தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்
காவி உடையுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மைமார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது.
திருஞானசம்பந்தரின் யாழ்முரிப்பதிகம் பெற்ற சிறப்புடையது இத்தலம். யாழை இசைத்து, யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவபெருமான் 'யாழ்மூரிநாதர்' என அழைக்கப்படுகிறார். சிவபெருமான் யாழ் இசைத்த போது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த தட்சிணாமூர்த்தி தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால், காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்.
பிரார்த்தனை
இசை கற்பவர்கள் சிவபெருமான், தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.
கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில்
ஆண்டு முழுவதும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது தினமும் விழும் அதிசயம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில், கணியூருக்கு அருகில் அமைந்துள்ளது கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில் . இறைவியின் திருநாமம் கோமதி. கொங்கு மண்டலத்தில், அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை அமைந்துள்ள 11 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் விக்ரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
கொங்கு மண்டலத்திலேயே மிகப்பெரிய கருவறை விமானம் கொண்ட கோவில் இது. மேலும் மூலவர் அர்ச்சுனேசுவரர், மிகப்பெரிய அவுடையாருடன் சுயம்பு சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளி உள்ளார். அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில் ஒவ்வொரு தினமும், சூரியன் காலையில் உதித்ததும், சூரியனின் ஒளிக்கதிர்கள் அமராவதி ஆற்றின் தண்ணீரில் பட்டு, மூலவர் அர்ச்சுனேசுவரரின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கும். இந்த சூரிய ஒளியானது, ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை ராஜகோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம், வசந்த மண்டபம், கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும். சூரியன் திசை மாறும் காலங்களான உத்திராயணம், தட்சிணாயணம் காலங்களிலும் கூட, அதாவது ஆண்டு முழுவதும், சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம், கோவிலை வடிவமைத்து இருப்பது, சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும். இந்த அதிசய நிகழ்வை காண, சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்
இத்தல இறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம்.
அன்னியூர் இராமநாதீசுவரர் கோவில்
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்
விழுப்புரத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அன்னியூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது இராமநாதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
பொதுவாக சிவாலயங்களில் சனி பகவான், நவக் கிரகங்களோடு சேர்ந்தோ அல்லது தனிச் சன்னதியிலோ காக்கை வாகனத்துடன் நின்ற கோலத்தில் அருள்புரிவார். ஆனால் இத்தலத்தில் நவகிரகங்களோடு எழுந்தருளி இருக்கும் சங்கடம் தீர்க்கும் சனி பகவான் சற்று வித்தியாசமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவர் தனது வாகனமான காக்கையின் மீது வலது காலை ஊன்றி எழுந்து புறப்படும் கோலத்தில் அருளுகிறார். அதாவது தன்னை சரணடைந்து, வேண்டி அழைக்கும் பக்தர்களுக்கு உடனே புறப்பட்டு வந்து உதவத் தயாராக இருக்கிறேன்' என்பதே அந்த திருக்கோலத்தின் அடையாளம். சனிபகவானின் இந்த அற்புதமான கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிப்பது அரிது.
திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்
நோயற்ற, தீர்க்காயுள் மிக்க குழந்தையை அருளும் தலம்
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பாற்றுறை. இறைவன் திருநாமம் ஆதிமூலநாதர். இறைவியின் திருநாமம் மேகலாம்பிகை, நித்யகல்யாணி. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்திருக்கிறது. பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி ‘பாற்றுறை நாதர்’ என்றும், தலம் ‘பாற்றுறை' (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.
ஒரு சிலருக்கு பிறக்கும் குழந்தைகள் தீர்க்க ஆயுளுடன் இருப்பதில்லை. மற்றும் சிலருக்கோ, பிறக்கும் குழந்தைகளை எப்பொழுதும் நோய் வாட்டிக் கொண்டிருக்கும். அத்தகையோர் வழிபட வேண்டிய தலம் திருப்பாற்றுறை.
16 வயதிலேயே மரணத்தை சந்திக்க இருந்த மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது. அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர், ஆயுள்விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது லிங்கத்துக்கு பூஜை செய்ய தீர்த்தம் இல்லை. சுற்றிலும் தண்ணீர் கிடைக்காத நிலையில், லிங்கத்தின் தலையில் இருந்து பால் பொங்கி, தானாகவே அபிஷேகமானது.
எமதர்மனின் திசை தென் திசையாகும். அவரது உக்கிரத்தைக் குறைக்க, இத்தலத்தில் அம்பாள் நித்யகல்யாணி தெற்கு நோக்கி அருளுகிறாள். குழந்தைகளை இழந்து, மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுவோர், அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். பௌர்ணமிதோறும் இதற்குரிய விசேஷ பூஜை இவளது சன்னதியில் நடக்கிறது. புதுமணத்தம்பதிகளும் நல்ல குழந்தைகள் வேண்டி இதே நாளில் பூஜை செய்கின்றனர்.சிவராத்திரி அன்று, பாற்றுறைநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், நோயற்ற, தீர்க்காயுள் மிக்க மக்கள் செல்வத்தைப் பெறலாம்.
அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில்
இடதுபுறம் நாய் வாகனம் உள்ள அபூர்வ வீர காலபைரவர்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அமைந்துள்ளது செல்லீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் செல்வாம்பிகை. மூலவர் செல்லீஸ்வரர் பராசரமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இக்கோவிலில் சோமாஸ்கந்த மூர்த்தம் வடிவில் அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையில் முருகன் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
இங்கு எழுந்தருளி இருக்கும் வீர கால பைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். பொதுவாக பைரவர், தன் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். ஆனால் இத்தலத்தில் வீர காலபைரவரின் நாய் வாகனம் இடதுபுறம் நோக்கி இருப்பது தனிச்சிறப்பாகும். கொங்கு மண்டலத்தில் மிகவும் பழமைவாய்ந்த, பிரசித்தி பெற்ற பைரவ தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர், பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் வட்சார்ச்சனை நடந்து வருகிறது.
பிரார்த்தனை
சக்தி வாய்ந்த வீர காலபைரவர், மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் எதிர்மறையான துஷ்ட சக்திகளை போக்ககூடியவர். எதிரிகளை அழிக்ககூடியவர். பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும். பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிடைக்கும். அந்திசாயும் நேரத்தில் வழிபாடு செய்தால், பாவங்கள் விலகும். அர்த்த சாமத்தில் வழிபட்டால் மனசாந்தியும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும், வளமான வாழ்வும் அமையும்.
செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில்
12 ராசிக்காரர்களுக்கான குபேர தலம்
பெரம்பலூர் - திருச்சி ரோட்டில் 15 கி.மீ. தூரத்தில் உள்ள ஆலத்தூரிலிருந்து, 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.
சிவபக்தனான குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். வடக்கு திசை அதிபதியாகவும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகவும் வணங்கப்படுகிறார். கோவிலில் உள்ள தூண்களில் பன்னிரு ராசிகளுக்கும் உரிய குபேரர் உள்ளனர். குபேரனுக்குரிய வாகனம் மீன். எனவே, இங்குள்ள ஒவ்வொரு குபேரரும் மீன் மீது, ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகின்றனர். ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்பாள் சன்னதி முன் மண்டப தூண்கள் மற்றும் சிவன் சன்னதி கோஷ்டத்தில் இவர்களைத் தரிசிக்கலாம். தவிர, ராஜ கோபுரத்தில் மகாகுபேரர் இருக்கிறார். இவ்வாறு, ஒரே கோவிலில் 13 குபேரர்களை தரிசனம் செய்வது மிகவும் அரிது.
இந்த கோவிலில் காமாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே மகா குபேரனுக்கு தனிச் சன்னதி உள்ளது.இந்த சன்னதியில் மகா குபேரர் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். ஒரு முறை குபேரன் தன்னுடைய சக்திகளை இழந்து, செல்வங்களையும் பறிகொடுத்தான். பின்னர் இத்தலத்தில் உள்ள காமாட்சி அம்மனை வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டெடுத்தான். குபேர தரிசனம் செல்வ சம்பத்துகளை அள்ளித்தரும்; தொழில் அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் உண்டாக்கும் என்கின்றன ஞானநூல்கள்.
பிரார்த்தனை
அவரவர் ராசிக்குரிய குபேரனை, தங்களது ஜனன நட்சத்திரத்தன்று வழிபடுவது நன்மை தரும். மேலும் குபேரனுக்கு உகந்த பச்சை வஸ்திரமும், பச்சை குங்குமமும் சாத்தி, நிவேதனம் செய்து வழிபட்டால், யோகம் பெருகி தொழிலில் விருத்தி ஏற்படும். செல்வச் செழிப்பு மிகுந்த வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். குபேரன் காமாட்சி அம்மனை வழிபட்டு செல்வங்களை மீட்ட தினம் பூரட்டாதி நட்சத்திரமாகும். எனவே அந்த நட்சத்திரத்தன்று மகா குபேரனுக்கு இங்கு அபிஷேகங்களும், மகா குபேர ஹோமும் நடைபெறுகிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானபக்தர்கள் வந்திருந்து வழிபாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
குடும்பத்தில் செல்வம் பெருக, கடன் பிரச்னைகள் தீர தினமும் சுக்கிர ஓரை நேரத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்கள் ராசிக்குரிய குபேரனுக்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
அம்பாசமுத்திரம் அகத்தீசுவரர் சுவாமி கோவில்
அன்னமிடுதல் உற்சவம் - அன்னப் படையலில் பதியும் அகத்தியரின் பிரம்படி தடமும், காலடிச் சுவடும்
திருநெல்வேலியில் இருந்து 40 கி. மீ தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது அகத்தீசுவரர் சுவாமி கோவில். கருவறை யில் அகத்தீசுவரரும், தெற்கு நோக்கிய கருவறையில் அகத்தியரின் மனைவி லோப முத்தரை அம்பாளும் அருள்கின்றனர். மூன்றடி உயர திருமேனியராய் நின்ற கோலத்தில் அருள்கிறார் அகத்தீசுவரர். வலக் கரம் சின்முத்திரை காட்ட, இடது கரத்தில் சுவடியை ஏந்தியிருக்கிறார். ஜடாமகுடதாரியாய், மார்பில் லிங்க மாலை திகழ, முப்புரிநூல் அலங்கரிக்க, சிவசொரூபமாகக் காட்சி தருகிறார் அகத்தீசுவரர். அவரின் எதிரில் நந்தி அருள்கிறார். லோப முத்தரை அம்பாள் தனது கையில் மலர் ஏந்தி அருள்பாலிக்கிறாள்.
இந்தக் கோவிலில் பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர்.`அந்த அன்னப் படையலில், அகத்தியரின் வாக்குப்படி அவரது காலடிச் சுவடும், பிரம்படி தடமும் பதிந்திருப்பது, இத்தலத்தில் நடைபெறும் அதிசய நிகழ்ச்சியாகும்.
சிவபெருமான் பார்வதி திருமணத்தைக் காண அகில உலகமும் கைலாயத்தில் கூடிய போது சிவபெருமான், உலகைச் சமன்படுத்த, அகத்தியரை தென்புலத்துக்கு அனுப்பினார். பாபநாசம் தலத்தில் அகத்தியருக்கு சுவாமியின் திருக்கல்யாண தரிசனம் கிடைத்தது. பிறகு, அம்பாசமுத்திரம் எனும் தலத்தை அடைந்த குறுமுனிவர், அங்கே ஒரு புளிய மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது சிவ பக்தர்கள் பலரும் அகத்தியரை தரிசிக்க வந்தனர். தியானம் கலைந்த அகத்தியர், அவர்களுக்கு ஆசி வழங்கினார். மேலும் பக்தர்களில் ஒருவரிடம் 'எமக்குப் பசி எடுக்கிறது. அமுது அளித்து பசி தணிப்பீரா?' எனக் கேட்டார். அகத்திய முனிவருக்கு அன்னமிடுவது பெரும் பாக்கியம் எனக் கருதிய அந்த அன்பரும், தம் இருப்பிடத்துக்குச் சென்று அன்னம் தயார் செய்து எடுத்து வந்தார். ஆனால் அவர் வருவதற்குச் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. அகத்தியர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டார். அன்பர் மிகவும் மனம் கலங்கினார். அகத்தியரை மனதார துதித்து வழிபட்டார்.
அப்போது அவர் முன் தோன்றிய அகத்தியர், 'வருந்தாதே! தற்போது நேரமாகிவிட்டதால் நான் இங்கிருந்து புறப்பட வேண்டும். பங்குனி மாதம் 29-ம் நாள் வேடர் வடிவில் வருவேன்; நீ இடும் அன்னத்தைப் புசிப்பேன். அதற்கு அடையாளமாகப் படைக்கப் படும் அன்னத்தின்மீது என்னுடைய காலடிச் சுவடும், பிரம்படிச் சுவடும் தெரியும்!' எனக் கூறி மறைந்தார்.
அகத்தியர் அருளியபடியே, அங்குள்ள பக்தர்கள் பங்குனி 29-ம் நாளன்று, அம்பையில் உள்ள தீப தீர்த்தத்திலிருந்து 21 குடம் தீர்த்தம் எடுத்து வந்து திரு மஞ்சனம் செய்து அகத்தியருக்கு அமுது படைத்து வழிபட்டனர். அகத்தியரும் தாம் வாக்களித்தபடி, பக்தர்கள் படைத்த அன்னத்தில் திருநடனமிட்டுப் பிரம்படிச் சுவடும் கால்சுவடும் காட்டி அருளினார். இவ்வாறு அவர் அருள்புரிந்த இடத் தில், அகத்தியருக்கு அழகிய ஆலயம் அமைத்தனர் பக்தர்கள். தமிழகத்தில் அகத்தியருக்காக அமைந்த கோயில்களில் தனிச் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது இந்த ஆலயம்.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் அன்னமிடுதல் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர். '`அந்த அன்னப் படையலில், அகத்தியரின் பிரம்படி தடமும், காலடிச் சுவடும் பதிந்திருப்பதைக் நாம் தரிசிக்கலாம். பின்னர் அந்த படையல் உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பிரார்த்தனை
இந்தத் தலத்துக்கு வந்து அகத்தியரைத் தியானித்து, `ஓம் அகஸ்தீஸாய நம!' என்ற மந்திரத்தை உச்சரித்து, நாம் உண்ண வேண்டிய மருந்தை உட்கொண்டால் நோய் விரை வில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தோல் நோய், சுவாசக் கோளாறு, நரம்புப் பிரச்னைகள், மனநோய் பாதிப்பு ஆகிய பிரச்னைகளால் அவதிப்பட்ட அன்பர்கள் பலரும் இங்கு வந்து அகத்தியரை வழிபட்டு நலம் பெற்று உள்ளார்கள்.
தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்
கையில் யாழ் இசைக்கருவி உடன் இருக்கும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை. இத்தல இறைவனுக்கு யாழ்மூரிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். திருஞானசம்பந்தர் சிவத்தல யாத்திரை மேற்கொண்டு தேவாரப் பதிகங்கள் பாடி வருவதை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாண நாயன்மாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும் திருஞானசம்பந்தருடன் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும், இனிமையாக யாழ் இசைக்கருவி இசைக்கும் திறமை பெற்றிருத்ததால் யாழ்ப்பாணர் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார் அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது சம்பந்தர் பதிகம் பாடினார். யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் யாழ் இசைக்கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து தன் உயிரை விடச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து யாழை வாங்கி சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து, நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப்பெற்றார்.
யாழை இசைத்து யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவன், யாழ்மூரிநாதர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சிவபெருமான் கையில் யாழ் இசைக் கருவியுடன் காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் இந்த அபூர்வ தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
கருவறையில் லிங்க வடிவில் உள்ள சுவாமி, எப்போதும் வெள்ளிக்கவசத்துடன் தரிசனம் தருகிறார். சிவன் யாழ் இசைத்தபோது அம்பாள் தேனும், அமிர்தமும் சேர்ந்தது போல இனிமையாக பாடி மகிழ்ந்தாளாம். எனவே இவளை, தேனாமிர்தவல்லி என்கின்றனர். குரல் வளம் வேண்டுபவர்கள் இவளுக்கு வஸ்திரங்கள் சாத்தி, பூஜைகள் செய்தும், இசை கற்பவர்கள் சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். சிவன் யாழ் இசைத்தபோது குயில்களும் தங்களது குரல்களால் கூவி பாடினவாம். இதனை திருஞானசம்பந்தர் 'எழில் பொழில் குயில் பயில் தரும்புர பதியே' என்று பாடியிருக்கிறார்.
பிரார்த்தனை
எமதர்மன் இங்கு தவம் செய்து வழிபட்டு அருள் பெற்றதால், இத்தலத்தில் ஆயுள் விருத்தி ஹோமமும், சஷ்டியப்தபூர்த்தி செய்வதும் சிறப்பாகும்.
வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில்
மிக அற்புதமான கலைநயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட வெங்கனூர் கோவில்
பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள வெங்கனூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது, ஆயிரம் வருடங்கள் பழமையான விருத்தாச்சலேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவிலின் கட்டிடக் கலையும், சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். இந்தக் கோவில் திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, மன்னார்குடி மதில் அழகு என்ற வரிசையில் வெங்கனூர் கோவில் வேலை அழகு என்ற பெருமைக்குரியதாகும். சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோவிலில் 'கற்றளி' எனப்படும் கல்லால் ஆன 33 அம்சங்களுடன் செதுக்கப்பட்ட உயிரோட்டமான சிற்பங்களும், ஓவியங்களும் நிறைந்திருக்கின்றன.இத்தலத்தில் உள்ள தூண்களை தட்டினால், வெண்கலத்தை தட்டுவது போல் ஒலி வந்தது. எனவே வெண்கல ஊர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் வெங்கனூர் என்று மருவியது.
இந்த கோவில் மற்ற கோவில்களைப் போல பூச்சு முறை இல்லாமல் கருங்கற்களை பொறுத்து முறையில், வடிவமைத்து கட்டப்பட்டுள்ள கோவிலாகும். இது, அக்காலத்தின் கட்டடக் கலையில் கையாளப்பட்ட நுணுக்கத்தை வெளிப்படுத்துகிறது. இக்கோவில் கருவறை ஓம் வடிவ அமைப்பில் இருப்பது தனிச்சிறப்பாகும். கருவறை மண்டபமும், அதனைச் சுற்றியுள்ள சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள பல்லி, ஓணான், குரங்கு, கிளி உள்ளிட்ட உயிரினங்களின் சிற்பங்களும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள 2 சிற்பங்கள் எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் நான்கு விலங்குகளின் தோற்றமும், நான்கு முகங்களாகவும் தோற்றமளிக்கின்றன. இந்தக் கோவிலில் உள்ள தூண்களை விரல்களால் தட்டினால் விதவிதமான சங்கீத ஓசைகள் வருவதோடு, கோவிலினுள் கல்களால் ஆன சங்கிலி வளையம், சுழல்தாமரை போன்ற சிற்பங்களும் காண்போரைக் கவரும் விதமாக உள்ளது.
திருநந்திக்கரை நந்தீசுவரர் கோவில்
சிவபெருமானே நந்தியை பிரதிஷ்டை செய்த, பிரதோஷ கோவில்
நாகர்கோவிலில் இருந்து 32 கி.மீ. தொகையில் உள்ள நந்திக் கரைதிருநந்திக்கரை என்னும் ஊரில், நந்தியாறு கரையோரப் பகுதியில் அமையப் பெற்ற சிவத்தலம் நந்தீசுவரர் கோவில். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற 12 சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் கருவறை மண்டபம் வட்ட வடிவில் காணப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் நந்தீசுவரர் ஆவார். சிவபெருமான் பார்வதியுடன், விநாயகரை மடியில் அமர்த்தியவாறு அருள்புரிகிறார். இந்தக் கருவறையை ஒருமுறை வலம் வந்தால், 52 வாரங்கள் அதாவது ஒருவருடம் கோவிலை வலம் வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒரு காலத்தில் காளை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதை அடக்க யாராலும் முடியவில்லை. ஊர்மக்கள் சிவன் சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருந்த இக்கோவிலுக்கு வந்து காளையை அடக்கும்படி வேண்டினர். சிவபெருமான் அந்த காளையை இழுத்து வந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார். காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். காளை அமர்ந்த இடம் பள்ளமாகிவிட்டது. பள்ளத்தைவிட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது. காளை அமர்ந்துள்ள இடம் ரிஷப மண்டபம் என அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது. இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதோஷ நாட்களில் வழிபட சிறந்த கோவில்
சிவனே நந்தியை பிரதிஷ்டை செய்த இடம் என்பதால், திருநந்தீஸ்வரம் என இவ்வூருக்கு பெயர் வந்தது. சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்தக் கோவிலை விட ஏற்ற கோயில் எதுவுமே இல்லை எனலாம். அறிந்தோ, அறியாமலோ கொலைப்பழி பாவம் ஏற்பட்டவர்கள் நந்தீஸ்வரரை வணங்கி மனம் திருந்தப் பெறலாம்.
இந்த கோயிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். அசுபதி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களைக் குறிப்பிடும் வகையில், 27 கண துவாரங்கள் இம்மண்டபத்தில் உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.
சிவாலய ஓட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவற்றை சிவாலய ஓட்ட கோயில்கள் என்கின்றனர். சிவராத்திரி திருநாளின்போது இந்த 12 கோயில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இவற்றிற்கு இடையேயான தூரம் 100 கி.மீ., இப்போதும் பக்தர்கள் ஓடிச்செல்லும் வழக்கத்தை கைவிடாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலும் ஒன்று.
சனி பிரதோஷம்
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில்
தட்சிணாமூர்த்தி முன் நந்திதேவர் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள வதாரண்யேசுவரர் கோவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவில் வள்ளலார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. இக்கோவில் பிரசித்தி பெற்ற ஒரு குரு பரிகாரத் தலமாகும்.
இக்கோவிலில், ரிஷபத்தின் மீது அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம். இந்த வடிவை மேதா தட்சிணாமூர்த்தி என்பர். பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி, மூலவரான லிங்கத்திருமேனி முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக நந்தி காணப்படுவது தனிச்சிறப்பாகும். .இந்த தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.
ஒரு சமயம், ரிஷப தேவர் தன்னைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டார், சிவபெருமானை சுமந்து செல்வதால் தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று கர்வம் கொண்டார். சிவபெருமான் அவருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்து, ரிஷப தேவரின் முதுகில் தன்னுடைய சடையின் ஒரு முடியை வைத்தார். ரிஷப தேவர் அந்த ஒரு முடியின் எடையைத் தாங்க முடியாமல், தனது முட்டாள்தனத்தை உணர்ந்தார். சிவபெருமானை வணங்கி மன்னிப்புக் கோரினார். சிவபெருமான் அவரை மன்னித்தது மட்டுமல்லாமல், தெய்வீக அறிவையும் அவருக்கு அருளினார். இங்குள்ள இறைவன் தம் பக்தர்களுக்கு அறிவு, செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை அருளுவதால் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார். தமிழ் மொழியில், வள்ளல் என்றால் மிகுதியாக கொடுப்பவர் என்று பொருள். இறைவன் நந்தியின் மீது அமர்ந்து, தன் எதிரில் அமர்ந்திருக்கும் ரிஷப தேவருக்கு அறிவை அருளுகிறார். ரிஷபதேவர், தர்மத்தின் வடிவம். தர்மத்தின் பொருளை உபதேசிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியுடன், ரிஷப தேவரையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. மேதா என்றால் அறிவு அல்லது ஞானம். இந்த கோவிலில், மேதா தட்சிணாமூர்த்தி தனது வலது கையில் 'சின் முத்திரை' மற்றும் இடது கையில் புத்தகம் ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். குருபகவான் இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பக்தர்களுக்கு வரம் அருளும் ஆற்றல் பெற்றதால் இத்தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. அதனால் குருபெயர்ச்சி இங்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும். குருபெயர்ச்சியின் போது தொலைதூர மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இங்கு திரளுவார்கள்
காவிரியில் நந்தி நீராடிய இடம், ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்திக் கோவில் உள்ளது. இங்கு நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் நீராடிய பலன் கிடைக்கும். அவ்வாறே குருசேத்திரம்,பிரயாகை ஆகிய இடங்களில் தானம் செய்ததற்கு நிகரான பலன் கிடைக்கும்.
பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில்
நவபாஷாணத்தால் ஆன அபூர்வ பைரவர்
சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சமீபவல்லி.
இக்கோவிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். இந்த காசி பைரவரின் சிறப்பு என்னவென்றால் இவர், பழனிமலை தண்டாயுதபாணியை போல், நவபாஷாணத்தால் ஆனவர். இச்சிலையை போகர், பழனிமலை தண்டாயுதபாணிக்கு முன், பிரதிஷ்டை செய்தார். இந்த பைரவர் சிலையை போகர் தான் செய்தார் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில், பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில், முன்புறத்தில் பழனி ஆண்டவரின் உருவத்தில் காட்சியளிக்கார் பைரவர்.
நீல நிறமாக மாறும் நைவேத்திய பொருட்கள்
இந்த காசி பைரவர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார் அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி பாலதேவர் இருக்கிறார். இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரிலும், சார்த்தும் வடைமாலையிலும் கூட விஷமேருகிறது. இதனால் நீரும், வடைமாலையும் சில மணி நேரங்களில் நீல நிறமாக மாறி விடுவது அதிசயம். ஆகையால் தீர்த்தமோ,வடைமாலையோ இங்கு பிரசாதமாக தருவது கிடையாது. இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் சன்னிதியின் கூரை மீது போடப்படும். வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்
இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது. இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு . பக்தர்கள் பைரவரின்பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். வன்னி மரத்தின் அடியிலிருந்து அவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள். பௌர்ணமி அன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தேப்பெருமாநல்லூர் விஸ்வநாத சுவாமி கோவில்
இடுப்புக்குக் கீழே இடக்கையை ஒய்யாரமாக வைத்துக்கொண்டு, ஆணவத்தோடு நிற்கும் சனி பகவான்
தஞ்சாவூர் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலிலிறந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இத்தலத்து இறைவன் திருநாமம் விஸ்வநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்தநாயகி.
இத்தலத்தில் அம்பிகை சன்னதியின் எதிரில் மகாபைரவர் என்ற பெயரில் ஐந்தடி உயர திருமேனியுடனும், சாந்த பைரவர் என்ற பெயரில் சிறிய உருவத்துடனும் இரண்டு பைரவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக, ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன் என்ற அகந்தையுடன் இறைவனைப் பார்த்த வண்ணம் நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார். இப்படி இவர் நிற்பதற்கு பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சனி பகவான் சிவபெருமானைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால், அம்பாளிடம் சென்று, நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது சிவபெருமானைப் பிடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள். எப்படியும் சிவபெருமானை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், மறுநாள் சிவபெருமானைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை. சிவபெருமானைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். சிவபெருமானும் அப்படியே செய்தார். அங்கு வந்த சனி பகவான அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து சிவபெருமான் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்று விட்டார் சனிபகவான். ஏழேகால் நாழிகை கழிந்ததும் சனிபகவான் அங்கிருந்து மெதுவாக நகரத் தொடங்கினார். அப்போது அம்பாள் சனி பகவானைப் பார்த்து என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா? என்று கேட்டாள். அதற்கு சனிபகவான் நான் வந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இறைவனே அரச மரத்தின் பின்பக்கம் ஒளிந்திருக்க வேண்டியிருந்தது அல்லவா? அதுவே நான் அவரை பிடித்த நேரம் என்று ஆணவத்துடன் சொன்னான். அதுமட்டுமில்லாது இடுப்பில் கைவைத்து சற்று ஒய்யாரமாக அம்பிகை முன் நின்றான்.
சனி சொல்வதைக் கேட்டுக கொண்டிந்த சிவபெருமான் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார். இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான சிவபெருமானை நோக்கி, ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி நான் இயங்குகிறேன். நான் இல்லையேல், உலகில் ஆணவக்காரர்களும், அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும் என வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான இரண்டு கூரான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
திங்களூர் கைலாசநாதர் கோவில்
பங்குனி உத்திரத்தன்று சூரிய பூஜையும், பௌர்ணமி பிரதமையில் சந்திர பூஜையும் நடைபெறும் தலம்
திருவையாற்றில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவார வைப்புத் தலம் திங்களூர் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகளின் அவதாரத் தலம்.
சந்திரனின் சாபத்தைப் போக்கிய தலம்
நவக்கிரக தலங்களில் திங்களூர் இரண்டாவது தலமாகும். தட்சன் தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். ஒவ்வொரு நட்சத்திரமாக திகழும் 27 மனைவிகளிடமும், ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 நட்சத்திர மனைவிகளும் தங்கள் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் சமமாக அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். தட்சன் இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான். ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து சந்திரனின் சாபத்தைப் போக்கினார். அதனால், இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஒளி மூலவர் கைலாசநாதர் திருமேனியில் விழுவதை இன்றும் காணலாம்.
பங்குனி உத்திரத்தன்று சூரிய பூஜையும், பௌர்ணமி பிரதமையில் சந்திர பூஜையும் நடைபெறும் தலம்
ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு சூரியபகவான் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை வணங்கி ஆராதனை செய்யும் சூரிய பூஜையும், மறுநாள் பௌர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும். இப்படி அடுத்தடுத்த நாட்களில் சூரிய பூஜையும், சந்திர பூஜையும் நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனை அபிஷேகம், அர்ச்சனை, நெய் விளக்கு ஏற்றி வழிபட, சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். அஸ்வினி, சுவாதி, மிருகசீரிடம், உத்திரம், திருவோணம், சதயம் மற்றும் ரேவதி போன்ற நட்சத்திர தினங்களிலும், சந்திரஹோரை வேளைகளிலும் இந்த கோவிலில் குழந்தைகளுக்கு சந்திரனையும், பசுவையும் காண்பித்து ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் பால், தேன் கலந்து குழந்தைக்கு சோறூட்டும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில்
சுவாமி கருவறை விமானத்தின் மேல் அறுபத்து மூவர் நாயன்மார்கள் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
சென்னைக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில்,பூந்தமல்லியை அடுத்து உள்ள திருமழிசையில் அமைந்துள்ளது ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் குளிர்ந்த நாயகி. கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார்.
அறுபத்து மூவர் நாயன்மார்கள்
நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சிவனடியார்கள் ஆவர் . நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை நமக்கு தரும் பாடமாக உள்ளது.
பல சிவாலயங்களில்அறுபத்து மூவர் நாயன்மார்களின் சிலைகள், இறைவன் கருவறையின் சுற்றுப்பிரகாரத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த அறுபத்து மூவர் நாயன்மார்கள் இறைவனோடு எழுந்தருளும் வீதி உலா அந்தந்த கோவில் பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும். இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், 63 நாயன்மார்களும், இறைவன் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் இடம் பெறவில்லை. அதற்கு மாறாக சுவாமி கருவறை விமானத்தின் மேல் அவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி 63 நாயன்மார்களும் சுவாமி கருவறை விமானத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் காட்சியானது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
கையில் வளையல், காலில் கொலுசு, மெட்டியுடன் காணப்படும் அபூர்வ அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில், 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி.
வழக்கமாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் தெற்கு முகமாக எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி மகாமண்டபத்தில், இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் எழுந்தருளி இருக்கிறார். இது ஒரு அரிய அமைப்பாகும். இங்குள்ள தட்சிணாமூர்த்தி, சரஸ்வதிக்கு ஞானத்தையும், லக்ஷ்மிக்கு ஞானத்தையும் வழங்கியதால், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். மகாமண்டபத்தின் வெளிப்புற மேற்குச் சுவரின் இடது மற்றும் வலதுபுறத்தில் லட்சுமியும் சரஸ்வதியும் இருப்பதற்கு இதுவே காரணம். மேலும் சரஸ்வதி தன் கையில் வீணை இல்லாமல் காட்சியளிக்கிறார்.
இத்தலத்து தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சியளிப்பது ஒரு தனி சிறப்பாகும். அவரது சுருண்ட தலைமுடியும், திருமேனியை அலங்கரிக்கும் ஆபரணங்களும், மார்பில் இருக்கும் முப்புரி நூலும் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். அவரது புன்முறுவல் பூத்த முகமும், இடப்பாகம் மிளிரும் பெண்மையின் நளினமும் தெய்வீகத் தன்மை கொண்டவையாக இருக்கின்றது. அவரது கையில் வளையலும், காலில் கொலுசும், கால் விரல்களில் மெட்டியும் காணப்படுவது ஒரு அபூர்வமான தோற்றமாகும்.
சென்னை திருக்காரணி காரணீஸ்வரர் கோவில்
சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அளிக்கும் சாம்பவி தீட்சை
சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது காரணீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. சென்னையில் உள்ள முக்கியமான சிவாலயங்களில் ஒன்றான இத்தலம் சுமார் 450 ஆண்டுகள் பழமையானது.
காமதேனு எனும் தெய்வ பசுவினை தேவேந்திரனிடம் இருந்து பெற்ற வசிஷ்ட முனிவர், தான் பூஜை செய்யும் போது இடையூறு செய்ததாக கருதி அதனைக் காட்டுப்பசுவாக மாற்றிவிட்டார். இதனை அறிந்த தேவேந்திரன் இந்தப் பகுதியை மழையால் குளிரவைத்து, சோலையாக்கி சிவனை நோக்கி லிங்க பிரதிஷ்டை செய்து காமதேனு பசுவை மீட்டார். இதனால் இப்பகுதி திருக்காரணி என்று அழைக்கப்பட்டது. இக்கோவிலில் நடைபெறும் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு நடைபெறும் ரிஷப வாகன சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.
சிவாலயங்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு உற்சவம் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் அன்று தான் சிவ பெருமான் தமது வாகனமான ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ரிஷப வாகனத்தில் சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்வது பெரிய புண்ணியத்தைத் தரும். அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லோரும் கடைத்தேற இறைவனை அடைய குரு முக்கியம், அவ்வாறு குரு இல்ல்லாதாவர்களுக்கு வாகனமேறி சிவபெருமானும், பார்வதி தேவியும் வரும் போது எந்த தகுதியும் இல்லாதாவர்களுக்கும் அவர் தீட்சை அளிக்கின்றார். இதற்கு சாம்பவி தீட்சை என்று பெயர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில்
பேரழகும், கம்பீரமும் மிக்க பிரம்மாண்டமான அதிகார நந்தி சேவை
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது ஆதிபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. முற்காலத்தில் நெசவாளர்கள் இப்பகுதியில் அதிகம் இருந்ததால் 'சென்னை தறிப் பேட்டை' என்று அழைக்கப்பட்டு பின்னர் 'சிந்தாதிரிப்பேட்டை' ஆனது. 1743- இல் கிழக்கிந்திய கம்பெனியில் துபாஷாக பணியாற்றிய ஆதியப்ப நாராயண செட்டி என்பவரால் இங்கு ஆதிபுரீஸ்வரர், ஆதி கேசவ பெருமாள், ஆதி விநாயகர் ஆகிய ஆலயங்கள் கட்டப்பட்டன.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின்போது மூன்றாம் நாள் நடைபெறும் அதிகார நந்தி சேவை உலகப் பிரசித்தி பெற்றது. அதுபோல சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் நடைபெறும் அதிகார நந்தி வாகன ஊர்வலம் ஆசியாவிலேயே மிகப் பெரியது.
ஆதிபுரீஸ்வரர் கோவில் அதிகார நந்தி வாகனத்தின் பிரம்மாண்டமும், கம்பீரமும், அழகும் பார்ப்பவரை மயக்க வைக்கும். அழகிய வேலைப்பாடு மிளிரும் இந்த அதிகார நந்தி வாகனத்தை 1901 ஆம் ஆண்டு இக்கோவிலுக்குச் செய்தளித்தவர், தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் தந்தையான பொன்னுசாமி கிராமணி என்பவர். அதிகார நந்தி தேவர் மட்டும் 6 அடி உயரம், நந்தியின் பாதத்தின் கீழ் இருக்கும் திருக்கயிலாய மலை 3 அடி உயரம், அதன் கீழ் இருக்கும் சட்டம் 3 அடி உயரம் என, மொத்தம் 12 அடி இந்த வாகனத்தின் உயரமாக தற்போது உள்ளது. முன்பு இந்த வாகனம்.கீழ் சட்டத்திற்கும் கீழே வைப்பதற்கு, 3 அடி உயரமுள்ள மற்றொரு சட்டம் இருந்தது. அதையும் சேர்த்தால் மிக அதிக உயரமாக வாகனம் இருக்கும் என்பதால், அந்த உயரத்திற்கு இப்போது வீதியில் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளதால், அந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டு, உயரம் குறைக்கப்பட்டு விட்டதாம்.
கலையழகு மிளிரும் நந்தி தேவரின் ஒவ்வொரு அங்கமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைகளும், தொடைகளும், கால்களும் கட்டுமஸ்தாக உருவாக்கப்பட்டுள்ளன. இடை சுருங்கி, அடிவயிறு குவிந்திருப்பது ஒரு யோகியின் நிலையைக் காட்டுகிறது. முன்னிரு கரங்களும் இறைவனின் பாதங்களைத் தாங்கும் நிலையில் இருக்க, பின்னிரு கரங்களில், மானும், மழுவும் ஏந்தியுள்ளார். நேராக இல்லாமல் ஒயிலாக சாய்ந்திருப்பது போல இருப்பதே ஒரு தனி அழகு ஆகும் அவரது மேனி முழுவதும் ஆபரணங்கள் தனித் தனியாக தெரியும் படி அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தலையலங்காரமும், தோளில் வாகுவளையங்களும், மார்பின் மாலைகளும், கரங்களில் கங்கணமும், காலில் சிலம்பும் மிகவும் கலை நயத்துடன் செதுக்கப்ப்பட்டுள்ளன. இவரது தாமரை மாலையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
வாகனத்தின் உச்சி முதல் பாதம் வரை ஆங்காங்கே உள்ள கம்பிகளில், மொத்தம் 63 வகையான பொம்மைகள் பொருத்தப்படுகின்றன. மூன்று அடுக்குகளாக இந்த பொம்மைகளை அமைத்துள்ளனர். முழு முதற்க் கடவுள் விநாயகர், மும்மூர்த்திகளான பிரம்மா, ஸ்ரீ மஹா விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் கண்டு களித்த பதஞ்சலி, புலிக்கால் முனிவர் இசைக்கு இலக்கணம் வகுத்த நாரத முனிவர், தும்புரு முனிவர் பொம்மைகளும்,, பிருங்கி முனிவர், சுக முனிவர் பொம்மைகளும் உள்ளன. கயிலாய மலையில் ஒரு காலில் நின்றபடி, யோக பட்டம் காட்டியபடி என, பல்வேறு நிலைகளில் தவம் புரியும் முனிவர்கள் பொம்மைகளும் உள்ளன. அனைத்து பொம்மைகளும் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளது ஒரு தனி அழகு.
அதிகார நந்தி இசைக்கு தலைவர் என்பதால், அவரைச் சுற்றி இசையில் மூழ்கியிருக்கும் கந்தர்வ பொம்மைகள் உள்ளன. கீழே முதல் வரிசையில் எட்டுத் திசை பாதுகாவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரது பொம்மைகள் வைக்கப்படுகின்றன. நான்கு பக்கமும் நான்கு துவார பாலகர்கள், கந்தருவி பொம்மைகள் அலங்கரிக்கின்றன,
நந்திதேவரின் சிறப்புகள்
நந்தியம் பெருமானின் சிறப்புகள்
சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும் இரு புஜங்களிலும் மானும், மழுவும் உண்டு. நந்தி என்ற சொல்லுக்கு 'ஆனந்தமாக இருப்பவன்' என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.
அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது. நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால், சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில், அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.
நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும். பிரதோஷ கால நேரங்களில், சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுகிறார். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும். சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும். நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
நந்திதேவரின் சிறப்புத் தோற்றங்கள்
சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோவிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம். இக்கோவில் வடக்கு கோபுர வாசலில் அதிகார நந்திதேவர், மனித முகத்துடன் தனது துணைவியாருடன் எழுந்தருளி உள்ளார்.
திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அர்த்த மண்டபத்தில் அதிகார நந்தி கூப்பிய கரத்துடன் உடைவாளுடன் உள்ளார்.
நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
திருமழபாடியில் உள்ள நந்திதேவர் மனித முகம் கொண்டவர்.
செய்யாறு வேதபுரீசுவரர் ஆலயத்தில் நந்தி, நேர் திசையில் ஈசுவரனை நோக்காமல் எதிர் திசையில் பிரதான வாயில் கோபுரத்தை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.
திருவையாறிலும், திருமழபாடியிலும் நந்திகேசுவரரின் செப்புத் திருவுருவங்கள் உள்ளன.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உற்சவ நந்திகேசவர், இரு கரங்கள் கூப்பியும், இரு கரங்களில் மான், மழுவுடனும் காட்சி தருகிறார். இரு கரங்களில் உள்ள மானையும், மழுவையும் மறைத்துப் பார்த்தால்அனுமன் போன்ற தோற்றத்தை அளிக்கிறார்.
கும்பகோணத்திற்கு அருகில் கொருக்கை என்ற ஊரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவசக்தி சந்நதியின் முன் இரண்டு நந்திகள் உள்ளன. பிரதோஷ நாளில் இரு நந்திகளுக்கும் சேர்ந்தாற்போல நிலக்கடலை, முந்திரிப் பருப்பு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் உள்ள நந்தி மிகப் பெரியது. வெள்ளைக் கல்லாலான இவரை மாகாளை என்று அழைக்கின்றனர்.
நந்தி இல்லாத சிவ ஆலயம் திருப்பெருந்துறையில் (ஆவுடையார் கோயில்) உள்ளது.
நந்தி தேவரை வழிபட்டால் கிடைக்கும் நற்பலன்கள்
நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர். அதனால் நாட்டியம் பயில்வோரும், இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும். நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும், நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும், உயர்ந்த பதவியும், நல்ல எண்ணங்களும், நல்லொழுக்கமும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.
சிவபுரி உச்சிநாதர் கோவில்
குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டப்படும் தேவாரத்தலம்
சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் தேவாரத்தலம் சிவபுரி உச்சிநாதர் கோவில். இறைவியின் திருநாமம் கனகாம்பிகை என்ற உச்சிநாயகி. ஒரு காலத்தில் நெல் வயல்கள் சூழ்ந்து இருந்ததால் இத்தலத்திற்கு திருநெல்வேலியில் என்ற பெயரும் உண்டு. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம் என்பதால் கருவறையில் சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
இத்தல இறைவனுக்கு மத்யானேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. அதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான ஞானக்குழந்தை திருஞானசம்பந்தருக்கு 12 வயதில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணம் சீர்காழிக்கு அருகில் இருந்த ஆச்சாள்புரத்தில் நடைபெற இருந்தது. அப்போது திருமண ஏற்பாடுகளுக்காக, திருஞானசம்பந்தரும் அவரது உறவினர்களும் ஒரு குழுவாக ஆச்சள்புரம் நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது நல்ல மதிய வேளை. சம்பந்தரின் திருமணத்திற்கு வந்தவர்கள் பசியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த சிவபெருமான், கோவில் பணியாளர் வடிவில் வந்து, வந்திருந்த அனைவருக்கும் உணவளித்தார்.
திருஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது பார்வதிதேவி ஞானப்பால் ஊட்டினார். அவரது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சிவபெருமான் மதிய உணவு படைத்தார். வந்து உணவளித்தது இறைவன் தான் என்பதை அறிந்த சம்பந்தர், மதிய வேளையில் தோன்றியதால் உச்சிநாதர் என்று அழைத்து போற்றினார். அதனாலேயே இக்கோவில் மூலவருக்கு உச்சிநாதர், மத்தியானேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
இதனால், இந்த கோவிலில் குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டும் வைபவம் நடைபெறுவது விஷேசமாக கருதப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வந்து குழந்தைக்கு முதல் உணவு ஊட்டுகின்றனர். இக்கோவிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப் பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.
திருமணம் விரைவில் கைகூட இங்கு வழிபடுகிறார்கள்.