
ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்
பார்ப்பவர்களை வியக்க வைக்கும் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் விக்கிரகம்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.
உற்சவர், காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கிறார். .ஐம்பொன்னால் ஆன இந்த உற்சவமூர்த்தி, கோவிலின் பின்புறமுள்ள காளிங்கன் மடு என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்.
இத்தலத்தில் தேவலோகப் பசுவான காமதேனுவின் குழந்தைகளான நந்தினி, பட்டி என்கிற பசுக்களுக்கு, ஸ்ரீகிருஷ்ண பகவான் காளிங்க நர்த்தனத்தை மீண்டும் ஆடிக் காண்பித்தார். இந்த லீலையை ஸ்ரீ நாரத முனிவர் கண்ணாரக் கண்டுள்ளார். ஸ்ரீநாரதர் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்கி, இந்த தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கெல்லாம் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை காண்பவர் வியக்கும் வண்ணம் உள்ளது. இந்த விக்கிரகத்தின் உயரம் சுமார் 30 அங்குலம். காளிங்கனின் தலை மீது கிருஷ்ணன் நடனமாடும் கோலத்தில் அமைந்துள்ளது. இவ் விக்கிரகத்தில், கிருஷ்ணரின் இடது கால் காளிங்கனின் தலையைத் தொடவில்லை. கிருஷ்ணரின் இடது பாதத்திற்கும், காளிங்கனின் சிரசுக்கும் நூல் விட்டு எடுக்கும் அளவு இடைவெளி உள்ளது. அவரது வலது கால் தூக்கியபடி, நர்த்தனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணரின் இடது கை கட்டை விரல் மட்டுமே தொட்டு இருக்கும்படியாக, காளிங்கனின் வாலை பிடித்தபடி காட்சி தருகிறார். இது இரண்டு உருவங்களுக்கிடையில் உள்ள ஒரே இணைப்பாகும், மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை. மேலும் கட்டைவிரல் -பாம்பின் வாலுக்கும் இடையே உள்ள இணைப்பானது மட்டுமே, முழு சிலைக்கும், சமநிலையை வழங்குகிறது (இந்த சிலையானது இரண்டு பேர் சேர்ந்தால் தான் நகர்த்தக் கூடிய எடை உள்ளது) . காளிங்கத்துடனான போரின் விளைவாக கிருஷ்ணரின் காலில் வடுக்கள் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.
விக்கிரகத்தின் சிறப்பை உணர்த்த மத்திய அரசு வெளியிட்ட தபால் தலை
இந்த விக்கிரகத்தில், பாம்பின் வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை. இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்த்த, மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது..
தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்
கிருஷ்ணரைப் போற்றி பல நூறு பாடல்கள் இயற்றிய தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். (1700 முதல் 1765) வாழ்ந்த தல்ம் இது. ‘அலைபாயுதே கண்ணா', 'தாயே யசோதா உந்தன் ஆயர் குலத் துதித்த' போன்ற, அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் மிகவும் பிரசித்தம். இத்தலத்து கிருஷ்ணனே, வேங்கடகவிக்கு இசையைப் பயிற்றுவித்ததாகச் சொல்வர். இதற்கு ஆதாரமாக வேங்கடகவியின், ஆபோகி ராகத்தில் அமைந்த 'குரு பாதாரவிந்தம் கோமளமு' எனும் பாடலைச் சொல்கிறார்கள். அதில் அவர் சொல்லும் கருத்து: 'நான் எந்த புராணங்களையோ, வரலாறுகளையோ படித்ததில்லை; படித்ததாக பாசாங்கும் செய்யவும் இல்லை. எனக்குத் தெரிந்த அனைத்துமே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து, எனக்கு அளித்த பிச்சை' என்கிறார்.
ஸ்ரீநாரத் முனிவரின் மறு அவதாரமாக ஸ்ரீவேங்கடகவி கருதப்படுகிறார். இவருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.
பிரார்த்தனை
ரோகினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. ராகு, கேது, சர்ப்ப தோஷம் நீங்குவதற்கான பரிகார தலம். இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் தங்கள் கலைகளில் அபிவிருத்தி பெற்று பிரகாசிக்க இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருவிழா
ஸ்ரீகிருஷ்ணரின் ஜயந்தித் திருவிழா இத்தலத்தில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் அன்று நடைபெறும்.

வரகூர் வெங்கடேச பெருமாள் கோவில்
கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழா
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம்
தஞ்சையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரகூர் என்னும் ஊரில் இருக்கின்றது வெங்கடேச பெருமாள் கோவில். ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது.
மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக் கொண்டு, காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார்.
ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர்(1650-1745). இசையிலும், நாட்டியத்திலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். அவருடைய வயிற்று வலியை இத்தலத்து பெருமாள் தான் குணப்படுத்தினார். வயிற்று வலி குணமான பின்னர் நாராயண தீர்த்தர் வரகூரில் தங்கி மகாபாரதத்தில் உள்ள சாரத்தை உள்ளடக்கி கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற காவியத்தை வடமொழியில் படைத்தார். நாராயணர் வரகூரில் தங்கி தான் இயற்றிய பாடல்களை பாடிய பொழுது திரைக்கு பின் பெருமாள் நடனமாடியதாகவும் ,சலங்கை சத்தம் கேட்டதாகவும், அனுமார் தாளம் தட்டி அதை ரசித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் வரகூர் ஆஞ்சநேயருக்கு தாளம் தட்டி ஆஞ்சநேயர் என்று பெயர். நாராயண தீர்த்தர், தனது இறுதி காலம் வரை ஸ்ரீவேங்கடேசப் பெருமாளை பூஜித்து, பஜனை வழி முறைகளை தோற்றுவித்து, தரங்கிணி பாடல்களை பாடி, 'உறியடி' என்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழாவையும் தோற்றுவித்தார்.
நாராயண தீர்த்தருக்கு சுவாமி கிருஷ்ணராகக் காட்சி தந்ததால் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகி.றது. கோவிலின் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம் வரகூர். ஆனால் இங்கு கிருஷ்ணருக்கென சிலை வடிவம் எதுவும் கிடையாது, லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகிறார்கள். வரகூருக்கே பெருமை தரும் உறியடித் திருவிழாவில் 'ராஜாங்க சேவை' சிறப்பு அலங்காரம் கண் கொள்ளாக் காட்சியாகும். அன்றுதான் உறியடி ஆரோகணமும் மேற்கொள்ளப்படுகிறது.. அடுத்த நாள் ஸ்ரீவேணுகோபால சேவை, அதற்கடுத்த நாள் ஸ்ரீகாளிங்க நர்த்தன சேவை. மறுநாள் உறியடிக்கும் ஸ்ரீகிருஷ்ணர் சேவை, தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் ஸ்ரீபார்த்தசாரதி சேவை, ஸ்ரீசயன ரங்கநாதப் பெருமாள் சேவை, ஸ்ரீயசோதா கிருஷ்ணர் சேவை என்று கோலாகலமாக விழா வெகு சிறப்பாக நடந்தேறும்.
கோகுலாஷ்டமியன்று சுவாமி மடியில் குழந்தை கிருஷ்ணரை வைத்து பெருமாளையே யசோதையாக அலங்கரிப்பர். சுவாமிக்கு முறுக்கு சீடை தட்டை பழம் மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் நைவேத்யமாகப் படைப்பர். மறுநாள் காலையில் சுவாமி கடுங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவில் அவர் வெண்ணெய்க் குடத்துடன், தவழும் கண்ணனாக கோயிலுக்குத் திரும்புவார். இவ்வேளையில் பக்தர்கள் அவரை பின்தொடர்ந்து விதிகளில் அங்கபிரதட்சணம் வருவர். அப்போது, ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள் ‘உறியடியோ கோவிந்தோ’ என்று கூச்சலிடுவர். அதாவது, கண்ணனின் அழகைக் காண கொட்டகையில் அடைக்கப்பட்ட பசு, கன்றுகளை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர. இவ்வேளையில் முறுக்கு, தட்டை, சீடைகள் வைத்த மண்பானையுடன் உள்ள மூங்கில் கூடை கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தில் உறியடி உற்சவம் நடக்கும். அந்தரத்தில் ஊசலாடிய உறியை பிடித்து அதன் உள்ளே இருக்கும் பிரசாதங்களை எடுப்பார்கள். பின் சுவாமி வழுக்கு மரம் உள்ள இடத்திற்குச் செல்வார். வழக்கு மரத்தில் சூழ்ந்து நின்ற மக்கள் வீசும் தண்ணீரை பொருட்படுத்தாமல் ஏறுவதற்கு இளைஞர்கள் பலர் முயற்சி செய்வார்கள். வழுக்கு மரத்தின் மேல் வேஷ்டிகளை சுற்றி கட்டி அதன் மீது காலை வைத்து மேலே ஏறி உச்சியில் கட்டப்பட்டுள்ள பிரசாதங்களை எடுத்து பக்தர்களுக்கு வழங்குவார்கள். வழுக்கு மரம் ஏறும் வைபவம் முடிந்ததும் சுவாமி கோயிலுக்குத் திரும்புவார். மறுநாள் கிருஷ்ணர் ருக்மிணி திருமணம் நடக்கும்.

குருவாயூர் குருவாயூரப்பன் கோவில்
சிறுபாலகனுக்காக, தயிர் சாதமும், வடுமாங்காயும் உண்ட கிருஷ்ணன்
கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது../ இத்தலத்து கிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள் புரிந்த நிகழ்ச்சிகள் ஏராளம். ஒரு சிறுபாலகனுக்காக, கிருஷ்ணன் தயிர் சாதமும், வடுமாங்காயும் உண்ட நிகழ்ச்சியைத்தான் இப்பதிவில் நாம் காணலாம்.
முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி,அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.
பாலகனும் அரிசியை சமைத்து குருவாயூரப்பனுக்கு நைவேத்யம் செய்து, அப்பனிடம், 'கண்ணா! சாப்பிடு.' என்று கூறினான். கண்ணன் அசையவில்லை. உடனே அவன், றும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான். தயிரை சாதத்தில் கலக்கி, வடுமாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை. 'சாப்பிடு கண்ணா!' என்று கெஞ்சினான். தயிர் சாதம் அப்படியே இருந்தது. 'என்னுடைய அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு' என்று சொல்லிக் கெஞ்சி அழுதான். குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான். அன்னத்தை உண்டான். குழந்தையும் சந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் (கோவில் பொறுப்பாளர்) கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த கோபம் வந்தது. பிஷாரடி 'சாதம் எங்கே?' என்று கேட்டார். குழந்தையும், ‘கண்ணன் சாப்பிட்டு விட்டான்’ என்று சொன்னான்.
நம்பூதிரி வந்ததும், பிஷாரடி, 'நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்' என்று சொன்னார். நம்பூதிரி, 'நைவேத்தியத்தை என்ன செய்தாய்?' என்றுகேட்டார். மறுபடியும் குழந்தை, 'கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்' என்று சொன்னான். அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள். நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், 'தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல், கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டு விட்டான் என்று பொய் சொல்கிறாயா?' என்று அடித்தார்.
குழந்தை இடத்தை விட்டு நகரவில்லை. குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை. நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை ஓங்கியபோது, 'நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்' என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது. கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர். நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, 'என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை! என் மகன் பாக்யசாலி!' என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.

பொள்ளாச்சி ராஜகணபதி கோவில்
மூலவர் விநாயகருடன், சிவபெருமானும் கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ராஜகணபதி விநாயகர் கோவில். இந்த கோவிலில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ராஜ கணபதிக்கு வலது பக்கம் சிவபெருமானும், இடது பக்கம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். இப்படி மூலவர் கணபதிக்கு இரு புறமும் சிவபெருமானும், கிருஷ்ணரும் உடன் எழுந்தருளி இருக்கும் கோலத்தை நாம் எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இத்தலத்து சிவபெருமான் திருநாமம் நாகலிங்கேசுவரர். கிருஷ்ணரின் திருநாமம் சந்தான கோபாலகிருஷ்ணன்.
இந்த ராஜ கணபதிக்கு அபிஷேகம் செய்து அவரை ஏழு அல்லது ஒன்பது முறை வலம் வந்தால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, இவருக்கு மஞ்சள் காப்பு செய்வித்தும், தேங்காய் மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்
சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்புகலூர். இறைவன் திருநாமம் அக்னிபுரீஸ்வரர், கோணபிரான். இறைவியின் திருநாமம் கருந்தார் குழலி, சூளிகாம்பாள்.
பொதுவாக சிவாலயங்களில் இறைவனின் கருவறையை சுற்றி வரும்போது, கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. "சிவன் சொத்து குலநாசம்' என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கிறார். இது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.

நாகந்தூர் பட்டாபிராமர் கோவில்
ராமர் தங்கிய ஊர்களில், அவர் மிகவும் விரும்பிய இடம்
இராமர், லட்சுமணன் வில்லில் மணி கட்டியிருக்கும் அரிய காட்சி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி. மீ., தூரத்தில், நாகந்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பட்டாபிராமர் கோவில் .இராமர் ராவண வதத்தை முடித்துக் கொண்டு சீதா தேவியுடன் அயோத்திக்கு திரும்புகையில் பல இடங்களில் தங்கி பயணித்தார். அப்படி அவர்கள் தங்கிய ஊர்களில் இத்தலமும் ஒன்று. இங்கு தங்கி இருந்தபோது, இத்தலத்தின் இயற்கை அழகில் ராமர் மிகவும் மனம் லயித்து போனார். .சீதா தேவியிடம், தங்கிய இடங்களிலே 'நான் உகந்த ஊர்’ இது என்றார். ராமர் குறிப்பிட்டதே பின்னாளில் .நாகந்தூர் என மாறியது. மேலும் இக்கோவில் கருவறையில் ராமர் அயோத்தியில் பட்டாபிஷேகத்தின் போது எந்த வகையில் காட்சி தந்தாரோ, அதே நிலையில் இங்கும் காட்சி தருகிறார். மேலும், வேறெங்கும் இல்லாதவாறு இராமர், லட்சுமணன் வில்லில் மணி வடிவமைக்கப்பட்டுள்ளது இத்தலத்தின் கூடுதல் சிறப்பாகும்.
பிரார்த்தனை
இக்கோவிலின் முக்கிய சிறப்பாக இருப்பது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபட்டால், ஓரிரு வாரங்களிலேயே அவர்களது கிரக தோஷம் விலகுகிறது. பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருமணத் தடை, வியாபாரத்தில் நஷ்டம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரும், இக்கோவிலில் வழிபட்டால் முன்னேற்றம் காணலாம்.

நெடியமலை செங்கல்வராய சுவாமி கோவில்
திருத்தணிகை செல்வதற்கு முன்பு வணங்க வேண்டிய திருப்புகழ் தலம்
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள நெடியம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது செங்கல்வராய சுவாமி கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 600 படிக்கட்டுகள் உள்ளன. யானை படுத்துக் கொண்டிருப்பது போல் இந்த மலை உள்ளதால், யானை மலை, கஜகிரி என்ற பெயர்களும், நெடியமலைக்கு உள்ளன. .அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது..
முருகனை இத்தலத்தில், இந்திரன் 'செங்கல்வம்' என்னும் நீலோத்பல மலரால் வழிபட்டமையால், முருகன் 'செங்கல்வராய சுவாமி' என்று போற்றப்படுகிறார். இங்கே முருகப்பெருமான் ஒருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு இருபுறமும் தேவிமார் சூழ, கடிஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
முருகப்பெருமான் வேடர்கள் அறியாமல் வள்ளியைக் கவர்ந்து வர, வேடர்கள் அவருடன் போருக்கு வர, முருகன் போர் புரிந்து சினம் அடங்காமல் நின்ற இடம் தான் இத்தலம். அவரது சினத்திற்கு இம்மலை தாங்காமல் ஆடவே, அருகிலுள்ள தணிகைமலையில் சென்று கோபம் தணிந்தாராம்.. முருகப்பெருமான் திருத்தணிக்கு செல்வதற்கு முன்பு சில காலம் இங்கு தங்கியிருந்ததால், பக்தர்கள் முதலில் செங்கல்வராய சுவாமியை வணங்கிவிட்டு பின்னர் திருத்தணிக்கு செல்லலாம்.
பிரார்த்தனை
கல்வித்துறை சார்ந்தவர்களும், வாகனத் துறையில் இருப்பவர்களும் வழிபட நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மணிக்குடி பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்
புற்றுநோய்க்கு மருந்தாகும் அபிஷேகப் பால்
கும்பகோணம் அணைக்கரை சாலையில் அமைந்துள்ள திருப்பனந்தாள் என்னும் தேவாரத் தலத்திலிருந்து, தென்கிழக்கே 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மணிக்குடி கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் பஞ்சவர்ணேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகன் நாயகி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் இது.
ஒரு சமயம் சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜப் பெருமானுக்கும், காளி தேவிக்கும் நடனப் போட்டி ஏற்பட்டது. நடராஜப் பெருமான் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, அவரது கால் சிலம்பிலிருந்து ஒரு மரகதப் பச்சை மணி தெறித்து ஓடியது. அந்த மரகத பச்சை மணி விழுந்த இடம் தான் மணிக்குடி. விழுந்த மரகதப்பச்சை மணி சுயம்பு லிங்கமாக மாறியது. அந்த சுயம்பு லிங்கத் திருமேனியின் திருநாமம் தான் பஞ்சவர்ணேஸ்வரர். தான் சுயம்புவாக உருவாகி இருப்பதை சிவபெருமான் தேவர்களுக்கு அசரீரி மூலம் உணர்த்தினார். மேலும் அவர்களுக்கு ஐந்து வண்ணங்களோடு காட்சி தந்தார். இத்தலத்தில் விஷ்ணு ஏற்படுத்திய விஷ்ணு தீர்த்தம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் பஞ்சவர்ணேஸ்வரருக்கு காலை, மாலை இரு வேளையும் செய்யப்படும் பசும்பால் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படி அபிஷேகம் செய்து, அந்தப் பாலை சிறிது பிரசாதமாக உட்கொண்டால், கேன்சர் என்று சொல்லப்படும் புற்றுநோயின் பாதிப்பு வெகுவாக குறையும். அதுமட்டுமல்ல, எத்தகைய தீராத நோயால் அவதிப்படுபவர்களும் மணிக்குடி கிராமத்திற்கு வந்து இத்தல இறைவனுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து, அதை பிரசாதமாக பருகினால், அவர்களது நோயும் குணமாகிவிடும். இப்படி அபிஷேகப் பால், அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இதனால் ஏராளமான பக்தர்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இங்கு வந்து தங்கி, அபிஷேக பாலை பருகி தங்கள் புற்று நோயையும் மற்றும் தங்களுக்கு ஏற்பட்ட தீராத நோய்களையும், குணமாக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவில்
மூலவராக, சிம்ம வாகனத்தின் மேல் அமர்ந்து காட்சி தரும் ராஜதுர்க்கை அம்மன்
திருவாரூர் தியாகராஜர் கோவில் அருகில், திருமஞ்சன வீதியில் அமைந்துள்ளது ராஜதுர்க்கை அம்மன் கோவில். பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மனை வடக்கு பிராகார கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஆனால் இக்கோவிலில், துர்க்கை அம்மன் மூலவராக சிம்ம வாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில், நான்கு கரங்களில், சங்கு சக்கரம், கத்தி, சூலம் ஆகியவற்றை ஏந்தி, தலையில் சந்திர கலையை தரித்தவண்ணம் சாந்த சொரூபிணியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாகவும் இச்சை, கிரியை ஞானம் ஆகிய மூன்று சக்திகள் ஒருங்கே அமையப் பெற்ற சக்தியாகவும், வேதம் ஆகமம், புராணம் ஆகியவற்றில் வெற்றி என்ற நாமத்திற்கு பொருளுடையவளாகவும் விளங்குபவள் ஜெய துர்க்கா. இப்படி எங்கும், எதிலும், எந்நிலையிலும் வெற்றியைத் தரக்கூடிய ஜெயதுர்க்கா தேவியானவள், ராஜதுர்க்கை என்ற திருநாமத்துடன் இங்கு அருள்பாலிக்கிறாள்.
ராமபிரான் இலங்கைக்கு ராவணனை வதம் செய்யப் புறப்படும் முன் இவ்வன்னையை வழிபட்டுச் சென்று, அவனை வெற்றி கொண்டதாக மகாகவி காளிதாசர் ரகு வம்ச காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரார்த்தனை
பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, மகம் நட்சத்திரக்காரர்கள் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அனைவருக்கும் யோகாதிபதியாக விளங்குகிறாள் இந்த ராஜ துர்க்கை. அனைத்து யோகங்களும் விரைவிலேயே கிடைக்க, தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடை நீங்க, இங்குள்ள துர்க்கையை வழிபட்டுச் செல்கின்றனர்.

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
மனைவியருடன் ராகு, கேது அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தரும் அபூர்வ அமைப்பு
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
கோவில்களில் ராகு, கேது இருவரும் நவக்கிரக மண்டபத்தில்தான் காட்சி தருவர். திருநாகேஸ்வரத்தில் ராகுவும், கீழப்பெரும்பள்ளத்தில் கேதுவும் தனிச்சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் ராகுவும், கேதுவும் தம் மனைவியருடன் அருளுகின்றனர். இவர்கள் இருவரும் சுயரூபத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு. ஆவுடையாருடன் கூடிய சதுர பீடத்தில் ராகு, சிம்ஹிகையுடனும், கேது, சித்ரலேகாவுடனும் காட்சி தருகின்றனர்.
இவர்களது சன்னதிக்கு தனித்தனி துவாரபாலகர்களும் இருக்கின்றனர். ஏழு நாக தேவதைகளும் இவரது சன்னதியில் சுதை சிற்பமாக வடித்துள்ளனர். சுவாதி நட்சத்திர நாட்களில் இவர்களுக்கு விசேஷ பாலபிஷேகம் செய்கின்றனர். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 - 6 மணி) இவர்களது சன்னதியில், "சர்ப்பதோஷ பரிகார ஹோமம்' நடக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு, ராகு, கேதுவை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவர்களது சன்னதியில் ஹோமத்துடன் பரிகார பூஜையும், திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

நாச்சியார் கோயில் திருநறையூர் நம்பி கோவில்
தாயார் சொல் கேட்டு நடக்கும் பெருமாள்
கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கும் தாயார்
கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திவ்ய தேசம் நாச்சியார் கோயில். பெருமாளின் திருநாமம் சீனிவாசப் பெருமாள். தாயாரின் திருநாமம் வஞ்சுளாதேவி. இத்தலத்தில் உள்ள தாயார், பெருமாளைவிட சற்று முன்புறம் நின்றவாறு உள்ளார். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் இக்கோவிலில் மிகவும் விசேஷமானது ஆகும். இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள்.
தாயார், இடுப்பில் சாவிக் கொத்து வைத்திருப்பது, கோயில் நிர்வாகம் அனைத்தும் அவரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்துகிறது.
கோயில் நிர்வாகம் அனைத்தும் தாயாரிடம்தான் என்பதை உணர்த்தும் வகையில் தாயாருடைய இடுப்பில் சாவிக்கொத்து தொங்குகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இத்தலத்தில் உள்ள வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள்.
சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு வஞ்சுளாதேவி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று வஞ்சுளாதேவியை தேடினர். மகாவிஷ்ணுவுடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைப் பற்றிக் கூறினார். உடனே மகாவிஷ்ணு அங்கு சென்று வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், தாங்கள் என் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும், என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும் என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்ற பெயரும் பெற்றது.

திருமெய்ஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்
தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் இருக்கும் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கடவூர் மயானம். பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், கடவூர்மயானம் என்றும். திருமெய்ஞானம் என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் மலர்க்குழல் மின்னம்மை. திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கும் பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழே, நான்கு சீடர்களுடன் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில், கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியுடன், ஆறு சீடர்களுடன் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.. மேலும் கல்லால மரமும் இல்லை. கல்வியில் சிறந்து விளங்க இத்தல சிவனையும் இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறப்பு.

முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் எதிரெதிரே எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
திருச்சி சேலம் நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ள முசிறி நகரத்தில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில். புராணங்களில் முசுகுந்தபுரி என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், தற்பொழுது மருவி முசிறி என்று மாறியுள்ளது. கருவறையில், லட்சுமி நாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கியவாறு லட்சுமி தேவியை இடது தொடையில் அமர்த்திக்கொண்டு, இடது கையால் அணைத்தபடி, வலது கையால் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அபயஹஸ்தம் கொண்டு காட்சியளிக்கிறார்.
பொதுவாக பெருமாள் கோவில்களில் கொடிமரத்து அருகில், கருடாழ்வாரோ அல்லது ஆஞ்சநேயரோ எழுந்தருளி இருப்பார்கள். இக்கோவிலில் கொடிமரம் இல்லை. ஆனால் இக்கோவில் மகாமண்டபத்தில், ஆஞ்சநேயரும், கருடாழ்வாரும் எதிரெதிரே எழுந்தருளி இருப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
பிரார்த்தனை
இக்கோவில் சுக்கிர பரிகாரத் தலமாக விளங்குகிறது. திருமணத் தடை நீக்கவும், குழந்தைப் பேறுக்காகவும் இங்கு வந்து பரிகாரம் செய்கிறார்கள், மேலும் வியாபாரத் தடை கடன் தொல்லை, தொழில் நடை எதிரிகளால் ஏற்படும் பயம் வேலையின்மை போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. லட்சுமி தேவியுடன் இருக்கும் இப் பெருமானை, 7 வாரங்கள் 12 முறை சுற்றி வந்தால். நினைத்த காரியம் உடனே நிறைவேறும் என்பது ஆன்றோர்களின் அறிவுரை ஆகும்.
திருவிழாக்கள்
இக்கோவிலில் திருப்பாவாடைத் திருநாள் ஆண்டுக்கு முறை நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதம் 16-ஆம் திருநாள் வட்டு திருப்பாவாடைத் திருநாளும் ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று பெரியத் திருப்பாவாடைத் திருநாளும், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை புளியோதரைத் திருப்பாவாடை திருநாளும் நடைபெறும்.

ஊட்டி சந்தைக்கடை மாரியம்மன் கோவில்
ஒரே பீடத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன், காளியம்மன்
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில், நகராட்சிச் சந்தை பகுதியில் அமைந்துள்ளது சந்தைக்கடை மாரியம்மன் கோவில். கருவறையில் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இருவரும் ஒரே பீடத்தில் வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும். மேலும், இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயமாகும்.
ஊட்டி நகரில் வணிகர்கள், வணிகம் செய்து வந்த காலத்தில் இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க கண்களை உடையவர்களாக திகழ்ந்தனர். தெய்வீக மணமும், முகமும் சாந்தமே உருவெடுத்த தோற்றமும் கொண்ட அவர்கள் தாங்கள் தங்க இடம் கேட்டனர்.அப்போது அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது. அருகில் இருந்த மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அப்போது மின்னல் கீற்று, விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தோன்றி மறைந்தது. அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர். அதன்பின்பே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து, அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோவில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அதிலிருந்து இக்கோவில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் மூன்றாவது சக்தியாக, காட்டேரி அம்மன் அருள்பாலித்து வருகிறார். ஆலயத்தின் வலதுபுறம் மூலையில் காட்டேரி அம்மன் சன்னிதி தனியே அமைந்துள்ளது. இந்த அன்னை தீவினைகளை அகற்றும் அம்மனாக இருந்து பக்தர்களுக்கு அருள்கிறார். காட்டேரியம்மன் சன்னதியில் மந்திரித்த முடிக்கயிறு கட்டுவதால் தோஷம், பிணி, பில்லி சூனியம், செய்வினை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அம்மனிடம் குழந்தைப்பேறு வேண்டுவோர், குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலிருந்து நேராக இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
உப்பு மழையில் நடைபெறும் தேர் பவனி
சித்திரை மாதம் இங்கு நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இந்தத் திருவிழா 36 நாட்கள் நடைபெறுவது வேறு எந்த கோவிலிலும் இல்லாத நடைமுறையாகும். அப்போது அன்னை வெள்ளை நிறப் புடவை அணிந்து, அலங்காரம் செய்யப்பட்டு உலா வருகிறார். தேர் பவனியின் போது நேர்த்திக்கடனாக பக்தர்கள் டன் கணக்கான உப்பைத் தேர் மீது வாரி இறைத்துக் காணிக்கை செலுத்துகிறார்கள். இப்படி உப்பு மழையில் தேர் பவனி நடைபெறுவதை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். உப்பைப் போல தங்களின் குறைகளும், துன்பங்களும் கரைந்து போக வேண்டும் என்பதற்காக, இந்த வேண்டுதலை பக்தர்கள் செய்கிறார்கள்.

கூறைநாடு புனுகீஸ்வரர் கோவில்
புனுகுப் பூனையாக பிறந்த இந்திரனுக்கு, சிவபெருமான் சாப விமோசனம் கொடுத்த தலம்
மயிலாடுதுறையின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது கூறைநாடு. முற்காலத்தில் இந்தப் பகுதி தனியூர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் அமைந்துள்ளது புனுகீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சாந்த நாயகி. அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவரான, சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்த தொண்டினை செய்த நேசநாயனார் அவதரித்த தலம் இது. 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
அந்தக் காலத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே அமைந்திருந்த இந்த வனத்தில் எண்ணற்ற புனுகுப் பூனைகள் வாழ்ந்து வந்தன. அங்கு வசித்த புனுகுப்பூனைகளில் ஒன்றிற்கு தன் முற்பிறவி ஞாபகம் வந்தது. அந்த புனுகுப்பூனை முற்பிறவியில் இந்திரனாக இருந்தது. அப்போது நடந்த தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால், புனுகுப்பூனையாக மாறும்படி சபிக்கப்பட்டான் இந்திரன். பின்னர் அவன் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினான்.
சிவபெருமான் விமோசனமாக இத்தலத்திற்கு சென்று வழிபடுமாறு கூறினார். புனுகுப்பூனையாக இங்கு பிறந்த இந்திரன், சிவன் அருளியபடி அந்த வனத்தில் உள்ள பவளமல்லி விருட்சத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனை வழிபட்டான்.
தினமும் சிவலிங்கத் திருமேனி முழுவதும் நறுமணம் கமழும் புனுகினைப் பூசி வில்வ தளங்களை வாயினால் கவ்வி எடுத்துக்கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து வலம் வந்து வழிபட்டது. நெடுங்காலம் தொடர்ந்தது இந்த வழிபாடு புனுகுப்பூனையின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அதற்குத் தேவ வடிவம் கொடுத்து ஆட்கொண்டார்.

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக பாவிக்கப்படும் வேப்பிலை மாரியம்மன்
திருச்சியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மணப்பாறை நகரத்தில் அமைந்துள்ளது வேப்பிலை மாரியம்மன் கோவில். இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் வேப்பிலை மாரியம்மன், சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக பாவிக்கப்படுகிறாள்.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூங்கில் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. மூங்கில் மரத்தை ஒருவர் வெட்டிக் கொண்டு இருந்தபோது தவறுதலாக அருகில் இருந்த வேப்பமரத்தின் அடியில் கோடாலி பட்டு விட்டது. அப்போது அந்த வேப்ப மரத்து அடியில் புதைந்து இருந்த கல்லிலிருந்து ரத்தம் பீறிட்டு கிளம்பியது. அவர் ஊர் மக்களை கூட்டி வந்து அந்தக் காட்சியைக் காட்டினார். அக்கூட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள் வந்து, தான் மகமாயி என்றும், இந்த வேம்பினடியில் நீண்ட நெடுங்காலமாகக் குடி கொண்டிருப்பதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி ஆலயமெடுத்து வணங்கி வந்தால், இந்நகரைக் காத்து அருள்பாலிப்பேன் என்றும் கூறினார்.
ஊரார் அனைவரும் வேப்ப மரத்தினடியில் இருந்த அந்தப் புனிதக் கல்லைத் தங்களின் குலம் காக்க வந்த மாரி தெய்வமாய் எண்ணிக் கோவில் கட்டி வழிபடலாயினர். அப்புனிதக்கல் இன்றும் மாரியம்மனின் ஆலயத்தில் அமைந்துள்ளது. இன்றும் சிலை வடிவம் கொண்ட மாரியம்மனுக்குக் காட்டும் புனித தீப ஆராதனைகள் யாவும் முதலில் அப்புனிதக் கல்லுக்குக் காட்டிய பிறகே காட்டப் படுகிறது. வேப்பமரத்தடியில் புனிதக் கல் கிடைத்ததால், வேப்பிலை மாரியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது.
இக்கோவிலின் தலவிருட்சம் வேப்பமரம். இந்த வேப்பமரமானது, ஒரு கர்ப்பிணிப் பெண், தனது வயிற்றில் குழந்தை சுமந்திருக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறது. குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இந்த மரத்தில் தொட்டில் கட்டி தங்கள் வேண்டுதலை வைக்கிறார்கள். குழந்தை வரம் பெற்றவுடன், சித்திரைத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர், கரும்புத் தொட்டில் எடுத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்
இந்தக் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது நடைபெறும் பால்குட விழா, இந்த நகரின் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலம். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு வருவது மிகவும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும். பல ஆயிரக்கணக்கான லிட்டர் பாலால் அன்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவில்
யானைக்குத் திருமால் சாப விமோசனம் அருளிய திவ்யதேசம்
கும்பகோணம்-திருவையாறு சாலையில், கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் ஊரில் உள்ள கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள திவ்யதேசம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் ரமாமணி வல்லி.
கபி என்றால் குரங்கு என்று பொருள். ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றார் எனவே கபிஸ்தலம் என அழைக்கப்பட்டது.108 திவ்ய தேசங்களில், இது ஒன்பதாவது தலமாகும். தமிழ்நாட்டிலுள்ள பஞ்ச கிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று.
இந்திரஜ்யும்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார். அரசன் அவரது வருகையை உணரவே இல்லை. தன்னை அரசன் அவமதித்து விட்டதாகக் கோபம் கொண்ட முனிவர் 'முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்' எனச் சாபம் கொடுத்து விட்டார். பின் தன்னை மன்னிக்கும்படி வேண்டிய அரசனிடம், 'திருமால் மேல் பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிறந்து, திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்' என்று கூறினார்.
ஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன், குளத்தில் குளிக்க வருவோரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுத்து, அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார். மன்னிப்பு வேண்டி நின்ற அரக்கனுக்கு திருமால் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார்.
வழக்கம் போல் ஒருநாள் யானைகளின் அரசனான கஜேந்திரன், விஷ்ணுவை வழிபட தாமரைப்பூ எடுப்பதற்கு அக்குளத்திற்குள் சென்றபோது, முதலையாக அங்கிருந்த அரக்கன் கஜேந்திரனின் ஒரு காலைக் கவ்விக்கொண்டான். காலை விடுவித்துக் கொள்ளமுடியாத கஜேந்திரன் திருமாலை 'ஆதிமூலமே காப்பாற்று' என்று அபயக்குரல் கொடுத்தது. திருமாலும் காட்சி தந்து முதலையைச் சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்றினார். முதலை, யானை இரண்டுமே சாபவிமோசனம் அடைந்தனர். இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும்.
திருவிழா
ஆடி பௌர்ணமியன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச லீலை, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, பிரம்மோற்சவம் ஆகியவை மூன்றும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

கருவளர்சேரி அகஸ்தீஸ்வரர் கோவில்
மழலைச் செல்வம் அருளும் அகிலாண்டேஸ்வரி
மண்ணால் ஆன சுயம்பு திருமேனி உடைய அம்பிகை
திரையிடப்பட்டு இருக்கும் அம்பிகையின் பாதி திருமேனி
கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. இறைவன் திருநாமம் அகஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அகத்திய முனிவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, தனது மனைவி லோப முத்திரையுடன் வழிபட்ட தலம் இது.
இத்தலத்து அம்பிகை அகிலாண்டேஸ்வரி மண்ணால் ஆன சுயம்பு திருமேனி உடையவள். அதனால் அம்பாளுக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனை மூல ஸ்ரீ சக்ர மகா மேரு மற்றும் ஸ்ரீ சக்ரத்திற்கும் செய்யப்படுகிறது. இப்படி மண்ணாலான சுயம்பு திருமேனி உடைய அம்பிகையை நாம் வேறு தளத்தில் பார்ப்பது அரிது. மேலும், அம்பாளின் முழு உருவத்தை சிவராத்திரி மற்றும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மட்டுமே நாம் காண முடியும். மற்ற நாட்களில் அம்பாளின் பாதி உருவம் மட்டுமே பார்க்கும் அளவிற்கு திரையிடப்பட்டு இருக்கும். அதாவது சாதாரண நாட்களில் நாம் அம்பிகையின் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.
அகிலாண்டேஸ்வரி கரு வளர்க்கும் நாயகி என்று அழைக்கப்படுகிறார் - கரு வளர அருள் புரியும் தெய்வம். கருவில் இருக்கும் சிசுவிற்கு வளர்ச்சி வரம் தருகிறாள். இத்தலத்துக்கு அருகாமையில் உள்ள புகழ் பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலை இந்த ஆலயம் நிறைவு செய்கிறது. கருவைக் காக்கும் தெய்வம் கர்ப்பரட்சாம்பிகை. அந்த அம்பிகை கருவில் இருக்கும் சிசுவிற்கு பாதுகாப்பு அருளுகிறாள். இதனால் கர்ப்பிணிகளுக்கு ஒரு புனித தலத்தில் (கருவளர்சேரி) வளர்ச்சியும், மற்றொரு இடத்தில் (திருக்கருகாவூர்) பாதுகாப்பு வரமும் கிடைக்கும்.
கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அகிலாண்டேஸ்வரி அம்பிகையை வழிபடுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும். திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தையில்லாமல் ஏங்கும் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் சன்னிதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூஜித்து வர வேண்டும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது. இப்படிச் செய்தால், தடைகளை எல்லாம் நீக்கி, கருவளர் நாயகி மகப்பேற்றை அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிகளும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். பூஜை செய்து வழிபட்டுச் சென்ற பெண்கள் சில மாதங்களிலேயே கருவுற்று, மீண்டும் இக்கோவிலுக்கு வந்து தொட்டில், தங்களுக்கு வளைகாப்பு நடைபெறும்போது கொடுக்கப்படும் வளையல் ஆகியவற்றை தங்கள் நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கிறார்கள்.
மேலும், கருவளர்சேரிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் அனைவரின் உடல் ரீதியாக உள்ள தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கீழ கபிஸ்தலம் ஏகாம்பரேசுவரர் கோவில்
திருமண வரம் வேண்டி அம்பிகைக்கு சாற்றப்படும் கண்ணாடி வளையல் மாலை
தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ கபிஸ்தலம் ஏகாம்பரேசுவரர் கோவில். திவ்ய தேசமான கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இத்தலம். இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இக்கோவில் தொண்டை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலுக்கு இணையானது.
இத்தலத்து காமாட்சி அம்மன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் வலது கரத்தில் தாமரை மலரையும், மேல் இடது கரத்தில் அங்குசத்தையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள்.
தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று வேண்டும் கன்னிப் பெண்களுக்கு, அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் கருணை உள்ளம் கொண்ட தாயாக விளங்குகின்றாள் இத்தலத்து காமாட்சி அம்மன். திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வாழ்க்கைத் துணையாக வேண்டும் என்று இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தங்கள் வேண்டுதலின் போது, அவர்கள் கண்ணாடி வளையல்களை மாலையாகக் கோர்த்து, அம்பிகையின் கழுத்தில் அணிவித்து வணங்குகிறார்கள். பின், அந்த வளையல்களை பிற பெண்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கின்றனர். அவர்கள் கண்ணாடி வளையல் மாலை அணிவித்த 90 நாட்களுக்குள், அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாவது உறுதி என்கிறார்கள் இத்தலத்து பக்தர்கள்.
குழந்தை பாக்கியம்
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு நடைபெறும் பிரதோஷத்தில் 11 நாட்கள் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகின்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
திருமண பாக்கியம் அருளும் ஸ்ரீ ஆண்டாள் கோவில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதம்
மானிட உலகில் பெண்ணாக பிறந்து, இறைவனை அடைந்த ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். பெரியாழ்வார் தம் நந்தவனத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு துளசிச் செடியின் அடியில் கலி பிறந்து 98 நிகழ்ந்த நள வருடத்தில் ஆடிமாதம் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தாள். கோதை தம் தந்தையாகிய பெரியாழ்வார் வடபெருங்கோவிலுடையானுக்குச் சாற்றுவதற்காக தொடுத்து வைத்திருந்த பூமாலைகளை எடுத்து அணிந்து கொண்டு, தாம் கண்ணபிரானுக்கு ஏற்ற மணப் பெண் தானா? என்று அழகு பார்க்க, இதனை அறிந்த பெரியாழ்வார் மிகவும் மனம் வருந்தியவராய் அம்மாலைகளை எம்பெருமானுக்கு சமர்ப்பிக்காமல் இருந்தார்.அன்று ஆழ்வாரின் கனவில் எம்பெருமான் தோன்றி தமக்கு கோதை சூடிக் களைந்த மாலையே சிறப்பு என்று கூற அன்று முதல் கோதை 'ஆண்டாள்' என்றும் ‘சூடிக் கொடுத்த நாச்சியார்’ என்றும் அழைக்கப்பட்டார். ஸ்ரீ ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலையில் செவ்வந்தி (மஞ்சள்), விருட்சி (இட்லிப்பூ என்றும் சொல்வர்) (சிவப்பு), சம்மங்கி (வெள்ளை), மருள் (பச்சை), கதிர்பச்சைப்பூ (பச்சை) ஆகிய மலர்களும், துளசியும் பிரதானமாக சேர்க்கப்பட்டு மாலை செய்யப்படுகிறது. இப்பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது.
திருமணமாகாத பெண்கள் . துளசி மாலை வாங்கி வந்து ஸ்ரீ ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, ஸ்ரீ ஆண்டாள் சன்னதி அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு பின் மீண்டும் ஸ்ரீ ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ ஆண்டாள் சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணைப் பக்தர்கள் சிறிதளவு எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தோஷங்கள் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.
பேண்ட்,சர்ட் அணிந்த உற்சவப் பெருமாள்
நம் வீட்டு திருமண நிகழ்ச்சியில், மாப்பிள்ளை அழைப்பின்போது மணமகன் பேண்ட், சட்டை அணிந்து வருவர். இது இன்று, நேற்று நடக்கும் வழக்கமல்ல. பெருமாள், ஆண்டாளை திருமணம் செய்தபோதே, பேண்ட், சட்டை அணிந்து சென்றார். இதன் அடிப்படையில் இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஏகாதசி, அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு ஆகிய விழாக்காலங்களில் இவர் வெள்ளை வேஷ்டி அணிந்திருப்பார்.
ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா
இன்று (07.08.2024) ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா நடைபெறுகின்றது.