திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவில்

மூலவராக, சிம்ம வாகனத்தின் மேல் அமர்ந்து காட்சி தரும் ராஜதுர்க்கை அம்மன்

திருவாரூர் தியாகராஜர் கோவில் அருகில், திருமஞ்சன வீதியில் அமைந்துள்ளது ராஜதுர்க்கை அம்மன் கோவில். பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மனை வடக்கு பிராகார கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஆனால் இக்கோவிலில், துர்க்கை அம்மன் மூலவராக சிம்ம வாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில், நான்கு கரங்களில், சங்கு, சக்கரம், கத்தி, சூலம் ஆகியவற்றை ஏந்தி, தலையில் சந்திர கலையை தரித்தவண்ணம் சாந்த சொரூபிணியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாகவும் இச்சை, கிரியை, ஞானம் ஆகிய மூன்று சக்திகள் ஒருங்கே அமையப் பெற்ற சக்தியாகவும், வேதம், ஆகமம், புராணம் ஆகியவற்றில் வெற்றி என்ற நாமத்திற்கு பொருளுடையவளாகவும் விளங்குபவள் ஜெய துர்க்கா. இப்படி எங்கும், எதிலும், எந்நிலையிலும் வெற்றியைத் தரக்கூடிய ஜெயதுர்க்கா தேவியானவள், ராஜதுர்க்கை என்ற திருநாமத்துடன் இங்கு அருள்பாலிக்கிறாள்.

ராமபிரான் இலங்கைக்கு ராவணனை வதம் செய்யப் புறப்படும் முன் இவ்வன்னையை வழிபட்டுச் சென்று, அவனை வெற்றி கொண்டதாக மகாகவி காளிதாசர் ரகு வம்ச காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரார்த்தனை

பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, மகம் நட்சத்திரக்காரர்கள் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அனைவருக்கும் யோகாதிபதியாக விளங்குகிறாள் இந்த ராஜ துர்க்கை. அனைத்து யோகங்களும் விரைவிலேயே கிடைக்க, தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடை நீங்க, இங்குள்ள துர்க்கையை வழிபட்டுச் செல்கின்றனர்.

 
Previous
Previous

மணிக்குடி பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்

Next
Next

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்