வரகூர் வெங்கடேச பெருமாள் கோவில்

கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழா

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம்

தஞ்சையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரகூர் என்னும் ஊரில் இருக்கின்றது வெங்கடேச பெருமாள் கோவில். ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது.

மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக் கொண்டு, காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர்(1650-1745). இசையிலும், நாட்டியத்திலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். அவருடைய வயிற்று வலியை இத்தலத்து பெருமாள் தான் குணப்படுத்தினார். வயிற்று வலி குணமான பின்னர் நாராயண தீர்த்தர் வரகூரில் தங்கி மகாபாரதத்தில் உள்ள சாரத்தை உள்ளடக்கி கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற காவியத்தை வடமொழியில் படைத்தார். நாராயணர் வரகூரில் தங்கி தான் இயற்றிய பாடல்களை பாடிய பொழுது திரைக்கு பின் பெருமாள் நடனமாடியதாகவும் ,சலங்கை சத்தம் கேட்டதாகவும், அனுமார் தாளம் தட்டி அதை ரசித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் வரகூர் ஆஞ்சநேயருக்கு தாளம் தட்டி ஆஞ்சநேயர் என்று பெயர். நாராயண தீர்த்தர், தனது இறுதி காலம் வரை ஸ்ரீவேங்கடேசப் பெருமாளை பூஜித்து, பஜனை வழி முறைகளை தோற்றுவித்து, தரங்கிணி பாடல்களை பாடி, 'உறியடி' என்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழாவையும் தோற்றுவித்தார்.

நாராயண தீர்த்தருக்கு சுவாமி கிருஷ்ணராகக் காட்சி தந்ததால் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகி.றது. கோவிலின் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம் வரகூர். ஆனால் இங்கு கிருஷ்ணருக்கென சிலை வடிவம் எதுவும் கிடையாது, லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகிறார்கள். வரகூருக்கே பெருமை தரும் உறியடித் திருவிழாவில் 'ராஜாங்க சேவை' சிறப்பு அலங்காரம் கண் கொள்ளாக் காட்சியாகும். அன்றுதான் உறியடி ஆரோகணமும் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த நாள் ஸ்ரீவேணுகோபால சேவை, அதற்கடுத்த நாள் ஸ்ரீகாளிங்க நர்த்தன சேவை. மறுநாள் உறியடிக்கும் ஸ்ரீகிருஷ்ணர் சேவை, தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் ஸ்ரீபார்த்தசாரதி சேவை, ஸ்ரீசயன ரங்கநாதப் பெருமாள் சேவை, ஸ்ரீயசோதா கிருஷ்ணர் சேவை என்று கோலாகலமாக விழா வெகு சிறப்பாக நடந்தேறும்.

கோகுலாஷ்டமியன்று சுவாமி மடியில் குழந்தை கிருஷ்ணரை வைத்து பெருமாளையே யசோதையாக அலங்கரிப்பர். சுவாமிக்கு முறுக்கு சீடை தட்டை பழம் மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் நைவேத்யமாகப் படைப்பர். மறுநாள் காலையில் சுவாமி கடுங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவில் அவர் வெண்ணெய்க் குடத்துடன், தவழும் கண்ணனாக கோயிலுக்குத் திரும்புவார். இவ்வேளையில் பக்தர்கள் அவரை பின்தொடர்ந்து விதிகளில் அங்கபிரதட்சணம் வருவர். அப்போது, ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள் ‘உறியடியோ கோவிந்தோ’ என்று கூச்சலிடுவர். அதாவது, கண்ணனின் அழகைக் காண கொட்டகையில் அடைக்கப்பட்ட பசு, கன்றுகளை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர. இவ்வேளையில் முறுக்கு, தட்டை, சீடைகள் வைத்த மண்பானையுடன் உள்ள மூங்கில் கூடை கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தில் உறியடி உற்சவம் நடக்கும். அந்தரத்தில் ஊசலாடிய உறியை பிடித்து அதன் உள்ளே இருக்கும் பிரசாதங்களை எடுப்பார்கள். பின் சுவாமி வழுக்கு மரம் உள்ள இடத்திற்குச் செல்வார். வழக்கு மரத்தில் சூழ்ந்து நின்ற மக்கள் வீசும் தண்ணீரை பொருட்படுத்தாமல் ஏறுவதற்கு இளைஞர்கள் பலர் முயற்சி செய்வார்கள். வழுக்கு மரத்தின் மேல் வேஷ்டிகளை சுற்றி கட்டி அதன் மீது காலை வைத்து மேலே ஏறி உச்சியில் கட்டப்பட்டுள்ள பிரசாதங்களை எடுத்து பக்தர்களுக்கு வழங்குவார்கள். வழுக்கு மரம் ஏறும் வைபவம் முடிந்ததும் சுவாமி கோயிலுக்குத் திரும்புவார். மறுநாள் கிருஷ்ணர் ருக்மிணி திருமணம் நடக்கும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு பொடிக் கலவை பிரசாதமாக தரப்படும் பெருமாள் கோவில் (19.02.2024)

https://www.alayathuligal.com/blog/w6f96nt34pkgd6tatbnjp79y3wp6yk?rq

நாராயண தீர்த்தர்(1650-1745)

 
Previous
Previous

ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்

Next
Next

குருவாயூர் குருவாயூரப்பன் கோவில்