சுப்புலாபுரம் கால தேவி நேர கோவில்

இரவில் மட்டுமே திறந்திருக்கும் அதிசய அம்மன் கோவில்

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள எம்.சுப்புலாபுரம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது சிலார்பட்டி கிராமம். இக் கிராமத்தில் அமைந்துள்ளது கால தேவி நேர கோவில்.

பொதுவாக கோவில்கள் காலையிலிருந்து நண்பகல் வரையிலும் பின்னர் மாலையில் இருந்து முன்னிரவு வரைக்கும் திறந்திருக்கும். ஆனால் கால தேவி நேர கோவில், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக உள்ளது.அதேபோல், கிரகண நேரத்தில்கூட, இக்கோவில் மூடப்படுவதில்லை என்பது ஒரு ஆச்சரியமான நடைமுறையாகும்.

இந்த கோவிலில் கால தேவிக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. மற்ற எந்த தெய்வத்திற்கும் சன்னதி கிடையாது. காலதேவி அம்மன் எண்கோண வடிவ கருவறையில், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் என அனைத்தும் சூழ, காலசக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

கெட்ட நேரத்தை மாற்றும் கால தேவி அம்மன்

இந்த கால தேவி அம்மன், இங்கு வரும் பக்தர்களின் காலத்தில் உள்ள கெட்ட நேரங்களை நீக்கி அருள்புரிகிறார். இக்கோவிலில் ஒரு அபூர்வமான கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் அனைவரும் 11 நொடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நிற்கும் நேரத்தில் நமது கால சக்கரமானது சுழன்று நமக்கு நல்ல நேரத்தை தரும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கோவிலில் மாலை ஆறு மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை போக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, கால சக்கரத்தில் நின்று பிரார்த்தனை செய்தால், தங்களது வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

 
Previous
Previous

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

Next
Next

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்