மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
தைப்பொங்கலன்று சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்
கல் யானை கரும்பு தின்ற அதிசயம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு தைப்பொங்கல் அன்றும், சிவபெருமான் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. சோமசுந்தரர் சித்தராக வந்து கோயிலிலுள்ள கல் யானைக்குக் கரும்பு கொடுத்து உண்ண வைத்தது ஒரு தைப்பொங்கல் நாள் என்பதால், வருடம் தோறும் தைப்பொங்கலன்று இக்கோவிலில் இவ்விழா நடைபெற்று வருகிறது. இந்த தினத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி, மக்களும் கரும்பை படைக்கின்றனர். கரும்பு தின்றதாக கூறப்படும் வெள்ளைக்கல் யானையை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சோமசுந்தரேஸ்வரர் சன்னிதிக்கு இடப்புறத்தில் இன்றும் நாம் பார்க்கலாம். தைப்பொங்கல் தினத்தில் இந்த கல்யானையை தரிசிப்பது சிறப்பு.
முன்னொரு காலத்தில், மதுரையை அபிஷேக பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அப்போது சோமசுந்தர கடவுள், சித்தரின் வடிவம் எடுத்து மதுரை மாநகரில் பல அதிசயங்களை நிகழ்த்தினார். முதியவரை இளைஞராகவும், இளைஞரை முதியவராகவும், பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் ஆக்கினார். ஊமைகளை பேசவும் குருடர்களை பார்க்கவும் செய்யவைத்தார். ஊசியை நிறுத்தி அதன் மேல் தன்னுடைய பெருவிரலை மட்டும் ஊன்றி நின்று நடனம் ஆடினார்.
சித்தர் நிகழ்த்திய அதிசயங்களைப் பற்றி அறிந்ததும், மன்னனே தன்னுடைய பரிவாரங்களுடன் சித்தரைத் தேடி வந்தான். இதுபற்றி அறிந்ததும் சித்தர், மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வாயு மூலையில் அமர்ந்து யோக தியானத்தில் ஆழ்ந்தார். இந்த இடம் சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகே உள்ளது. மன்னன் சித்திரை பார்க்க கோவிலுக்கு வந்தான். மன்னனோடு வந்த பாதுகாவலர்கள், சித்தரின் யோகத்தை கலைக்க முற்பட்டு, கையை ஓங்கினர். ஓங்கிய நிலையிலேயே அவர்கள் கைகள் நிலைபெற்று விட்டன. இதனால் மன்னன் அதிர்ந்து போனான். பின்னர், மன்னன் சித்தரிடம் பணிவாக பேசினான். 'சித்தரே, தாங்கள் தியான நிலையில் இங்கே அமர்ந்து இருப்பதன் நோக்கம் என்ன? மேலும் நீங்கள் சித்தர்தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?' என்றான்.
கண் விழித்த சித்தர், 'மன்னா! நான்தான் ஆதியும் அந்தமும். சஞ்சரிக்கும் வல்லமை எனக்கு உண்டு. தற்போது மதுரை மக்களுக்கு சித்து விளையாட்டு காட்டி, அவர்களுக்கு தேவையான வரத்தை அளித்து வருகிறேன். என்பெயர் "எல்லாம் வல்ல சித்தர்" என்பதாகும்' என்று கூறினார். அதன்பின்னும் சித்தர் மேல் நம்பிக்கையில்லாத மன்னன், 'சித்தரே, தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல் யானையை தின்னச் செய்யுங்கள்' என்று கூறி கரும்பை நீட்டினான். சித்தரும் அமைதியாக அருகில் இருந்த கல் யானையைப் பார்க்க, அது உயிர்ப்பெற்று, மன்னனின் கையில் இருந்த கரும்பை வாங்கித் தின்றது. அத்துடன் அரசனின் கழுத்திலிருந்த மாலையையும் பறித்தது. அதன் பின்னர்தான் மன்னன், சித்தர் வடிவில் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்' மன்னன், சித்தரை அங்கேயே தங்கியிருக்கும்படி வேண்டினான். மேலும் தனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் என்றும் கேட்டான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால், அடுத்த ஒரு வருடத்தில் மன்னனுக்கு விக்கிரம பாண்டியன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோவில்
திருப்பதி பெருமாள் நேரில் வந்து சேவை சாதித்த தலம்
கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில், திருப்பனந்தாள் அருகில், சுமார் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் சேங்கனூர். இத்தலத்தில், சுவாமி பெரியவாச்சான் பிள்ளை வீதியில் அமைந்திருக்கிறது சீனிவாச பெருமாள் கோவில். சேங்கனூர், திருவெள்ளியங்குடி என்னும் திவ்ய தேசத்திற்கு வெகு அருகாமையில் உள்ளது. வைணவ உரைநடை ஆசிரியர்களில் முதன்மையானவரும் , 'வியாக்கியான சக்ரவர்த்தி ' எனப் போற்றப்படுபவருமான ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை, இத்தலத்தில்தான் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார். ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்யபிரபந்தம், ராமாயணம் போன்ற பல நூல்களுக்கு, அவர் எழுதிய விளக்க உரை வைணவ ஆச்சாரியார்களால் பெரிதும் போற்றிக் கூறப்படுகின்றது.
ஒரு சமயம், சேங்கனுரில் வாழ்ந்த ஸ்ரீபெரிய வாச்சான் பிள்ளை தன் மனைவியுடன் திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய சென்றார். பெருமாளின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டு திருப்பதியில் தங்கி விட நினைக்க, எம்பெருமான் திரு உள்ளம் வேறெண்ணியது. தன்னுடைய சாளக்கிராம உருவத்தை அர்ச்சகர் மூலம் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளையிடம் சேர்த்து, அவரால் இன்னும் பல தெய்வீக காரியங்கள் நடக்க வேண்டும் என கூறி செங்கனுர் செல்ல கூறினார். வழியில் சாளக்கிராமத்தை, கொள்ளிடம் நதிக்கரையில் வைத்து விட்டு இருவரும் நீராடி விட்டு திரும்பும்போது அந்த சாளக்கிராமம் காணவில்லை. அதனால், அன்ன ஆகாரமில்லாமல் இருந்து தன் உயிரை விட்டுவிட முடிவு செய்தார். அவர் கனவில் சங்கு சக்ரதாரியாக தோன்றிய ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கூறியபடி, அவர் கிராம மக்களுடன் சாளக்கிராமம்
வைத்த இடத்தில் தேட, ஸ்ரீ வெங்கடேச பெருமாள் முழு உருவத்துடன் கிடைத்தார். அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்தான் சீனிவாச பெருமாள் கோவில். ஸ்ரீ சீனிவாச பெருமாளின் பாதத்தில் ஒரு சாளக்கிராம கல் இருக்கின்றது. பெரியவாச்சான் பிள்ளை தன் வாழ்நாள் முடிந்ததும், அந்த சாளக்கிராம கல்லில் ஐக்கியமாகி, பெருமாள் திருவடியில் சேர்ந்துவிட்டார் என்பது வரலாறு.
பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோவில்
சூலத்தில் காட்சி தரும் அபூர்வ அர்த்தநாரீஸ்வரர்
சேலம் சென்னை நெடுஞ்சாலையில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது பெத்தநாயக்கன்பாளையம் என்னும் ஊர். இத்தலத்து இறைவன் திருநாமம் ஆட்கொண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. கருவறையில் லிங்கத்தின் கீழ் இருக்கும் ஆவுடையார், தாமரை மலர் அமைப்பில் இருக்கிறது. லிங்கத்தின் நடுவில் நெற்றிக்கண் இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். அநியாயம் செய்பவர்கள் பற்றி இவரிடம் முறையிட்டால், அவர்களைத் தண்டிப்பதுடன், தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை ஆட்கொள்வதால் இவரை 'ஆட்கொண்டீஸ்வரர்' என்கின்றனர்.
சூல அர்த்தநாரீஸ்வரர்
சிவபெருமான், சக்தியும் சிவமும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காக, தனது இடப்பாகத்தில் பார்வதிக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். மேலும் பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சக்தியிலிருந்து தோன்றுவதுதான் சிவம் என வலியுறுத்தும் விதமாக சக்தியின் ஆயுதமான சூலத்தின் மத்தியில் இருந்தும் காட்சி தருகிறார். இப்படி சூலத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் விசேஷம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவரும் சக்தி எனும் பெண்ணிலிருந்துதான் தோன்றுகின்றனர் என உணர்த்தும் விதமாக இக்கோலத்தில் இருக்கிறார்.
தாயை விட்டு பிரிந்துள்ள பிள்ளைகளும், பிரிந்த தம்பதிகளும் இவரை வணங்கிட பிரச்னைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.
திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோவில்
சிம்ம குரு தட்சிணாமூர்த்தி
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் திருப்புலிவனம். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அபிதகுசாம்பாள், மூலவர் சுயம்பு மூர்த்தி. ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது காணப்படுகிறது. சிவலிங்கத் திருமேனியில், புலியின் பாதங்கள் காணப்படுகின்றன. லிங்கத்தின் மேல் பாகத்தில் ஜடாமுடி காணப்படுகிறது.இப்படி ஜடாமுடி தரித்த சிவலிங்கத் திருமேனியை நாம் திருவையாறு, சிவசைலம் ஆகிய ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இந்த அம்சம் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத ஓர் அம்சமாகும். அதனால் இத்தல குருவிற்கு 'சிம்ம குரு தட்சிணாமூர்த்தி' என்று பெயர். தட்சிணாமூர்த்தியின் அருகில் சனகாதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது. இவர் ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாக காட்சியளிக்கிறார். அதனால் இவரை அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கின்றனர். இந்தப் பெயருக்கு காரணம், இவருடைய இடது கால் அம்மனின் வாகனமான சிம்மத்தின் மீதும், வலது கால் நடராஜப்பெருமானுக்கு இருப்பதுபோல் முயலகன் மீது உள்ளதாலும், ஆகும்.பெயருக்கு ஏற்றாற்போல், இவருடைய முகத்தில், ஆண்மையின் மிடுக்கையும் பெண்மையின் நளினத்தையும் நாம் காணலாம்.
சிம்ம ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்
இத்தலம் சிம்மராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. மன வேற்றுமை உடைய தம்பதியர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் இடையே ஒற்றுமை மேலோங்கும். இத்தலத்தை வழிபட்டால் திருமண வரம்,குழந்தை பாக்கியம், பதவி உயர்வு முதலிய நற்பலன்கள் கிட்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
கூடாரவல்லித் திருநாள்
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், திருமாலான கண்ணனையே கரம் பிடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் பாவை நோன்பை கடைப்பிடித்தாள். அப்போது ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் கொண்ட தொகுப்பே திருப்பாவை ஆகும். இப்பாசுரங்கள் நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன. இது நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் ஒரு பகுதி. அதில், கண்ணனையும், அழகரையும், அரங்கனையும் போற்றிப் பாடியிருக்கிறார் ஆண்டாள்.
இந்நூல், பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் கூறி, அந்நோன்பு நோற்க்கும் விதத்தை விளக்குகிறது. இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில், இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டலில் திருப்பாவை பாடப்படுகிறது.
கண்ணனையே கணவராக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள், தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள். விரதக் காலங்களில் கடுமையான நியமங்களையும் அனுஷ்டிக்கிறாள் ஆண்டாள். 'நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; கண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்' என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள். பலவாறாக தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான் கோவிந்தன். 26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில்
"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்"
என்று பாடி பரவசம் கொள்கிறாள். கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள். மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அந்த நாளில் தான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள். இந்த பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். ஆண்டாள் விண்ணப்பித்த சிறிது காலத்திலேயே அரங்கனுடன் இரண்டறக் கலந்தாள் கோதை. அதன் பின்னர், கோதையானவள் ஸ்ரீஆண்டாள் என்று அழைக்கப்படலானார் என்கிறது புராணம். எனவே, ஆசைப்படி, வேண்டுதல்படி, தங்கள் குலதெய்வமான கள்ளழகருக்கு, நேர்த்திக்கடனைச் செலுத்தமுடியவில்லை கோதையால்! அதாவது, அக்கார அடிசில் சமர்ப்பிக்கவில்லை.
ஆண்டாள் காலத்துக்குப் பின்னர் சில நூறு வருடங்களுக்குப் பின்னர் பிறந்த, உடையவர் என்று போற்றப்படும் ராமானுஜர், ஆண்டாளின் நேர்த்திக்கடனைத் தெரிந்து கொண்டு, அழகர்கோவிலில், அழகருக்கு முன்பாக வந்து அர்ச்சகரின் அனுமதியைப் பெற்று, 'நூறு தடா அக்கார அடிசில்' நூறு அண்டாக்களில் சமர்ப்பித்தார். பிறகு, அந்தப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். அங்கே ஸ்ரீவில்லிபுத்தூ திருத்தலத்தில், ஆண்டாள் வயது வித்தியாசமெல்லாம் பார்க்காமல், உடையவரை 'அண்ணா...' என்று அழைத்தாராம். "பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே" - ஒரு பாவையாக இருந்தபோது, அவளது மனோபீஷ்டத்தை பூர்த்தி செய்ய வேண்டியவர் தகப்பன். அதையடுத்து தமையன். எனவே ராமானுஜரை அண்ணா என்று அழைத்தாள் ஆண்டாள் என சொல்லி சிலாகிக்கிறது ஆண்டாள் புராணம்.
ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில், மார்கழி மாதம் வரும் கூடாரவல்லித் திருநாள் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் கருவறை மண்டபத்துக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், சிறப்பான அலங்காரங்களுடன் ஆண்டாள் நாச்சியார் திருக்காட்சி அளிப்பார். ஆண்டாளை அன்றைய தினம் சேவிப்பது திருமகளை நேரிலேயே தரிசிப்பதற்கு நிகரானது. இந்த விசேஷ நாளில் ஆண்டாள் பாடியதைப்போலவே மொத்தம் 108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் வைக்கப்பட்டிருக்கும். கூடாரவல்லி திருநாளின் சிறப்பு அம்சமே இந்த அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் நைவேத்தியம்தான்.
திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு முடிந்ததும், ஆண்டாளுக்கு தீபாராதனை நடைபெறும். ஆண்டாளின் உற்சவ சிலை சந்நிதியில் இல்லாமல், சந்நிதிக்கு முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி இருப்பது அவர் அன்றைய நாளில் ஸ்ரீராமாநுஜரை வரவேற்பதற்காகத்தான் என்கிறார்கள். கூடாரவல்லி நாளின்போது, 250 கிலோ அரிசி, 120 லிட்டர் பால், 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் வடபத்ரசாயி பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
கூடாரை கூட வைக்கும் இந்த திருநாளில் இந்த பாடலைப்பாடி, ஆண்டாளையும் அரங்கனையும் துதித்தால் வரன் கூடாத மகளிருக்கு நல்ல இடம் அமையும். நாம் விரும்பியவர்கள் மட்டுமில்லாமல் நம்மை விட்டு விலகிய உறவுகளையும் கூடச் செய்யும் அற்புதமான பாசுரம் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" பாடல்.
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்
கபால மாலையும், ஒட்டியாணமும் அணிந்த கபால கணபதி
கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், திருவிடைமருதூர் அருகே உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. இக்கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகும்.
இக்கோவிலின் கன்னி மூலையில், தனி சன்னிதியில் கபால கணபதி எழுந்தருளியுள்ளார் . இவர் கழுத்தில் மண்டையோடுகள் மாலையாக அணி செய்கின்றன. இந்த கபால கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல் நீண்டுள்ளது. மனிதனுக்குத் தெரிவது போல், இவர் உடலில் நரம்புகள் தெரிகின்றன. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார்.
ஒரு மகா பிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில் அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே தெரிந்தது. இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விநாயகரை தியானித்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், இத்தலம் புனிதமானது. இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி இல்லாத புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும் பாக்கியம் கிட்டும். ஈசனுடன், அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம். அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள், நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும். அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி, என் இடுப்பில் ஒட்டியாணமாக அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும் போது, அவரது இடுப்பில் உள்ள கபால ஒட்டியாணத்தை தரிசிக்கலாம்.
இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி
https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2-gcz2h
2. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்
https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2
3. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்
https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85
கூனஞ்சேரி கயிலாசநாதர் கோவில்
அங்க குறைபாடுகளை நீக்கும் தலம்
'மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், செவிடு, குருடு இன்றிப் பிறத்தல்' என்று தமிழ் மூதாட்டி அவ்வையார் பாடியிருக்கிறார். அதாவது மனிதன் உடலில் ஏதாவது ஒரு குறை என்று இருப்பது தவிர்க்க முடியாதது என்று கூறியிருக்கிறார். உடலில் குறையோடு பிறந்தவர்களுக்கு அருளும் தலம் தான் கூனஞ்சேரி கயிலாசநாதர் கோவில்.கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்றால், அங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது கூனஞ்சேரி.
அஷ்டவக்ர கீதை
அஷ்டவக்ர கீதை, பகவத் கீதையைப் போல மகாபாரதத்தில் அமைந்திருக்கிறது.சுமார் முன்னூறு சுலோகங்கள் கொண்ட இந்த நூலை இயற்றியவர் அஷ்டவக்ர மகரிஷி. ரமண மகரிஷி, விவேகானந்தர் உட்பட பல மகான்கள், இந்நூலில் பொதிந்துள்ள நற் கருத்துக்களினால், இந்த நூலை ஞான பொக்கிஷமாக கருதுகிறார்கள்.
அஷ்டவக்ர மகரிஷியின் உடல் குறைபாட்டை நீக்கிய தலம்
முற்காலத்தில் தானவ மகரிஷி என்கிற முனிவர் இருந்தார். அவர் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். சிவபெருமான் தானவ முனிவர்,தான் அறிந்த வேத மந்திரங்களைக் குழந்தைகளுக்குக் கற்பித்தால் மகப்பேறு வாய்க்கும் என்று அருளினார்.
அதன்படியே அவர், தன் வீட்டுத் திண்ணையில் குழந்தைகளுக்கு வேத மந்திரங்களைக் கற்பிக்கத் தொடங்கினார். அவருடைய மனைவியும் கருவுற்றார். தாயின் கருவில் இருந்தபடியே வேதங்களைக்கேட்டு, வேத ஞானத்தை அறிந்து கொண்டது குழந்தை. அதுதான் பின்னாளில் அஷ்டவக்ர மகரிஷியாக அவதரித்த திருக்குழந்தை. ஒருநாள், தானவ முனி வேதபாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பில் ஒரு மாணவன் தூங்குவதைக் கண்டு அவனை எழுப்பி, கடுஞ்சொற்களால் திட்டினார். அப்போது, அவருடைய மனைவியின் வயிற்றில் கருவிலிருந்த குழந்தை, 'இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து இப்படி பாடம் நடத்திக்கொண்டிருந்தால், சிறு பாலகன் தூங்காமல் என்ன செய்வான்?' என்று கேள்வி கேட்டது. இதைக் கேட்ட முனிவர், அது தன் குழந்தை என்பதையும் மறந்து, 'பிறக்கும் முன்னரே, அதிகப் பிரசங்கித் தனமாக என்னைக் கேள்விகேட்ட நீ, கேள்விக்குறி போல வளைந்து அஷ்ட கோணல்களுடன் பிறக்கக் கடவது!' என்று சாபமிட்டார். பின்னர் , தானவ முனிவரின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை, பன்னிரெண்டு வகை ஞானங்களையும் பெற்று, பிறவியிலேயே ஞானயோகியாகப் பிறந்தது. ஆனால், தந்தையின் சாபத்தால் உடலில் எட்டுவித கோணல்களுடன், முதுகில் கூன், கை கால்கள் வளைந்து நெளிந்து திகழப் பிறந்தது. எட்டு வளைவுகளுடன் அக்குழந்தையின் உடல் இருந்ததால், அக்குழந்தைக்கு அஷ்டவக்கிரன் என்ற பெயர் சூட்டினார்கள் அந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் அஷ்டவக்ர மகரிஷி என்ற பெயர் பெற்றது.
தான் கொடுத்த சாபத்தால் பாதிக்கப்பட்டு, தன் குழந்தை ஊனமாகப் பிறந்ததால் உண்டான வருத்தத்துடன் அரசவைக்குச் சென்ற தானவ மகரிஷி, அங்கே அரசவைப் புலவருடன் ஒரு வாதத்தில் தோற்க நேரிட்டது. இதனால் அவர் வீட்டுக்குத் திரும்ப முடியாமல் போனது.
சில வருடங்களில் நன்கு வளர்ந்த குழந்தை அஷ்டவக்ரன், தன் தந்தையைப் பற்றி தாயிடம் வினவினான். அவர், அரசவைப் புலவருடன் தன் கணவர் போட்டியிட்டுத் தோற்றுப் போன சம்பவத்தை மகனிடம் விவரித்தார். உடனே அரசவைக்குக் கிளம்பிப் போனான் அஷ்டவக்ரன். அங்குசென்று 'என் தந்தையுடன் யார் போட்டி போட்டது? அவரை என்னுடன் விவாதத்தில் பங்கேற்கச் சொல்லுங்கள்' என்று அந்த பாலகன் கூற, வியப்பின் உச்சிக்குப்போன அரசர், சிறுவனின் உறுதி கண்டு, விவாதப் போட்டி நடத்த சம்மதித்தார். பின்னர், ஆஸ்தான புலவருடன் போட்டி தொடங்கியது. அனைத்து விவாதங்களிலும்,அஷ்டவக்ரன் ஆஸ்தான புலவரை தோற்கடித்தான். அதிசயித்துப் போன மன்னர், பல பரிசுகள் வழங்கினார். பிறகு அஷ்டவக்ரன், தன் தந்தையை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான். அவனின் கோணலான உடலமைப்பைக் கண்டு கண்ணீர் வடித்த தானவ மகரிஷி, 'தான் கொடுத்த சாபத்துக்கு விமோசனம் கிடையாதா?' என்று இறைவனிடம் முறையிட்டுப் பிரார்த்தனை செய்தார். சிவபெருமான், அவருக்கு 'கூனஞ்சேரி என்ற தலத்தில் இருக்கும் அஷ்ட பைரவ லிங்கங்களை பூஜை செய்து வந்தால், உன் மகனுடைய குறைகள் நீங்கும்' என்று அருள் வழங்கினார். இறைவன் அருளியபடி தந்தையும் மகனும் கூனஞ்சேரி வந்து, அஷ்ட லிங்கங்களைப் பூஜிக்க, அஷ்டவக்ரனின் கூனல் நிமிர்ந்தது; குறைபாடுகள் நீங்கியது. இதனால் இவ்வூருக்கு 'கூனல் நிமிர்ந்த புரம்' என்றும் பெயர் உண்டு'
அஷ்ட பைரவ லிங்க வழிபாடு
இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அஷ்டாவக்கிரன் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. அவை பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகியவை ஆகும். உடல் ஊனம், முதுகில் கூன் போன்ற குறைபாடுகளை உடையவர்கள், தேய்பிறை அஷ்டமி தினத்தில் இங்கே வந்து நல்லெண்ணெயால் அஷ்ட பைரவ லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து, பின்பு விபூதியால் அபிஷேகம் செய்து எட்டு வகை மலர்களால் (மல்லி, முல்லை, வெள்ளை அரளி, சிகப்பு அரளி, பச்சை, மரிக்கொழுந்து, தாமரை, செவ்வந்தி) அர்ச்சனை செய்ய வேண்டும். இங்கே அபிஷேகம் செய்யப்படும் நல்லெண்ணெய் மற்றும் விபூதியை பக்தர்கள் வாங்கிச் சென்று, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊறவைத்துக் குளிக்க வேண்டும். பின்பு அபிஷேக விபூதியைப் பூசிக்கொள்ள வேண்டும்.. இதுபோல செய்துவந்தால், அவர்களின் உடல் குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் என்பது ஆதிகாலம் தொட்டுவரும் நம்பிக்கை. திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து, அங்கே இருக்கும் அஷ்ட திக்கு லிங்கங்களைத் தரிசிக்க முடியாதவர்கள், கூனஞ்சேரி வந்து இந்த அஷ்ட பைரவ லிங்கங்களை வழிபாடு செய்தால், அதே பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல் குறைபாடு மட்டும் அல்லாது எந்தவித நோய்ப்பிணியும் இந்தக் கயிலாசநாதர் கோயிலுக்கு வந்தால் தீரும் என்பது நம்பிக்கை.
உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது இத்தலத்தின் சிறப்பு.
வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்
சனி பகவான் கையில் வில்லுடன் இருக்கும் அபூர்வத் தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில். இறைவன் திருநாமம் கஜசம்ஹார மூர்த்தி. இறைவியின் திருநாமம் பாலாங்குராம்பிகை, அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.
சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார். அதனால் இவரை வழிபட்டால் நம்முடைய துன்பத்தை, பஞ்சத்தை போக்கி செழிப்புடன் நம்மை வாழ வைப்பார் என்பது ஐதீகம். சனீஸ்வரனின் ஏழரைச்சனி காலத்தில் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தோர், வில்லேந்திய வடிவில் உள்ள சனீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் நன்மை பெறலாம்.
காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்
ஆருத்ரா தரிசனத்திற்கு, காவிரியாற்றில் பரிசலில் பவனி வரும் நடராஜப்பெருமான்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள்.
ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், நடராஜப் பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்கு வீதியுலா வருவது வழக்கம். ஆனால்,ஈரோடு மாவட்டம், காங்கயம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜப்பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்காக, ஒரு பரிசலில் எழுந்தருளியும், அவருக்கு முன்னால் மற்றொரு பரிசலில் மேள வாத்தியங்கள் இசை முழங்கிக் கொண்டு செல்ல, காவிரி நதியில் கோவிலைச் சுற்றி வருவார்.
இரண்டு நிலைகளாக அமைந்திருக்கும் கோவில்
ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக கரூர் செல்லும் வழியில் காங்கயம்பாளையம் அமைந்துள்ளது. இங்குதான் காவிரியின் நடுவில் நட்டாற்றீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். கோவிலின் இருபுறமும் காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் ஆற்றை பரிசலில் கடந்து சென்றுதான் தரிசனம் செய்து வர வேண்டும். இக்கோவில் இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது. மேல் தளத்தில் நட்டாற்றீஸ்வரரும், கீழ் தளத்தில் நல்லநாயகி அம்பாளும் அருள்கிறார்கள். இருவரும் விவாக கோலத்தில் அருள்வது விசேஷ அம்சம்.
கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன்செய்ய அகத்தியரை, சிவபெருமான்தென்புலம் அனுப்பினார். அந்தத் திருமணத்தைப் பார்க்க முடியாத அகத்தியருக்கு, சிவபெருமான் அவர் வேண்டிய தலங்கள்தோறும் திருமணக் காட்சி தந்து அருளினார். ஒரு சமயம், அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள காவிரி ஆற்றின் மையப்புள்ளியாக உள்ள இடத்தில் மணலில் லிங்கம் செய்து சிவ பூஜை செய்ய, பாவம் போகும் என அகத்தியர் உணர்ந்தார். காவிரி ஆற்றின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகன் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து காவிரியில் நடு இடத்தைத் தேர்ந்தெடுத்து காட்டினார். காவிரி ஆற்றின் நடுவில் இருந்த அந்தக் குன்றில் மணலில் லிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து அகத்தியர் பூஜை செய்தார். காட்டில் விளைந்திருந்த கம்பை எடுத்து கையால் திரித்து மாவாக்கி, நீர் விட்டுக் காய்ச்சி இறைவனுக்குப் படைத்தார். அகத்தியரால் வணங்கப்பட்ட அந்த சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், 'நட்டாற்றீஸ்வரர்' எனவும் அகத்தியரால் மண்ணால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால், அகத்தீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.
பிராத்தனை
நட்டாற்றீஸ்வரரின் நல்லருளால், தம்பதிகளின் வாழ்வில் பிணக்குகள், பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடல், வயிறு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாக இது உள்ளது.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்
நடராஜர் சன்னதியில் தீர்த்தம் பிரசாதமாக தரப்படும் தேவாரத்தலம்
திருவள்ளூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாலங்காடு. இறைவன் திருநாமம் வடாரண்யேஸ்வரர். இறைவியின் திருநாமம் வண்டார்குழலி. மார்கழி திருவாதிரை தரிசனம் சிறப்பாக நடைபெறும் தலங்களில் திருவாலங்காடும் ஒன்றாகும்.
வடாரண்யேஸ்வரர் கோவில், நித்தமும் நடமாடும் நடராஜ பெருமானுக்கு உரிய ஐம்பெரும் அம்பலங்களில் முதல் தலமாக, இரத்தின சபையாகத் திகழ்கிறது. அதனால் இத்தலத்தில், நடராஜப்பெருமானுக்கு ரத்ன சபாபதி எனும் திருநாமம். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள நடராஜப் பெருமானின் திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் நடராஜப்பெருமானுக்கு அருகிலுள்ளன. ரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன.
பொதுவாக பெருமாள் கோயில்களில் தீர்த்தம் பிரசாதமாக தருவார்கள். ஆனால் இத்தலத்து நடராஜப் பெருமானின் சன்னதியில் தீர்த்தப் பிரசாதம் தருவது, இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாகும். இத்தலத்தில் நடராஜப் பெருமான் தாண்டவம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்க முடியாமல் தேவர்கள் மயக்கம் அடைந்தனர்.அவர்களது மயக்கத்தை தெளிவிக்க நடராஜப்பெருமான் கங்கை நீரை அவர்கள் மீது தெளித்தார். அதன் அடிப்படையில், இங்கு தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது. மேலும், இந்திய தேசத்தின் வரைபடம் போல் நடராஜப் பெருமானின் திருவுருவம் அமைந்திருப்பதும் ஒரு சிறப்பு என்கின்றனர்.
காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார்.
ஒருமுறை காளிக்கும், சிவபெருமானுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி, கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நதி இருக்கிறது.
நடனக் கலைகளில் தேர்ச்சி பெற விரும்பும் அன்பர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் இத்திருத்தலமாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையைப் பலப்படுத்தும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. காளியை வழிபாடு செய்த பின்னர் மூலவரை வழிபட்டால் முழுப்பயணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்
பாம்பின் மேல் தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் அபூர்வக் கோலம்
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. இந்தக் கோவிலில் சிவன் சன்னிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் நர்த்தனமாடும் நடராஜ பெருமான் வீற்றிருக்கிறார். எல்லா சிவாலயங்களிலும் முயலகன் மேல் காலை ஊன்றி தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் கோலத்தைத்தான் நாம் தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில், சர்ப்பத்தைக் காலடியில் போட்டு அதன்மேல் நின்று நடராஜப் பெருமான் ஆனந்தக் கூத்தாடும் கோலம், இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
முன்னொரு காலத்தில், மழவ நாட்டைச் சார்ந்த இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளுக்கு வலிப்பு நோய் எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்துபார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, சிவபெருமான் அருள்புரியும் கோவிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சிவபெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்துகொண்டு, இத்தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். திருஞான சம்பந்தர், 'மங்கையை வாடவிடாதே, தையலை வாடவிடாதே, பைந்தொடியை வாடவிடாதே' என்ற ரீதியில் உள்ளத்தை உருக்கும் விதமாக பதிகங்களைப் பாடினார். அவர் சிவபெருமானை வேண்டி, 'துணிவளர் திங்கள் துலங்கி விளங்க...' எனும் பதிகம் பாடி, இத்தல இறைவனை வணங்க, வலிப்பு நோய் நீங்கி மன்னனின் மகள் குணமடைந்தாள்.
சிவபெருமான், மன்னன் மகளின் வலிப்பு நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில், இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நடராஜப் பெருமான் தனது திருவடியின் கீழ்
முயலகனுக்கு ப் பதிலாக, சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார். நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும். தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள சர்ப்பத்தின்மீது ஆடும் நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை பூசி வந்தால் நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்கப் பெறலாம்.
தேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்
பெருமாளின் அருகில் இருந்து பிரகலாதனும் கருடாழ்வாரும் காட்சி தரும் திவ்ய தேசம்
மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம், தேரழுந்தூர். இத்தலத்து மூலவர் தேவாதி ராஜப் பெருமாள், சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர திருமேனியுடன் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். உக்கிரமாகக் காட்சியளித்த பெருமாளிடம் பிரகலாதன், சாந்த சொரூபியாக, கண்ணன் உருவில் காட்சி தர வேண்டுகோள் வைத்ததைத் தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக் கொண்டு பெருமாள், கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் மட்டும்தான் பிரகலாதன் கருவறையில் பெருமாள் அருகில் இருந்து காட்சி தருகிறார்.
இந்தக் கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும், சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார். இப்படி பிரகலாதனும் கருடாழ்வாரும் பெருமாளின் அருகில் இருந்து காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஆமருவியப்பன் என்னும் திருநாமம் அமைந்த புராணம்
இத்தலத்து உற்சவ பெருமாளின் திருநாமம் ஆமருவியப்பன். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். ஒருமுறை, மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடினார்கள். இந்த ஆட்டத்துக்கு நடுவராக பார்வதிதேவியை நியமித்தார்கள். காய் உருட்டும் போது, சகோதரனான பெருமாளுக்கு சாதகமாக பார்வதிதேவி தீர்ப்பு கூற, அதனால் கோபமுற்ற சிவபெருமான், பார்வதிதேவியை பூவுலகில் பசுவாக அவதாரம் எடுக்க சாபமிட்டார். அதன்படி உமையவள் பசுவானாள். இதைக் கண்டு கலங்கிய சரஸ்வதிதேவியும் லக்ஷ்மிதேவியும் உமையவளுக்குத் துணையாக இருக்க முடிவு செய்து, பசுவாக மாறினார்கள். மூவரும் பசுவாக, பூலோகத்தில் இருந்தபடி, சிவனாரையே நினைத்து வேண்டினார்கள். அவர்களுக்கு மேய்ப்பராக பெருமாள் உடனிருந்து காத்தார். அதனால் இந்தத் தலத்துப் பெருமாளுக்கு 'ஆமருவியப்பன்' என்னும் திருநாமம் அமைந்தது என்கிறது தல புராணம்.
தேரழுந்தூர் என்று ஊர் பெயர் வந்ததன் பின்னணி
இத்தலத்தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். தன் தேரின் நிழல் , எதன் மீது விழுந்தாலும் அவை கருகிவிடும் வரம் பெற்றவன் அவன். இத்தலத்தில் பெருமாள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்த போது, அந்தத் தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களைக் காப்பாற்ற அந்தத் தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.
கவிச் சக்கரவர்த்தி கம்பர் இத்தலத்தில் பிறந்தவர்.
பிரார்த்தனை
இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால், காணாமல் போனவர்கள் வீடு திரும்பவும், தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும், மேல் அதிகாரிகளின் அராஜகத்தில் இருந்து விடுபடவும், திருமணத்தடை நீங்கவும் வழி பிறக்கின்றது.
அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமானின் அபூர்வத் தோற்றம்
கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். இத்தலத்து இறைவன் திருநாமம் படிக்காசுநாதர். இறைவியின் திருநாமம் அழகம்மை. முருகப்பெருமான் இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். திருமால் முருகனுக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி தெய்வானை உடனிருக்கின்றனர். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம்.
திருமண, புத்திர தோஷம் உடையவர்கள் இத்தல முருகனுக்கு பால் பாயாசம் நைவேத்யம் படைத்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இந்த தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.
தேவதானம் ரங்கநாதர் கோவில்
வட ஸ்ரீரங்கம் என்று போற்றப்படும் தேவதானம் ரங்கநாதர் கோவில்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தேவதானம் கிராமம். பெருமாள் செய்த சேவைக்கு நன்றி செய்யும் விதமாக தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அளித்த தானம் ஆகையால் இவ்விடம் , தேவதானம் என்று பெயர் பெற்றது.
இக்கோவில் வட ஸ்ரீரங்கம் என்று போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரை விட தேவதானம் பெருமாள் அரை அடி நீளம் அதிகமானவர். இங்குள்ள பெருமாள் சாளக்கிராம கல்லால் ஆனவர். பெருமாள் ,பதினெட்டரை அடி நீளத்தில் 5 அடி உயரத்தில், ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் மீது, மரக்காலைத் தலைக்கு வைத்து வடக்கே திருமுகமும், , தெற்கே திருவடியும் வைத்த சயன கோலத்தில் காட்சி தருகிறார் . இவரின் நாபியின் மீது பிரம்மா உள்ளார் . பெருமாளின் பாதத்தின் அருகில் ஸ்ரீதேவி ,பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்கிறார்கள் . அவரின் திருவடியை சேவித்தவாறு தும்புரு மகரிஷியும் ,பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர் . இந்த ரங்கநாதர் திருமேனி முழுதும் சாளக்ராம கற்களால் வடித்த சுதை விக்ரகம் என்பதால் அபிஷேகம் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை தைலக் காப்பு மட்டும் சாத்தப்படும்.
சாளுக்கிய மன்னனுக்கு விவசாயியாக காட்சியளித்த பெருமாள்
ஆயிரம் வருடம் பழமையான இக்கோவில் சாளுக்கிய மன்னரால் கட்டப்பட்டது. சாளுக்கிய மன்னன் ஒருவன் தென் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தான். ஸ்ரீரங்கத்தை அடைந்த மன்னன், அங்கிருந்த ரங்கநாதர் ஆலயத்திற்கு சென்று பெருமாளைத் தரிசித்தான். பெருமாளின் பேரழகில் அப்படியே சொக்கிப் போய் விட்டான். அப்போது தன் நாட்டிலும் இதே போன்ற பேரழகுடன் பெருமாளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.
சாளுக்கிய மன்னன் தேவதானம் கிராமத்திற்கு வந்தபோது, அந்த பகுதி முழுவதும் ஸ்ரீரங்கத்தைப் போன்றே நெல் வயல்கள் நிரம்பி பசுமை போர்த்தி காட்சி அளித்ததைக் கண்டான். அப்போது ஓரிடத்தில் விவசாயி ஒருவர் வயல் களத்தில் குவிக்கப்பட்டிருந்த நெல்மணிகளை ஒரு மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். மன்னர் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த விவசாயி மறைத்துவிட்டார். சுற்றும் முற்றும் பார்த்த மன்னன் கண்களில் ஓர் இடத்தில் அந்த விவசாயி மரக்காலை தன் தலைக்கு வைத்தபடி படுத்திருந்தார். அருகில் சென்ற மன்னனுக்கு அந்த விவசாயி பெருமாளாகக் காட்சி கொடுத்ததுடன், அந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வேண்டும் என்றும், அந்த ஆலயம் ஸ்ரீரங்கம் போன்று பிரசித்தி பெற்று விளங்கும் என்றும் கூறினார்.
சாளுக்கிய மன்னன், பெருமாளின் திருவுருவம் வடிக்கப் பொருத்தமான கல்லைத் தேடிக்கொண்டே தன் படையினருடன் வட இந்தியாவுக்குச் சென்றான். இமயமலையின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான ஒரு கல்லைப் பார்த்தான். அந்தக் கல்லில் பெருமாளின் திரு உருவத்தை வடிக்க நினைத்து, அந்தக் கல்லை வீரர்களைத் தூக்கச் செய்து தென்னிந்தியாவுக்குப் புறப்பட்டான். வரும் வழியில் வீரர்கள் எடுத்து வந்த கல் தவறி கங்கையில் விழுந்து விட்டது. ஆனால் கல் மூழ்காமல் மிதந்தது. ஆற்றில் விழுந்த கல்லை வீரர்கள் திரும்ப எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். ஆற்றில் விழுந்து முழுகாத அந்த கல் பற்றி ஆன்மீகப் பெரியோர்களிடம் கேட்டான் மன்னன். அது சாளக்கிராமக் கல் என்றும், அந்தக் கல்லில் இறைவனின் திரு உருவத்தை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டால் அந்த பகுதி முழுவதும் செழிப்பாக இருக்கும் என்றும் கூறினர். பின்னர் தேவதானம் திரும்பிய மன்னன், இறைவன் தனக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆலயத்தை நிர்மாணித்தான். ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் பெருமாள் பெரியதாக உள்ளதால், இத்தலம் வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது .
பலன்கள்
இந்த ஆலயத்தை சுக்ர ஓரையில் வழிபடுவது மிகவும் விசேஷம். ரங்கநாத பெருமாளை அமாவாசை மற்றும் ஏழு அல்லது பதினோரு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பணக்கஷ்டம், திருமணத்தடை போன்றவை தீர்ந்து செல்வச் செழிப்பு, மகிழ்ச்சியான இல்லறம், குழந்தை பாக்கியம் போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோலாப்பூர் மகாலக்ஷ்மி கோவில்
சகல செல்வங்களையும் தந்தருளும் மகாலட்சுமி
கோலாப்பூர் மகாலட்சுமி கோவில், மகாராட்டிர மாநிலத்தில் கோலாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. கரவீரபுரம் என்பது இந்த தலத்தின் முந்தைய பெயர். இந்த இடத்தில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கோலாசுரனை, தேவி மகாலட்சுமியாக வந்து அழித்தாள். அவன் இறக்கும் தருவாயில், இந்த இடம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க அதன்படி கோலாப்பூர் ஆயிற்றாம். லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் ‘நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி..’ என்று குறிப்பிடப்படுவது, இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கது. பாரதத்தில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சக்தி பீடம் இந்துக்களுக்கு மிகவும் சிறப்பு பெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இந்த இடத்தின் சிறப்பு, இங்கே ஒருவன் வந்து மகாலட்சுமியை வழிபடுவதால் அவன், அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து, இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை மகாலட்சுமி நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதே ஆகும்.
இக்கோவில் கன்னடத்து சாளுக்கிய மன்னர்களால் சுமார் 1300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.
கருவறையில் மகாலட்சுமி, நான்கு கரங்களுடன், மகுடம் தரித்து, மூன்று அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.மகாலட்சுமியின் பின்புறம்,அவள் வாகனமான சிங்கத்தின் உருவச்சிலை இருக்கிறது. மகாலட்சுமியின் மகுடத்தில் சேஷ நாகத்தின்(இறைவன் விஷ்ணுவின் நாகப் பாம்பு) உருவமும் செதுக்கப் பெற்றுள்ளது. மகாலட்சுமியின் நான்கு கரங்களில், கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும், இடது மேல் கரத்தில் கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடதுகரத்தில் பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள்.
மகாலட்சுமியை சூரிய பகவான் வழிபடும் கிரண் உற்சவம்
பொதுவாக கோவில்களில் மூலவர் வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமைந்திருக்கும். இந்தக் கோவிலில், தேவியின் உருவச்சிலை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு சுவர்ப்பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது, அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும். சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் இந்த ஜன்னல் வழியாக தேவியின் பாதங்களை தொட்டு வணங்கி, பின்னர் மறைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். அம்பாளின், பாதம், மார்பு, திருமுகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் விழுவது, இங்கு கிரனோத்ஸவ்('கிரண் உற்சவம்') என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 31 ஜனவரி, 1 பிப்ரவரி, 2 பிப்ரவரி, 9 நவம்பர், 10 நவம்பர், 11 நவம்பர் ஆகிய நாட்களில், இந்த விழா கொண்டாடுகிறார்கள். ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி, மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் படுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமி தாயாரின் மார்பின் மீது படுகின்றன. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் தாயாரின் முழு உருவத்தின் மீதும் சூரியனின் ஒளி கதிர்கள் விழுகின்றன. மகாலட்சுமி விக்ரகத்தின் மீது சூரியனின் ஒளி படும் போது அவரை வணங்குவது மிகுந்த நன்மை தரும்.
சகல செல்வங்களையும் தரும் இக்கோவிலுக்கு சென்று வந்தால், வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்
செவ்வாய், சனி தோஷங்களை நீக்கும் பரிகார தலம்
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன் பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெருங்குடி கிராமம். அகத்திய முனிவர் வழிபட்டதால் 'அகத்தீஸ்வரர்' எனும் திருப் பெயர் ஏற்று சிவபெருமான் அருள்பாலிக்கும் எண்ணற்ற சிவத்தலங்கள் தென்னகத்தில் உண்டு. அவற்றில் ஒன்று பெருங்குடி. இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி.
இத்தலத்தில், அகத்தீஸ்வரர் சன்னதியின் வலது பக்கத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் அருள்புரிகிறார். வள்ளி இங்கு அரூபமாக காட்சி தருகிறார். வள்ளியை மணம் புரிவதற்கு முன், முருகப்பெருமான் தெய்வானையுடன் காட்சியளித்தது இக்கோவிலில்தான். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தனது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு நேர் எதிரே ஈசானிய மூலையில், சனீஸ்வர பகவான் தனியே எழுந்தருளியிருக்கிறார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வதால், செவ்வாய் தோஷம், சனி தோஷம் இருப்பவர்களுக்கு இந்தக் கோயில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. அதனால் செவ்வாய், சனிக்கிழமைகளில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து அருளும் சனீஸ்வர பகவான்
இத்தலத்து சனீஸ்வர பகவான், திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு நிகரான வல்லமை உடையவர் என்று அகத்திய முனிவர் குறிப்பிட்டிருக்கிறார். சனீஸ்வர பகவான் தனது காக வாகனத்தை இழந்தபோது இத்தலத்து அம்மனை வழிபட்டு தங்க காக வாகனத்தைப் பெற்றார் என்று தல புராணம் கூறுகிறது. அதனால் புதிய வாகனம் வாங்குவோர், வாகனப் பிரச்சனை உள்ளவர்கள், வாகனத்தை இழந்தவர்கள் போன்ற பலரும் இங்கு வந்து சனீஸ்வர பகவானையும், சிவகாமசுந்தரி அம்மனையும் வழிபடுகிறார்கள்.
அரியமங்கலம் வைத்தியநாத சுவாமி கோவில்
சிறுமி ரூபத்தில் வந்து ரயில் விபத்தை தடுத்த தையல்நாயகி
திருச்சி - தஞ்சாவூர் சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அரியமங்கலம். இத்தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாத சுவாமி. இறைவியின் திருநாமம் தையல்நாயகி. கருவறையில் நின்ற கோலத்தில் தையல்நாயகி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அம்பிகை மேல் இரு கரங்களில் தாமரை மலரைத்தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்கிறாள்.
பக்தனுக்காக வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து அரியமங்கலம் வந்து எழுந்தருளிய தையல்நாயகி
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர், அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருச்சி ரயில்வேயில் இஞ்சின் டிரைவராக பணி புரிந்து வந்தார். அவர் மயிலாடுதுறையின் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் தையல்நாயகி மேல் தீராத பக்தி கொண்டவர். வாரம் தவறாமல் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று தையல் நாயகி அம்மனை வழிபட்டு வருவார்.
அவர் ஒரு நாள், என்ஜின் ஓரம் அமர்ந்து, எதிரே உள்ள ரயில் பாதையைப் பார்த்துக் கொண்டே ரயிலை ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே சற்று தொலையில் தண்டவாளத்தின் அருகே, யாரோ நிற்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ரயிலின் வேகத்தைக் குறைத்தார். தண்டவாளத்தின் அருகே ஒரு சிறுமி, சிவப்பு துணி ஒன்றை கையில் வைத்து அசைத்தப்படி நின்று கொண்டிருந்தாள். அவர் அவசரம் அவசரமாக ரயிலை நிறுத்தினார். அந்தச் சிறுமியின் அருகே வந்ததும் ரயில் நின்றது. உடன் கீழே இறங்கினார் அவர். அந்தச் சிறுமி நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே, தண்டவாளம் உடைந்து வளைந்து அலங்கோலமாகக் கிடந்தது.ரயில் நின்றதும் பயணிகள் பலரும் இறங்கி ஓடி வந்தனர். நடக்க இருந்த விபரீதம் அனைவருக்கும் புரிந்தது. ரயில் அந்த இடத்தை கடந்திருந்தால் பல பெட்டிகள் கவிழ்ந்திருக்கும். பல உயிர்கள் பலியாகியிருக்கும். கூட்டத்தினர் டிரைவரின் சாமர்த்தியத்தைப் பாராட்டினர். மனதாரப் புகழ்ந்தனர். சிறிது நேரத்தில் டிரைவர், பயணிகள் உள்பட பலரும் விபத்து தவிர்க்கப்பட காரணமான அந்தச் சிறுமியை கூட்டத்தில் தேடினர். சிறுமி காணவில்லை. அன்று இரவு அவர் கனவில் வந்தாள் அந்தச் சிறுமி. 'நான் வேறு யாருமில்லை. நீ வணங்கும் தையல் நாயகிதான்' என்றாள் அந்தச் சிறுமி.
மனம் சிலிர்த்த அந்த டிரைவர் கண்ணீர் வடித்தார். கரங்கூப்பி வணங்கினார். 'தாயே நான் என்ன செய்ய வேண்டும் சொல்' என்றார். 'எனக்கு இங்கே ஓர் ஆலயம் கட்டு' என்றாள் அந்த சிறுமி. 'அப்படியே செய்கிறேன் தாயே. ஒரு சிலை செய்து உன்னை இங்கே பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டுகிறேன்.'
'வேண்டாம். நீ எனக்காக சிலை செய்ய வேண்டாம். நீ நேராக மாட்டு வண்டியில் கொல்லிமலை செல். போகும்போது உன்னுடன் நெல் மூட்டையை கொண்டு செல். அங்குள்ள சித்தரிடம், பணத்திற்கு பதில் நெல் மூட்டையைக் கொடு. அவர் தரும் சிலையை உன்னுடன் வண்டியில் கொண்டு வா. வரும் வழியில் உன் மாட்டு வண்டியின் அச்சு முறியும். எந்த இடத்தில் அச்சு முறிகிறதோ அதே இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்' என்று கூறியவாறு சிறுமி மறைந்தாள். அவர் கனவு கலைந்து விழித்தார்.
மறுநாளே தான் கண்ட கனவின்படி அவர் கொல்லிமலைக்குப்புறப்பட்டார். அந்தச் சிறுமி சொன்னபடியே எல்லாம் நடந்தது. வனப்பகுதியாக இருந்த ஒரு இடத்தில் அச்சு முறிந்தது. அந்த இடத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்து, தகரக் கொட்டகையில் ஆலயம் அமைத்தார். அந்த ஆலயமே தற்போது அரியமங்கலத்தில் உள்ள அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம் ஆகும்.
பிரார்த்தனை
மாத பௌர்ணமி நாட்களில் மாலையில் தையல்நாயகியின் சன்னதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய் வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முகப்பரு நீங்க அன்னைக்கு முன் மகாமண்டபத்தில் உள்ள தனியிடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு 5 செவ்வாய்க் கிழமைகள் பிரார்த்தனை செய்தால் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்
கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, 7 கி.மீ. தொலைவில் உள்ள பட்டமங்கலம் ஒரு குருஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராக தட்சிணாமூர்த்தி உள்ளார். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.
கருவறையில் தட்சிணாமூர்த்தி, புன்னகை தவழும் முகத்துடன் பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞான முத்திரையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்தபடி காட்சியளிக்கிறார். தென்முகக்கடவுள் என்னும் தட்சிணாமூர்த்தி எல்லா கோவில்களிலும் தெற்கு நோக்கியே காட்சியளிப்பார். ஆனால், இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டும்தான்.
பொதுவாக எல்லாத் தலங்களிலும், கல்லால் ஆன ஆலமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார். இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். பக்தர்கள் இந்த ஆலமரத்தில் பிரார்த்தனையை கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும், மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன.
பிரார்த்தனை பலன்கள்
தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை. விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம். ஆலயத்தை 3 முறை பிரதட்சணம் செய்தால் விரும்பிய காரியம் நடக்கும். 5 முறை செய்தால் காரிய வெற்றி கிடைக்கும். 7 முறை செய்தால் நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி ஏற்படும். 9 முறை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். 11 முறை செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். 15 முறை செய்தால் செல்வம் பெருகும்.
கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில்
இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார்
தென்காசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது நீலமணிநாத சுவாமி கோவில். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, 'அர்ஜுனபுரி க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு.
கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி, நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு, திருவோண நட்சத்திர தினத்தில் கறிவேப்பிலை சாதம், பாயாசம் நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.
இக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் தனி சன்ன தியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சக்கரத்தாழ்வாரையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் ஒன்று இருக்கின்றது. சக்கரத்தாழ்வாரின் இந்தத் தோற்றம் மற்ற இடங்களில் இல்லாத அபூர்வக் கோலமாகும். சக்கரத்தாழ்வாரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இவருக்கு சுதர்சனஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்
முருகப்பெருமான் வில்லும் அம்பும் ஏந்தி இருக்கும் அபூர்வ கோலம்
கும்பகோணத்தில் இருந்து மெலட்டூர் வழியாக தஞசாவூர் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். பசுக்களால் பூசிக்கப்பட்டதால் இவ்வூர் ஆவூர் எனப்பட்டது. வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம். இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.
தசரத மகாராஜா புத்திர செல்வம் வேண்டி இத்தலத்து இறைவனையும், முருகனையும் வழிபட்டு பூஜை செய்தார். பின்னர் ராமபிரான் அவருக்கு மகனாக அவதரித்தார். இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், இக்கோவில் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதியில் முருகப்பெருமான் கையில் வில்லும் அம்பும் ஏந்தி, வள்ளி தெய்வயானை சமேதராக காட்சி தருகிறார். அதனால் இவர் தனுசு சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இப்படி முருகப் பெருமான், கையில் வேல் இல்லாமல், வில்லும் அம்பும் ஏந்தி இருப்பது ஒரு அபூர்வ கோலமாகும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்
https://www.alayathuligal.com/blog/6bexs8x8ztshxkgsrdpzxzwnay2zhg