தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்
கையில் யாழ் இசைக்கருவி உடன் இருக்கும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை. இத்தல இறைவனுக்கு யாழ்மூரிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். திருஞானசம்பந்தர் சிவத்தல யாத்திரை மேற்கொண்டு தேவாரப் பதிகங்கள் பாடி வருவதை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாண நாயன்மாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும் திருஞானசம்பந்தருடன் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும், இனிமையாக யாழ் இசைக்கருவி இசைக்கும் திறமை பெற்றிருத்ததால் யாழ்ப்பாணர் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார் அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது சம்பந்தர் பதிகம் பாடினார். யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் யாழ் இசைக்கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து தன் உயிரை விடச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து யாழை வாங்கி சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து, நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப்பெற்றார்.
யாழை இசைத்து யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவன், யாழ்மூரிநாதர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சிவபெருமான் கையில் யாழ் இசைக் கருவியுடன் காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் இந்த அபூர்வ தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
கருவறையில் லிங்க வடிவில் உள்ள சுவாமி, எப்போதும் வெள்ளிக்கவசத்துடன் தரிசனம் தருகிறார். சிவன் யாழ் இசைத்தபோது அம்பாள் தேனும், அமிர்தமும் சேர்ந்தது போல இனிமையாக பாடி மகிழ்ந்தாளாம். எனவே இவளை, தேனாமிர்தவல்லி என்கின்றனர். குரல் வளம் வேண்டுபவர்கள் இவளுக்கு வஸ்திரங்கள் சாத்தி, பூஜைகள் செய்தும், இசை கற்பவர்கள் சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். சிவன் யாழ் இசைத்தபோது குயில்களும் தங்களது குரல்களால் கூவி பாடினவாம். இதனை திருஞானசம்பந்தர் 'எழில் பொழில் குயில் பயில் தரும்புர பதியே' என்று பாடியிருக்கிறார்.
பிரார்த்தனை
எமதர்மன் இங்கு தவம் செய்து வழிபட்டு அருள் பெற்றதால், இத்தலத்தில் ஆயுள் விருத்தி ஹோமமும், சஷ்டியப்தபூர்த்தி செய்வதும் சிறப்பாகும்.