ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்

ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம்

தெய்வத் திருமணங்கள் பல நடைபெறும் திருநாள்தான் பங்குனி உத்திரம். இந்நாளில் நடைபெறும் ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றிய 12 ஆழ்வார்களில், பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்த தலம் திருவில்லிபுத்தூர். ஆண்டாள், வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீரங்க அரங்கனைக் கைத்தலம் பற்றினாள் என்பது வரலாறு. எனவே ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.பங்குனி உத்திரத்தன்று காலை ஆண்டாளும் ரங்கமன்னாரும் செப்புத்தேரில் வலம் வருவார்கள். மாலையில் பெண் அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சிறப்பு திருமஞ்சனம் முடிந்தவுடன், ஆண்டாளும் ரங்க மன்னாரும் திருமண வைபவம் நடைபெறும் ஆடிப்பூர கொட்டகைக்கு எழுந்தருளுவார்கள். கல்யாணத்திற்கான சீர்வரிசைகளை பெரியாழ்வாரின் சார்பில் கோவில் நிர்வாகத்தினர் மணமேடைக்கு கொண்டுவர, அதன்பின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கும். தொடர்ந்து கன்னிகாதானம் நடைபெற்ற நிலையில் பக்தர்களின் முன்னிலையில் திருமாங்கல்ய தாரணம் நடைபெறும்.

ஆண்டாள் மார்கழி மாதம் பாவை நோன்பிருந்து கண்ணனை நினைத்து அருளிய . 'வாரணமாயிரம்' என்று தொடங்குகிற 11 பாடல்களை, பெண்கள் தினமும் பாடி, பெருமாளையும் ஆண்டாளையும் வணங்கி வந்தால், சீக்கிரமே திருமண பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

வாரண மாயிரம் சூழ வலம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

என்ற இந்தப் பாசுரம், வைணவர்கள் வீட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஓதப்பட்டு திருக்கல்யாணம் நடைபெறும். வைணவத் திருத்தலங்களில் செய்யப்படும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் இந்தப் பாசுரம் கட்டாயம் இடம் பெறும்.

ஆலயத்துளிகள் இணையதளத்தில் வெளியான சென்ற ஆண்டு பதிவுகள்

பங்குனி உத்திரத் திருவிழா

1. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் -ரங்கநாயகி சேர்த்தி சேவை

https://www.alayathuligal.com/blog/txl587f486nw9844c2p3hwmjb2gcy5

2. பங்குனி உத்திரத்தின் முக்கிய சிறப்புகள்

https://www.alayathuligal.com/blog/b56mrjmpzym5fnpkr88p4jjargdyxe

ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார்

ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம்

 
Previous
Previous

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

Next
Next

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்