ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம்
தெய்வத் திருமணங்கள் பல நடைபெறும் திருநாள்தான் பங்குனி உத்திரம். இந்நாளில் நடைபெறும் ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றிய 12 ஆழ்வார்களில், பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்த தலம் திருவில்லிபுத்தூர். ஆண்டாள், வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீரங்க அரங்கனைக் கைத்தலம் பற்றினாள் என்பது வரலாறு. எனவே ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.பங்குனி உத்திரத்தன்று காலை ஆண்டாளும் ரங்கமன்னாரும் செப்புத்தேரில் வலம் வருவார்கள். மாலையில் பெண் அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சிறப்பு திருமஞ்சனம் முடிந்தவுடன், ஆண்டாளும் ரங்க மன்னாரும் திருமண வைபவம் நடைபெறும் ஆடிப்பூர கொட்டகைக்கு எழுந்தருளுவார்கள். கல்யாணத்திற்கான சீர்வரிசைகளை பெரியாழ்வாரின் சார்பில் கோவில் நிர்வாகத்தினர் மணமேடைக்கு கொண்டுவர, அதன்பின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கும். தொடர்ந்து கன்னிகாதானம் நடைபெற்ற நிலையில் பக்தர்களின் முன்னிலையில் திருமாங்கல்ய தாரணம் நடைபெறும்.
ஆண்டாள் மார்கழி மாதம் பாவை நோன்பிருந்து கண்ணனை நினைத்து அருளிய . 'வாரணமாயிரம்' என்று தொடங்குகிற 11 பாடல்களை, பெண்கள் தினமும் பாடி, பெருமாளையும் ஆண்டாளையும் வணங்கி வந்தால், சீக்கிரமே திருமண பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
வாரண மாயிரம் சூழ வலம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
என்ற இந்தப் பாசுரம், வைணவர்கள் வீட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஓதப்பட்டு திருக்கல்யாணம் நடைபெறும். வைணவத் திருத்தலங்களில் செய்யப்படும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் இந்தப் பாசுரம் கட்டாயம் இடம் பெறும்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். ஆகவே திருப்பரங்குன்றத்தை, 'திருமணத் திருத்தலம்' என்று கூறுவார்கள். எனவே பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த தலத்தில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். அதனால் தென் மாவட்டத்திலேயே, அதிக திருமண மண்டபங்கள் உள்ள ஊராக திருப்பரங்குன்றம் விளங்குகின்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கக்குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களிலும் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5 பங்குனி உத்திரத்தன்று, முருகப் பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஏப்ரல் 6ல் இரவு 7 மணியளவில் சூரசம்ஹார லீலை, ஏப்ரல் 7ம் தேதி இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெறும். ஏப்ரல் 8ல், பகல் 12.20 மணியளவில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைக்க, மதுரையிலிருந்து சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனி பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றத்திற்கு வருகை தருவார்கள். அவர்களை முருகப்பெருமான் வரவேற்று திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அழைத்து வருவார். பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை திருமணத்தை, சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் நடத்தி வைப்பார்கள்.
திருக்கல்யாணம் முடிந்ததும், சுமங்கலிப்பெண்கள் புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்வார்கள். திருக்கல்யாணத்துக்கு. முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையிலிருந்து சீர்வரிசை கொண்டு வரப்படும்.
முருகப்பெருமான் திருக்கல்யாண வைபோகத்துக்கு மீனாட்சி அம்மன் சென்றிருக்கும் வேளையில், மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். அப்போது பக்தர்கள் வேறு வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி தேர் திருவிழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாம் நாள் காலை தேரோட்டம் நடைபெறும். முதலாவதாக சிறிய தேரில் விநாயகர் உலா வர, அதை தொடர்ந்து பெரிய தேரில் கபாலீஸ்வரர் பவனி வருவார். அவரைப் பின்தொடர்ந்து கற்பகாம்பாள், வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வருவார்கள்.
கபாலீஸ்வரர், கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி பார் வேட்டைக்குச் செல்லும் கோலத்தில், மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, பக்தர்கள் கூட்டத்தின் நடுவே நான்கு மாட வீதிகளிலும் தேரில் பவனி வருவார். கபாலீஸ்வரரின் தேரோட்டத்தை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
சகட தோஷத்தை நீக்கும் தேரோட்டம்
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இந்த யோகம் இருப்பவர்கள் சில நேரங்களில் உச்சத்திலும் சில நேரங்களில் துன்பப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள். தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடும். அதுபோல, திருக்கோவில்களின் தேரோட்டத்தை தரிசிப்பது, ஒருவரின் சகட தோஷத்தை போக்கி, ஏற்ற இறக்கங்களை நீக்கி, நிலையான வாழ்வை தந்துவிடும் என்பது நம்பிக்கை. கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் பார்ப்பவர் அனைவரும், சகடதோஷம் நீங்கி நிலையான வாழ்வு பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவில்
ராகு-கேது இணைந்து ஒரே வடிவாக காட்சி தரும் அபூர்வ தோற்றம்
திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி.
ராகு பகவான் மனித தலையும்,பாம்பு உடலும் கொண்டவர். கேது பகவான் பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர். திருவாஞ்சியத்தில் மட்டுமே ராகுவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில், பாம்பு உடலாகவும் மனித முகமாகவும், ஓரே நிலையில் காட்சி தருகின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம், காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவுக்கு இடையில் அனைத்து கிரகங்களும் இருந்தால், அவருக்கு 'காலசர்ப்ப தோஷம்' என்று கூறப்படுகிறது. திருவாஞ்சியம் தலம் என்பது ராகு, கேது மற்றும் காலசர்ப்ப தோஷத்திற்கு அதிகம் அறியப்படாத பரிகார தலமாகும். .
இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும், நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும் ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - வெள்ளி ரிஷப வாகன காட்சி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஐந்தாம் நாள் இரவு, இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மயிலாப்பூர் மாடவீதிகளில் பவனி வருவார். அவருடன் கற்பகாம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் தங்க மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருவார்கள். பஞ்சமூர்த்திகளும் மறு நாள் காலையில்தான் கோவிலுக்குத் திரும்புவார்கள்.
இந்த ஆண்டு வெள்ளி ரிஷப வாகன காட்சி, 1.4.2023, சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு தொடங்க உள்ளது.
வெள்ளி ரிஷப வாகன காட்சியை தரிசித்தால், திருஞானசம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதுபோல் ஞானம் வேண்டி நிற்பவருக்கெல்லாம் ஞானப்பால் கிட்டிவிடும் என்பது நிச்சயம்.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
குளிர்ச்சியான நெற்றிக்கண் உடைய அம்பிகை
திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் மதுரபாஷிணி. தமிழில் 'யாழினும் மென் மொழியம்மை' என்று புகழப்படுகிறார். தெற்குமுகம் பார்த்த சன்னதியில் நான்கு திருக்கரங்களுடன், மதுரபாஷிணி அம்மன் வீற்றிருக்கிறார். பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படை, இந்த அம்பிகைதான்.
சிவபெருமானுக்கு வெப்பத்தை வெளிப்படுத்தும் நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷிணிக்கு, சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது.
இங்கு அம்பிகை ஸ்ரீசக்கரம் தாங்கி ஆதி அம்பிகையாகவும், மஞ்சுளாவாணியாகவும் இருந்து சகல சௌபாக்கியங்களையும் அருள்கிறாள்.இத்தல அம்பிகையை, மனிதனுக்கு தேவையான 34 சௌபாக்கியங்களையும் தரும் தேவியாக கண்டு, அகத்தியர் ஸ்ரீரதாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார்.
பேச்சு குறைபாட்டை தீர்க்கும் அபிஷேகத் தேன்
மதுரபாஷிணி அம்மன், கல்விக்கு அரசியாக இருந்து அருளுவதால், சக்தி பீடங்களில் இத்தலம் வித்யா பீடமாகக் கருதப்படுகின்றது. அம்பிகைக்கு தேன் அபிஷேகம் செய்வது சிறப்புக்குரியதாகும். அபிஷேகத் தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது. இதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளவர்களும், நா குழறுபவர்களும், இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, அம்பிகையை உள்ளம் உருக வழிபட்டு, அபிஷேகத் தேனை தினமும் பக்தியுடன் சுவைத்தால் குறைகள் தீரும்.
திருமணத் தடை நீக்கும் ஸ்ரீவித்யா சக்தி பூஜை
இங்கு வெள்ளிக்கிழமைதோறும் ஸ்ரீவித்யா சக்தி பூஜை நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இந்த பூஜையை நடத்தினால், திருமணத் தடை நீங்கும். வியாபாரம் பெருகுவதுடன் கலை, கல்வி, ஞானம் சிறக்கும்
பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்
கோவில் கட்டுவதற்காக பக்தன் செலவழித்த பணத்தை நவாபிடம் திருப்பி செலுத்திய ராமன், லட்சுமணன்
தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் , கம்மம் நகரிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில். இக்கோவிலில் ராமர், சீதாபிராட்டியை தனது இடது மடியில் இருத்தி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். தனது நான்கு கரங்களில் இரண்டில் சங்கு, சக்கரமும், மற்ற இரண்டு கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி இருக்கிறார். ராமருக்கு இடது பக்கம் லட்சுமணன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
ஆண்டு தோறும் இராமநவமியன்று, இத்தலத்தில் ராமருக்கும், சீதாபிராட்டிக்கும் திருக்கல்யாண உற்சவம் மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது.
இந்தக் கோவிலானது பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கஞ்சர்ல கோபண்ணா என்பவரால் கட்டப்பட்டது. கோபண்ணா என்பவர் பத்ராச்சலத்தில் தாசில்தாராக இருந்தார். அரசின் பணியாளரான இவர், அரசாங்க பணத்தை எடுத்து இந்த கோவிலை கட்டி முடித்து விட்டார். இதை அறிந்த ராஜ்யத்தின் நவாப் தானீஷா, அவருக்கு 12 வருட சிறைத் தண்டனை விதித்து, கோல்கொண்டா சிறையில் அடைத்து விட்டான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். தனது பக்தனை காப்பாற்றுவதற்காக ராமர் தனது தம்பி லட்சுமணனுடன், ராமோஜி மற்றும் லக்ஷமோஜி என்ற உருவில் வந்து கோபண்ணா செலவழித்த ஆறு லட்சம் முஹர்களை நவாப் தானீஷாவிடம் திரும்பச் செலுத்தி, பணம் பெற்றுக்கொண்டதற்கான இரசீதினை வாங்கிக்கொண்டு அதை சிறையில் இருந்த கோபண்ணாவின் படுக்கைக்கு அடியில் வைத்து விட்டார்கள். மறுநாள் இதையறிந்த நவாப் தானீஷா, தம்மிடம் வந்து இரசீது பெற்றுச்சென்றது வேறு யாருமல்ல, இராமனும் லட்சுமணனுமே என்று உணர்ந்தார். உடனே கோபண்ணாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். கோபண்ணாவைப் பணிந்து வணங்கி மன்னிப்புக் கோரினர். தாம் பெற்ற தங்க முஹர்களை அவர் காலடியில் வைத்துக் காணிக்கையாக்கினார். ஆனால் கோபண்ணாவோ, தங்க முஹர்களை திரும்ப வாங்க மறுத்துவிட்டார். என்றாலும் இரண்டே இரண்டு தங்க நாணயங்களை மட்டும் ராமரின் திருவிளையாடலை நினைவு கூறும் பொருட்டு பெற்றுக் கொண்டார். இந்த இரண்டு தங்க நாணயங்களை இன்றும் பத்திராசலம் கோவிலில் நாம் காணலாம். கோபண்ணா, 'பக்த இராமதாஸ்' என்று எல்லோராலும் போற்றப்பட்டார். அவர் சிறையில் வாடிய போது ராமபிரானை எண்ணி, தெலுங்கில் பல பாடல்களை இராமரைப் போற்றும் வகையில் பாடியுள்ளார். உணர்ச்சி மயமான இந்தப் பாடல்கள், தாசரதி சதகம் மற்றும் கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ்பெற்றன.
இராம நவமி திருக்கல்யாண உற்சவத்திற்கு முத்துக்கள் அளித்த நவாப்
இராமனின் சக்தியினை உணர்ந்த கோல்கொண்டா அரசன் தானிஷா, பல்வோஞ்ச பரகானா கிராமத்தில் கிடைக்கும் வருமானத்தை கோவில் பராமரிப்பு செலவுகளுக்கென்று ஒதுக்கி ஆணையிட்டார். இது மட்டுமல்லாமல் கோவிலில் ஸ்ரீ ராம நவமி தினத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தன்று மூலவருக்கு அணிவிக்க சிறப்பு அலுவலர் மூலம் முத்துக்களை யானையில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்றும் கூட ஆந்திர அரசு, இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - அதிகார நந்தி சேவை
'மயிலையே கயிலை' என்னும் பெருமையுடையது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றத. பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளன்று நடைபெறும் அதிகார நந்தி சேவை, ஐந்தாம் நாள் அன்று இரவு நடைபெறும் வெள்ளி ரிஷப வாகன காட்சி, ஏழாம் நாள் திருத்தேர், எட்டாம் நாள் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா, பத்தாம் நாள் இரவு நடைபெறும் திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
சென்னைக்கு பெருமை மயிலை என்றால், மயிலை கபாலீஸ்வரருக்குப் பெருமை அதிகார நந்தி சேவை. இந்த ஆண்டு அதிகார நந்தி சேவை 30.3.2023, வியாழனன்று காலை 5.45 மணிக்கு தொடங்க உள்ளது.
ரிஷபத்தின் முகமும் (காளையின் முகம்) சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். சிவபெருமானின் வாகனமான நந்தி பகவான். வேதங்களின் முதல்வனாகப் போற்றப்படுகின்றார். 'நந்தி' என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன், நந்தி தேவருக்குத்தான் முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால், அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.
வெள்ளியாலான அதிகார நந்தி வாகனம்
இக்கோவில் அதிகார நந்தி வாகனம் 106 ஆண்டுகள் பழமையானது. அதற்கு முன்னால் மரத்தாலான அதிகார நந்தி வாகனம்தான். பயன்பாட்டில் இருந்தது. இப்போதைய நந்தி வாகனத்தை வழங்கியவர், வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமத்தைச் சேர்ந்த த.செ .குமாரசாமி என்பவர். இவரின் குடும்பம், ஆயுர்வேத சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக, பல தலைமுறைகளாக செய்து வந்தனர். வெள்ளியாலான இந்த அதிகார நந்தி வாகனம் உருவாக்கும் பணி, 1912ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1917 ல் நிறைவு பெற்றது. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான இந்த அதிகார நந்தி வாகனத்தின் தற்போதைய மதிப்பு, மூன்று கோடி ரூபாய் ஆகும்.
திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி கோவில்
திருமழப்பாடி நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம்
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமழப்பாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இரண்டு அம்பிகைகள் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை ஆவர். இந்த ஆலயத்தில் நடைபெறும் நந்தி திருமணம் மிக விசேஷமானது.
நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. அதாவது திருமழப்பாடி கோவிலில், பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று நடைபெறும் நந்தி திருக்கல்யாணத்தைப் பார்ப்பவர்களுக்கு முந்தி திருமணம் ஆகும் என்பது தான் இதன் பொருள். அதன்படி திருமழப்பாடி நந்தி திருக்கல்யாணம் பார்த்தால், அடுத்த ஆண்டு நந்தி கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமண வரம் வேண்டுவோருக்குத் திருமணம் நடந்து முடியும் என்கின்றனர்.
சிலாத முனிவர் என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமான், 'நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்' என்று அருளினார். சிலாத முனிவர், பெட்டகத்தில் கண்டெடுத்த அந்தக் குழந்தைக்கு 'செப்பேசன்' என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.
செப்பேசன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து துயருற்றார். இதையறிந்த செப்பேசன், திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், திருக் கயிலையின் தலைவாயிலைக் காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.
இதையடுத்து , சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் , தவம் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவையாற்றில் இருந்து நந்தியம்பெருமான், வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக திருவையாற்றில் இருந்து ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
இந்த ஆண்டு நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம், 30.3.2023 வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்
ஆஞ்சநேயர் வீணையை இசைத்து சிவபெருமானை வழிபட்ட தலம்
சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் மப்பேடு. இறைவனின் திருநாமம் சிங்கீஸ்வரர். இறைவியின் திருநாமம் புஷ்பகுஜாம்பாள்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, தன் உண்மையான ரூபத்தை மீண்டும் பெற இங்கு வந்து சிவனை வழிபட்டார். பெண் வடிவில் திருமால் வழிபட்டதால், (மால் - திருமால்; பேடு - பெண்), `மால் பேடு' என்றும், மீண்டும் சுய உருவம் பெற்றதால் (மெய் உருக் கொண்டதால்) `மெய்ப்பேடு' என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் சிவபெருமான் திருநடனம் புரிந்த போது, அவரின் நந்தி கணங்களில் ஒருவரான சிங்கி, சிவனாரின் நடனத்துக்கு ஏற்ப, மிருதங்கத்தை லயிப்புடன் வாசித்தார். தன் இசையில் கவனம் செலுத்திய அவரால், ஈசனின் திருநடனத்தை தரிசிக்க இயல வில்லை. இந்தக் குறை தீர, மப்பேடு திருத் தலத்தில் சிங்கிக்குத் திருநடனக் காட்சியைக் காட்டினாராம் ஈசன். ஆகவே அவருக்கு இத்தலத்தில், சிங்கீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமைந்திருக் கும் ஒரு சிறிய மாடத்தில் வீணை வாசிக்கும் கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். சீதையைத் தேடிக்கொண்டு ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றபோது வழி தெரியா மல் தவித்ததாகவும், பின்னர் இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வீரபாலீஸ்வரரை, வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைத்து வழிபட்டதாகவும், இறைவனின் அருளால் இலங்கைக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் சந்தியா காலத்தில் ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வந்து வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பதாக ஐதீகம். இசைத்துறையில் பெயரும் புகழும் பெற விரும்புபவர்கள், இங்கு வந்து வீரபாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்பு அமர்ந்து பயிற்சி செய்தால், அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு
இக்கோவில், கொடிமரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் நவ வியாகரணக் கல்லின் மேல் இருந்தபடி, நந்தியையும் சிவபெருமானையும் பிரதோஷக் காலத்தில் வழிபட்டால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். கார்த்திகை சோமவாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.
மூல நட்சத்திரக்காரர்களின் பரிகாரக் கோவில்
அருள்மிகு சிங்கீஸ்வரர் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர் என்பதால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரக் கோயிலாக விளங்குகிறது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள சகலவிதமான தோஷங்கள் நீங்கவும், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையவும் தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில்
தரிசிப்பவர்களின் மனநிலைக்கேற்ப குழந்தையாய், இளைஞனாய்,முதியவராய் காட்சி தரும் முருகன்
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே அமைந்துள்ள முருகன் தலம் எட்டுக்குடி. எட்டி மரங்கள் அதிகம் நிறைந்த ஊர் என்பதால் எட்டுக்குடி என்ற பெயர் வந்தது.முருகனின் அறுபடை கோவில்கள் தவிர, புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. இங்கு முருகன், வள்ளி தெய்வானை உடன் இருக்க, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இவர் அமர்ந்திருக்கும் மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது ஆச்சரியமும் , அதிசயமுமான விஷயம் ஆகும். பொரவாச்சேரி மற்றும் எண்கண் முருகன் தலங்களிலும் இதேபோன்ற ஒரே கல்லிலான மயில் மேல் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் சிலையை நாம் தரிசிக்கலாம். அற்புத அழகுடன் கூடிய இந்த மூன்று முருகன் சிலைகளையும் வடித்தவர் ஒரே சிற்பிதான்.
இந்த கோவிலில், முருகன் தன்னை தரிசிக்கும் பக்தர்களின் மனநிலைக்கேற்ப மூன்று விதமான கோலங்களில் காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.
சித்ரா பௌர்ணமி திருவிழா
இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் அபிஷேகம் மிகவும் விசேஷமானது. மாலை தொடங்கும் இந்த அபிஷேகம் , மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். சித்ரா பௌர்ணமி திருவிழாவில் 25 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும்.
பிரார்த்தனை
குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிட்டவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்
குடும்ப சமேதராக அருள் பாலிக்கும் அனுக்கிரக சனி பகவான்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.
இத்தலத்தில் நவக்கிரக சன்னிதி கிடையாது. அதற்குப் பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித் தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி குடும்ப சமேதராக தனது மனைவியர் மந்தா, ஜேஷ்டா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் சனிபகவான் சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் இங்கு அவர் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இவரை ஆதி பிருஹத் சனீஸ்வரர் எனப் போற்றுகிறார்கள். சனி பகவான் குடும்பத்துடன் இருப்பதால், 12 ராசிக்காரர்களும் இங்கு வந்து வழிபட்டால், சனியின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம், அவரின் அருளைப் பெறலாம் என்கிறது தல புராணம்.
பூச நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய சனிபகவான்
இவரை நினைத்து மாதந்தோறும் அமாவாசை தினங்களில் காகத்துக்கு அல்லது இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் தரித்திரம் விலகி ஐஸ்வரியம் பெருகும் என்கிறார்கள்.
குறிப்பாக, பூச நட்சத்திரக்காரர்கள் வணங்கிய வேண்டிய திருத்தலம் என்றும் பூச மருங்கர் எனும் சித்தர் வழிபட்ட தலம் இது என்றும் சொல்கிறது தல புராண மகிமை. எனவே, மாதந்தோறும் பூச நட்சத்திர் நாளில், தைப் பூச நாளில் வந்து வேண்டிக்கொள்ளலாம்.
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்
துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கையை ஏற்கும் அம்பிகை
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. கருவறையில் அம்பிகை பாலாம்பிகை தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறாள். அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.
அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். பெண்கள், வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இந்த துவாரபாலகியர்க்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.
பார்வதி தேவி அன்னம் வடிவெடுத்து சிவ பூஜை செய்த தலம் இது. அதனால் அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள தீர்த்தம் அன்னமாம் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. திருமணமாகாதவர்கள் நல்ல வரன் வேண்டி தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்னமாம் பொய்கையில் நீராடி பாலாம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்பதும் நம்பிக்கை.
குழந்தைகளின் பாலாரிஷ்டத்தை நீக்கும் பாலாம்பிகை
பால் குடிக்காமல் சதா அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு 'பாலாரிஷ்டம்' என்ற தோஷம் உள்ளதாகச் சொல்வார்கள். காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள், இங்குள்ள அம்பாளுக்குப் பால் அபிஷேகம் செய்து, அழும் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தைகள் மேல் தெளித்தால் பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை.
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்
கண்பார்வை பிரச்சனைகளை தீர்க்கும் வீணாதர தட்சிணாமூர்த்தி
திருச்சிக்கு அருகே, தேவாரத் தலமான திருவாசிக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் துடையூர், இறைவனின் திருநாமம் விஷமங்களேஸ்வரர் . அம்பிகையின் திருநாமம் வீரமங்களேஸ்வரி என்ற மங்களநாயகி.
சுவாமி சந்நிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் நின்ற கோலத்தில் 'வீணாதர தட்சிணாமூர்த்தி' காட்சி தருகிறார். இவர் கரங்களில் ஏந்தியிருப்பது 'திகி சண்டளா வீணை' என்பதால், 'திகி சண்டளா வீணாதர தட்சிணாமூர்த்தி' எனப்படுகிறார். இப்படி நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியை காண்பது மிக அரிது. இவருடைய வீணையின் இசைக்கேற்ப, இவருக்கு அருகில் ஒரு பூத கணம் உடுக்கை அடித்துக் கொண்டும், ஒரு பெண்மணி தாளம் போட்டுக் கொண்டும் காட்சி தருகிறார்கள்.
இவர் கண்களுக்கு ஒளி தரும் நரம்புகளைக் காக்கக் கூடியவர். எனவே, கண் பிரச்னை உள்ளவர்கள், இங்கே வந்து இந்த வீணாதர தட்சிணாமூர்த்தியை தரிசித்து மனதாரப் பிரார்த்தித்தாலே போதும். பார்வை பிரகாசமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தச் சந்நிதியில் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகள் விசேஷமானவை. உயர்கல்வி, குடும்ப நலன், மருத்துவச் சிகிச்சை போன்ற வேண்டுதல்களுக்காக, இத்தினங்களில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்
தினம் இரண்டு நிமிடம் மட்டுமே மூடப்படும் கிருஷ்ணர் கோவில்
கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருவார்ப்பு எனும் ஊரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில், தினமும் 23 மணி நேரம் 58 நிமிடங்கள் திறந்து இருக்கும். அதாவது இந்த கோயில் 2 நிமிடங்கள் மட்டுமே மூடப்படுகின்றது என்பது ஒரு அதிசயமாகும்.
எப்பொழுதும் பசியுடன் இருக்கும் கிருஷ்ணர்
இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணர் எப்போதும் பசித்து இருப்பதால், ஒவ்வொரு நாளும் இரண்டு நிமிடங்கள் தவிர இந்த கோவில் மூடப்படுவதில்லை. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே, இக்கோவிலில் எழுந்து அருளி இருக்கிறார் என்று மக்கள் நம்புகின்றனர். அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.
மற்றொரு சிறப்பாக இந்த கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேலையில் கையில் கோடாரி ஏந்தியபடி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும். தந்திரியிடம் கோடாரி கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என நம்பப்படுவதால், ஒரு வேளை இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கோயில் கதவு திறப்பதில் ஏதேனும் தடங்கல் வந்தால், கதவை உடைப்பதற்காக அந்த கோடாரி பயன்படுத்தலாம் என்பதற்காக அந்த கோடாரி தந்திரியிடம் கொடுக்கப்படுகிறது.
கிரகணத்தின் போதும் மூடப்படாத கோவில்
இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒருமுறை கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது ஆண்டவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீஆதிசங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து கிரகணத்தின் போதும், இக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை, வெறும் 2 நிமிடங்கள்தான்.
அதேபோல், இந்த கோவிலில் பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் இரவு 11.58 மணிக்கு பூசாரி சத்தமாக, "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?" என அழைப்பார். மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் இக்கோவில் பிரசாதம் சுவைத்தால், அதன்பிறகு நீங்கள் பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சனை இருக்காதாம்.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
அமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடைபெறும் தேவாரத் தலம்
திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் யாழினும் மென்மொழியம்மை.
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வார்கள். ஆனால், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் எல்லா அமாவாசை நாட்களிலும், அன்னாபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், விளமல் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சுப்புலாபுரம் கால தேவி நேர கோவில்
இரவில் மட்டுமே திறந்திருக்கும் அதிசய அம்மன் கோவில்
மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள எம்.சுப்புலாபுரம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது சிலார்பட்டி கிராமம். இக் கிராமத்தில் அமைந்துள்ளது கால தேவி நேர கோவில்.
பொதுவாக கோவில்கள் காலையிலிருந்து நண்பகல் வரையிலும் பின்னர் மாலையில் இருந்து முன்னிரவு வரைக்கும் திறந்திருக்கும். ஆனால் கால தேவி நேர கோவில், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக உள்ளது. அதேபோல், கிரகண நேரத்தில்கூட, இக்கோவில் மூடப்படுவதில்லை என்பது ஒரு ஆச்சரியமான நடைமுறையாகும்.
இந்த கோவிலில் கால தேவிக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. மற்ற எந்த தெய்வத்திற்கும் சன்னதி கிடையாது. காலதேவி அம்மன் எண்கோண வடிவ கருவறையில், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் என அனைத்தும் சூழ, காலசக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
கெட்ட நேரத்தை மாற்றும் கால தேவி அம்மன்
இந்த கால தேவி அம்மன், இங்கு வரும் பக்தர்களின் காலத்தில் உள்ள கெட்ட நேரங்களை நீக்கி அருள்புரிகிறார்.இக்கோவிலில் ஒரு அபூர்வமான கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் அனைவரும் 11 நொடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நிற்கும் நேரத்தில் நமது கால சக்கரமானது சுழன்று நமக்கு நல்ல நேரத்தை தரும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கோவிலில் மாலை ஆறு மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை போக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, கால சக்கரத்தில் நின்று பிரார்த்தனை செய்தால், தங்களது வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்
நந்தி பகவான் தனது மனைவியுடன் காட்சிதரும் தேவார வைப்புத் தலம்
செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில். இறைவனின் திருநாமம் ருத்திர கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி.
இக்கோவிலின் நுழைவு வாசல் அருகில் உள்ள சுவற்றில், நந்தி பகவான் தனது மனைவி சுயம்பிரபாதேவி என்கின்ற சுயசாம்பிகையுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி தருவது, எந்த தலத்திலும் காணமுடியாத ஒரு அரிய காட்சியாகும். இத்தலத்து நந்தி பகவான், கருட பகவானின் ஆணவத்தை அழிப்பதற்காக, தன் மூச்சுக் காற்றினால் அவரை பூமிக்குள் அழுத்தி புதைத்தார். அதனால், மற்ற தலங்களில் தலையை சாய்த்து அமர்ந்திருப்பது போல் இல்லாமல், இத்தலத்து நந்தி பகவான் தலையை நேராக நிமிர்த்தி,நாசி புடைக்க உக்கிர கோலத்துடன் காட்சி தருகிறார்.
தீராத நோய்களைத் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு
இக்கோவிலில் 16 பிரதோஷங்கள் தொடர்ந்து வழிபட்டால், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,கிரக சஞ்சார பாதிப்புகள் முதலியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆவூர் வரதராஜப் பெருமாள் கோவில்
பெருமாளுக்கு அருகில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் அபூர்வ கருட பகவான்
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவூர் தலத்தில் அமைந்திருக்கின்றது குகை வரதராஜர் கோயில். இந்த குடைவரை கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது.
பொதுவாக பெருமாள் கோவில்களில் கருட பகவான் பெருமாளுக்கு எதிரே தனிச்சன்னதியில் நின்றபடி அஞ்சலி முத்திரையுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் கருட பகவான், மூலவர் வரதராஜப் பெருமாளின் அருகில் கருடாசன நிலையில் இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும்.
மூலவர் வரதராஜ பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவருக்கு வலது பக்கத்தில் கருட பகவான் தனது இரண்டு சிறகுகளையும் விரித்த நிலையில், வலது காலை மடித்து முழங்காலை செவ்வகப் பீடம் மீது இருத்தி, இடது காலை மடித்து பாதங்களை பீடம் மீது ஊன்றி, கருடாசன நிலையில், திருமாலை நோக்கித் திரும்பியுள்ளார்.
கருட பகவான் தலையில் மகுடம் தரித்து, இரு காதுகளிலும் மகர குண்டலங்கள் அணிந்து, வாயின் வலது ஓரம் ஒரு கோரைப்பல் தெரிய, வலதுதோளின் மீது ஒரு சிறிய நாகம் படமெடுத்திருக்க. மார்பில் முப்புரிநூல், கழுத்தில் மணி ஆரங்கள். தோள்வளை, கை வளைகள் முதலியவை அணிந்து காட்சி தருகிறார்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்
சிறுமி வடிவில் இருபது கைகளுடனும், சிரித்த முகத்துடனும் காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை அம்மன்
இராஜராஜ சோழன் மகனான இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கிய தலம்தான் கங்கைகொண்ட சோழபுரம். இத்தலத்தில் அமைந்திருக்கிறது அவன் நிறுவிய பிரம்மாண்டமான பிரகதீஸ்வரர் கோவில். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில், கும்பகோணத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.
இராஜேந்திர சோழன், தான் வெற்றி பெற்ற தேசங்களில் இருந்து கொண்டு வந்த பல அற்புத சிற்பங்களை இக்கோவிலில் நிறுவியுள்ளான். சாளுக்கிய தேசத்தை வென்றதின் நினைவுச் சின்னமாக கொண்டு வரப்பட்ட இருபது கைகள் கொண்ட துர்க்கை அம்மன், ஒரே கல்லிலான நவகிரக சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
இந்த துர்க்கை அம்மன், சிரித்த முத்துடன் இருபது கரங்களில், பதினெட்டில் ஆயுதங்களை ஏந்தியபடி, மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில், ஒன்பது வயது சிறுமியின் வடிவத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றாள். துர்க்கை அம்மன் என்றாலே நம் எல்லோருக்கும் உக்கிரமான தோற்றம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இத்தலத்தில் துர்க்கை அம்மன், சிறுமி வடிவில் சிரித்த முகத்துடன் அருள்பாலிப்பதால் இவளை பக்தர்கள், 'மங்கள சண்டி' என்று அழைக்கின்றனர். சண்டி என்பதற்கு துர்க்கை எனப் பொருள். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
துர்க்கை அம்மனுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது. ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர்தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது. திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர்.அதேபோல, ஒற்றைக் கல்லாலான நவக்கிரக வடிவமைப்பும் சிறப்பானது. சூரியனை தாமரை வடிவில் சித்திரித்து, சுற்றிலும் மற்ற கிரகங்கள் எழுந்தருளியிருக்கும் வடிவ அமைப்பானது இந்தியாவில் வேறெங்கும் இல்லை. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன். சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாதபடி மண்டப அமைப்பு உள்ளது.