஞ்சாயுதபாணி பெருமாளை வணங்கினால் மனதிலுள்ள பயம் அனைத்தும் அகலும் என்பதும் ஐதீகம்.
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில்
வெறும் தரையில் சயனித்த கோலத்தில் காட்சி தரும் திவ்ய தேச பெருமாள்
சென்னையில் இருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ள, மாமல்லபுரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம் தலசயனப் பெருமாள் கோவில். மூலவர் தலசயனப் பெருமாள். தாயார் திருநாமம் நிலமங்கை.
பொதுவாக சயனித்த கோலத்தில் காட்சி தரும் பெருமாள் பாம்பணை மீது படுத்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும். இந்த பெருமாள் தன் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இதனால் தலத்தில் உள்ள பெருமாளைத் தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்ட நாதனைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பூரம், அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
மானிடராக பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முன்னோர் சாபம், முனிவர் சாபம், விலங்குகள் சாபம் மற்றும் கடன் தொல்லைகள் நீங்கும்.
இத்தல தலசயனப் பெருமாளையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபட நற்பலன்கள் கிட்டும்.
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில்
மத்திய ஜெகந்நாதம் என்று போற்றப்படும் திருமழிசை
சென்னை திருவள்ளூர் சாலையில், சுமார் 25 கி.மீ. தொலைவில், பூந்தமல்லியை அடுத்து உள்ள தலம் திருமழிசை. திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலம். அதனால் ஊருக்கும் அதே பெயர். இக்கோவிலில், மூலவர் ஜெகந்நாத பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் ருக்மணி சத்யபாமா சமேதராக சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் திருமங்கைவல்லித் தாயார்.
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில், மூன்று ஜெகன்நாதர் ஷேத்திரங்களில் 'மத்திய ஜெகந்நாதம்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. வடக்கே உள்ள பூரி, உத்திர ஜெகந்நாதம்' என்றும் திருப்புல்லாணி 'தக்ஷிண ஜெகந்நாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. பூரியில் நின்ற திருக்கோலத்திலும், திருப்புல்லாணியில் சயன திருக்கோலத்திலும், திருமழிசையில் வீற்றிருந்த திருக்கோவத்திலும் பெருமாள் சேவை சாதிக்கிறார்.
தலத்தின் சிறப்பு
அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது. மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார்
திருமழிசையாழ்வார்
இந்த தலத்தில்தான் திருமழிசையாழ்வார் , திருமாலின் சகராயுதத்தின் அம்சமாக அவதரித்தார். அவருக்கு இக்கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. திருமழிசை ஆழ்வாரின் வலது பாத கட்டை விரலில் மூன்றாவது கண் இருக்கின்றது.இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய கற்று சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி, பிறகு வைணவத்திற்கு வந்தார். இவரின் சொல்வன்மையைக் கண்ட சிவபெருமான், இவரை 'பக்திசாரர்' என்ற திருநாமத்தால் வாழ்த்தினார்.
ராகு , கேது தோஷ நிவர்த்தி தரும் துந்துபி விநாயகர்
பெருமாளின் கருவறை கோஷ்டத்தில் உள்ள துந்துபி விநாயகர் தனது வயிற்றில் ராகு , கேது பின்னியபடி காட்சி தருகிறார் , ஆதலால் இவரை வணங்கினால் ராகு , கேது தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்
உலகப் புகழ்பெற்ற, உயிரோட்டமுள்ள கிருஷ்ணாபுரம் சிற்பங்கள்
திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில், 17 கி.மீ. தொலைவில் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வெங்கடாசலபதி கோவில். மூலவர் வெங்கடாசலபதி. தாயார் அலர்மேல்மங்கை. பதினாறாம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது.
இக்கோவிலில் உள்ள கலையழகு மிளிரும் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. நம் முன்னோர்கள் சிற்பக்கலையில் அடைந்திருந்த உன்னத நிலையும், தொழில் நுட்பத்திறனும் காண்போரை பிரமிக்க வைக்கும். வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். இங்குள்ள எழில் கொஞ்சும் சிற்பங்களில் தெரியும் முகபாவங்கள், கை மற்றும் கால்களில் ஓடும் நரம்புகள் கூட தெளிவாகத் தெரியும்படியான நுணுக்க வேலைப்பாடுகள், தத்ரூபமாக காணப்படும் ஆடை அணிகலன்கள் ஆகியவற்றை கவனிக்கும்போது, இவை சிற்பங்களா அல்லது உயிர் பெற்று வந்து நிற்கும் நிஜ உருவங்களா என்று நம்மை எண்ண வைக்கும். தட்டினால் இனிய ஓசை எழுப்பும் இசைத் தூண்கள், ஒரு சிற்பம் பற்றியுள்ள வளைவான வில்லின் ஒரு முனையில் ஒரு குண்டூசியைப் போட்டால் மற்றோரு முனை வழியாக தரையில் விழுவது போன்ற நேர்த்தியான வடிமைப்பு கொண்ட சிற்பங்கள், நமது சிற்பிகளின் திறமையை உலகுக்கு பறை சாற்றுகின்றன.
இக்கோவிலில் ரதி-மன்மதன், ரம்பை, கர்ணன், அர்ஜுனன், அரசியை தோளில் சுமக்கும் வாலிபன், யானையும் காளையும் (ரிஷப குஞ்சரம்) சிற்பம், பெண்ணின் தோளில் கொஞ்சும் மொழி பேசும் பச்சைக்கிளி முதலிய, மொத்தம் 42 அழகு மிளிரும் சிலைகளைக் காணலாம்.
ராஜகுமாரியை தோளில் சுமந்து கடத்திச் செல்லும் வாலிபன் சிற்பம் - அவன் உடலில் ரத்தக் காயம் தெரியும் ஆச்சரியம்
இக்கோவிலில், ஒரு தூணில் ராஜகுமாரியை ஒரு வாலிபன் கடத்திச் செல்லும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ராஜகுமாரி தன்மேல் வெயில் படாதவாறு இருக்க தன் முந்தானையை ஒருகையால் தலைக்குமேல் பிடித்துக்கொண்டு காட்சியளிக்கிறாள். அவள் உடல் எடையை சுமப்பதால், உடற்கூற்றியல்படி வாலிபனின் கைகளில் தசைகள் முறுக்கேறியுள்ளன, விலா எலும்புகள் விரிவடைந்து காணப்படுகின்றன. அவர்களைப் பிடிக்க, ஈட்டி ஏந்திய குதிரை படை வீரர்கள் பின் தொடர்வதை நாம் காணலாம். இந்த சிற்பத்தில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வாலிபனின் விலா எலும்பு பக்கத்தில் ரத்த காயம் போன்று சிவப்பு நிறம் படர்ந்து இருப்பதுதான். சிவப்பு ரேகை படர்ந்த ஒரு பாறையை தேர்ந்தெடுத்து அதில் மேலே குறிப்பிட்ட அத்தனை உருவங்களையும் வடித்து, அந்த வாலிபனின் விலாவில் ரத்தக்கறை படிந்து இருப்பது போல் சிற்பத்தைப் பூர்த்தி செய்து இருப்பது, அந்த காலத்து சிற்பிகளின் கலை நயத்திற்கும், கைவண்ணத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
இந்த சிற்பத்திற்கு பின்னால் ஒரு கற்பனை கதை உண்டு. சோழ நாட்டு ராஜகுமாரியை பாண்டியநாட்டு வாலிபன் ஒருவன் காதலிக்கின்றான். தங்கள் திருமணத்திற்கு அரசனின் சம்மதம் கிடைக்காது என்பதால், இருவரும் பாண்டிய நாட்டிற்கு தப்பிச் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள். தப்பிச் செல்லும் இவர்கள் இருவரையும் பிடிக்க குதிரை படை வீரர்கள் விரைகிறார்கள். ராஜகுமாரியால் ஓட முடியாததால், அவளை வாலிபன் தோளில் சுமந்து செல்கின்றான். வாலிபன் பாண்டியநாட்டு எல்லையை நெருங்கும் போது, அவனை தடுத்து நிறுத்தும் கடைசி முயற்சியாக அவன்மீது ஈட்டி எறிகிறார்கள். ஈட்டி அவன் விலாவில் பட்டு ரத்த காயம் உண்டானது. ஆனாலும் அவன் ராஜகுமாரியோடு தன் நாட்டுக்கு சென்று விடுகிறான்.
கும்பகோணம் சக்கரபாணி கோவில்
மூன்று கண்கள், எட்டு கைகள் உடைய சக்கரபாணி பெருமாள்
கும்பகோணம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில், 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சக்கரபாணி கோவிலிலும் ஒன்று. மூலவர் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள். தாயார் விஜயவல்லி. பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தியும் காட்சி தருகிறார். மூன்று கண்களுடன் சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சக்கரபாணி சுவாமிக்கென்று தனிக்கோவில் இருப்பது, இத்தலத்தில் மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
ஜலந்தராசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய திருமால் ஏவிய 'சக்ராயுதம்', ஜலந்தாசுரனையும் மற்ற அசுரர்களையும் வதம் செய்த பிறகு, காவிரி நதிக்கரையோரம் இருக்கும் புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரம்ம தேவரின் கைகளில் வந்து விழுந்தது. சக்தி வாய்ந்த இந்த சக்ராயுதத்தை கும்பகோணத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்ம தேவன். இந்த சக்ராயுதத்தால் இருந்து வெளிப்பட்ட ஒளி, சூரியனின் ஒளிப்பிரவாகத்தை மிஞ்சும் வகையில் இருந்ததால் பொறாமை கொண்ட சூரிய பகவான் தனது ஒளி அளவை கூட்டிய போது, ஒட்டு மொத்த சூரிய ஒளியையும் தன்னுள் உள்வாங்கிக்கொண்டது இந்த சக்ராயுதம். தனது கர்வம் நீங்க பெற்ற சூரிய பகவான், வைகாசி மாதத்தில் மூன்று கண்கள், எட்டு கைகளுடன் அக்னிப்பிழம்பாக தோன்றிய ஸ்ரீ சக்கரபாணியின் காட்சி கிடைக்க பெற்று, இழந்த தனது ஒளியை மீண்டும் பெற்றார் சூரிய பகவான். தனது நன்றியை வெளிப்படுத்த சூரிய பகவான் கட்டிய கோவில் தான் இந்த சக்கரபாணி கோவில். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது.
பிரார்த்தனை
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகாமகம்' திருவிழாவில் கலந்து கொண்டவர்கள், அதில் பங்கேற்ற புண்ணியத்தை இந்த கோவிலின் இறைவனான சக்கரபாணிக்கே சமர்ப்பித்து வேண்டிக் கொள்வதால் நமக்கு மிகுந்த நன்மைகளை ஸ்ரீ சக்கரபாணி உண்டாக்குவார் என்பது ஐதீகம். சூரிய பகவான் வழிபட்டு நன்மையடைந்ததால், ஜாதகத்தில் சூரியனின் நிலை பாதகமாக இருப்பவர்கள் வழிபடுவதற்கான பரிகார தலமாக இருக்கிறது. உடலில் வலது கண் சூரியனின் ஆதிக்கம் நிறைந்ததாகும் வலது கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள், கண் பார்வை கோளாறுகள் உள்ளவர்களும் இந்த ஆலய இறைவனான ஸ்ரீசக்கரபாணியை வழிபடுவதால் மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும்.
ஜாதகத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, ராகு – கேது கிரகங்களின் பாதகமான நிலை போன்றவற்றால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டு நன்மைகளை பெறலாம். சுதர்சன ஹோம பூஜையை, இக்கோவிலில் செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை, துஷ்ட சக்திகள் பாதிப்பு ஆகியவை நீங்கி சுபிட்சங்கள் ஏற்படும்.
குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில்
சந்தன மரச்சிலையால் ஆன பெருமாள்
மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில், சோழவந்தான் அருகில், அமைந்துள்ளது குருவித்துறை. மூலவர் - சித்திர ரத வல்லப பெருமாள். தாயார் - செண்பக வல்லி.
குரு பகவான் (வியாழன்) தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்ட இடம் என்பதால், இந்த இடம் குருவி(ன்) துறை எனப்படுகிறது. குரு பகவானுக்கு உகந்த திருத்தலமாகத் திகழ்கின்றது.
அத்தி வரதர் எப்படி மரத்தால் செய்யப்பட்ட சிறப்பு பெற்றுள்ளாரோ, அதே போல் இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் சந்தன மரசிலையால் ஆன மூர்த்தியாக திகழ்கின்றார். குருபகவானின் பிரார்த்தனையால், ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று, சித்திரத் தேரில் எழுந்தருளுகிறார். இதன் காரணமாக சித்தரரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகின்றார்.
குரு பகவானுக்கு அருளிய பெருமாள்
இக்கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.
தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான். அதன்படி சுக்ராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.
கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். குருவின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள்,சக்கரத்தாழ்வாரை அனுப்பி, குருவின் மகன் கசனை மீட்டுத் தந்து குருவுக்கு அருளினார்.
பிரார்த்தனை
குரு பகவானே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயில்
ஆதிசேஷன் தனிச்சன்னதியில் எழுந்தருளியிருக்கும் ஒரே திவ்யதேசம்
சென்னைக்கு மேற்கே 29 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநின்றவூர். மூலவர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள். தாயார் 'என்னை பெற்ற தாயார்'. பக்தவத்சலப் பெருமாள் 11 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பஞ்சாயுதம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
ஒருசமயம் திருமாலிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு ‘திரு’ ஆகிய மகாலட்சுமி இத்தலத்தில் வந்து நின்றதால் 'திருநின்றவூர்' என்று ஆனது. மகாலட்சுமியை சமாதானம் செய்ய சமுத்திரராஜன் வந்திருந்தார். மகாலட்சுமி அதற்கு சமாதானம் ஆகவில்லை. உடனே சமுத்திரராஜன் வைகுண்டம் சென்று, திருமாலிடம் 'தாங்களே திருநின்றவூர் சென்று தேவியை இங்கு அழைத்து வர வேண்டும்'என்று கூறினார். சமுத்திரராஜன் இத்தலம் வந்து மகாலட்சுமியைப் பார்த்து, 'பாற்கடலில் நீ பிறந்ததால் நான் உனக்கு தந்தையாக இருந்தாலும் இப்போது நீ என்னைப் பெற்ற தாயார், அதனால் உடனே நீ வைகுண்டம் செல்வாயாக' என்று கூறினார், பெருமாளும் வந்து மகாலட்சுமியை சமாதானம் செய்கிறார். மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறார். பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாள் இத்தலம் வந்ததால், பெருமாளுக்கு பக்தவத்சலன் என்ற பெயர் வழங்கலாயிற்று. சமுத்திரராஜனும் மகாலட்சுமியை என்னைப் பெற்ற தாயே என்றதால் அப்பெயரே நிலைத்துவிட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.
குபேரன் ஒரு சமயம் தன் நிதியை இழந்து வாடியபோது இத்தல தாயாரை வழிபட்டு மீண்டும் அனைத்தையும் பெற்றான்.
பொதுவாக பெருமாள் சயனித்திருக்கும் கோலத்தில் இருக்கும் போது, அவருடன் நாம் ஆதிசேஷனை தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில் ஆதிசேஷன் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத விசேட அமைப்பாகும்.
ஆதிசேஷன் சந்நிதியில் புதன்கிழமைதோறும் நெய்விளக்கு ஏற்றி பால் பாயாசம் படைத்து அவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மாங்கல்ய பலனும் கிட்டும். திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட்டால் அத்தடை நீங்கும்.
ஆதிசேஷன் சந்நிதியில் புதன்கிழமைதோறும் நெய்விளக்கு ஏற்றி பால் பாயாசம் படைத்து அவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மாங்கல்ய பலனும் கிட்டும். திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட்டால் அத்தடை நீங்கும்.
காணாமல் போன பொருளைக் கண்டு பிடிப்பதற்கும் - ஆட்களை தேடி பிடிப்பதற்கும், அநியாயமாக சொத்தை பிடுங்கி கொண்டவர்களிடமிருந்து இழந்த சொத்தை முறைப்படி மீட்பதற்கும், இழந்த பதவியை மீண்டும் பெறுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், வேலை கிடைப்பதற்கும், வியாபாரத்தில் இழந்த நஷ்டத்தை மீண்டும் லாபமாக மாற்றுவதற்கும், பெரியவர்கள் செய்யாமல் போன பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கும் திருநின்றவூர் வந்து ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாளை மனமார பிரார்த்தனை செய்தால் நல்ல பலனை உடனே அடையலாம்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருப்பதி ரத சப்தமி உற்சவம்
தை மாதத்தில், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். ரத சப்தமி நாள் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.
திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் விசேஷமானது. இந்தத் திருவிழாவின்போது, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மலையப்பசாமி ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். ஆனால் தை மாதம் ரத சப்தமியன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி தனித்தும்,ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். ரதசப்தமி அன்று நடைபெறும் வாகன சேவைகள்
சூரிய பிரபை வாகனம் - அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை.
சிறிய சேஷ வாகனம் - காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை
கருட வாகனம் - பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை
அனுமந்த வாகனம் - மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை
கல்ப விருட்ச வாகனம் - மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை
சர்வ பூபால வாகனம் - மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை
சந்திரபிரபை வாகனம் - இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. ரத சப்தமி நாளில் சூரிய பகவானின் பெயரில் தானம் செய்யவது நல்லது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஏழு வகையான பாவங்களைச் செய்கிறான் என்று கூறப்படுகிறது. இவை வேண்டுமென்றே, தற்செயலாக, வாய் வார்த்தையாலும், உடல் செயலாலும், மனதாலும், முற்பிறவியிலும் செய்த பாவங்கள். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபடுவதால் இந்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள் https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr-psams
2. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw
3. திருவேங்கடவனின் மாமனார்
https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr