
திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில்
குளம் வெட்டிய விநாயகர்
வைத்தீஸ்வரன் கோவிலிருந்து சுமார் 4 கி மீ தொலைவில் உள்ள தேவார தலம் திருப்புன்கூர். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர். இறைவியின் திருநாமம் சொக்க நாயகி, சௌந்தர நாயகி. அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக இறைவன் நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம் இது. அதனால்தான் இன்றுவரை திருப்புன்கூர் ஆலயத்தில் நந்தி விலகியே நிற்கிறது என்கிறது தலபுராணம்.
திருநாளைப்போவார் கோவிலின் மேற்குபுறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணினார். அந்த பரந்து விரிந்த குளம் எத்தனை மண்ணை தோண்டினாலும் சீர்படவே இல்லை. தனியாளாக முயற்சி செய்ததால் அந்த பணி நிறைவடையாமல் நீண்டு கொண்டே இருந்தது. நாள்கள் பல கடந்தன. குளத்தை சீர்படுத்தும் பணிக்கு தனக்கு யாரும் துணை இல்லாததால் சிவபெருமானை வேண்ட, அவர் திருநாளைபோவாருக்கு உதவி செய்ய, கணபதியை செல்லுமாறு பணித்தார். விநாயகர், குளத்தை சீர் செய்யும் எல்லா பணிகளிலும் போவாருக்கு உதவினார். அவர் துணையால் திருநாளைப்போவார் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். திருக்குளம் முழுவதுமாக சீர்படும் வரை, விநாயகர் தினமும் பணியாற்றி, எந்த கூலியும் வாங்காமல் தொண்டாற்றினார். அதுவே கணபதி தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். இந்தக் குளம் வெட்டிய விநாயகர், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்.

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்
தெற்குவாசி துர்க்கை
தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவனின் திருநாமம் சங்கரலிங்கசுவாமி.இறைவியின் திருநாமம் கோமதி அம்மன். பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களில் சங்கரன்கோவில், பிரித்திவி(மண்) தலமாக விளங்குகின்றது.
பொதுவாக சிவத்தலங்களில் சுவாமியின் கருவறை சுற்றுச்சுவரில், வடக்கு நோக்கி துர்க்கை எழுந்தருளி இருப்பாள். ஆனால் இக்கோவிலில் தெற்கு முகமாக எழுந்தருளி இருக்கும் துர்க்கையைக் காணலாம். அதனால் இந்த துர்க்கையை 'தெற்குவாசி துர்க்கை' என்று அழைக்கின்றனர். தெற்கு என்பது எமதர்மனின் திசையாகும். எனவே, தெற்கு பார்த்தபடி வீற்றிருக்கிற துர்க்கையை, ராகுகாலவேளையில் வணங்கினால், கணவனின் ஆயுள் நீடிக்கும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில், எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.
நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருக்கும் இந்த துர்க்கைக்கு, நவராத்திரி நாட்களில் செய்யப்படும் சிறப்பு அலங்காரங்கள், பார்ப்பவரை பரவசமடையச் செய்யும்.

திருவாரூர் தியாகராஜர் கோவில்
மார்கழி திருவாதிரை பாத தரிசன விழா
திருவாரூர் தியாகராஜர் கோயில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. மூலவர் தியாகராஜரின் முழு மூர்த்தத்தையும் யாரும் கண்டதில்லை. தில்லை இரகசியம் போல, திருவாரூர் இரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோமகுல இரகசியம் என்பர். சுவாமியின் மார்பை ஸ்ரீசக்கரம் அலங்கரிப்பதால், தியாகராஜரின் முழு திருமேனியையும் நாம் தரிசிக்க முடியாது. நித்தியப்படி அவரின் திருமுக தரிசனம் மட்டுமே நமக்கு கிட்டும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கும். தியாகராஜரின் பாதங்களை ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நாம் தரிசிக்க முடியும். அவை மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.
தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு முறை தியாகராஜர் பாத தரிசன விழா நடைபெறுகிறது. மார்கழி மாத திருவாதிரை அன்று வலது பாத தரிசனம் விழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவில் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளுக்கு இடது பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தின்போது இறைவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடது பாதத்தையும், திருவாரூரில் வலது பாதத்தையும் காட்டுவதாக ஐதீகம்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
மார்கழி திருவாதிரையன்று சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்கு திரும்பும் அம்பிகை
கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி.
பொதுவாக சிவலிங்க சொருபத்தில், பீட சக்தியாக மனோன்மனி அம்பாள் பாவிக்கப்படுகிறது. இந்த அம்பிகையை நாம் தரிசிக்க முடியாது. ஆனால் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் இந்த அம்பிகைக்கு தனி சன்னதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
எல்லா சிவாலயங்களிலும், நடராஜர் தாண்டவமாடும் நிலையில்தான் நமக்கு காட்சி தருவார். ஆனால், தாண்டவமாடி முடியப்போகும் நிலையில், இக்கோவிலில் நடராஜர் தரிசனம் தருகிறார். மேலும், இந்த கோவிலில் இருக்கும் நடராஜரின் முகத்தில் ஒருவித குறும்பு பார்வை தெரிகிறது. கலைநயமிக்க வகையில் நடராஜர் சிலை அமைந்துள்ளது.
பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் அதிகாலையில் திறக்கப்படும். ஒரு சில, பெருமாள் எழுந்தருளி உள்ள சிவாலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பது உண்டு. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கின்றது. பங்குனி உத்திரம், மார்கழி திருவாதிரையன்று போன்ற விசேட தினங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் ஆகியோர் வீதியுலா செல்வர். அவர்கள் கோவிலுக்குத் திரும்பும் போது, சிவகாமி அம்பாள் மட்டும் இந்த சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்குள் நுழைவாள். அண்ணன் மகாவிஷ்ணுவிற்குரிய வாசலில் தங்கையான அம்பிகை உரிமையுடன் நுழைவதாகச் சொல்கிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோவில்
ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகள்
மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று 'ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.
ஆருத்ரா தரிசனம் பற்றி புராணத்தில் கூறப்பட்ட சிறப்புகள்
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி நோன்பை அனுஷ்டிக்கிறார்கள்.
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் சிவபெருமான் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கு தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.
பதஞ்சலி முனிவரும் வியாகரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர்.
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார்.
திருவாதிரைக்களியின் பின்னணி வரலாறு
திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த திருநாளில் சிதம்பரத்திற்குச் சென்று நடராஜப் பெருமானை தரிசிப்பது விசேஷமாகும். திருவாதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்கு பிள்ளை, சேந்தனார் என்பவர். பட்டினத்தார் துறவறம்ஏற்றதும், அவரிடம் இருந்த சொத்துக்களை சேந்தனார் சூறைவிட்டார். இதை அறிந்த சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதைக் கேள்விப்பட்ட பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக்கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார்.
சிறையிலிருந்து விடுபட்ட சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அந்த வருவாயில் தினமும் ஒரு சிவனடியாருக்காவது ஒரு வேளை உணவளித்த பின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், சேந்தனாரின் பக்தியை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். ஒரு நாள் அளவுக்கதிகமாக மழை பெய்து விறகுகளை அனைத்தும் ஈரமாகியது. விறகுகள் ஈரமானதால், அதை வாங்குவதற்கும் யாரும் முன்வரவில்லை. இதனால் அன்றைய உணவுக்கு அரிசி வாங்குவதற்கு கூட கையில் பொருள் இல்லை. இதனால், வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியாருக்காக காத்திருந்தார். நேரம் சென்றதே தவிர, சிவனடியார் யாரும் வருவதாக தெரியவில்லை.
சேந்தனாரின் பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த விரும்பிய சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் நள்ளிரவு வேளையில் சேந்தானரின் வீட்டுக் கதவை தட்டினார். வந்திருப்பது சிவனடியார் என்பதை அறிந்து அகமகிழ்ந்து சேந்தனார், அவருக்கு கேழ்வரகு களியை விருந்தாக படைத்தார். சிவனடியாரும் அந்த களியை மிக்க மகிழ்ச்சியோடு உண்டதோடு, எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்கு தருமாறு கேட்டு வாங்கிச் சென்றார்.
இந்நிலையில், சோழ மன்னர் கண்டராதித்தர், தினசரி இரவு செய்யும் சிவபூஜையில் சிவபெருமானின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்பது வழக்கம். ஆனால், அன்றிரவு, சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ணச் சென்றதால் கண்டராதித்த சோழரின் சிவபூஜையில் நடராஜரின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்கவில்லை. இதனால் மனம் நொந்த மன்னர், தன்னுடைய சிவ வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று கலங்கியவாரு தூங்கச் சென்றார். கண்டராதித்த சோழ மன்னரின் கனவில் வந்த நடராஜ பெருமான், மன்னா! வருந்த வேண்டாம், இன்றிரவு யாம் சேந்தனாரது இல்லத்திற்கு களி உண்ணச் சென்றொம், அதனால் தான் உன்னுடைய சிவபூஜையில் சிலம்பு ஒலிக்கவில்லை. நாளைய தேர்த் திருவிழாவில் அந்த சேந்தனாரை நீ காண்பாயாக, என்று சொல்லிவிட்டு சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையைத் திறந்தனர். அங்கு நடராஜப் பெருமானை சுற்றிலும் களிச் சிதறல்கள் இருந்தன. இந்த செய்தியை உடனடியாக அரசருக்கு தெரியப்படுத்தினர். அரசரும் முதல் நாளிரவு தான் கண்ட கனவை எண்ணி மகிழ்ந்தார். கனவில் நடராஜப் பெருமான் தான் சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ண சென்றிருந்தை தெரிவித்திருந்தார். அதன்படியே, அரசரும் சேந்தனாரை கண்டுபிடிக்குமாரு அமைச்சருக்கு கட்டளையிட்டார். ஆனால், சேந்தனாரோ தில்லையில் நடைபெற்ற நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். எம்பெருமான் நடராஜப் பெருமானை தேரில் அமர்த்திய உடன் அரசர் உள்பட அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனால், மழையின் காரணமாக சேற்றில் தேர் சக்கரம் அழுந்தியதால், தேர் நகரவில்லை.
அந்த சமயத்தில், சேந்தனாரின் பாடச்சொல்லி அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. உடனே சேந்தனாரோ, ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜரை துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிய சேந்தானர் இறைவன் அருளால், ‘மன்னுகதில்லை வளர்க் நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல‘ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து 13 திருப்பல்லாண்டு பாடல்களை பாடினார். உடனே, தேர் அசைந்தோடி சுற்றி வந்து நிலை பெற்று நின்றது.
இதைப் பார்த்த அரசரும், தில்லை வாழ் அந்தணர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசரும் தன்னுடைய கனவில் இறைவன் வந்ததை சேந்தனாருக்கு தெரிவித்தார். சேந்தனார் வீட்டுக்கு நடராஜப் பெருமான் களி உண்ணச் சென்ற அந்த நாள் சிவபெருமானின் நட்சத்திரமான மார்கழி திருவாதிரை நாள் என்றும், இன்றைக்கும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுவதால் திருவாதிரைக்களி என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆருத்ரா தரிசன நாளன்று சிவபெருமானுக்கு களி அமுது படைத்து உண்கிறோம்.
எனவே 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி' என்ற சொலவடையே ஏற்பட்டது.

ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோவில்
நந்தி தேவர் அவதரித்த தலம்
ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது, ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இறைவன் திருநாமம் ஸ்ரீசைலநாதர். இறைவியின் திருநாமம் பிரமராம்பாள். ஸ்ரீசைலம், சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவபெருமான் ஆட்சிபுரிகிறார்.
சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக் குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,"தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்," என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த 'நந்தியால்' என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான். சிவபெருமான் நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். மேலும், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.
முக்கிய சிவத்தலங்களில், இமயமலையிலுள்ள கைலாயம் முதலிடமும், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடமும் வகிக்கிறது. பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பது ஐதீகம்.பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பது ஐதீகம்.

சிறுமுகை பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் கோவில்
தலையில் குடுமியுடன் காட்சி அளிக்கும் பாலமுருகன்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. பவானி நதிக்கரையில் உள்ள இக்கோவில் ஆயிரம் வருடங்கள் பழமையானது. முற்காலத்தில் கோவில் அமைந்திருக்கும் பவானி நதிக்கரையோரம், ஏராளமான மாமரங்கள், பலா மரங்கள், கொய்யா மரங்கள் நிறைந்திருந்தன. அதனால் இக்கோவில் பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. பழனி திருஆவினன்குடி கோவிலை அடுத்து, இந்த வட்டாரத்தில் தரை பரப்பில் அமைந்த முருகன் கோவில்களில் இது மிகவும் பிரசித்தி பெற்றது.
கருவறையில் பாலமுருகன், இரண்டரை அடி உயர திருமேனியுடன், கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த பாலமுருகனின் பின்னந்தலையில் குடுமி அமைந்திருப்பது ஆச்சரியமாகும். இந்த பாலமுருகனின் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
பிரார்த்தனை
இந்த பாலமுருகனுக்கு, செவ்வாய்க்கிழமை செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டால், குடும்பத்தில் சகல கஷ்டங்களும் விலகி, செல்வ செழிப்பு உண்டாகும். இவரை வணங்கினால் திருமண தடைகள் நீங்கும்; சந்தான பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேசங்கள்
பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் அதிகாலையில் திறக்கப்படும். ஆனால் திவ்ய தேசமான கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. ஏனென்றால் இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. ஏனென்றால் இத்தலத்து மூலவர் சாரங்கபாணி, இந்த கோவிலுக்கு வந்து எழுந்தருளினார். இத்தலத்து தாயாரான மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை, பெருமாள் நேராக வைகுண்டத்திலிருந்து இந்த கோவிலுக்கு வந்து எழுந்தருளி, திருமணம் புரிந்து கொண்டார். எனவே இவரை வணங்கினாலேயே பரமபதம் கிடைத்து விடும் என்பதால், இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது.
இக்கோவிலில் மூலவரை தரிசிக்கும் வழியில், உத்திராயண வாசல், தட்சிணாயண வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. உத்திராயண வாசல் வழியே தை மாதம் முதல் ஆனி மாதம் வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையும் பெருமாளை தரிசிக்க செல்ல வேண்டும். இந்த இரு வாசல்களை கடந்து சென்று பெருமாளை தரிசித்தாலே பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.
இதேபோல் திருச்சிக்கு அருகே உள்ள மற்றொரு திவ்ய தேசமான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. இக்கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கும் உத்திராயண வாசல், தட்சிணாயண வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்
அருணாசலேசுவரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு திருவிழா
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று, திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுவதாக ஐதீகம். எனவேதான் எல்லா வைணவத் தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல், அன்று அனைத்து வைணவத் தலங்களிலும் திறக்கப்படும்.
பஞ்சபூத சிவாலயங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடத்தப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறப்புக்குரிய சாவியை, கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமிகள் சன்னதியில் வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்துவார்கள். பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிறகு அந்த சாவி மேளம் தாளம் முழுங்க எடுத்து வரப்படும். அந்த சாவியை கொண்டு சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பியபடி சொர்க்கவாசலை கடந்து செல்வார்கள்.
தமிழ்நாட்டில், அருணாசலேசுவரர் கோவில் தவிர வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய சொர்க்க வாசல் திறப்பு திருவிழா நடப்பதில்லை.

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
கைகளை கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் நிலையில் இருக்கும் கருடாழ்வாரின் அபூர்வ தோற்றம்
பண்ரூட்டியின் அருகில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருவதிகையில், 2000 வருட பழமையான சரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சயன (படுத்திருக்கும் ) கோலத்தில் தாயாருடன் காட்சி தருகிறார். பெருமாள் கோவில்களில், நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி தரும் ஒரே தலம் இதுதான் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் கருடாழ்வார், கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் அஞ்சலி முத்திரையுடன் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் கருடாழ்வார் இரு கைகளையும் கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் நிலையில் காட்சி தருவது ஒரு அபூர்வமான தோற்றமாகும். பெருமாள் இந்த கருடாழ்வாருக்கு, சங்கு சக்கரத்தை திரிபுர சம்ஹாரத்தின் போது கொடுத்தார் என்று புராணம் கூறுகின்றது.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்
சனி பகவானை வணங்கிய பின் தான் சிவனை வழிபட வேண்டும் என்ற அபூர்வமான நடைமுறை உள்ள தேவார தலம்
சனி பகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு, 20. 12. 2023 அன்று மாலை 5.20 மணிக்கு, பெயர்ச்சி அடைகிறார். சனிபெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். காரைக்காலில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், தேவாரப் பாடல் பெற்றது. இறைவனின் திருநாமம் தர்ப்பாரண்யேசுவரர், இறைவியின் திருநாமம் பிராணேசுவரி. இறைவன் தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். தரப்பாணேஸ்வரரை சனிபகவான பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணம் கூறுகிறது.
பிராணேசுவரி அம்மன் சன்னதிக்கு முன்னால், சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலின் வாயிற் காப்பாளராக சனி பகவானே கருதப்படுகிறார். பொதுவாக சிவனை வழிபட்ட பிறகு தான் நவகிரகங்களை வழிபடுவார்கள். ஆனால் இத்தலத்தில் சனீஸ்வரனை வணங்கிய பிறகு தான் சிவனை வழிபட வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. மேலும் சனி பகவானை தவிர, மற்ற எட்டு கிரகங்களும் இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. சனிபகவானது விக்ரகத்தின் கீழே, அவரது சாந்நித்யம் கொண்ட மகாயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவானாலேயே அந்த மகாயந்திரம் அருளப்பட்டதால், அதனுடைய சக்தி அளவிட முடியாதது. அதனாலேயே சனிபகவானின் திருச்சன்னதி மிக்க சிறப்பும், சக்தியும், மூரத்திகரமும் பெறறு விளங்குகிறது.
பிரார்த்தனை
இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. சனித் தொல்லை தீர நள தீர்த்தத்திலும், முன் ஜென்ம சாபவங்கள் விலக பிரம்ம தீர்த்தத்திலும், கலைகளில் தேர்ச்சி பெற வாணி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்
சனி காயத்ரி மந்திரம் :
காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
அசுவினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஞானபைரவர்
கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாருக்காக நடராஜர் தமது தில்லை திருநடனத்தை காட்டியருளிய தலம் பேரூர்.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பைரவர் ‘ஞான பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. இது முக்தி தலம் என்பதால் பைரவர் வாகனம் இன்றி இருக்கிறார். ஞான பைரவர் வலது கையில் சிவனைப் போல் உடுக்கையையும், இடது கையில் பாசத்தையும் கொண்டுள்ளார். ஞான பைரவர் நின்ற கோலத்தில் உள்ளார். செவ்வாய்க்கிழமை மாலையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் இழந்த பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்கும். மேலும் மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபட உகந்த நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. ஆறு தேய்ப்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டு வந்தால் நற்பலன்கள் வந்தடையும்.

ஊத்துமலை பாலசுப்ரமணியர் கோவில்
மயிலின் கழுத்தை வளைத்து பிடித்திருக்கும் பாலமுருகனின் அபூர்வ தோற்றம்
முருகன் யோக வேலை ஏந்திய ஒரே தலம்
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலையில் அமைந்துள்ளது பாலசுப்ரமணியர் கோவில். மலைக்கு செல்ல சாலை வசதி உள்ளது. இத்தலம் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகின்றது. அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார்.
இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். பாலசுப்ரமணியர், குழந்தை வடிவில் காட்சியளிக்கிறார், முருகன், மயிலின் கழுத்தைப் பிடித்தபடி நிற்கும் தோரணையானது தனித்துவமானது. வேறு எந்த தளத்திலும் முருகனை இந்தக் கோலத்தில் நாம் தரிசிக்க முடியாது. முருகன் கையில் இருக்கும் வேல் யோக வேல் என்று அழைக்கப்படுகிறது. மற்ற தலங்களில் சக்திவேல், வைரவேல், வஜ்ரவேல், வீரவேல் போன்ற வேல்களை முருகன் தாங்கி பிடித்தாலும், இத்தலத்தில் மட்டும் தான் யோக வேலை ஏந்தி இருக்கிறார். இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தில் கல்லால் ஆன ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து, அகத்திய முனிவர் பூஜை செய்திருக்கிறார். இப்படி கல்லால் ஆன ஸ்ரீ சக்கரம், இங்கும், அரித்துவாரிலும் மட்டுமே உள்ளது. சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் இங்கு வாசம் செய்துள்ளனர் என்ற தகவலை கொங்கு மண்டல சதகமும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் குறிப்பிடுகின்றன. சப்த ரிஷிகளும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இத்தளத்தில் வழிபடுவதாக ஐதீகம். அந்த தினங்களில் நாமும் வழிபட்டால், அவர்களது ஆசிர்வாதத்தை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
இங்கு வந்து வழிபடுவோருக்கு தொழில்வளமும் வியாபார மேன்மையும் உண்டாகும்.

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
சிற்பத்தின் ஒரு காதிலிருந்து மறு காது வரை மிக நுண்ணிய துளை அமைந்திருக்கும் அதிசயம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரத்தில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோவில். இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கிறார்கள். இந்து மதத்தின் முக்கியமான தெய்வங்கள் அனைவருக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கர் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் விரிவாக்கங்கள் செய்யப்பட்டன. மதுரை, ஆவுடையார் கோவில், திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம் கோவில்களைப் போல, இக்கோவிலின் கட்டிடக் கலையும், சிற்பக் கலையும் மிகவும் நுணுக்கமும், அற்புத அழகும் வாய்ந்தவை.
இக்கோவிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை
1. கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
2. இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
3. திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
4. வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
5. பல இறை வடிவ சிற்பங்களை கொண்ட சித்திர சபை.
கோவிலின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நான்கு இசைத்தூண்கள் ஆகும். 1035 நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட நடன மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்து தூண்களில் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ள பாவை விளக்கு சிற்பங்கள் உள்ளன. இப்பாவை விளக்கு சிற்பங்களில் தான் அந்த காலங்களில்,இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்ற பயன்படுத்தப்பட்டது.
முருகன் சன்னதி மண்டபத்தில் உள்ள தூணில் அமைந்துள்ள தர்மராஜா சிற்பம், அதி அற்புதமான அழகுடனும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடனும், ஆச்சரியமும் பிரமிப்பும் அடைய வைக்கும் நம் முன்னோர்களின் விஞ்ஞான தொழில்நுட்பத் திறனையும் விளக்குவதாக அமைகின்றது. இச்சிற்பத்தில் நம்மை வியக்க வைக்கும் அம்சம் என்னவென்றால், ஒரு 0.5 மி.மீ. விட்டமுள்ள சிறிய குச்சியை ஒரு காதின் வழியே நுழைத்தால் அது மறு காது வழியாக வெளியே வருகின்றது. இவ்வளவு மிகச் சிறிய துளையை, சிலையின் முக அகலத்திற்கு ( சுமார் ஒரு அடி) எந்த உபகரணத்தை கொண்டு அமைத்தார்கள் என்பது இன்றுவரை விடை கிடைக்காத கேள்வியாக உள்ளது.

கொடுமுடி மகுடேசுவரர் கோவில்
கையில் திரிசூலம் ஏந்தி இருக்கும் சனிபகவானின் அபூர்வ தோற்றம்
கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தூரத்தில், காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள தேவாரத்தலம் கொடுமுடி. இறைவன் திருநாமம் மகுடேசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை நாயகி. இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.
திருநள்ளாறு,திருநாரையூர், திருக்கொள்ளிக்காடு, திருவாதவூர், வழுவூர் போன்ற சனிப் பரிகாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோவிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். அவர் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் காட்சி தருகிறார். இப்படி திரிசூலம் ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.
இத்தலத்து அனுமன், கோரை பற்களோடு எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வமான காட்சியாகும்.

கும்பகோணம் ஏகாம்பரேசுவரர் கோவில்
சுமங்கலிகள் தங்கள் தாலியை அம்மனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தும் கோவில்
கும்பகோணம் நாகேஸ்வரன் கீழவீதியில் அமைந்துள்ளது ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. அம்பிகை ருத்திராம்சம் பொருந்தியவள் என்பதால், அம்பிகைக்கு முன் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கின்றது.
இக்கோவிலின் திருச்சுற்றில் இராகுகால காளிகா பரமேஸ்வரிக்கு தனியாக சன்னதி உள்ளது. சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கிருக்கும் காளிகா பரமேஸ்வரி சன்னதியிலேயே கூட்டம் அலைமோதுகிறது.சன்னதியின் முன்புறம் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் நாகமும் காணப்படுகின்றன. கருவறையில், அசுரனை வதம் செய்யும் கோலத்தில் எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ காளியாக கன்னிகா பரமேஸ்வரி வீற்றிருக்கிறாள். கத்தி, கேடயம் ஆகியவை கைகளில் உள்ளன. இந்த அம்மனுக்குத்தான் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ராகுகால வழிபாடு நடத்தப்பட்டது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில் ராகு கால நேரத்தில் பரமேஸ்வரி அன்னைக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
பிரார்த்தனை
ராகு கால காளிகா பரமேஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். கன்னிப் பெண்கள் நல்ல கணவன் அமைய, கன்னிகா பரமேஸ்வரியை வேண்டிக் கொள்கிறார்கள். தீராத நோய்களால் அவதிப்படும் தங்கள் கணவர் குணமாக வேண்டும் என்று பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியிடம் பிரார்த்தனை வைக்கிறார்கள். தங்கள் கணவர் குணமானபின், தாங்கள் வேண்டியபடி தங்கள் கழுத்திலுள்ள மாங்கல்ய நாணில் உள்ள தாலியையே கழற்றி உண்டியலில் போட்டு நன்றிக் கடன் செலுத்துகின்றனர். இப்படி தாலியையே அம்மனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தும் பழக்கம் இந்த கோவிலில்தான் இருக்கின்றது. குழந்தை பேறு வேண்டும் பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் வெள்ளியில் செய்த சிறிய தொட்டிலை உண்டியலில் செலுத்தி தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

மானாமதுரை வீர அழகர் கோவில்
பாஸ்போர்ட் ஆஞ்சநேயர்
ஒரு மாதமானாலும் ஆஞ்சநேயருக்கு சாற்றிய வடை மாலை கெடாமல் இருக்கும் அதிசயம்!
மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 49 கி.மீ. தொலைவில் உள்ள மானாமதுரை என்ற ஊரில் அமைந்துள்ளது வீர அழகர் கோவில். இத்தலத்தில் பெருமாள், மதுரை அழகர் கோவிலைப் போலவே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். தாயார் திருநாமம் சௌந்தரவல்லி.
சீதாதேவியை தேடி வானர வீரர்கள் வானர வீரர்கள் இங்கு வந்தனர். இங்குள்ள பிருந்தாவனம் எனும் இடத்திலிருந்த சுவைமிக்க கனிகளை உண்டதால் மயக்கம் உண்டாகியதாம். பின்னர் ஶ்ரீராமர் அங்கு வந்து அவர்களை ஊக்கப்படுத்தி மீண்டும் வீரர்களாக்கிதாலேயே இத்தலம், 'வானரவீர மதுரை' என்றழைக்கப்பட்டு, பின் அப்பெயர் மருவி தற்போதைய 'மானாமதுரை' என்றானதாம். இத்தலத்துப் பெருமாள், ஆடித்திருவிழாவின் போது காஞ்சி வரதராஜப் பெருமாள் போல, தாயாரின் இருப்பிடத்திற்குச் சென்று திருமணம் முடித்துக் கொள்வார்.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் பெருமாளைப் போல் மிகவும் பிரசித்தம். இவர் ஆறரை அடி உயர திருமேனியுடன், நின்ற கோலத்தில் கைகூப்பி அஞ்சலி முத்திரையுடன் காட்சி அளிக்கிறார். மறுபடியும் ஒரு ராவணன் தோன்றி விடக்கூடாது என்பதற்காக இவர் தெற்கு முகமாக அருள்பாலிக்கிறார்.
இங்குள்ள ஆஞ்சநேயருக்கு சாற்றப்படும் வடை மாலையானது, ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருப்பது அதிசயம். இவருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் இவருக்கு வெளிநாட்டு பக்தர்கள் அதிகம்.
திருமணத்தடைநீங்க வியாழக்கிழமை வெற்றிலை மாலையும், காரியத்தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மாலையும் இவருக்கு சாற்றலாம். இத்தலத்திலுள்ள தாயாருக்கு வெள்ளிக்கிழமைகளில் தாமரைத் திரியால் விளக்கு போட்டு வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

திருமுக்கூடல் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்
சிவபெருமானைப் போல் தலையில் ஜடாமுடியுடனும், நெற்றிக்கண்ணுடனும் காட்சியளிக்கும் பெருமாள்
மும்மூர்த்திகளாக தரிசனம் தரும் பெருமாள்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழைய சீவரம். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு 'திருமுக்கூடல்' என்ற பெயரும் உண்டு. இத்தலத்து பெருமாள் திருநாமம் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை. பெருமாளின் திருமார்பில் அலமேலு மங்கை ஒரு புறமும், பத்மாவதி தாயார் மறு புறமும் உள்ளனர். இக்கோவில் பெருமாள், கையில் பத்மம் , சங்கு, சக்கரம் கையில் வைத்திருப்பதால் விஷ்ணு ரூபமாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் இருப்பதால் சிவரூபமாகவும், கையிலும், பத்மத்தின் மீது நின்று தரிசனம் தருவதால் பிரம்மரூபமாகவும் காட்சி தருகிறார். கார்த்திகை மாதத்தில் பெருமாளின் ஜடாமுடியை கழற்றி மூலிகை/எண்ணெய் காப்பு செய்யும்போது மட்டும்தான், அவரது ஜடாமுடி தரிசனம் பார்க்க இயலும்.
அப்பன் வெங்கடேச பெருமாள் என்ற பெயர் ஏற்பட்ட வரலாறு
தொண்டைமான் சக்ரவர்த்தி, திருப்பதி சீனிவாச பெருமாள் மீது அளவுகடந்த பக்தி கொண்டு, நாட்டை மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். அப்போது பெருமாள் அசரீரி குரலில் நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு மன்னனுக்கு கூறுகிறார். அதனை பொருட்படுத்தாமல் சீனிவாச பெருமாள் வசம் சரணாகதி அடைந்தார் மன்னன். அப்போது சீனிவாச பெருமாள் தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை அனுப்பி தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார். அதன் பின் திருப்பதி செல்லும் போது பெருமாளின் சங்கு, சக்கரம் திருமுக்கூடல் ஆலயத்திலேயே தங்கி விட்டது. அதனால் தான் இன்றும் அந்த கோயில் சங்கு, சக்கரம் மட்டும் தனியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பிறகு பெருமாளின் கட்டளைக்கு இணங்க தொண்டமான் சக்கரவர்த்தி திருமுக்கூடலுக்கு திரும்பி அப்பன் சீனிவாச பெருமாளை வணங்க வந்தார். அப்போது சயன கோலத்தில் இருந்த பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் வடிவமாக ஒன்று கலந்து ஓருருவில் காட்சி கொடுத்தார். அதை பார்த்த தொண்டமான் சக்கரவர்த்தி, அப்பன் வெங்கடேசா என்று பெருமாளை கட்டித்தழுவி கசிந்துருகி வேண்டினர். அதனால் தான் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு பிருகு முனிவரின் தவத்திற்கு பெருமாள் காட்சி அளித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.
ஒப்பிலியப்பன் போல் பெருமாளின் திருவடியில் பூமாதேவியும், மார்க்கண்டேயனும் இங்கு தவம் செய்கிறார்கள். திருப்பதி சீனிவாச பெருமாளின் கையில் உள்ள சங்கு சக்கரமும் இங்கு உள்ளது. இங்கு உறையும் பெருமாள் மார்க்கண்டேயனுக்கு நாதனாகவும், பூமாதேவிக்கு கண்ணனாகவும், காஞ்சியை ஆண்ட தொண்டைமானுக்கு திருப்பதி சீனிவாச பெருமாளாகவும் காட்சி கொடுத்தார் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

கார்த்திகை மாத அமாவாசையின் சிறப்புகள்
கார்த்திகை மாத அமாவாசையின் சிறப்புகள்
நமது வழிபாட்டில் அமாவாசை தினம் என்பது சிறப்பு மிக்கது. மாதத்திற்கு ஒரு முறை என அமாவாசை தினம் வந்தாலும், குறிப்பிட்ட சில மாத அமாவாசை தினங்களுக்கு தனிச்சிறப்புகள் உண்டு. அவற்றில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஐப்பசி அமாவாசை, கார்த்திகை அமாவாசை ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கார்த்திகை அமாவாசையை பெளமாவதி அமாவாசை என்றும் குறிப்பிடுவதுண்டு. கார்த்திகை அமாவாசை நாளில்தான் லட்சுமி தேவி, பூமிக்கு வருகை தருவதாக ஐதீகம். இந்த நாளிலேயே லட்சுமி தேவி, பாற்கடலில் இருந்து அவதரித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
அமாவாசை தினங்களில் புனித நீர் நிலைகளில் நீராடி,இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுபடுவது மரபு. ஆனால் கார்த்திகை அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டுடன், ஆன்மிக வழிபாட்டிற்கும் மிக முக்கியமான நாளாகும்.
கார்த்திகை அமாவாசை அன்று அனுமனையும் செவ்வாய் பகவானையும் வழிபடுவதால் வாழ்வில் நாம் சந்திக்கும் பல விதமான துன்பங்களில் இருந்து விடுபட முடியும். கார்த்திகை அமாவாசை நாள் என்பது தேவர்களின் தலைவனான இந்திரன், சூரிய பகவான், அனுமான், முன்னோர்கள் ஆகியோரை வழிபட ஏற்ற நாள். இந்த நாளில் அனுமனை வழிபட்டால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் இருந்தும் விடுபடுவதற்கு வழி கிடைக்கும். அதே போல் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தாலும் அது நீங்கி விடும். அதிக கடன் பிரச்சனையால் சிக்கி தவிப்பவர்கள் இந்த நாளில் அனுமன் வழிபாட்டினை முறையாக மேற்கொள்வதால் கைமேல் பலன் கிடைக்கும். பித்ருதோஷம், சர்ப்ப தோஷம் உள்ளிட்ட தோஷங்களுக்காக பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் இந்த நாளில் செய்வது மிக சிறப்பானதாகும்.
இந்த தினத்தில் பசு, காகம் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவளிப்பதும், ஆதரவு இல்லாமல் இருக்கும் மக்களுக்கு அன்னதானம் செய்வதும் கோடி புண்ணியத்தை பெற்றுத் தரும்.

தஞ்சாவூர் தஞ்சபுரீசுவரர் கோவில்
குபேரன் இழந்த செல்வத்தை மீட்டெடுத்த தலம்
தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளது தஞ்சபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் தஞ்சபுரீசுவரர், இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. தன்னைத் தஞ்சமென்று வரும் அடியார்களைக் காப்பதனால், இறைவன் தஞ்சபுரீசுவரர் எனவும் அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தருபதால் அம்பிகைக்கு ஆனந்தவல்லி அம்மன் எனவும் பெயர் வந்தது.
அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபம் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே அழைக்கப் படுகிறது. இதன் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் வண்ணக்கோலத்தில் எட்டு லட்சுமிகளும் காட்சி தருகின்றனர். அதன் தென்கிழக்கு மூலையில் சிவலிங்கத்தை லட்சுமிதேவியும், குபேரரும் பூஜை செய்யும் காட்சி அமைந்துள்ளது.
இந்தத் திருத்தலத்தில்தான் வட திசைக்கு அதிபதியான குபேரன் தவமிருந்து, தான் இராவணனிடம் இழந்த அரும் பெரும் செல்வத்தையும், புஷ்பக விமானத்தையும் மீண்டும் பெற்றான் என்பது ஐதீகம். ஐப்பசி மாதம் அமாவாசை நாளில்தான் குபேரனுக்குச் சிவ தரிசனம் கிடைத்து, சிவபெருமானிடமிருந்து வரமும் கிடைக்கப்பெற்றது. எனவே இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஐப்பசி அமாவாசை அன்றும் குபேர யாகம் நடைபெறுகிறது. இப்போது ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று குபேர யாகத்துடன் அஷ்டலட்சுமி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள குபேரனுக்கும் மஹாலட்சுமிக்கும் மஹா அபிஷேகம் நிகழ்கின்றது
பிரார்த்தனை
அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும், செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம். பண கஷ்டம், மன கஷ்டம், பணம் தொல்லை, சனி தோஷம், கடன்கள் நீங்க இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். லட்சுமி குபேர யாகத்தில், பங்கேற்கும் பக்தர்களுக்குப் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.