நந்திதேவரின் சிறப்புகள்

நந்தியம் பெருமானின் சிறப்புகள்

சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும் இரு புஜங்களிலும் மானும், மழுவும் உண்டு. நந்தி என்ற சொல்லுக்கு 'ஆனந்தமாக இருப்பவன்' என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது. நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால், சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில், அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.

நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும். பிரதோஷ கால நேரங்களில், சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுகிறார். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும். சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும். நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.

சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

நந்திதேவரின் சிறப்புத் தோற்றங்கள்

சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோவிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம். இக்கோவில் வடக்கு கோபுர வாசலில் அதிகார நந்திதேவர், மனித முகத்துடன் தனது துணைவியாருடன் எழுந்தருளி உள்ளார்.

திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அர்த்த மண்டபத்தில் அதிகார நந்தி கூப்பிய கரத்துடன் உடைவாளுடன் உள்ளார்.

நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.

திருமழபாடியில் உள்ள நந்திதேவர் மனித முகம் கொண்டவர்.

செய்யாறு வேதபுரீசுவரர் ஆலயத்தில் நந்தி, நேர் திசையில் ஈசுவரனை நோக்காமல் எதிர் திசையில் பிரதான வாயில் கோபுரத்தை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

திருவையாறிலும், திருமழபாடியிலும் நந்திகேசுவரரின் செப்புத் திருவுருவங்கள் உள்ளன.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உற்சவ நந்திகேசவர், இரு கரங்கள் கூப்பியும், இரு கரங்களில் மான், மழுவுடனும் காட்சி தருகிறார். இரு கரங்களில் உள்ள மானையும், மழுவையும் மறைத்துப் பார்த்தால்அனுமன் போன்ற தோற்றத்தை அளிக்கிறார்.

கும்பகோணத்திற்கு அருகில் கொருக்கை என்ற ஊரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவசக்தி சந்நதியின் முன் இரண்டு நந்திகள் உள்ளன. பிரதோஷ நாளில் இரு நந்திகளுக்கும் சேர்ந்தாற்போல நிலக்கடலை, முந்திரிப் பருப்பு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் உள்ள நந்தி மிகப் பெரியது. வெள்ளைக் கல்லாலான இவரை மாகாளை என்று அழைக்கின்றனர்.

நந்தி இல்லாத சிவ ஆலயம் திருப்பெருந்துறையில் (ஆவுடையார் கோயில்) உள்ளது.

நந்தி தேவரை வழிபட்டால் கிடைக்கும் நற்பலன்கள்

நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர். அதனால் நாட்டியம் பயில்வோரும், இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும். நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும், நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும், உயர்ந்த பதவியும், நல்ல எண்ணங்களும் நல்லொழுக்கமும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் - மனித முகத்துடனும், தனது மனைவியுடனும் காட்சியளிக்கும் அதிகார நந்திதேவர்

திருமழபாடி - நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம்

Previous
Previous

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில்

Next
Next

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில்