கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோவில்

ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வ தோற்றம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது ஆதிவராகப் பெருமாள் கோவில். குபேரன் ஆதிவராகரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. குபேரன் வராகமூர்த்தியை பிரதிஷ்டை செய்தபோது யாக பாத்திரங்கள் கல்லாய் மாறின. அதனால் இவ்வூர் 'சிலாசாலிகுரிசி' எனப்பட்டது. இதுவே பின்னர் மருவி 'கல்லிடைக்குறிச்சி'யாயிற்று.

கருவறையில் மூலவர் ஆதிவராகர், பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் இடது மடியில் பூமா தேவியை தாங்கிய நிலையில் தரிசனமளிக்கிறார். பெருமாளின் இத்தகைய அமர்ந்த கோலம், இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இவரது மடியில் அமர்ந்து இருக்கும் பூமா தேவி, பெருமாளின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறார். இத்தல பெருமாளுக்கு தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது. உற்சவர் லட்சுமிபதி எனும் திருநாமத்துடன் தாயார் பூமாதேவியுடன் காட்சி தருகிறார்.

பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும், பெருமாள் சன்னதிக்கு இருபுறமும் தாயார்,ஆண்டாள் சன்னதிகள் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தனித்தனி சன்னதியில் இரண்டு பக்கமும் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

திருமண வரம் அருளும் தலம்

பெருமாள் எப்போதும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் அவருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்ற பெயரும் உண்டு.திருமண வரம் வேண்டுவோர்க்கு தட்டாமல் அவ்வரத்தை அருள்வதால் இத்தலம் கல்யாணபுரி என்றும் அழைக்கப்படுகிறது. நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரவும், கடன்கள் தீர்ந்து செல்வவளம் பெருகவும் பக்தர்கள் இத்தலத்து ஆதிவராகப் பெருமாள் வழிபடுகின்றனர். பக்தர்கள் தம் பிரார்த்தனை நிறைவேறினால், பெருமாளை கருட வாகனத்தில் எழுந்தருள செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதனால் இத்தலத்தில் பெருமாளின் கருட சேவையை அடிக்கடி நாம் தரிசிக்க முடியும்.

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் இத்தல வராகர் பாடப்பெற்றிருக்கிறார்.

ஆதி வராக பெருமாள் கோவில் கருட சேவை

 
Previous
Previous

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Next
Next

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்