திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். ஆகவே திருப்பரங்குன்றத்தை, 'திருமணத் திருத்தலம்' என்று கூறுவார்கள். எனவே பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த தலத்தில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். அதனால் தென் மாவட்டத்திலேயே, அதிக திருமண மண்டபங்கள் உள்ள ஊராக திருப்பரங்குன்றம் விளங்குகின்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கக்குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களிலும் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5 பங்குனி உத்திரத்தன்று, முருகப் பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஏப்ரல் 6ல் இரவு 7 மணியளவில் சூரசம்ஹார லீலை, ஏப்ரல் 7ம் தேதி இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெறும். ஏப்ரல் 8ல், பகல் 12.20 மணியளவில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைக்க, மதுரையிலிருந்து சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனி பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றத்திற்கு வருகை தருவார்கள். அவர்களை முருகப்பெருமான் வரவேற்று திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அழைத்து வருவார். பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை திருமணத்தை, சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் நடத்தி வைப்பார்கள்.
திருக்கல்யாணம் முடிந்ததும், சுமங்கலிப்பெண்கள் புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்வார்கள். திருக்கல்யாணத்துக்கு. முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையிலிருந்து சீர்வரிசை கொண்டு வரப்படும்.
முருகப்பெருமான் திருக்கல்யாண வைபோகத்துக்கு மீனாட்சி அம்மன் சென்றிருக்கும் வேளையில், மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். அப்போது பக்தர்கள் வேறு வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சென்ற ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெளியான பதிவுகள்
1. வைத்தீஸ்வரன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா
முருகப்பெருமானும் யானையும் விளையாடும் நரி ஓட்டம் நிகழ்ச்சி
https://www.alayathuligal.com/blog/la2rny36apf65rfnws4fzwcbfkpk6r
2. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் திருவிழா
https://www.alayathuligal.com/blog/lx9a4crt79jb6rf22pcff6j3xk78jh