எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில்

தரிசிப்பவர்களின் மனநிலைக்கேற்ப குழந்தையாய், இளைஞனாய்,முதியவராய் காட்சி தரும் முருகன்

திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே அமைந்துள்ள முருகன் தலம் எட்டுக்குடி. எட்டி மரங்கள் அதிகம் நிறைந்த ஊர் என்பதால் எட்டுக்குடி என்ற பெயர் வந்தது.முருகனின் அறுபடை கோவில்கள் தவிர, புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. இங்கு முருகன், வள்ளி தெய்வானை உடன் இருக்க, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இவர் அமர்ந்திருக்கும் மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது ஆச்சரியமும் , அதிசயமுமான விஷயம் ஆகும். பொரவாச்சேரி மற்றும் எண்கண் முருகன் தலங்களிலும் இதேபோன்ற ஒரே கல்லிலான மயில் மேல் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் சிலையை நாம் தரிசிக்கலாம். அற்புத அழகுடன் கூடிய இந்த மூன்று முருகன் சிலைகளையும் வடித்தவர் ஒரே சிற்பிதான்.

இந்த கோவிலில், முருகன் தன்னை தரிசிக்கும் பக்தர்களின் மனநிலைக்கேற்ப மூன்று விதமான கோலங்களில் காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில், அனுபவித்து சொல்கிறார்கள்.

சித்ரா பௌர்ணமி திருவிழா

இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் அபிஷேகம் மிகவும் விசேஷமானது. மாலை தொடங்கும் இந்த அபிஷேகம் , மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். சித்ரா பௌர்ணமி திருவிழாவில் 25 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும்.

பிரார்த்தனை

குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிட்டவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

பொரவாச்சேரி கந்தசாமி கோவில் பற்றிய முந்தைய பதிவு

அழகு மிளிரும் முருகப்பெருமானின் அபூர்வ திருமேனி

https://www.alayathuligal.com/blog/ghreaay4mrh2n6l8ab7jm3tx86zezz

 
Previous
Previous

மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்

Next
Next

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்