தேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்
பெருமாளின் அருகில் இருந்து பிரகலாதனும் கருடாழ்வாரும் காட்சி தரும் திவ்ய தேசம்
மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம், தேரழுந்தூர். இத்தலத்து மூலவர் தேவாதி ராஜப் பெருமாள், சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர திருமேனியுடன் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். உக்கிரமாகக் காட்சியளித்த பெருமாளிடம் பிரகலாதன், சாந்த சொரூபியாக, கண்ணன் உருவில் காட்சி தர வேண்டுகோள் வைத்ததைத் தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக் கொண்டு பெருமாள், கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் மட்டும்தான் பிரகலாதன் கருவறையில் பெருமாள் அருகில் இருந்து காட்சி தருகிறார்.
இந்தக் கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும், சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார். இப்படி பிரகலாதனும் கருடாழ்வாரும் பெருமாளின் அருகில் இருந்து காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஆமருவியப்பன் என்னும் திருநாமம் அமைந்த புராணம்
இத்தலத்து உற்சவ பெருமாளின் திருநாமம் ஆமருவியப்பன். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். ஒருமுறை, மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடினார்கள். இந்த ஆட்டத்துக்கு நடுவராக பார்வதிதேவியை நியமித்தார்கள். காய் உருட்டும் போது, சகோதரனான பெருமாளுக்கு சாதகமாக பார்வதிதேவி தீர்ப்பு கூற, அதனால் கோபமுற்ற சிவபெருமான், பார்வதிதேவியை பூவுலகில் பசுவாக அவதாரம் எடுக்க சாபமிட்டார். அதன்படி உமையவள் பசுவானாள். இதைக் கண்டு கலங்கிய சரஸ்வதிதேவியும் லக்ஷ்மிதேவியும் உமையவளுக்குத் துணையாக இருக்க முடிவு செய்து, பசுவாக மாறினார்கள். மூவரும் பசுவாக, பூலோகத்தில் இருந்தபடி, சிவனாரையே நினைத்து வேண்டினார்கள். அவர்களுக்கு மேய்ப்பராக பெருமாள் உடனிருந்து காத்தார். அதனால் இந்தத் தலத்துப் பெருமாளுக்கு 'ஆமருவியப்பன்' என்னும் திருநாமம் அமைந்தது என்கிறது தல புராணம்.
தேரழுந்தூர் என்று ஊர் பெயர் வந்ததன் பின்னணி
இத்தலத்தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். தன் தேரின் நிழல் , எதன் மீது விழுந்தாலும் அவை கருகிவிடும் வரம் பெற்றவன் அவன். இத்தலத்தில் பெருமாள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்த போது, அந்தத் தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களைக் காப்பாற்ற அந்தத் தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.
கவிச் சக்கரவர்த்தி கம்பர் இத்தலத்தில் பிறந்தவர்.
பிரார்த்தனை
இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால், காணாமல் போனவர்கள் வீடு திரும்பவும், தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும், மேல் அதிகாரிகளின் அராஜகத்தில் இருந்து விடுபடவும், திருமணத்தடை நீங்கவும் வழி பிறக்கின்றது.