அம்பாசமுத்திரம் அகத்தீசுவரர் சுவாமி கோவில்

அன்னமிடுதல் உற்சவம் - அன்னப் படையலில் பதியும் அகத்தியரின்‌ பிரம்படி தடமும், காலடிச் சுவடும்

திருநெல்வேலியில் இருந்து 40 கி. மீ தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது அகத்தீசுவரர் சுவாமி கோவில். கருவறை யில் அகத்தீசுவரரும், தெற்கு நோக்கிய கருவறையில் அகத்தியரின் மனைவி லோப முத்தரை அம்பாளும் அருள்கின்றனர். மூன்றடி உயர திருமேனியராய் நின்ற கோலத்தில் அருள்கிறார் அகத்தீசுவரர். வலக் கரம் சின்முத்திரை காட்ட, இடது கரத்தில் சுவடியை ஏந்தியிருக்கிறார். ஜடாமகுடதாரியாய், மார்பில் லிங்க மாலை திகழ, முப்புரிநூல் அலங்கரிக்க, சிவசொரூபமாகக் காட்சி தருகிறார் அகத்தீசுவரர். அவரின் எதிரில் நந்தி அருள்கிறார். லோப முத்தரை அம்பாள் தனது கையில் மலர் ஏந்தி அருள்பாலிக்கிறாள்.

இந்தக் கோவிலில் பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர்.`அந்த அன்னப் படையலில், அகத்தியரின்‌ வாக்குப்படி அவரது காலடிச் சுவடும், பிரம்படி தடமும் பதிந்திருப்பது, இத்தலத்தில் நடைபெறும் அதிசய நிகழ்ச்சியாகும்.

சிவபெருமான் பார்வதி திருமணத்தைக் காண அகில உலகமும் கைலாயத்தில் கூடிய போது சிவபெருமான், உலகைச் சமன்படுத்த, அகத்தியரை தென்புலத்துக்கு அனுப்பினார். பாபநாசம் தலத்தில் அகத்தியருக்கு சுவாமியின் திருக்கல்யாண தரிசனம் கிடைத்தது. பிறகு, அம்பாசமுத்திரம் எனும் தலத்தை அடைந்த குறுமுனிவர், அங்கே ஒரு புளிய மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது சிவ பக்தர்கள் பலரும் அகத்தியரை தரிசிக்க வந்தனர். தியானம் கலைந்த அகத்தியர், அவர்களுக்கு ஆசி வழங்கினார். மேலும் பக்தர்களில் ஒருவரிடம் 'எமக்குப் பசி எடுக்கிறது. அமுது அளித்து பசி தணிப்பீரா?' எனக் கேட்டார். அகத்திய முனிவருக்கு அன்னமிடுவது பெரும் பாக்கியம் எனக் கருதிய அந்த அன்பரும், தம் இருப்பிடத்துக்குச் சென்று அன்னம் தயார் செய்து எடுத்து வந்தார். ஆனால் அவர் வருவதற்குச் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. அகத்தியர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டார். அன்பர் மிகவும் மனம் கலங்கினார். அகத்தியரை மனதார துதித்து வழிபட்டார்.

அப்போது அவர் முன் தோன்றிய அகத்தியர், 'வருந்தாதே! தற்போது நேரமாகிவிட்டதால் நான் இங்கிருந்து புறப்பட வேண்டும். பங்குனி மாதம் 29-ம் நாள் வேடர் வடிவில் வருவேன்; நீ இடும் அன்னத்தைப் புசிப்பேன். அதற்கு அடையாளமாகப் படைக்கப் படும் அன்னத்தின்மீது என்னுடைய காலடிச் சுவடும், பிரம்படிச் சுவடும் தெரியும்!' எனக் கூறி மறைந்தார்.

அகத்தியர் அருளியபடியே, அங்குள்ள பக்தர்கள் பங்குனி 29-ம் நாளன்று, அம்பையில் உள்ள தீப தீர்த்தத்திலிருந்து 21 குடம் தீர்த்தம் எடுத்து வந்து திரு மஞ்சனம் செய்து அகத்தியருக்கு அமுது படைத்து வழிபட்டனர். அகத்தியரும் தாம் வாக்களித்தபடி, பக்தர்கள் படைத்த அன்னத்தில் திருநடனமிட்டுப் பிரம்படிச் சுவடும் கால்சுவடும் காட்டி அருளினார். இவ்வாறு அவர் அருள்புரிந்த இடத் தில், அகத்தியருக்கு அழகிய ஆலயம் அமைத்தனர் பக்தர்கள். தமிழகத்தில் அகத்தியருக்காக அமைந்த கோயில்களில் தனிச் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது இந்த ஆலயம்.

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் அன்னமிடுதல் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர். '`அந்த அன்னப் படையலில், அகத்தியரின்‌ பிரம்படி தடமும், காலடிச் சுவடும் பதிந்திருப்பதைக் நாம் தரிசிக்கலாம். பின்னர் அந்த படையல் உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பிரார்த்தனை

இந்தத் தலத்துக்கு வந்து அகத்தியரைத் தியானித்து, `ஓம் அகஸ்தீஸாய நம!' என்ற மந்திரத்தை உச்சரித்து, நாம் உண்ண வேண்டிய மருந்தை உட்கொண்டால் நோய் விரை வில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தோல் நோய், சுவாசக் கோளாறு, நரம்புப் பிரச்னைகள், மனநோய் பாதிப்பு ஆகிய பிரச்னைகளால் அவதிப்பட்ட அன்பர்கள் பலரும் இங்கு வந்து அகத்தியரை வழிபட்டு நலம் பெற்று உள்ளார்கள்.

 
Previous
Previous

கீழக்குறிச்சிப்பட்டி பொன்னழகி அம்மன் கோவில்

Next
Next

காவலூர் சண்முகசுப்பிரமணியசுவாமி கோவில்