
மதுரை முக்தீஸ்வரர் கோவில்
ஆண்டிற்கு இரண்டு முறை சூரிய பூஜை நடக்கும் திருவிளையாடல் தலம்
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலின் அருகில் அமைந்துள்ளது முக்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதவல்லி தாயார். சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான், முக்தீஸ்வரர் கோவில்.
இந்திரனின் ஐராவத யானைக்கு சாபவிமோசனம் அளித்த திருவிளையாடல்
இந்திரனின் வாகனம், 'ஐராவதம்' என்ற வெள்ளை நிறம் கொண்ட யானையாகும். ஒரு சமயம், துர்வாசக முனிவர், சிவபெருமானை பூஜை செய்து கொண்டுவந்திருந்த தாமரை மலரை இந்திரனிடம் தந்தார். அதனை வாங்கிய இந்திரன் சிவபெருமானின் பூசை மலரினை ஐராவதம் மத்தகத்தில் வைத்தார். அதனை எனனவென்று அறியாத ஐராவதம், அம்மலரை காலில் இட்டு அழித்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாசக முனிவர் ஐராவதத்தினை பூமியில் பிறக்கும் படி சாபமிட்டார். அதனால் பூமியில் அவதரித்த ஐராவதம், மற்ற யானைகளின் நிறத்தினை அடைந்து இந்திரன் உருவாக்கிய மதுரை கோயிலில் சிவலிங்கத்தினை வழிபட்டு வந்தது. பின்னர் சிவபெருமான் அருளால் சாபவிமோசனம் பெற்றது. ஆனால் ஐராவதத்திற்கோ, மதுரை மதுரையம்பதி விட்டு பிரிந்து செல்ல மணம் இல்லை. அதனால் சிவபெருமானிடம் தங்கள் கருவறை விமானத்தை தாங்கும் யானைகளில் தானும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விண்ணப்பித்தது. ஆனால் சிவபெருமான், இந்திரன் என்னுடைய பக்தன். நீ அவனை சுமப்பது என்னை சுமப்பதற்கு ஒப்பானது. அதனால் நீ தேவலோகம் சென்று விடு என்று பணித்தார்.
இந்திரன் சிவபெருமானிடம், யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தான் எழுப்பிய மதுரை சொக்கநாதர் கோவில் விமானம், தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், ஐராவதம் தன்னைத் தாங்குவது போல் அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதர் கருவறை விமானத்தை தாங்கி இருப்பதை இப்போதும் நாம் காணலாம்.
இன்றும் அரசு ஆவணங்களில் இக்கோயில் அமைந்துள்ள பகுதி ஐராவதநல்லூர் என்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய பகவானின் பூஜை
சூரியக் கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் படருவதை சூரிய பூஜை என்று குறிப்பிடுவார்கள். சூரிய பூஜை பல ஆலயங்களில் நிகழ்ந்தாலும், அவை குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மட்டுமே நிகழும். ஆனால் இங்கோ, ஒவ்வொரு மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், அதாவது 10 ம் தேதி முதல் 21 தேதி வரையிலும் மற்றும் செப்டம்பர் மாதம் 19 முதல் 30 ம் தேதி வரையிலும், காலையில் இந்த அற்புதம் நிகழும்.
காலை நேரத்தில் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக சூரியக்கதிர்கள், கருவறைக்குள் ஊடுருவுகின்றன.முதலில் மஞ்சள் நிறத்திலும், பின்பு கண்கள் கூசும் வகையில் வெள்ளொளியாகவும் தெரியும். சூரிய பூஜையின் 15 நிமிட இடைவெளியின் போது கோவில் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் செய்யப்படும்.இந்த நிகழ்வு இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
மொத்தம் 24 நாள்கள் நடக்கும் இந்த அற்புத தரிசனத்தைக் கண்டால் நம் மனதின் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் சூரிய பகவானே இங்கு முக்தீஸ்வரரைத் தன் கதிர்க் கரங்களால் தழுவி வழிபடுவதால் இந்த ஈசனை வணங்கினால் சூரியன் பலமில்லாத ஜாதகக் காரர்கள் சகல நன்மைகளையும் பெறமுடியும். மேலும் சூரியனே ஜாதக அடிப்படையில் ஆத்மகாரகன். அவன் பணிந்து கொள்ளும் இந்த முக்தீஸ்வரரை, நாமும் பணிந்துகொண்டால் நம் வினைப்பயன்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழி பட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

பாமணி நாகநாத சுவாமி கோவில்
நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தி
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்ம குருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள், அவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.
சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
வள்ளாள மகாராஜாவிற்கு 680 ஆண்டுகளாக திதி கொடுத்து வரும் அண்ணாமலையார்
ஹொய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னன் மூன்றாம் வீர வல்லாள மகாராஜா ( கி.பி.1291-1343) . நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாளன் சிறந்த சிவபக்தர். அண்ணாமலையார் ஆலயத்துக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை கோவிலின் ராஜ கோபுரத்தை தனது ஆட்சிக்காலத்தில் நிர்மாணித்தார். கி.பி 16-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அருணாச்சல புராணத்தில் இவரது சரித்திரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வள்ளாள மகாராஜாவிற்கு ஒரு பெரிய மனக்குறை இருந்தது. தான் கொஞ்சி மகிழவும், தனக்குப் பின் நாட்டை ஆளவும் ஒரு வாரிசு இல்லையே என்பதுதான் அது. ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அண்ணாமலையார், உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். யாமே, உனக்கு மகனாக இருந்து உன் ஈம காரியங்களை செய்து முடிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் அந்த சடங்குகளை செய்வேன் என்றார்.
கி.பி.1343ம் ஆண்டு தைப்பூசத்தன்று அண்ணாமலையார், திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோயிலுக்கு திரும்பிச் செல்லும் போது, பள்ளிகொண்டாபட்டு போர்க்களத்தில் வள்ளாள மகாராஜா வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு அண்ணாமலையார் மேளதாளங்கள் இன்றி, அமைதியாக கிரியை நடக்கும் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரைக்குச் சென்று சடங்குகளை செய்து முடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை, அண்ணாமலையார், ஒவ்வொரு ஆண்டும் மகாராஜா உயிர் நீத்த 30ம் நாளான மாசி மகம் தினத்தன்று பள்ளிகொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார்.
மாசிமகத்தன்று, அண்ணாமலையார் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரைக்கு வருவார். அங்கு வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுப்பார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளிகொண்டாபட்டுக்கு திரண்டு வந்து தம் மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஈசன் திதி கொடுக்கும் போது, தாங்களும் அவ்வாறு செய்தால் தங்கள் மூதாதையர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் முறை நடைபெறும். அதாவது அண்ணாமலையாரை தங்கள் ஊர் சம்மந்தியாக ஏற்று பட்டாடை சாத்துவார்கள். பள்ளிகொண்டாபட்டு அருகில் உள்ள சம்மந்தனூரை சேர்ந்தவர்களே இதை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊருக்கு 'சம்மந்தனூர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அரசனுக்குப் பிறகு இளவரசன் பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும் என்ற மரபின்படி மறுநாள் அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையாருக்கு அரசராக முடி சூட்டப்படும் விழா நடத்தப்படடும்.
உலகில் எந்த மன்னனுக்கும் இத்தனை ஆண்டுகளாக இறைவனே திதி கொடுக்கும் சிறப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் சிவபெருமான், யாருக்காகவும் இப்படி ஆலயத்தை விட்டு வெளியில் வந்து திதி கொடுப்பதில்லை. திருவண்ணாமலை ஆலயத்தில் மட்டுமே ஆண்டு தோறும் இந்த அதிசயம் நடக்கிறது.

மாசி மகத்தின் சிறப்புகள்
மாசிமக தீர்த்தமாடலின் சிறப்பு
மாசி மாதம் முழுவதும் 'கடலாடும் மாதம்' என்றும், 'தீர்த்தமாடும் மாதம்' என்றும் சொல்வார்கள். இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம். மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக கருதப்படுகிறது.
மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது.
மாசிமக தீர்த்தமாடல் பற்றிய புராணக்கதை
ஒருசமயம் வருண பகவானை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அதனால் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். வருணன் கட்டுண்டு கிடந்ததால் உலகத்தில் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. வருண பகவான் சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவ பெருமான் அருள் பாலித்தார். வருண பகவான் தோஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்த தினம் தான் மாசி மகம் ஆகும். இந்த தினத்தில் புனித நீராடும் நபர்களுக்கு பாவங்களை போக்கிவிட சிவனிடம் வருண பகவான் அருள் செய்ய கேட்டு கொண்டாராம். அதனை கேட்ட சிவ பெருமானும் கேட்ட வரத்தை கொடுத்தாராம். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.
திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.
சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி பௌர்ணமியில்தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்றுதான் என புராணங்கள் கூறுகின்றன.
பார்வதி தேவி, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான். மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும். துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
மாசிமகம் பித்ரு தோஷம் மற்றும் தடைகள் நீக்கும் புனித நாளாகும். மாசி மகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

பாமணி நாகநாத சுவாமி கோவில்
மனித முகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷன் காட்சியளிக்கும் அபூர்வத் தலம்
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இறைவன் புற்று மண்ணாலான சுயம்பு திருமேனி உடையவர் என்றாலும் அவருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலத்து இறைவன் மீது பாம்புகள் அடிக்கடி ஊர்ந்ததால் இவருக்கு பாம்பை மேலே அணிந்து கொள்பவர் என்ற பொருள்பட பாம்பணி நாதர் என்ற பெயரும் உண்டு. அதனால் இந்தத் தலத்துக்கு பாம்பணி என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் பாமணி என்று மருவிற்று.
ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்திலிருந்து வந்ததால் இத்தலத்திற்கு பாதாளேச்சரம் என்ற பெயரும் உண்டு. ஆதிசேஷன் இத்தலத்திற்கு வந்தபோது தலம் எங்கும் சிவலிங்கமாய் தெரிந்ததால், கால் தரையில் படாமல் இறைவனை தொட்டு வணங்குவதற்காக இடுப்பிற்கு கீழே பாம்பு ரூபமாயும், மேலே மனித ரூபமாயும் இருந்து வணங்கினார். பாம்பு உருவாக்கிய லிங்கம் என்பதால், அது புற்றுவடிவாக அமைந்தது.
கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலம்
மனித முகம், பாம்பு உடலுடன் காட்சியளிக்கும் ஆதிசேஷனுக்கு, இத்தலத்தில் தனி சன்னதி இருப்பது சிறப்பாகும். அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன். இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில்
கல் நந்தி புல் தின்ற அதிசயம் நிகழ்ந்த தேவாரத்தலம்
கும்பகோணத்திற்குக் கிழக்கே, கல்லணை- பூம்புகார் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கஞ்சனூர். இறைவன் திருநாமம் அக்கினீஸ்வரர் . இறைவியின் திருநாமம் கற்பகாம்பிகை.
முன்னொரு காலத்தில், தேவசம்பு என்ற முதியவர் தனது பசுவிற்காக மிகவும் கனமான புல்லுக்கட்டை தலையில் சுமந்தபடி சென்றார். அப்போது நிலைதடுமாறி புல்லுக்கட்டை தவறவிட்டார். அது அருகில் நின்ற கன்றின் மீது விழுந்து அழுத்த, அந்தக் கன்று உயிரிழந்தது. கன்றின் உயிரைப் பறித்ததால் ஏற்பட்ட பாவம் அகல வேண்டும் என்றால், முதியவர் காசிக்குப் போய் நீராட வேண்டும் என்று சில வேத விற்பன்னர்கள் கூறினர்.
தேவசம்பு, அவ்வூரில் பிரசித்தி பெற்று விளங்கிய சிவஞானியார், ஹரதத்தர் என்பவரை அணுகினார்ர். ஆனால் ஹரதத்தரோ, 'அவ்வாறு நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் சிவனையே சிந்திக்கும் பக்தியுடையவர். நடந்தது உங்களை அறியாமல் நடந்த பிழை. அது பாவத்தில் சேராது. வேண்டுமென்றால் அதை சோதித்து பார்த்து விடலாம். அக்னீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள கல் நந்திக்குப் புல் கொடுங்கள். அது புல்லை ஏற்றுக்கொண்டு தின்றால் உங்களுக்கு தோஷமில்லை' கூறினார்.
இதையடுத்து கஞ்சனூரில் ஓடும் காவிரியில் மூழ்கிய முதியவர், இறைவனையும், இறைவியையும் வழிபட்டு விட்டு, அவர்களுக்கு எதிரே இருந்த கல் நந்திக்கு புல் கொடுத்தார். அது தலையைத் திரும்பி புல்லை வாங்கித் தின்றது. ஊர் மக்கள் அனைவரும் அதிசயித்துப்போனார்கள். இப்போதும், திருக்கஞ்சனூர் கோவிலில் தலையைத் திருப்பிய நிலையில் அமர்ந்திருக்கும் நந்தியை நாம் காணலாம். இந்த நந்தி புல் உண்டதால் அதன் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கவில்லை.

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்
இரண்டு கால்களையும் மடக்கி தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் அரிய கோலம்
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கி.மீ. தூரத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற ஊரிலிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் நாறும்பூநாதர். இறைவியின் திருநாமம் கோமதி.
மருத மரத்தை தலவிருட்சமாக கொண்ட தலங்கள், 'அர்ச்சுன தலங்கள்' என்றழைக்கப்படும். 'அர்ச்சுனம்' என்றால் 'மருதமரம்' என்று பொருள். அந்த வகையில் அர்ச்சுன தலங்களில் 'தலையார்ச்சுனம்' என்று அழைக்கப்படுவது ஸ்ரீசைலம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், 'இடையார்ச்சுனம்' என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் 'கடையார்ச்சுனம்' என்று போற்றப்படுகிறது.
பொதுவாக, சிவாலயங்களில் இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, இடது காலை மடித்தும் வலது காலை முயலகன் மேல் ஊன்றியும், அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

திருமயம் கோட்டை பைரவர் கோவில்
வடக்குப் பார்த்தபடி எழுந்தருளியிருக்கும் அபூர்வ பைரவர்
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள திருமயம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கோட்டை பைரவர் கோவில். இக்கோவில் 350 ஆண்டுகள் பழமையான திருமயம் கோட்டையின் வடபுற சுவற்றில் அமைந்துள்ளது.இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி, தனிக் கோவில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே ஆகும். மேலும், கோவிலின் முன்புறச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும் கண்கண்ட தெய்வமாக கோட்டை பைரவர் விளங்குகிறார். சகல தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது.
கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவார். இக்கோவில், விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிறப்பு தலம் ஆகும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவரைக்கு அபிஷேகம், வடைமாலை, சந்தனகாப்பு செய்து, நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும். மற்றும் பிதுர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எழுமிச்சம் பழமாலை சூட்டி, எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதுர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, நெய்தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.
இப்பைரவருக்கு சந்தனாதித் தைலம் சாற்றி அபிஷேகம், செய்து சந்தனகாப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம் தொழில் அபிவிருத்தி ஏற்படும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளிமாலை நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் தொடர்ந்து செய்து வந்தால் சகோதர ஒற்றுமை ஏற்படும். எல்லா பரிகாரங்களுக்கும் நெயதீபமும், மிளகு தீபமும் பொதுவானது, இவரை தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால், நன்மை கோடி வந்து சேரும்.

இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில்
சனி பகவானை வலம் வந்து வணங்கக்கூடிய சிறப்பு பரிகாரத் தலம்
தென்காசியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் மதுநாதீசுவரர். இறைவியின் திருநாமம் அறம்வளர்த்த நாயகி.
பொதுவாக சிவாலயங்களில் சனி பகவானுக்கு தனி சன்னதி இருந்தாலும் அவை கோயில் பிரகாரத்தை ஒட்டி
இருப்பதால் நாம் வலம் வந்து சனி பகவானை வழிபட முடியாது. ஆனால் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் சனிபகவானை நாம் வலம் வந்து வழிபட முடியும். இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் அவர் கைகளை அபயஹஸ்த நிலையில் வைத்து எழுந்தருளி இருப்பதால், சனி சம்பந்தப்பட்ட எந்த வித தோஷமும் இங்கு வந்து வணங்கினால் விலகிப்போகும்.
அவர் இங்கு பொங்கு சனியாக அருள்பாலிப்பதால், இது ஒரு சனி பரிகாரத் தலமுமாகவும் திகழ்கின்றது. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி நடைபெறுபவர்கள் இங்குவந்து மதுநாதீசுவரையும், சனீஸ்வரரையும் வழிபாடு செய்தால், இன்னல்கள் நீங்கி இனிய வாழ்வு பெறலாம்.
சர்க்கரை வியாதியை குணமாக்கும் தலம்
சனி பகவானுக்கு தண்மை (குளிர்ச்சி) என்ற காரகத்துவமும் உண்டு. நீர்க்கிரகமான சனியை இலத்தூரில் வழிபட்டால் சர்க்கரை வியாதி பறந்தே போய்விடும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை.

வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவில்
9 அடி உயர திருமேனியுடன் மூலவராக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி
தேனி - மதுரை வழியில் 1 கி.மீ. தொலைவிலிருக்கும் அரண்மனைப்புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் கிளைப்பாதையில் 2 கி.மீ. பயணித்தால் வேதபுரியை அடையலாம். முற்காலங்களில் வேதியர்கள் அதிகம் வாழ்ந்து வந்த போது எப்போதும் வேத பாராயணங்கள் நடைபெற்றதால் இந்த ஊருக்கு வேதபுரி என்ற பெயர் ஏற்பட்டது.
இக்கோயிலின் பிரதான மூலவர் நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தி ஆவார். இவர் இங்கு பிராக்ஞா தட்சிணாமூர்த்தி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயில் பாண்டிய மன்னர்களுக்கு பிறகு இப்பகுதியை ஆட்சி புரிந்த அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி, 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.
கருவறையின் விமானத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன.இக்கோயிலில் பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கும் விதி பின்பற்றப்படுகிறது. மேலும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைக்கு பதிலாக, அதை பொட்டலமாக சமர்ப்பிக்கும் படி பக்தர்கள் கோயில் நிர்வாகத்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இக்கோவிலில் வியாழக்கிழமையன்று திருமண வரம், பிள்ளை வரம் ஆகியவற்றை வேண்டுபவர்களுக்கு அவை நிச்சயம் கிடைக்கும் என்றும், குழந்தைகள் கல்வி கலைகளில் சிறக்க, விரும்பிய காரியங்கள் நடக்க இங்கு வழிபட்டால் அது உறுதியாக கிடைக்கப்பெறுவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்
வில்வ அர்ச்சனை நோய்க்கு மருந்தாகும் தேவாரத்தலம்
சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். 'கலி' (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், 'திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை.. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள். தலவிருட்சம் வில்வமரம். மூலவர் சுந்தரேஸ்வரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
பராசர முனிவர், உதிரன் என்னும் அசுரனை அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
இத்தலத்திலுள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. 'இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்,'என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்
சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலம்
ஒருமுறை வழிபட்டாலே கோடிமுறை வழிபட்ட பலனைத் தரும் தலம்
சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலங்கள் திருவைகாவூர், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், ஓமாம்புலியூர் கோகர்ணம், ஸ்ரீசைலம் ஆகியவை ஆகும். காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, மதுரை, காளஹஸ்தி, காஞ்சி போன்ற தலங்களில் உள்ள கோவில்கள் சிவபெருமானின் உடலாகவும், திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில் அவரின் இருதயம் ஆகவும் விளங்குகின்றது. இக்கோவில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கும் முந்தையது. இறைவனின் திருநாமம் ருத்திர கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி.
ஒரு சமயம் தேவர்களை துன்புறுத்திய அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தன் திருமேனியில் இருந்து ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தனர். அசுரர்களைக் கொன்ற பாவம் தீர்க்க சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமான், அவர்கள் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவபூஜை செய்தால் பாவம் விலகும் என்று அருளினார். ஒரு கோடி ருத்திரர்களும் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவலிங்கம் அமைத்து, அபிஷேக ஆராதனை செய்தனர். பூஜையின் முடிவில் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார்.கோடிருத்திரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவனின் திருநாமம் ருத்ரகோடீஸ்வரர் எனவும், தலம் ருத்ர கோடி தலம் எனவும் ஆயிற்று.
நாம் இத்தலத்தில் ஒரு முறை தானம் செய்தாலும், ஜெபம் செய்தாலும் அது கோடி முறை செய்ததற்கு ஈடான பலனைத் தரும். கோடி ருத்திரர்கள் சிவராத்திரி வழிபாடு செய்த தலம் என்பதால், சிவராத்திரியன்று இங்கு வழிபடுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.
செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கழுக்குன்றம்.

கழுவத்தூர் ஜடாயுபுரீஸ்வரர் கோவில்
பன்னிரண்டு ராசிகளின் மேல் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்
மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் இறைவனின் திருநாமம் ஜடாயுபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்திர நாயகி.
சீதையை ராவணன் கடத்திச் சென்றபோது பறவைகளின் அரசனான ஜடாயு அவனை மறித்தார். ராவணனோ அவரது இறக்கையை வெட்டி வீழ்த்தினான். காயத்துடன் கிடந்த அவர் ராமனிடம் ராவணன் சீதையைக் கடத்தி செல்லும் விஷயத்தைச் சொல்லி உயிர் விட்டார் அவருக்கு ராமன் ஈமக்கிரியை செய்து வைத்தார். ஜடாயு இந்தப்பகுதியில் தங்கியிருந்தபோது பூஜித்த சிவலிங்கத்திற்கு ஜடாயுபுரீஸ்வரர் என்ற பெயரும், தளத்திற்கு கழுகத்தூர் என்ற பெயரும் ஏற்பட்டது. பின்னர் கழுகத்தூர் மருவி கெழுகத்தூர், கழுவத்தூர் என்றானது.கெழுவம், சௌந்திரம் என்ற சொற்களுக்கு அழகு என்று பொருள். அம்பாள் பெயரால் ஊருக்கு கெழுவத்தூர் என்ற பெயரும் ஏற்பட்டது.
இந்தக் கோவிலின் பிரகாரத்தில் பன்னிரண்டு ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், பன்னிரண்டு ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்
இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தரும் அபூர்வ பைரவர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி. இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி.
இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பைரவருக்கு, 'ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத சிறப்பு அம்சமாகும். வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது. பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.
தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள சொர்ண ஆகர்ஷண பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு வடை மாலை அணிவித்து, விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்
சென்னை மாநகரில் , பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் கபாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள். கற்பகம் என்றாலே வேண்டும் வரங்களை தருபவள் என்று பொருள்.
இத்தலத்தில் முருகப் பெருமான், வள்ளி - தெய்வானை சமேத சிங்கார வேலர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் நடக்கும் பல திருவிழாக்கள் மிகவும் விசேஷமானவை, தனித்துவமானவை. அப்படி நடத்தப்படும் விழாக்களில் தைப்பூச தெப்ப உற்சவமும் ஒன்று. தைப்பூச நாளில் இக்கோவில் சிவன், அம்பாள், முருகன் ஆகிய மூவருக்கும் விழா எடுக்கப்படுவது தனிச்சிறப்பு.
இக்கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும் முதல் நாள் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரும், அடுத்த இரண்டு நாட்கள் வள்ளி தெய்வயானை சமேத சிங்காரவேலரும், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் திருக்குளத்தில் பவனி வருவார்கள்.
கபாலீஸ்வரரின் திருக்கரத்தை பற்றிய நிலையில் அன்னை கற்பகாம்பாள் மணப்பெண் போன்ற கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. அதேபோன்று, சிங்காரவேலர், ஒரு காலை தரையில் ஊன்றியும், ஒரு காலை மயில் மேல் வைத்தபடியும், வள்ளி - தெய்வானையுடன் கம்பீரமாக, அழகிய கோலத்தில் காட்சி தந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்
திருமணத்தடை, வாஸ்து குறைபாடு, கட்டிடம் கட்ட தடை ஆகியவற்றை நீக்கும் தேவாரத்தலம்
கும்பகோணம் – நாச்சியார்கோவில் – பூந்தோட்டம் சாலை வழியில் உள்ள திருவீழிமிழலை என்னும் தலத்திலிருந்து, வடக்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அன்னியூர். இத்தலத்து இறைவனின் திருநாமம் அக்னிபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் கௌரி பார்வதி.
வன்னி என்றால் அக்னி என்று பொருள். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் 'அன்னியூர்' ஆனது. இறைவன் 'அக்னிபுரீஸ்வரர்' ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது. பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும்.
திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
கட்டிடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் ஏழு செங்கல் கொண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால், தடையின்றி கட்டிடம் கட்டலாம் என்பது ஐதீகம்.
உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு (உயர் ரத்த அழுத்தம்) உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருட்களை நைவேத்தியம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.

திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
சனி பகவானின் முடக்கு வாதத்தை நீக்கிய தலம்
மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் திருவாதவூர். இறைவன் திருநாமம் திருமறைநாதர் . இறைவியின் திருநாமம் வேதநாயகி.
சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத் தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் அவதரித்த தலம் இது.
சனி பகவானுக்கு, மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. தான் பெற்ற சாப நீக்கத்தை, பக்தர்களுக்கு அருளும் முகமாக இந்த ஆலயத்தில், சனி பகவான் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
வாத நோயை நீக்கும் அபிஷேக நல்லெண்ணெய்
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
தங்கள் வாத நோய் தீர வேண்டும் என்பதற்காக பல வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்
மங்களாம்பிகை லோக தட்சிணாமூர்த்தி
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன் பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெருங்குடி கிராமம். இத்தலத்து இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி.
இக்கோவிலின் வெளிச்சுற்று சுவரில் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் கோலமானது மிகவும் சிறப்புடையது. அவர் மங்களாம்பிகை லோகத்தில் எந்த கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாரோ அதே கோலத்தில் இங்கு நமக்கு அருள்பாலிக்கிறார். அவர் காலின் கீழ் உள்ள பூதகனின் தலைப்பாகம், வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாதவாறு கிழக்கு திசை நோக்கி இருக்கின்றது. மேலும் அவருக்கு கீழே உள்ள நந்தியம்பெருமான் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் தன் தலையை மட்டும் மேற்கு திசை நோக்கி திருப்பி இருப்பதும், ஒரு அபூர்வமான தோற்றமாகும்.

திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்
இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கும் பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள தேவாரத்தலம் திலதர்ப்பணபுரி . இத்தலம் தற்போது திலதைப்பதி என்று அழைக்கப்படுகிறது. திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. இறைவன் திருநாமம் முக்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சொர்ணவல்லி.
சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும். இக்கோவிலில் பித்ரு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் ஆகியவை பார்க்கத் தேவையில்லை. இத்தலத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.
பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்
தை மாதம் ரதசப்தமிக்கு மறுநாள் வரும் அஷ்டமி தினம், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் கங்கையின் மைந்தரான பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இல்லாமல் மஹாபாரத காவியமே கிடையாது. கிருஷ்ணபரமாத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ, அதே அளவுக்கு பீஷ்மரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர். உலக நன்மைக்காகவும், தன்னுடைய தந்தைக்காகவும் செய்த தியாகத்திற்கு பிரதிபலனாக, பீஷ்மர் தான் விரும்பாமல் தன்னுடைய உயிர் உடலை விட்டு பிரியாது என்னும் வரத்தை பெற்றார். இதனால் பாண்டவர்கள்,கௌரவர்கள் என இரு தரப்புக்கும் பிரியமான பிதாமகர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.
மஹாபாரதப் போரில் , பீஷ்மர் அர்ச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு அம்புப்படுக்கையில் கிடந்தாலும், தான் பெற்ற வரத்தின் காரணமாக, மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி தன் மரணத்தை தள்ளிப் போட்டு வந்தார். பீஷ்மர் மரணப் படுக்கையில் இருந்தபோது,மஹாவிஷ்ணுவை வேண்டிக் கொண்டார். அவருக்கு கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டி அருளினார். அந்த சமயத்தில் பீஷ்மர் அருளியதே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். அப்போது மோட்சம் அளிக்கும் உத்தராயண காலம் ஆரம்பமாகிவிட்டதால், பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆனால், உயிர் பிரியவில்லை. உத்தராயண காலம் தொடங்கியும் தன்னுடைய உயிர் பிரியாததைக் கண்டு மனம் வருந்தி வியாசரிடம் விளக்கம் கேட்டார் பீஷ்மர். அதற்கு வியாசர், பீஷ்மர் செய்த பாவச்செயலை, அதாவது திரௌபதியை கௌரவர்கள் மானபங்கப் படுத்தியபோது தடுக்காததை, அவரிடம் எடுத்துரைத்தார். தன்னுடைய மாபெரும் தவறை உணர்ந்து கொண்ட பீஷ்மர், தன்னுடைய உடலை எரிக்கும் சக்தியை, சூரிய தேவனிடம் இருந்து பெற்றுத் தருமாறு வியாசரிடம் கேட்டுக்கொண்டார். உடனே வியாசரும், சூரிய சக்திக்கு நிகரான எருக்க இலைகளைக் கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதையடுத்து நிம்மதியடைந்த பீஷ்மர் தியான நிலைக்கு சென்று மோட்சம் பெற்றார்.
பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. ஆனால், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார். வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர். பீஷ்மர், ரதசப்தமி முடிந்த மறுநாளான அஷ்டமி திதியன்று தன்னுடைய உயிரைப் போக்கிக்கொண்டார். அந்த அஷ்டமியே பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது.
பீஷ்மாஷ்டமி தினத்தில், பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்
தலையில் கிரீடம் அணிந்து காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி. இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி.
சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்த அவர் மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து காட்சி கொடுப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காணமுடியாத அரிய காட்சியாகும்.
நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட குட்டி விநாயகர்
சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும்.