பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்

கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, 7 கி.மீ. தொலைவில் உள்ள பட்டமங்கலம் ஒரு குருஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலின் மூலவராக தட்சிணாமூர்த்தி உள்ளார். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.

கருவறையில் தட்சிணாமூர்த்தி, புன்னகை தவழும் முகத்துடன் பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞான முத்திரையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்தபடி காட்சியளிக்கிறார். தென்முகக்கடவுள் என்னும் தட்சிணாமூர்த்தி எல்லா கோவில்களிலும் தெற்கு நோக்கியே காட்சியளிப்பார். ஆனால், இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டும்தான்.

பொதுவாக எல்லாத் தலங்களிலும், கல்லால் ஆன ஆலமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார். இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். பக்தர்கள் இந்த ஆலமரத்தில் பிரார்த்தனையை கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும், மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன.

பிரார்த்தனை பலன்கள்

தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை. விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம். ஆலயத்தை 3 முறை பிரதட்சணம் செய்தால் விரும்பிய காரியம் நடக்கும். 5 முறை செய்தால் காரிய வெற்றி கிடைக்கும். 7 முறை செய்தால் நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி ஏற்படும். 9 முறை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். 11 முறை செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். 15 முறை செய்தால் செல்வம் பெருகும்.

 
Previous
Previous

அரியமங்கலம் வைத்தியநாத சுவாமி கோவில்

Next
Next

கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில்