
திருநாரையூர் (நாச்சியார் கோவில்) ஆகாச மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மன் அருவமாக எழுந்தருளி இருக்கும் தலம்
கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காக ஆகாய மார்க்கமாக வரும் சமயபுரம் மாரியம்மன்
தர்ப்பை புல்லாலான ஆகாச மாரியம்மன்
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர் ஆகாச மாரியம்மன் கோவில். ஆனால் இந்தக் கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்த ஆட்சி செய்கிறாள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக விழா நடைபெறுகிறது. அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்கிரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காகவே சமயபுரத்தாள் ஆகாய மார்க்கமாக இந்த ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றாள். இதன் பின்னணியில் சமயபுரம் மாரியம்மனின் திருவிளையாடல் உள்ளது.
திருநாரையூரில், 600 ஆண்டுகளுக்கு முன்பு, கவரைச் செட்டியார்கள் என்ற வணிக சமூகத்தார், பாரம்பரியமாக கண்ணாடி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வரும் பழக்கத்தை உடைய அவர்கள், ஒருமுறை சமயபுரம் கோவிலுக்கு வந்து இரவு தங்கினர். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, சமயபுரம் மாரியம்மன் இளம்பெண் வடிவம் எடுத்து வியாபாரி ஒருவரின் கனவில் தோன்றினாள். வியாபாரி அவள் கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அடுக்க ஆரம்பித்தார். ஆனால் வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்தது. வியாபாரி குழப்பமடைந்து, இளம்பெண்ணின் கைகளை அலங்கரிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.
வியாபாரி , 'தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விடுகிறதே. உனக்குத் தகுந்த வளையல்கள் போட வேண்டும் என்றால் தயவு செய்து நீ எங்கள் ஊருக்கு வா. இரண்டு கைகள் நிறைய வளையல்களைப் போட்டு விடுகிறேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுகிறேன். எங்கள் ஊருக்கு வா தாயே!' என்று அன்புடன் வேண்டினார்.
அதற்கு அந்த இளம்பெண், 'உங்கள் ஊருக்கு வந்தால்தான் வளையல் போடுவாயா? இப்போதே உங்கள் ஊர்காரர்களிடம் எழுந்தருள்கிறேன்' என்று சொல்லிவிட்டு மறைந்தாள். வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அருகில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர், 'எங்களை மன்னித்துவிடு தாயே' என்று கோவிலை நோக்கிக் கைகூப்பினார்.
விடிந்ததும் காலையில் கோவில் குருக்கள் அந்த வியாபாரியிடம்,""ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள் தானே? இந்தாருங்கள் பொற்காசு. உடைந்த வளையல்களுக்கு உரிய தொகை. இதை உங்களிடம் சமயபுரத்தாள் கொடுக்கச் சொன்னாள்' என்றார். மேலும், அம்மை கண்டவர்களுக்கு மாரியம்மன் பிரசாதமாக குங்குமத்தை நெற்றியில் பூசினார் குருக்கள். அம்மை கண்டவர்கள் உடனே குணமடைந்து எழுந்தார்கள்.
கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், மற்றவர்களிடம் கூறவே, அவர்கள் அனைவரும் தங்களுக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், 'தாயே, எங்கள் ஊருக்கு வந்து அருளவேண்டும்' என்று மனமுருக வேண்டினார்கள்.
சமயபுரம் மாரியம்மன் அவர்களிடம், 'உங்கள் ஊர் எது?' என்று கேட்க, 'நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநாரையூர்" என்றனர். அவர்களது பக்தியை மெச்சிய அன்னை, ""முல்லைக்கும் மல்லிக்கும், முன்கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக திருநாரையூருக்கு வந்து, பத்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சமயபுரம் திரும்பிவிடுவேன்' என்று அருளினாள்.
சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநரையூர் தலம் வந்து, பத்து நாட்களுக்குத் தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம். இந்த விழா தற்பொழுது பத்து நாள்களுக்கு மேல் நடந்து பதிமூன்றாம் நாள் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் கொடுத்து வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது ஐதீகம்.
இக்கோவிலில், ஆண்டுக்கு 10 நாட்கள் தவிர, அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார். விளக்கு மட்டுமே அம்மன் என்று வழிபடப்படுகிறது. வைகாசி அமாவாசைக்குப் பிறகு, உள்ளூர் மக்கள் தர்ப்பை புல்லைப் பயன்படுத்தி அம்மன் சிலையை உருவாக்கி, மல்லிகைப் பூக்கள் மற்றும் கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கின்றனர். உடையக்கூடிய தர்ப்பை புல்லால் மூர்த்தி கட்டப்படும் கோவிலை நாம் வேறு எங்கும் காண முடியாது.
ஒவ்வொரு நாளும் புதிதாக தர்ப்பை புல் சேர்க்கப்படும், இதனால் வடிவம் படிப்படியாக வளரும். மற்றும் அலங்காரங்களும் தினமும் மாற்றப்படும். லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அவள் சித்தரிக்கப்படுகிறாள், கடைசி நாளில் ராஜ ராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.

பாபநாசம் ராமலிங்கசுவாமி கோவில்
108 சிவலிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் தலம்
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், 15 கி.மீ. தொலைவில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ளது ராமலிங்கசுவாமி கோவில். இறைவன் திருநாமம் ராமலிங்கசுவாமி. இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி. ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்த ராமலிங்கர். அதனாலேயே, ராமேசுவரம் போல் இங்கேயும் ராமலிங்கர் என்கிற பெயருடன் அருள்பாலிக்கிறார் சிவபிரான். ராமபிரானின் பாவம் நீங்கப் பெற்றதால் இத்தலத்திற்கு 'பாபநாசம்' என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேசுவரம் என்ற பெயரும் உண்டு.
பொதுவாக சிவன் கோவில்களில் கருவறையில் ஒரு சிவலிங்கத்தை நாம் தரிசிக்க முடியும். ஒரு சில சிவாலயங்களில், பிரகாரத்திலும் மேலும் சில சிவலிங்கங்களை நாம் தரிசிக்க முடியும். ஆனால் இக்கோவிலில் மூலவர் ராமலிங்க சுவாமியின் வலப்புறம் உள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் மூன்று நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக 106 லிங்கங்கள் உள்ளன. இப்படி நீண்ட வரிசையில் அமைந்திருக்கும் சிவலிங்கங்களை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. 108 வது சிவலிங்கமான அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் மூலஸ்தான லிங்கம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாங்களே பூ தூவி வணங்கலாம். பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும்.
இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேசுவரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச் செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் 'ராமலிங்கசுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் 'அனுமந்தலிங்கம்' என்ற பெயரில் உள்ளது. ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேசுவரம் கோவில் அமைப்பிலும், அனுமந்த லிங்க சன்னதி விமானம் காசி விசுவநாதர் கோவில் அமைப்பிலும் உள்ளது. எனவே, காசி, ராமேசுவரம் செல்ல முடியாதோர் இங்கு வழிபடுகின்றனர்.
பிரார்த்தனை
குடும்ப தோஷம், தொழிலில் தேக்கம், சுபகாரியத் தடைகள் உள்ளிட்ட கவலைகள் எதுவானாலும் அவற்றுக்கான பரிகாரமாக ஒரே வழிமுறை தான் இங்கு அனுசரிக்கப்படுகிறது. அதாவது இந்த ஆலயத்தை முழுமையாக 108 முறை வலம் வந்து வழிபடுவது தான்.

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்
கருணை மழை பொழியும் தேவி கருமாரியம்மன்
சென்னைக்கு மேற்குத் திசையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது, மிகப் பிரசித்தி பெற்ற அம்மன் தலமான திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில். ஆதிகாலத்தில் வேப்பமரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் 'வேலங்காடு' என்று அழைக்கப்பட்டது இந்த இடம். நாளடைவில் திருவேற்காடு ஆகியது. கரிய மழை மேகம் போல் அம்மன் தன் அருளை வாரி வழங்குவதால் கருமாரி என்று பெயர் பெற்றாள். சகலமுமாய் இருப்பவள் தேவி கருமாரியம்மன். எனவேதான் அவளை,
'காற்றாகி, கனலாகி கடலாகினாய், கருவாகி, உயிராகி உடலாகினாய்
நேற்றாகி, இன்றாகி நாளாகினாய் நிலமாகிப் பயிராகி உயிராகினாய்...'
என்று நெகிழ்கிறது கருமாரியம்மன் பதிகம்.
கருவறையில், கருமாரியம்மன் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், தங்க விமானத்தின் கீழ் பராசக்தி அம்சமாக விளங்குகிறாள்.
இவளுக்குப் பின்புறம் ஓர் அம்பிகை சிலை உள்ளது. இவள் அக்னி ஜ்வாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி பத்ம பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். அம்மனின் சந்நிதியில், ஒரு விளக்கு அணையாமல் எரிகிறது. இதைப் 'பதி விளக்கு' என்கிறார்கள். அம்மனையும், இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் எந்தக் குறையும் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒருமுறை ஈசன் தேவர்களின் துன்பம் நீக்கச் சென்றபோது, இறைவன் அம்பிகையிடம் 'நீயே சிவனும், சக்தியுமாகி ஐந்தொழில்களையும் செய்யவேண்டும்!' என்று கூற, அம்பிகை சம்மதித்து அகத்தியரிடம் தான் ஆட்சி செய்யத் தகுந்த இடம் கேட்க, அகத்தியர் 'வேற்காட்டை'க் காட்டுகிறார். மாயாசக்தியான அவளிடம் மகாவிஷ்ணு 'நீ பாம்பு உருவாக புற்றில் இருந்து அருளாட்சி செய். கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவாய்!' என்று கூற அன்னை கருமாரியாக கருநாக வடிவம் எடுத்து புற்றில் அமர்ந்தாள். அந்தப் புற்று இன்றும் திருக்கோயில் அருகே உள்ளது. ஈசனிடமிருந்து திருநீற்றைப் பெற்றே அம்பிகை ஐந்தொழில்களையும் செய்தாள். அதுவே தீர்த்தமாக உருமாறி விட்டது.
பிரார்த்தனை
சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக இங்கு வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. கடன், வியாதி, வழக்கு, திருமணத்தடை, குழந்தையின்மை என்று அனைத்துவித பிரச்சனைகளுக்கும் பக்தர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், தேர் இழுத்தல், முடி காணிக்கை, குங்கும் அபிஷேகம், உப்பு காணிக்கை என்று பலவித பிரார்த்தனைகள் இங்கு நிறைவேற்றப்படுகிறது.

ரகுநாதசமுத்திரம் ஞானராமர் கோவில்
ஓலைச்சுவடியில் வேதத்தை வாசிக்கும் அனுமனுக்கு அதன் பொருளை விளக்கும் ராமர்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் - பெரணமல்லூர் சாலையில் சேத்பட்டிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ரகுநாதசமுத்திரம் ஞானராமர் கோவில்.
இந்தக் கோவிலில், ஸ்ரீராமபிரான் யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். இப்படி யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் இருக்கும் ராமரை நாம் ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ள படைவீடு மற்றும் நெடுங்குணம் ஆகிய திருத்தலங்களிலும் ஸ்ரீ யோக ராமரை நாம் தரிசிக்கலாம்.
கருவறையில் ஸ்ரீராமபிரான் யோகாசனமிட்டு அமர்ந்தவண்ணம் தனது வலது கரத்தை சின்முத்திரையாகக் கொண்டு ஆத்ம ஸ்தானத்தில் வைத்தபடி வீற்றிக்கிறார், அவருக்கு இடதுபுறம் தம்பி லட்சுமணர் வில்லேந்திய கோலத்தில் நின்றருள, வலது பக்கம் சீதா பிராட்டி அமர்ந்து திருவருள் புரிகின்றாள். ரகுநாதசமுத்திரத்தில் மட்டும் ஸ்ரீ ராமபிரானுக்கு வலதுபுறம் மாறியபடி சீதா தேவியும், இடதுபுறத்தில் ஸ்ரீ லட்சுமணரும் திருக்காட்சித் தருவது சிறப்பம்சமாகும்.
கருவறையின் எதிரே ஈசான மூலையில் ஸ்ரீ ஆஞ்சனேயர் சுகப்பிரம்ம மகரிஷி தந்த ஓலைச்சுவடியை பத்மாசனத்தில் அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருக்கின்றார். அனுமனின் இந்த கோலத்தின் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி உள்ளது. ஸ்ரீராமபிரான், ராவணனை வதைத்து, சீதையை மீட்டு, தம்பி லட்சுமணரோடு இப்பகுதியில் வரும்போது சுகபிரம்ம மகரிஷியை சந்திக்கின்றார். அவரிடமிருந்து வேதங்களின் உட்பொருள் அடங்கிய ஓலைச்சுவடியைப் பெற்று, அனுமனை வாசிக்கச் சொல்கின்றார். வேதத்தின் உட்பொருளைக் கேட்டு இன்புற்ற ஸ்ரீராமபிரான் அனுமனுக்கு உபநிஷதங்களில் ஒன்றான முக்திகோபநிஷத்தை உபதேசிக்கின்றார். இந்தத் திருக்கோலத்தையே, இந்தக் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
பிரார்த்தனை
இந்தக் கோவிலில், தொடர்ந்து மூன்று வாரங்கள் ஸ்ரீராமரை சேவித்து கோரிக்கைகளைச் சொல்லி, கருடனின் பாதங்களை வணங்கினால் குழந்தைப் பேறு, திருமண வரம் கிட்டும். ஸ்ரீராமருக்கு திருமஞ்சனம் செய்து, 11 சுமங்கலிகளுக்கு புடைவை மற்றும் மங்கலப் பொருட்களை தானம் தந்து, வேப்ப மரத்தில் தொட்டில் கட்டிச் செல்ல, ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும்.

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
ஆற்றில் மூங்கில் கூடையில் மிதந்து வந்த அம்பிகை
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
இராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில், பிச்சை என்ற சிவ பக்தர் உத்தமபாளையம் பகுதியில், ராணியின் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் ஆந்திர மாநிலத்திலிருக்கும் காளகஸ்திக்குச் சென்று, அங்கிருக்கும் காளாத்தீஸ்வரரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவரால் அங்கு செல்ல இயலாமல் போனது. இதனால் மனம் வருந்திய அவர் இறைவனை நினைத்து உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார். அவரது கனவில் தோன்றிய இறைவன், செண்பக மரத்தின் கீழே லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு இருந்து தன்னை எடுத்துச் சென்று விரும்பும் இடத்தில் கோவில் கட்டி வழிபடலாம் என்றும் தெரிவித்தார்.
மறுநாள் தான் கண்ட கனவினை ஊர்மக்களிடம் தெரிவித்த அவர், ஊர்மக்கள் துணையுடன் செண்பக மர வனம் சென்றார். அங்கு அவரது கனவில் இறைவன் சொன்னபடி செண்பக மரத்தின் கீழாக லிங்கம் ஒன்று இருந்தது. அவரும், ஊர்மக்களும் அந்த லிங்கத்தை வழிபட்டுத் தாங்கள் கொண்டு சென்றிருந்த வண்டியில் அந்த லிங்கத்தை எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஊருக்கு அருகில் வந்த போது ஒரு இடத்தில், அந்த வண்டியின் அச்சு முறிந்து, வண்டி நின்று போனது. அதன் பின்பு எவ்வளவு முயன்றும் அந்த வண்டியை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. அப்போது அந்த இடத்தில் ஆறுமுகத்துடனான முருகன் சிலை ஒன்று இருப்பதைக் கண்டனர். அதன் பிறகு, அவர்கள் அந்த இடத்திலேயே காளத்தீஸ்வரருக்கும், ஆறுமுகப்பெருமானுக்கும் தனித்தனியாகச் சன்னதிகள் அமைத்துக் கோவிலமைத்தனர்.
அதன் பின்னர் இக்கோவிலில் அம்மனுக்குத் தனிச் சன்னதி அமைத்திட முடிவு செய்த ஊர் மக்கள், அம்மன் உருவத்தைச் சிலையாக வடிவமைக்க பல சிற்பிகளைக் கொண்டு முயற்சித்தனர். ஆனால், அந்தச் சிற்பிகளால் அம்மன் உருவத்தைச் சிலையாக உருவாக்க முடியாமல் போனது. இதனால் மனம் வருந்திய பிச்சை, கோவிலில் அம்மன் சிலை அமைக்கத் தங்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று இறைவனிடம் தொடர்ந்து வேண்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன், 'பக்தனே, இன்னும் சில நாட்களில் மழை பெய்து ஊருக்குக் கிழக்காக ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அந்த ஆற்று வெள்ளத்தில் அம்மன் மூங்கில் கூடையில் அமர்ந்து வருவார். அந்த அம்மன் சிலையைக் கொண்டு வந்து, கோவிலில் அம்மன் சன்னதி அமைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார். இறைவன் சொன்னபடி சில நாட்களில் பெரும் மழை பெய்தது. மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் இறைவன் சொன்னபடியே ஒரு மூங்கில் கூடை மிதந்து வந்தது. அக்கூடையில் அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் இருந்தன. அந்தச் சிலைகளை ஊர் மக்கள் காளத்தீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அம்மனுக்கான சன்னதியில் அம்மன் சிலையை வைத்து அம்மனுக்கு திருக்காளகஸ்தியிலிருக்கும் ஞானாம்பிகை என்ற பெயரையேச் சூட்டி வழிபட்டனர். கோயிலில் விநாயகர் சிலையை நிறுவிச் செல்வ விநாயகர் என்று பெயர் சூட்டினர்.
திருக்கல்யாணத்தின் போது அம்பிகைக்கு வரும் பிறந்த வீட்டு சீர்
இக்கோவிலில் இடம் பெற்றிருக்கும் ஞானாம்பிகை அம்மன் சிலை, இத்தலம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள கோகிலாபுரம் என்ற ஊரின் ஆற்றில்தான் கிடைக்கப் பெற்றது. எனவே, இந்த ஊரை அம்பிகையின் பிறந்த வீடாகக் கருதுகின்றனர். இக்கோவிலில் நடத்தப் பெறும் திருக்கல்யாண விழாவின் போது, இவ்வூரிலிருக்கும் பக்தர்கள், அம்மனுக்குப் பிறந்த வீட்டுச் சீரும், தங்களது மருமகனான சிவபெருமானுக்கு ஆடைகளும் கொண்டு வருகின்றனர். திருக்கல்யாணத்தின் போது, காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை அம்மனுக்கு இந்த ஆடை அணிகலன்களை அணிவித்துத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்
ஏழு கைகள், ஏழு ஜுவாலை, நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள் உடைய அக்னி பகவானின் அபூர்வ தோற்றம்
திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்புகலூர். இறைவன் திருநாமம் அக்னிபுரீஸ்வரர், கோணபிரான். இறைவியின் திருநாமம் கருந்தார் குழலி, சூளிகாம்பாள். அப்பர் முக்தி அடைந்த தலம் இது. முருக நாயனார் அவதரித்த தலம்.
இத்தலத்தில் அகனி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பூஜித்த தலமாதலால், இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம். அக்னி தவம் செய்யும்போது ஏற்படுத்திய தீர்த்தம், கோவில் வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தமாக விளங்குகிறது.
அக்னி பகவானுக்கு பாவ விமோசனம் கொடுத்து, காட்சி தந்த தலம் இது என்பதால், அக்னிக்கு உருவச் சிலை இந்தக் கோவிலில் அமைந்திருப்பது விசேடமாகும். அக்னி பகவான் இரண்டு முகம், ஏழு கைகள், ஏழு ஜுவாலை, நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள் உடையவராக காட்சி அளிக்கிறார். அக்னி பகவானின் இந்த தோற்றம், மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. அக்னி பகவானின் இத்தகைய தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

மரக்காணம் வரதராஜப் பெருமாள் கோவில்
திருமண தடை நீக்கும் ஶ்ரீவரதராஜப் பெருமாள் - ஶ்ரீபெருந்தேவித் தாயார்
சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இத்தலத்தில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி தாயார், பூதேவி தாயார் சமேதராக காட்சி அளிக்கிறார். தாயார் திருநாமம் ஶ்ரீபெருந்தேவி.
திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை பயபக்தியுடன் வேண்டி வணங்கினால் அவர்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும் என்று கூறுகின்றனர். வெள்ளிக்கிழமைகளிலும், உத்திர நட்சத்திர நாள்களிலும் ஶ்ரீபெருந்தேவித் தாயாரை மனமுருக அா்ச்சனை செய்து பிராா்த்தித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோல் திருமணம் நடந்த பின்னர் கணவன்மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து இருந்தாலும் அவர்கள் இங்கு வந்து பூஜை செய்து வணங்கினால், பிரச்னைகள் அனைத்தும் உடனடியாக தீர்ந்து மீண்டும் சமாதானம் அடைவார்கள்.
மழலைப் பேறு அருளும் நவநீதகிருஷ்ணன்
திருமணமாகி நீண்ட நாள் மழலைப் பேறு வாய்க்காத மங்கையருக்கு இத்தலத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுகின்றது. இக்கோவிலில் சுமார் ஆறு அங்குலம் அளவுள்ள நவநீதகிருஷ்ணன் விக்கிரகம் உள்ளது. மழலைப் பேறு வேண்டும் மங்கையா், கோவில் அா்ச்சகாிடம் இந்த விக்ரகத்தைப் பெற்று தங்கள் மடியில் வைத்துக் கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து சுவாமிக்கு அா்ச்சனை செய்து வழிபட்ட பின்னா் அா்ச்சகாிடம் மீண்டும் இந்த விக்ரகத்தை ஒப்படைக்கின்றனா். இந்த பிராா்த்தனையின் பலனாக பலருக்கு, மழலைப் பேறு ஏற்பட்டிருக்கின்றது.

ஈரோடு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில்
பிள்ளை வரம் தரும் மாரியம்மன்
ஈரோடு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது, ஈரோட்டுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில். இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்ததால், இந்த ஊருக்கு ஈரோடை என்ற பெயர் இருந்தது. அதுவே, மருவி 'ஈரோடு' என்றாகியது. மாமன்னர்கள் கோட்டை கட்டி ஆண்டதால், கோவில் இருக்கும் பகுதிக்கு கோட்டை என்றே பெயர். அம்மனுக்கும் கோட்டை மாரியம்மன் என்று அடைமொழி ஆகிவிட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது. கருவறையில், கரங்களில் நாக பந்தத்துடன் உடுக்கை, பாசம், கபாலம், கத்தி ஆகியவற்றுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள் பெரிய மாரியம்மன்.
ஈரோட்டில் கோட்டை பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் திருக்கோவில் என மூன்று மாரியம்மன் திருக்கோவில்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் தலைவியாக, கோட்டை பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுக்கும் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார் பெரிய மாரியம்மன்.
உலகம் எங்கும் உள்ள அனைத்து உயிரினங்கள், மரம் செடி கொடிகள் என்று எல்லாவற்றுக்கும் தண்ணீரை வாரி வழங்குவது மழை. வேறுபாடுகள், பேதங்கள் ஏதுமின்றி மழை தனது தண்ணீரை அளிப்பதுபோல, மக்களின் மனங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் கருதாது, வரங்களை அள்ளித்தரும் தாயாக இருப்பவர் மாரியம்மன்.
பக்தர்கள் பெரிய மாரியம்மனை, பிள்ளை வரம் தரும் அம்மன் என்பர். மகப்பேறு வேண்டுவோர் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வந்து வணங்கி, அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால், மகப்பேறு வாய்க்கும் என்பது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். அம்மை நோய் வராமல், பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கின்றார். நோய் வந்தோர்க்கு விரைவில் சுகம் அளிக்கிறார்.
ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். நேர்த்திக் கடனாக கூழ் காய்ச்சி அம்மனை வேண்டி வருவோருக்கு வழங்குவது, மா விளக்கு போடுதல், பூக்கள் மற்றும் உப்பினை படைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மஞ்சள் நகராம் ஈரோடு முழுமையும் மஞ்சள் நிறமாக மாறும் திருவிழா
நேர்ச்சைக் கடனாக வீசும் உப்பு, தார் சாலையையே வெள்ளை நிறமாக மாற்றும் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் செவ்வாய்க் கிழமை விழா தொடங்கும். இரவு பூச்சாற்றுதல் நடை பெறும். தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல், தேரோட்டம் என்று மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். மூன்று மாரியம்மன் கோவில்களிலும் இணைந்து நடக்கும் இத்திருவிழாவில், பெண்கள் கூட்டம் அலைமோதும். இங்கு, கம்பம்-தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கம்பம் நட்டதும், நாளும் பெண்கள் மஞ்சள் நீரை விடுவர். அது தேவியை அபிசேகம் செய்வது போலாகும். பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கும் விழா, மஞ்சள் நீராட்டு விழா மிக சிறப்பு மிக்கது. மூன்று கோவில்களில் இருந்தும் கம்பத்தை பிடுங்கி ஊர்வலமாக நகரில் வீதி உலா நடைபெறும். அப்போது பக்தர்கள் நேர்ச்சைக் கடனாக வீசும் உப்பு, தார் சாலையையே வெள்ளை நிறமாக மாற்றும். இறுதியில் கம்பம், வாய்க்காலில் விடப்படும். அப்போது, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வர். மஞ்சள் நகராம் ஈரோடு முழுமையும் மஞ்சள் நிறமாக மாறும் காட்சி அன்று நடைபெறும். . அது, வடநாட்டு 'ஹோலி' என்ற பண்டிகையை நினைவூட்டும்.
பெரிய மாரியம்மன் திருவிழா என்பது ஈரோடு நகரத்தின் மிகப் பெரிய திருவிழாவாகும். பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.

ஆடி கிருத்திகை சிறப்புகள்
ஆடி கிருத்திகை சிறப்புகள்
முருகப்பெருமான், சூரனை அழிக்க சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்த நாள்தான் கிருத்திகை. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிப் பொறிகள், ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் சேர, அவற்றைத் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அந்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் 'கார்த்திகை' நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.
அனைத்து கிருத்திகை நாட்களுமே முருகனுக்கு உகந்தவை என்றாலும் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை, கார்த்திகை மாத கிருத்திகை என்ற மூன்று கிருத்திகைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
ஆடி கிருத்திகையன்று, திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் போன்ற முக்கிய முருகன் கோவில்களில் மாபெரும் கொண்டாட்டங்கள் நடைபெறும். கோவில்கள் மலர்கள், விளக்குகள் மற்றும் வண்ணமயமான கோலங்களால் அலங்கரிக்கப்படுகின்றன.
'ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை' என்பது ஆன்றோர் வாக்கு. ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை சித்திக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆடி கிருத்திகை அன்று, பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, பால் குடம், காவடி எடுத்து முருகனை வழிபடுகின்றனர். முருகப் பெருமானின் வேல் வழிபடப்படுகிறது. மற்றும் பக்தர்கள், தங்களின் பக்தியின் அடையாளமாக வேல் ஏந்துகின்றனர்.

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில்
மங்கள வாழ்வு அருளும் மாங்கல்ய மாரியம்மன்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாரியம்மன் கோவில். அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் 'சக்கரபுரி' என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் "உடும்புமலை' என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. உடுமலைப்பேட்டை மாரியம்மன் பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கும் மாங்கல்ய மாரியம்மனாக சுயம்பு மூர்த்தியாக,அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில், வருடந்தோறும் மார்கழி திருவாதிரையில், 108 தம்பதியர்களை வைத்து 'மாங்கல்ய பூஜை' நடத்தப்படுகிறது. இப்பூஜையில், அம்மனுக்கு மாங்கல்யம் சாத்தி விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நடத்தி, பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்படுகிறது. பூஜை செய்த தாலியை பெண்கள் அணிந்து கொள்வதால், அவர்கள் வாழ்வில் பிரச்னைகள் இன்றி, சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. இதனால் இந்த அம்மனுக்கு மாங்கல்ய மாரியம்மன் என்ற பெயரும் உண்டு.
பிரார்த்தனை
கண்நோய், அம்மை நோய் தீர, திருமணத்தடை, புத்திரதோஷம், நாகதோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்
நேர்த்திகடன்
அம்பாளுக்கு அவல், தேங்காய் பூ, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், அன்னதானம் செய்தல், முடிகாணிக்கை செலுத்துதல் போன்றவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகிறார்கள்.

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
சனீஸ்வரருக்கு பச்சை ஆடை உடுத்தும் வித்தியாசமான நடைமுறை
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள், இக்கோவிலில் இருக்கும் காளத்தீஸ்வரரை வழிபட்டு, காளஹஸ்தி சென்று வந்த பலனைப் பெற முடியும். இதனால் தான் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
நவகிரகங்களில், சனீஸ்வரருக்கு உரிய வஸ்திரம் கருப்பு நிறம் . எனவே, சனீஸ்வரருக்கு அனைத்து கோவில்களிலும் கருப்பு நிறத்திலான ஆடையை அணிவித்து வழிபடுவதுதான் வழக்கம். ஆனால் இக்கோவிலில் கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள், இறைவன் காளத்தீஸ்வரர், இறைவி ஞானாம்பிகை ஆகியோரை வழிபட்டு, இங்குள்ள சனீஸ்வரருக்கும் பச்சை ஆடை அணிவித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. கல்விக்கு உரியவரான புதனுக்கு உடுத்தும் பச்சை நிற ஆடையைப் போன்று, சனீஸ்வரருக்குப் பச்சை நிற ஆடையினை அணிவித்து வேண்டுவதன் மூலம், மாணவப் பருவத்தில் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு கல்வியில் சிறப்புகளைப் பெற முடியும் என்பது இத்தலத்து பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்
சகல பாவங்கள், தோஷங்கள் நீங்க அருள் புரியும் அம்பிகை
நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் கீழ்வேளூர். இறைவன் திருநாமம் கேடிலியப்பர். இறைவியின் திருநாமம் சுந்தர குஜாம்பிகை. இக்கோவிலின் தல மரம் இலந்தை. முற்காலத்தில் இந்த இடமே இலந்தை மரக் காடாக இருந்திருக்கின்றது. அதனால் இத்தலத்திற்கு தட்சிண பத்ரி ஆரண்யம் என்ற பெயர் ஏற்பட்டது.
பார்வதிதேவி, கைலாயத்தில் தினமும் ஆறுகால சிவபூஜை செய்வது வழக்கம். ஒரு சமயம் பார்வதி தேவி தனது பூஜையை முடித்துவிட்டு, இலந்தை மரக் காடாக இருந்த இத்தலத்துக்கு வந்தபோது பாம்பும் கீரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், விளையாடிக் கொண்டிருந்த அதிசயக் காட்சியை கண்டாள். மேலும் அங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருந்த கேடிலியப்பரை தரிசித்தாள். தனது அடுத்த கால சிவபூஜைக்கு நேரமாகி விட்டதால், அந்த இலந்தை( பத்ரி) மரக்காட்டில் இருந்த கேடிலியப்பருக்கு பூஜை செய்து முடித்தாள். இதனால் இத்தலத்து அம்பிகைக்கு, பதரி வனமுலை நாயகி என்ற பெயரும் உண்டு. . கருவறையில் அம்பிகை தன் மேலிரு கரங்களில் அட்சமாலை, தாமரை மலர் தாங்கியும், இடது கையைத் தொடையில் வைத்து வலது கையைத் தூக்கி, அபயம் அளிக்கும் கோலத்தில் அழகு மிளிர காட்சி அளிக்கிறாள்.
இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் ஆகியவை தேவாரப் பாடலில் போற்றப்பட்ட சிறப்பு
வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது மின் உலாவிய சடையினர் என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில் "வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோவிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.
பிரார்த்தனை
வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் கருணை உடையவள் சுந்தர குஜாம்பிகை. பக்தர்கள், சகல பாவங்கள், தோஷங்கள் நீங்க இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள்
சித்ரா பவுர்ணமியில் பிரமோத்சவம் நடைபெறுகிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், நவராத்திரி, தீபாவளி, வருடப்பிறப்பு, பொங்கல், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ நாட்களில் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

ஆதனூர் வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில்
தலைக்கு மேல் சுதர்சன சக்கரத்தை தாங்கி இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்
கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் ஆதனூர். இந்த திவ்ய தேசத்தில், 20 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட சிறிய மண்டபத்தில், வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மண்டபத்திற்கு சற்று வெளியே ஸ்ரீராமரின் பாதம் பதித்த ஒரு கல் உள்ளது. சன்னதிக்குள் நுழையும் முன், பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை ஸ்ரீராமரிடம் செலுத்துகிறார்கள். மண்டபம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முன்புறப் பாதி பக்தர்கள் தரிசிக்கும் இடமாகவும், பின்புறப் பாதி ஆஞ்சநேயரின் கர்ப்பக் கிரகமாகவும் உள்ளது.
கருவறையில், வீர சுதர்சன ஆஞ்சநேயர் ஏழடி உயர திருமேனி உடையவராய், கிழக்கு நோக்கியவாறு வடக்கு நோக்கி நடக்கும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருள் வடிவில் உயர்த்தி காணப்படுகிறது. வால் சுருளின் மையத்தில் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட ஒரு சக்கரம் அமைந்திருக்கின்றது. இப்படி தலைக்கு மேல் சுதர்சன சக்கரத்தை கொண்டிருக்கும் ஆஞ்சநேயரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. அவரது தலையின் மேல், நேர்த்தியாகக் கட்டப்பட்ட கேசத்தின் உச்சியில் 'ரக்கொடி' எனப்படும் ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கிறார். இரு காதுகளிலும் தோள்களைத் தொடும் அளவு, நீளமான குண்டலங்களை தரித்திருக்கிறார். வலது கையை உயர்த்தி அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்
கோடி விநாயகர்களை வழிபட்ட பலனைத் தரும் கோடி விநாயகர்
கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பந்தாடுநாயகி. இங்கு இறைவன் சிவபெருமானின் திருபெயா் கோடிஸ்வரா் என்பதை போல மற்ற பரிவார தெய்வங்களுக்கு கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஒரு தடவை இளவரசன் ஒருவனுக்கு பத்திரயோகி முனிவர், கடும் சாபம் கொடுத்தார். இதன் காரனாமாக அவரது தவவலிமை குன்றியது. இதனால் வருந்தியவர் பரிகாரம் தேட முற்பட்டார். பல்வேறு தலங்களுக்குச் சென்று சிவனை வழிபட்ட அவர் கொட்டையூருக்கும் வந்தார்.
இங்கு அமுத கிணற்று நீரில் பத்திரயோகி முனிவர் நீராடி, சிவனாரை மலர்களால் அரச்சித்து, வழிபட்டு கோவிலை வலம் வந்து வணங்கினார். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. பத்திரயோகி! கோடி தலங்களுக்குச் சென்று கும்பிட வேண்டாம். இந்தத் தலமே பெரும்பேற்றைத் தரும். இந்த லிங்கமே கோடி லிங்கம். இந்த தீர்த்தமே கோடி தீர்த்தம். இந்த விநாயகரே கோடி விநாயகர் என்று அசரீரி ஒலித்தது.
பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடி விநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார். இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர், வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இந்த கோடி விநாயகரை வழிபட கோடித் தலங்களுக்குச் சென்று, கோடி விநாயகர்களை வழிபட்ட பெரும்பலன் கிடைக்கும். இவர் தன்னை வழிபடுவோருக்கு அனைத்து செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார்.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்
பக்தர்கள் மாரியம்மனுக்கு காவடி எடுக்கும் தலம்
புதுக்கோட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். தேவரிஷியான நாரத மாமுனி இங்குள்ள மலையில் தவம் செய்ததால், நாரதமலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் நார்த்தாமலை என மருவியதாக தல புராணம் விவரிக்கிறது. கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள் முத்துமாரியம்மன். கட்கம், கபாலம், டமருகம் மற்றும் சக்திஹஸ்தம் கொண்டு நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் முத்துமாரியம்மன் சன்னதியில், வடபுறத்து சுவற்றில் கல்லிலான முருகன் எந்திரம் பதிக்கப்பட்டிருக்கிறது. இதில் மிகவும் அற்புதமான சக்தி உள்ளது என்கின்றனர் பக்தர்கள்.
பொதுவாக முருகப்பெருமானுக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனாக காவடி எடுப்பார்கள். இத்தலத்து மாரியம்மன், முருகப் பெருமானுக்கே உரிய சக்தி ஹஸ்தத்துடன் காட்சி தருவதால், பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு காவடி எடுத்தும் வழிபடுகின்றனர். பக்தர்கள் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் இந்த நடைமுறை, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
அம்மை நோய் கண்டவர்கள், இத்தலம் வந்து வழிபட்டால், அந்த நோய் குணமாவதால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து கரும்பு தொட்டில் செய்து ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
முக்கிய திருவிழாக்கள்
இத்தலத்தில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அத்திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரள்வது முத்துமாரியம்மன் அருளுக்கும், ஆட்சிக்கும் சாட்சி. ஆடி கடைசி வெள்ளி அன்று நடைபெறும் ஒரு நாள் திருவிழாவின் போதும், பல லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவார்கள்.

உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோவில்
பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் தரும் தேவாரத் தலம்
திருச்சி மாநகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள தேவாரத் தலம் பஞ்சவர்ணேசுவரர் கோவில். பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள் புரியும் சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது ஐதீகம். உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது. இத்தலத்து இறைவன் திருநாமம் பஞ்சவர்ணேசுவரர். இறைவியின் திருநாமம் காந்தியம்மை.
பிரம்மனுக்கு, தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைவண்ணம் ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் காட்டியதால், இவருக்கு ஐவண்ணப் பெருமான் என்ற திருநாமமும் உண்டு.
இங்கு சிவபெருமான், உதங்க முனிவருக்கு தன்னுடைய ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார். காலையில் ரத்ன லிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் சுவர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார். ஆடி பௌர்ணமி தினத்தன்று தான் சிவபெருமான், உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களில் காட்சி அளித்தார். இன்றும் ஆடி பௌர்ணமியன்று, இந்த நிகழ்ச்சி இங்கே திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தவராவார். இவருடைய சிலை இச்சிவாலயத்தின் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது. யானைப்புக முடியாத 70 மாட கோயில்களை கட்டிய கோச்செங்கட் சோழன் பிறந்த தலமும் இதுவாகும் .
பிரார்த்தனை
படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய, இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேசுவரரை வழிபட்டால் நலம் பெறலாம். கார்க்கோடகன் ஆகிய பாம்பும், கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எத்தகைய சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் தலம் இதுவாகும்.

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில்
துர்க்கையாகவும், மாரியம்மனாகவும் தரிசனம் தரும் அம்மன்
வித்தியாசமாக அமர்ந்திருக்கும் நிலையில் காட்சி தரும் மாரியம்மன்
மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வண்டியூர் மாரியம்மன் கோவில். மதுரையை ஆள்பவள் மீனாட்சி என்றால், மதுரையின் காவல் தெய்வம் வண்டியூர் மாரியம்மன்தான். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விசேஷங்கள் நடத்தினாலும், முதலில் இவளிடம் உத்தரவு கேட்டுவிட்டு, அதன்பின்பே நடத்துகிறார்கள். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழா நடக்கும் முன்பு, முதல் பூஜை இவளுக்கே செய்யப்படுகிறது.
ஆரம்ப காலத்தில், இவளை, 'துர்க்கை'யாக பாவித்து வணங்கினர். மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள், போருக்கு செல்லும் முன்பு வீரத்துடன் செயல்படவும், வெற்றி பெறவும் இவளை வணங்கியுள்ளனர். பிற்காலத்தில் நாட்டில் மழை பொய்த்தபோது, மன்னர்கள் இவளிடம் மழை வேண்டி பூஜைகள் செய்து வணங்கினர். மாரி தரும் தெய்வமாக வணங்கப்படுபவள் மாரியம்மன். துர்க்கையாக இருந்தாலும், மழை பெற வேண்டி வணங்கப்பட்டதால் இவளுக்கு, 'மாரியம்மன்' என்ற பெயரே நிலைத்து விட்டது.
இத்தலத்து அம்மன், துர்கையாகவும் மாரியம்மனாகவும் சேர்ந்தே தரிசனம் தருகிறார். கருவறையில், பிற அம்மன் கோவில்களில் இல்லாத விதமாக மாரியம்மன், தனது வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில், இடது காலை மகிஷாசுரன் தலைமேல் வைத்து உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் அருள்பாலிக்கிறாள். கையில் பாசம், அங்குசம் ஏந்தி அம்பாள் சிரித்த கோலத்தில், காட்சி தருகிறாள். பொதுவாக மாரியம்மனின் காலுக்கு கீழே அசுரன் உருவம் மட்டுமே இருக்கும். ஆனால், இவள் துர்க்கையின் அம்சமாக இருப்பதால் காலுக்கு கீழே, மகிஷாசுரன் இருக்கிறான். மூலவராக மாரியம்மன் இருப்பதால், வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.
பிரார்த்தனை
இத்தலத்தில் தரப்படும் தீர்த்தம் மிகவும் விசேஷமானது. அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்ததை , மூலஸ்தானத்தில் பெரிய பாத்திரத்தில் எடுத்துத் வைக்கிறார்கள். கண்நோய், அம்மை போன்ற நோய் உள்ளவர்கள் இங்கு அம்பிகையை வணங்கி, தீர்த்தம் வாங்கிச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்வாறு தீர்த்தம் வாங்கிச் செல்வது சிறப்பம்சம். தோல் வியாதி உள்ளவர்கள் அம்பிகைக்கு உப்பு நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலத்து மாரியம்மனை வணங்கிட, சகல சௌபாக்கியங்களும் பெருகி, குடும்ப பிரச்னைகளும், தொழில் பிரச்னைகளும் தீரும். பயம், திருமணத்தடை நீங்கி, குழந்தைப்பேறு கிட்டும். சுற்றியிருக்கும் ஊர் மக்கள்கூட, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் இந்த அம்மனைதான் வேண்டிக்கொள்கிறார்கள். அம்பிகை, துர்க்கையின் அம்சம் என்பதால் இங்கு எலுமிச்சை தீபமேற்றியும் வேண்டிக்கொள்கிறார்கள்.
பால்குடம், தீச்சட்டி எடுத்தல், கண்மலர் காணிக்கை, அம்மனின் உருவப் பொம்மைகள் வாங்கி வைத்தல், பானை முழுவதும் மையினால் புள்ளி வைக்கப்பட்ட பானை கொண்டுவருதல் (இதற்கு ஆயிரம் கண் பானை என்று பெயர்), மாவிளக்கு போன்ற பல நேர்த்திக் கடன்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும், பூச்சொரிதல் விழாவும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
தெப்பக்குளம்
திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் மகால் கட்டிய போது, அதன் கட்டுமான பணிகளுக்குத் தேவையான மணலை தற்போது அம்மன் அருட்காட்சி தரும் கோவிலுக்கு வலப்புறம் அமைந்துள்ள பகுதியில் இருந்து தோண்டி எடுத்துகட்டினார். மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார். கோவிலுடன் சேர்ந்துள்ள தெப்பக்குளம், மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரிய தெப்பக்குளம் எனும் பெருமையினை உடையது.
பழூர் விசுவநாத சுவாமி கோவில்
நவக்கிரகங்கள் தங்கள் மனைவியருடனும், வாகனத்துடனும், ஆயுதத்துடனும், யந்திர சக்தியுடனும் இருக்கும் அபூர்வக் காட்சி
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழூர் விசுவநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. 2000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. மற்ற கோவில்களில் வட்ட வடிவில் ஆவுடையார் அமைந்திருக்கும் நிலையில், இக்கோவிலில் இறைவன் விசுவநாதர், சுயம்பு மூர்த்தியாக சதுர வடிவ ஆவுடையாரில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். அம்பிகை விசாலாட்சி இத்தலத்தில் கல்யாண கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவன், இறைவியை வணங்கிச் சென்றால், காசிக்குச் சென்று தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்கள் பெரும் சிறப்பை பெற்றவை. பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள், 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் அமைந்த பீடத்தின் மேல் தங்கள் மனைவியருடன் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு நவக்கிரக நாயகர்களில் சூரியன் உஷா-ப்ரத்யுஷாவுடனும், சந்திரன் ரோகிணியுடனும், செவ்வாய் சக்திதேவியுடனும், புதன் ஞானதேவியுடனும், குரு தாராதேவியுடனும், சுக்கிரன் சுகீர்த்தியுடனும், சனி நீலாதேவியுடனும், ராகு சிம்ஹியுடனும், கேது சித்திரலேகாவுடனும், காட்சியளிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் நவக்கிரகங்கள் தங்களின் ஆயுதங்கள், வாகனங்கள், யந்திர சக்திகளுடனும் எழுந்தருளியிருப்பதும் இங்கு மட்டும்தான். இத்தகைய நவக்கிரக அமைப்பை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரக பரிகாரத் தலம்
இக்கோவில் ஒரு சிறந்த நவக்கிரக பரிகாரத் தலமாகும். அதனால் தான் இக்கோவில், நவக்கிரக கோவில் என்ற பெயரில் இப்பகுதியில் பிரசித்தம் பெற்றுள்ளது. சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். ஜாதக ரீதியில் நவக்கிரக தோஷ பாதிப்பு உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு வந்து நவக்கிரக நாயகர்களை வணங்கி வழிபட வேண்டும். எள் விளக்கேற்றி வழிபாடு செய்வதுடன், நவக்கிரக நாயகர்களின் சன்னதியை 9 முறை வலம் வந்து, தேங்காய்- பழம் அர்ச்சனை செய்தால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
மேலும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், திருமணத் தடைப் பாதிப்புள்ளவர்கள், குடும்பப் பிரச்னை உள்ளவர்கள் இக்கோவில் நவக்கிரக நாயகர்கள் சன்னதிக்கு வந்து வழிபட்டுச் சென்றால், தோஷங்கள் நிவர்த்தியாகி உரிய பலன்களைப் பெறுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்
ருத்ராட்சத்தாலான திருமேனி கொண்ட அபூர்வ அம்பிகை
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கி.மீ. தூரத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற ஊரிலிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் நாறும்பூநாதர். இறைவியின் திருநாமம் கோமதி.
இத்தலத்து அம்பிகையின் திருமேனி ருத்ராட்சத்தாலான, சுயம்பு திருமேனி ஆகும். அம்பிகையின் திருமேனி சிற்பி வடித்த சிலை இல்லை. இந்த விக்கிரகம் இமய மலையின் ஒரு பகுதியில், கோமாதி மலையில் இயற்கையாகவே கண்டு எடுக்கப்பட்ட சிலை ஆகும், இதனால்தான் கோமதி அம்பாள் என்று பெயர் வந்தது. இந்த ருத்ராட்ச திருமேனியை பால் அபிஷேகம் செய்யும் போது தெளிவாக தரிசிக்கலாம். கருவறையில் அம்பிகை அழகே உருவாக, புன்முறுவல் பூத்த முகம் கொண்டு, ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறுகரத்தை தொங்கவிட்ட படியும், சற்றே இடை நெளிந்து, நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறான்.
அம்பிகை திருமண பாக்கியமும், குழந்தை பேறும் அருளும் வரப்பிரசாதி
இக்கோவில் முக்கியமான ஒரு கல்யாணத் தலமாகும். இக்கோவிலில், சுவாமி இடது புறமும் அம்பாள் வலது புறமும் இருப்பதனால் இங்கு திருமணம் செய்தால் புத்திர பாக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
இந்த அம்பிகை சிறந்த வரப்பிரசாதி. தங்கள் திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், பக்தர்கள் இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
திருமணத்தடை நீங்க பரிகாரம்
நீண்ட நாட்களாக திருமணத் தடைபடும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு உரிய பரிகாரமாக, இக்கோவிலில் ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் வைபோகம் நடக்கும் அன்று தங்களுடைய ஜாதகத்தை சுவாமியின் பாதத்தில் வைத்து, சுவாமிக்கு பட்டு வேஷ்டியும், துண்டும், அம்பாளுக்கு பட்டுப் புடவையும், குங்குமமும். தாலியும் தாம்பூலத்தில் வைத்து சுவாமி ஊரை வலம் சுத்தி வரும் பொழுது சுவாமியுடன் சுற்றி வந்து, கோவிலில் வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் சாத்தி. பொட்டுத்தாலியை அம்பாளின் கழுத்தில் அணிவித்து, அன்னதானம் செய்து வழிபட்டால், நீண்ட நாட்களாக தடைப் பெற்ற திருமணம் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து திருமணம் செய்து வைத்து வழிபட்டதால், இந்த புண்ணியம் உங்கள் குழந்தைகளுக்கும் சேரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்
இக்கோவியில் ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நடக்கும் அன்று பட்டு புடவையும், அனைத்து வகையான வளையல்களும், அனைத்து வகையான சீர்வரிசை பொருட்களையும் அம்பாளின் பாதத்தில் தாம்பூலத்தில் வைத்து, அன்னதானம் செய்து வழிபட்டால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, குழந்தை பாக்கியம் கிட்டும். அம்பாளை உங்கள் குழந்தையாக பாவித்து வளைகாப்பு நடத்தி வழிபட்டதால், உங்கள் குழந்தைகளுக்கும் இந்த புண்ணியம் சேரும்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
உடலில் காயங்களுடன் காட்சியளிக்கும் நந்திதேவர்
சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர், திருவெண்காடர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.
இத்தலத்தில் சுவேதாரண்யேசுவரர் சுவாமி சன்னதி முன் உள்ள நந்தி, உடலில் காயங்களுடன் காட்சி அளிக்கிறார். அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள், மருத்துவாசுரன் என்னும் அரக்கனால் ஏற்பட்டது.
மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால், தேவர்களுக்கு பல துன்பம் விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். மருத்துவாசுரன், திருவெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப் பின், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினான். நந்தியை அந்த அசுரன் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. இது பற்றி நந்தி, திருவெண்காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றிலிருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்ட மாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடியில் காணலாம். காயம் பட்ட நந்திதேவரை சுவேதாரண்யேசுவரர் ஆட்கொண்டார்.
நந்திதேவர் உடம்பில் ஒன்பது இடங்களில், ஈட்டியால் குத்துப்பட்ட துளைகளை நாம் இன்றும் நந்திக்கு அபிஷேகம் நடைபெறும் போது பார்க்க முடியும்.