சிவபுரி உச்சிநாதர் கோவில்
குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டப்படும் தேவாரத்தலம்
சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் தேவாரத்தலம் சிவபுரி உச்சிநாதர் கோவில். இறைவியின் திருநாமம் கனகாம்பிகை என்ற உச்சிநாயகி. ஒரு காலத்தில் நெல் வயல்கள் சூழ்ந்து இருந்ததால் இத்தலத்திற்கு திருநெல்வேலியில் என்ற பெயரும் உண்டு. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம் என்பதால் கருவறையில் சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
இத்தல இறைவனுக்கு மத்யானேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. அதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான ஞானக்குழந்தை திருஞானசம்பந்தருக்கு 12 வயதில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணம் சீர்காழிக்கு அருகில் இருந்த ஆச்சாள்புரத்தில் நடைபெற இருந்தது. அப்போது திருமண ஏற்பாடுகளுக்காக, திருஞானசம்பந்தரும் அவரது உறவினர்களும் ஒரு குழுவாக ஆச்சள்புரம் நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது நல்ல மதிய வேளை. சம்பந்தரின் திருமணத்திற்கு வந்தவர்கள் பசியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த சிவபெருமான், கோவில் பணியாளர் வடிவில் வந்து, வந்திருந்த அனைவருக்கும் உணவளித்தார்.
திருஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது பார்வதிதேவி ஞானப்பால் ஊட்டினார். அவரது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சிவபெருமான் மதிய உணவு படைத்தார். வந்து உணவளித்தது இறைவன் தான் என்பதை அறிந்த சம்பந்தர், மதிய வேளையில் தோன்றியதால் உச்சிநாதர் என்று அழைத்து போற்றினார். அதனாலேயே இக்கோவில் மூலவருக்கு உச்சிநாதர், மத்தியானேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
இதனால், இந்த கோவிலில் குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டும் வைபவம் நடைபெறுவது விஷேசமாக கருதப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வந்து குழந்தைக்கு முதல் உணவு ஊட்டுகின்றனர். இக்கோவிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப் பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.
திருமணம் விரைவில் கைகூட இங்கு வழிபடுகிறார்கள்.